95. உள்ளங்கைத் தொலைக்காட்சி

கடலைப் போன்ற அலையடிப்பும் கடலுக்கு இல்லாத நளினமும் ஒருங்கே சேர்ந்த இயற்கையின் அதியற்புதப் படைப்பாக எனக்குள் திரண்டிருந்த கங்கையின் வடிவத்தை என்னால் ஹரித்வாரில் காண இயலவில்லை.

படித்துறை ஓரமாகவே நான் நடந்துகொண்டிருந்தேன். நடக்க ஆரம்பித்த சிறிது நேரத்துக்கு படித்துறையிலும் சாலைகளிலும் ஆள் நடமாட்டம் இருந்தது. பிறகு அது மெல்ல மெல்லக் குறையலானது. சாலையெங்கும் அழுக்கும் சேறுமாக இருந்தது. படித்துறையின் அத்தனைக் கற்களிலும் சேறு படிந்திருந்தது. ஈரத்தின் வாசனையும் அடுப்புப் புகையின் வாசனையும் காற்றில் கலந்து வீசியது. ஒரு சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கையின் மென்மையான அலையடிப்பைப் பார்த்தபடியே நான் நடந்துகொண்டிருந்தேன். நீர்ப்பரப்பின் நடுவே நிறுவப்பட்டிருந்த கங்கைத்தாயின் சிலையைக் கடந்து இடதுபுறம் திரும்பி நடக்க ஆரம்பித்தபோது ஆள் நடமாட்டம் அங்கே அறவே இல்லை. கடைகளையும் மூடிவிட்டிருந்தார்கள். எங்கோ நாய் குரைக்கும் சத்தம் மட்டும் இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏனோ எனக்கு ஹரித்வார் அத்தனை ஈர்ப்பாயில்லை. கங்கையின் மிக அழகான தோற்றத்தை நான் கற்பனையில் நெய்து வைத்திருந்தேன். அகன்று விரிந்த பெரும் நதி. கடலைப் போன்ற அலையடிப்பும் கடலுக்கு இல்லாத நளினமும் ஒருங்கே சேர்ந்த இயற்கையின் அதியற்புதப் படைப்பாக எனக்குள் திரண்டிருந்த கங்கையின் வடிவத்தை என்னால் ஹரித்வாரில் காண இயலவில்லை. ஒரு கால்வாயைப் போல அங்கே அந்நதி பெருகிச் சென்றுகொண்டிருந்தது. கட்டாயப்படுத்தி அணை கட்டிவைத்தாற்போல நதியின் இருபுறமும் சாலை போட்டு படித்துறை அமைத்து, குறுக்குப் பாலங்கள் நிறுவி, என்னென்னவோ செய்துவிட்டிருந்தார்கள். ஒருவேளை ஊருக்கு வெளியே இப்படியெல்லாம் இருக்காதோ என்னவோ. முதல் பார்வையில் நதி என்னை அங்கே கவரவில்லை. குருவிடம் இதனைச் சொன்னபோது, ‘கும்பமேளா முடியட்டும். நாம் கங்கோத்ரி வரை ஒரு பயணம் சென்று வருவோம்’ என்று சொன்னார். ஆம். அது அவசியம் என்று தோன்றியது. ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறை எப்படி உருகுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். யுகயுகமாக அது உருகிக்கொண்டே இருக்கிறது. இன்னும் பல யுகங்களுக்கு உருகுவதற்கு மிச்சம் வைத்துக்கொண்டே உருகுகிறது. பிரபஞ்ச சக்தியின் மூலாதாரம் எனக்கென்னவோ அந்தப் பனிப்பாறைக்குள் ஒளிந்திருக்கும் என்று தோன்றியது. எத்தனை பெரிய நதி! அப்படியானால் அதைக் காட்டிலும் எத்தனைப் பெரிய பனிப்பாறை! எவ்வளவு பெருஞ்சக்தியைத் தன்னுள் தேக்கிவைத்திருக்கும்! ‘கங்கோத்ரியில் கங்கை பொங்கிப் பெருகத் தொடங்கும் இடத்தின் ஆதார சுருதி, மேல் பிரதி மத்யமம்’ என்று குருஜி சொன்னார். அவருக்கு சங்கீதம் தெரியும். எப்போதாவது அடிக்குரலில் மென்மையாகப் பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது ஹிந்துஸ்தானியாகவோ கர்நாடக சங்கீதமாகவோ இருக்க முடியாது என்று நினைத்தேன். வேறு ஏதோ ஒரு சங்கீதம். சுமாராக இருக்கும்போலத்தான் தோன்றும். குறைந்தபட்சம் ஹரித்வார் நகரத்துக்குள் பாயும் கங்கையின் தோற்றத்தை நிகர்த்தாவது. அவருக்குத் தனது மாணவர்களில் யாராவது ஒருவரேனும் சங்கீதம் பயில வேண்டும் என்ற எண்ணம் உண்டு. துரதிருஷ்டவசமாக நாங்கள் நான்கு பேருமே அந்த விருப்பம் அற்றவர்களாக இருந்தோம். குருநாதர் இன்னமும் சன்னியாச தீட்சை அளித்திராத பிரதீப் என்ற என் நண்பன் உள்ளதிலேயே மிக மோசம். புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களைக் கேட்க நேர்ந்தால்கூட அந்த இடத்தைவிட்டு உடனே அகன்றுவிடுவான். ‘இசையாக எது என் செவிக்குள் நுழைந்தாலும் என் இதயத் துடிப்பு அதிகரித்துவிடுகிறது. உயிர் போய்விடும் அச்சம் உண்டாகிவிடுகிறது’ என்பான்.

என் அப்பா என் குருநாதரைப் போலவே அடிக்குரலில் பாடக்கூடிய மனிதர். தூங்கி எழும்போது ஏதாவது பாடலை முணுமுணுத்துக்கொண்டேதான் எழுந்திருப்பார். கடும் கோபத்திலோ, வெறுப்புற்றோ இருக்கும் நேரங்களிலும் அவரால் அப்படிப் பாட முடியும். ஒருவிதத்தில் தனது கட்டுக்கடங்காத உணர்ச்சிகளை அவர் அந்தக் கீழ்க்குரல் சங்கீதத்தின் மூலம்தான் தணித்துக்கொள்கிறாரோ என்று தோன்றும். நாங்கள் நான்கு பேரும் வீட்டைத் துறந்து வெளியேறிய பின்பு அவர் அம்மாதிரிப் பாடுகிறாரா என்று அறிய மிகவும் விரும்பினேன். கேசவன் மாமாவைச் சந்தித்தபோது எப்படியோ அதைக் கேட்க மறந்து போனேன்.

கங்கையைப் பார்த்தபடியே நான் நடந்துகொண்டிருந்தேன். நெடு நேரம் நடந்திருப்பேன் என்று தோன்றியது. சிறிது அமரலாம் என்று நினைத்தபோது, ‘அங்கே வேண்டாம், இப்படி வா’ என்று ஒரு குரல் கேட்டது. அது ஒரு பெண்ணின் குரல். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். இருளில் யார் என்னை அழைத்தது என்று எனக்குப் புலப்படவில்லை. ஒருவேளை அது என் பிரமையாக இருக்கும் என்று தோன்றியது. மேலும் நடக்க முடிவு செய்தபோது மீண்டும் அக்குரல் வந்தது. ‘உன்னை இங்கே வரச் சொன்னேன்’.

குரல் வந்த திசையில் உற்றுப் பார்த்தேன். நான் நடந்துகொண்டிருந்த இடத்துக்குப் பத்தடி தொலைவில் ஒரு மூடிய கடையின் வாசலில் தலையோடு காலாகக் கம்பளியைப் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்த உருவத்தைக் கண்டேன். போவதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. எப்படியோ என்னையறியாமல் நான் அந்த உருவத்தை நெருங்கிச் சென்றேன்.

‘உட்காரேன். அதையும் சொல்ல வேண்டுமா?’

நான் அமர்ந்தேன். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டேன்.

அந்தப் பெண் முக்காட்டை விலக்குவது போலப் போர்த்தியிருந்த கம்பளியை விலக்கினாள். சுமார் நாற்பது வயதிருக்கும் என்று தோன்றியது. சரியான வடஇந்திய முகம். முன் தலையில் முடி நிறையக் கொட்டியிருந்தது. புருவங்கள் இல்லை. நெற்றியில் பொட்டில்லை. புடைவையோ, சல்வாரோ அணியாமல் ஒரு சட்டையை அணிந்திருந்தாள். அவளது அளவுக்குச் சற்றும் பொருந்தாமல் தொளதொளவென்று இருந்த சட்டை. நான் உடனே அவள் கீழே என்ன அணிந்திருக்கிறாள் என்று பார்க்க விரும்பினேன். ஆனால் கம்பளி மடியில் இருந்தது. கீழ் ஆடை தெரியவில்லை.

‘என்ன விஷயம்? எதற்கு அழைத்தீர்கள்?’ என்று கேட்டேன்.

அவள் உடனே பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, பின்புறம் திரும்பி வாயில் இருந்து எதையோ துப்பினாள். அநேகமாக அது புகையிலைக் கட்டையாக இருக்கும் என்று நினைத்தேன்.

‘நேற்று முன் தினம் நீ இறந்திருக்கத்தான் வேண்டும். உன் மரணத்தை ஒத்திவைக்கச் சொல்லி உன் அண்ணன் என்னிடம் கேட்டுக்கொண்டதால் உன் குருவின் மூலம் நான் அதனைத் தடுக்கும்படி ஆனது’ என்று சொன்னாள்.

நான் எழுந்துவிட்டேன். என்னையறியாமல் என் உடல் நடுங்க ஆரம்பித்தது. அங்கிருந்து ஓடிவிடலாம் என்று தோன்றியது. அவள் சிரித்துக்கொண்டே, ‘உட்கார். ஏன் எழுந்துவிட்டாய்? பயப்படாமல் உட்கார்’ என்று சொன்னாள். நான் உட்காரவில்லை. எனவே வேறு வழியின்றி அவளும் எழுந்து நின்றாள். இப்போது அவள் சட்டைக்குக் கீழே கம்மீஸ் அணிந்திருப்பது தெரிந்தது.

‘நீங்கள் யார்?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘அது அத்தனை முக்கியமா? அதைவிட முக்கியமான ஒரு செய்தி உனக்கு என்னிடம் உண்டு. அதைச் சொல்லவா?’

‘சரி’.

‘நீ கங்கோத்ரிக்குப் போகவேண்டாம் என்று உன் அண்ணன் நினைக்கிறான்’.

‘ஏன்?’

‘அது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதைச் சொல்லச் சொன்னான்’.

‘இதை அவனே என்னிடம் சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே? எங்கிருக்கிறான் அந்த ராஸ்கல்?’

அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. எனக்குக் கட்டுக்கடங்காத கோபம் வந்தது. விஜய் மீதிருந்த அந்தக் கோபத்தை எங்கே அந்தப் பெண்ணிடம் காட்டிவிடுவேனோ என்று அச்சமாக இருந்தது. அவளை எனக்கு முன்பின் தெரியாது. அவள் யாரோ ஒரு யோகினி. அல்லது சித்தர். வேறு யாராக இருந்துவிட முடியும்? முன்னறிமுகம் இல்லாத ஊரில் இதற்குமுன் என்றுமே பார்த்திராத யாரோ ஒருத்தியைப் பிடித்து எனக்குத் தகவல் அனுப்பத் தெரிந்த அயோக்கியன், அதை நேரில் வந்து அவனே சொன்னால்தான் என்ன?

அவன் என் உயிரைக் காப்பாற்ற நினைத்ததை அந்தப் பெண் சொல்லியிருந்தாள். நல்ல விஷயம்தான். என் அண்ணன் எங்கிருந்தாலும் என்னைக் கவனிக்கிறான். யார் யார் மூலமாகவோ எனக்குச் செய்தி அனுப்புகிறான். யார் கண்டது? ஒருவேளை எங்கள் மூவரையுமே அவன்தான் தாங்குகிறானோ என்னமோ. இல்லை என்று சொல்லிவிட முடியாதல்லவா? அவன் யோகி. பெரிய மகான். இருந்துவிட்டுப் போகட்டுமே. என் கண்ணில் தட்டுப்படாத எதுவும் என்னைப் பொறுத்தவரை உண்மையல்ல. கடவுளுக்கே அதுதான் நிலைமை என்னும்போது இவன் யார் சுண்டைக்காய்?

நான் மனத்தில் நினைப்பதை அந்தப் பெண் படித்திருப்பாள் என்று தோன்றியது. அதனால் பரவாயில்லை என்றும் சேர்த்து நினைத்துக்கொண்டேன். ஆனால் அவள் அதைப் பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. ‘நீ மிகவும் களைப்பாக இருக்கிறாய். சிறிது நேரம் இங்கே உட்கார்ந்துவிட்டுப் போ’ என்று சொன்னாள்.

‘எதற்கு?’ என்று கேட்டேன்.

‘உன் அண்ணன் என் நண்பன். நாங்கள் இருவரும் ஒரே குருவிடம் பாடம் பயின்றவர்கள்’.

‘சரி’.

‘நீ சன்னியாசம் ஏற்ற தினத்தில் அந்தக் காட்சியை அவன் எனக்குக் காட்டித் தந்தான்’.

‘எந்தத் தொலைக்காட்சியில் அது ஒளிபரப்பானது?’

‘அவன் உள்ளங்கையை விரித்துக் காட்டினான். நீ அருவிக்கரையில் சன்னியாசம் பெற்றதை நான் கண்டேன்’.

‘ஓ. அது அவ்வளவு முக்கியமா? உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு நாத்திகன். எனக்குக் கடவுளோ மதமோ இல்லை. சித்து, யோகம், ஆன்மிகம் எவற்றின் பக்கமும் ஒதுங்கும் எண்ணம் இல்லாதவன். என் சன்னியாசத்தின் ஒரே நோக்கம், என் சுதந்திரம் மட்டுமே’.

‘உன் அண்ணன் சொல்லியிருக்கிறான். ஆனால் அவனுக்கு அதில் சிறிது வருத்தம்தான்’.

‘என்ன வருத்தம்?’

‘உண்மையை வலுக்கட்டாயமாக நீ தரிசிக்காமல் தவிர்ப்பது பற்றிய வருத்தம்’.

‘அவன் வருத்தத்துக்கு நான் ஒன்றும் செய்ய முடியாதம்மா. எனக்கு ஒன்று மட்டும் சொல்லுங்கள். நான் எவ்வாறு சாக இருந்தேன்? என் குரு என்னை எப்படிக் காப்பாற்றினார்?’

‘உனக்கு நெஞ்சு வலி வந்தது’.

‘அப்படியா? நான் அதை அறியவில்லை’.

‘அறிந்திருக்க முடியாது. ஏனென்றால், அந்த வலியை உன் குருநாதர் அப்போது எடுத்துக்கொண்டார்’.

இது எனக்கு அதிர்ச்சியளித்தது. என் குரு இவ்வாறான செயல்களைப் புரியக்கூடியவர் அல்லர்.

‘ஆம். அவர் அதையெல்லாம் செய்யக்கூடியவர் இல்லைதான். எனக்கு வேறு வழியில்லாததால் அந்தக் கணம் அவர் மூலம் அதைச் செய்தேன்’.

‘ஏன், என் வலியை நீங்களே எடுத்துக்கொண்டிருக்கலாமே?’

‘இல்லை. அது சாத்தியமில்லை’.

‘ஏன்?’

‘ஏற்கெனவே நான் வேறொருவரின் வலியை ஏற்றிருக்கிறேன். கும்பமேளாவுக்குப் பிறகுதான் அதனை நான் இறக்கிவைக்க வேண்டும்’.

‘ஓஹோ. உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? இதை ஒரு பொதுச்சேவையாக நீங்கள் எல்லோருக்குமே செய்யலாமே? ஏன் நபர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?’

‘விமல், நாங்கள் வெறும் கருவி. உனக்கு இது புரிய இன்னும் சிறிது காலம் ஆகலாம்’.

‘நான் புரிந்துகொள்ளவே விரும்பவில்லை. ஆனால் என் அண்ணனைப் பார்த்தீர்களானால் ஒரு விஷயம் நிச்சயமாக அவனிடம் தெரிவியுங்கள். இந்த உலகின் ஒரே பெரிய அற்புதம் சுதந்திரமாக இருப்பது மட்டும்தான். என் சுதந்திரமே என் கடவுள். என் மகிழ்ச்சியே என் தரிசனம்’.

‘அப்படியா? நீ அவ்வளவு சுதந்திரமாகவா இருக்கிறாய்?’

‘சந்தேகமே இல்லை அம்மா. எனக்குத் தளைகளே இல்லை. சிந்தனைக்கும் சரி, செயல்பாட்டுக்கும் சரி. நான் இப்படித்தான் இருப்பேன், இறுதிவரை வரையிலுமேகூட’.

‘நல்லது மகனே. நீ எங்கே போனாய் என்று தெரியாமல் உன் குரு கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார். விடுதிக்குச் செல்’ என்று சொன்னாள்.

சட்டென்று அப்போதுதான் தோன்றியது. பள்ளியில் இருந்து நான் திரும்ப நேரமானால் அம்மா இப்படித்தான் கவலைப்படுவாள். வாசலுக்கு வந்து நிற்பாள். தொலைவில் என் முகத்தைப் பார்த்ததும் திருப்தியாகி உள்ளே போய்விடுவாள். அம்மாவின் இடத்தில் குரு தன்னைப் பொருத்திக்கொண்டுவிட்டாரா என்ன?

அவரை விட்டும் விலகிவிட வேண்டும் என்று அன்றுதான் நினைத்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com