94. ஒன்பது முகம்

அன்றிரவு எனக்கு உறக்கமில்லாமல் போனது. இத்தனைக்கும் குருஜி யாரோ ஒரு சேட்டு பக்தர் மூலம் நாங்கள் வயிறு நிறைய உண்பதற்கும் போர்த்திக்கொண்டு படுப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தார். குளிர் சற்று அதிகம்தான் என்றாலும் படுத்தால் உறங்கிவிட முடியும் என்றுதான் என் நண்பர்கள் சொன்னார்கள். நாங்கள் தங்கியிருந்த தரும சத்திரத்தின் மாடியில் ஓட்டை உடைசல்களைப் போட்டுவைக்கும் அறை ஒன்று இருந்தது. ஜன்னல்கள் இல்லாத அந்த அறையில் சிதறிக் கிடந்த பொருள்களை ஓரமாக நகர்த்திவிட்டு நாங்கள் பாய் விரித்துப் படுத்திருந்தோம். ஐந்து பேருக்குமாகச் சேர்த்து மூன்று கம்பளிகள் கிடைத்திருந்தன. பெரிய பிரச்னை இல்லைதான். இருந்தாலும் ஏனோ எனக்கு உறங்கத் தோன்றவில்லை. சத்தமில்லாமல் எழுந்து வெளியே போய்விட்டேன்.

ஓடும் நதியின் மிதமான சத்தமே அந்நகரத்தின் ஆதார சுருதியாக இருந்தது. ஹரித்வாரின் எந்தப் பகுதியிலும் அந்தச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். நதி கண்ணில் படாத பகுதிகளிலும் அந்தச் சத்தம் இருந்துகொண்டே இருப்பதான பிரமை எனக்கு இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் உண்டானது. நாங்கள் ஹரித்வாருக்கு வந்து மூன்று நாள்கள் கழிந்திருந்தன. கும்பமேளா கொண்டாட்டங்கள் அதன் உச்சத்தை எட்டியிருந்தன. பக்தர்களும் சன்னியாசிகளும் எங்கெங்கும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் சிவநாமம் ஜபித்துக்கொண்டும் ஆசி வாங்கிக்கொண்டும் ஆசி வழங்கிக்கொண்டும் இருந்தார்கள். நகரெங்கும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசாங்க மருத்துவர்கள் நாளெல்லாம் வாகனங்களில் சுற்றி அலைந்துகொண்டே இருந்ததைக் கண்டேன். யாருக்கு என்ன உபாதை ஏற்பட்டாலும் உடனே வண்டியை நிறுத்தி விசாரித்து சிகிச்சை அளித்துவிட்டுப் போனார்கள். சாலையோர பூரி கடைகளில் மிகவும் வயதானவர்களுக்குக் காசு கேட்காமல் சிற்றுண்டி தரப்பட்டதைப் பார்த்தேன். தள்ளுவண்டியில் வெல்லம் விற்றுச் சென்றவர்கள், கண்ணில் பட்ட சிறுவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி சும்மாவே கொடுத்துக்கொண்டு போனார்கள்.

பொதுவில் உலகம் இப்படியானது இல்லை. மறு பிறப்பின் குறைந்தபட்ச சௌகரியங்களை உத்தேசித்தோ, பிறப்பற்றுப் போவதை உத்தேசித்தோ அவரவர் தமக்குத் தெரிந்த வழிகளில் புண்ணியம் சேமிக்க நினைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மரணத்தையும் அதற்குப் பிந்தைய நிலையையும் ஓயாது நினைக்கக்கூடியவர்கள் வெல்லமும் பூரியும் விற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். முதல் நாள் ஒரு சம்பவம் நடந்தது. குருநாதர் இயேசுவைச் சந்தித்த கதையைச் சொல்லியான பிறகு நாங்கள் கடைவீதிப் பக்கம் நடந்துகொண்டிருந்தோம். ஒரு கடையில் கூடை கூடையாக ருத்திராட்ச மாலைகளைக் கொட்டிக் குவித்து வைத்திருந்தார்கள். பதினான்கு முகங்கள் வரை இருந்த ருத்திராட்சங்கள் ரகவாரியாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தன. குரு என்ன நினைத்தாரோ, சட்டென்று என்னைப் பார்த்து, ‘நீ ஒரு ருத்திராட்சம் வாங்கி அணிந்துகொள் விமல்’ என்று சொன்னார்.

‘ஐயோ எனக்கு எதற்கு?’

‘பரவாயில்லை. அணிந்துகொள். ஒன்பது முகங்கள் உள்ள ருத்திராட்சம் இருக்கிறதா என்று கேள்’ என்று சொன்னார்.

‘அதில் என்ன சிறப்பு?’

‘அதெல்லாம் பிறகு. முதலில் இருக்கிறதா கேள்’ என்று சொன்னார். வேறு வழியின்றி நான் கடைக்காரனிடம் ஒன்பது முகங்கள் உள்ள ருத்திராட்சம் இருக்கிறதா என்று கேட்டேன். அவன் உடனே ஒன்றை எடுத்துக் காட்டினான். நல்லதொரு எலுமிச்சம் பழத்தின் அளவில் ஐம்பத்து நான்கு ருத்திராட்சக் கொட்டைகளைச் சேர்த்துக் கட்டப்பட்ட மாலை.

‘எனக்கு இப்படி வேண்டாம். ஒரே ஒரு ருத்திராட்சம் இருந்தால் போதும்’ என்று சொன்னேன். ‘ஆனால் அது ஒன்பது முகங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்’.

கடைக்காரன் அங்கிருந்த பல ஒற்றை ருத்திராட்ச மாலைகளை எடுத்து ஆராய்ந்தான். என் நேரம், ஒன்பது முகங்கள் கொண்ட ருத்திராட்சம் எதுவும் தனியொரு மாலையாக அங்கே இல்லை. நான் வேறு கடை பார்க்கலாம் என்று சொன்னேன். குருநாதர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார். கட்டாயப்படுத்தி என்னை அந்தப் பெரிய ருத்திராட்ச மாலையை வாங்கி அணியவைத்தார். அவரே அதற்குப் பணமும் கொடுத்தார். என் நண்பர்களுக்கு ஆச்சரியம். உங்களுக்கு வேண்டுமா என்று குருஜி அவர்கள் மூவரிடமும் கேட்கவேயில்லை. இத்தனைக்கும் நான்கு பேரில் நான் ஒருவன் மட்டும்தான் எதன் மீதும் பிடிப்போ, நம்பிக்கையோ சற்றும் இல்லாதவன். அவர்கள் தெய்வத்தை நம்புகிறவர்களாக இருந்தார்கள். தெய்வமென்றால் உருவமுள்ளதல்ல. அவர்களுடையது ஓங்கார நம்பிக்கை. இருந்தாலும் ஒரு சம்பிரதாயத்துக்காகவேனும் அவர்களையும் அவர் கேட்டிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அதை நேரடியாகக் கேட்காமல், ‘நீங்களும் ஒன்று அணியலாமே குருஜி? ஒரு பத்து முகம் அல்லது பதினொரு முகம்?’

‘எனக்கோ எங்களுக்கோ அவசியமில்லை. உனக்குத்தான் இன்றைக்கு இது வேண்டும்’ என்று அவர் சொன்னார்.

இந்த உரையாடலை கவனித்துக்கொண்டிருந்த கடைக்காரனுக்கு அவரது பேச்சு சற்று வியப்பளித்திருக்க வேண்டும். ‘எதனால் அவருக்கு மட்டும் அவசியம் என்கிறீர்கள்? அதுவும் இன்று ஒரு நாளைக்கு மட்டும் அவசியம் என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்டான்.

குரு சற்றும் யோசிக்கவில்லை. ‘இன்றிரவு அவன் மரணத்தைத் தொட்டுவிட்டு மீள்வான் என்று நினைக்கிறேன். மீள்வதற்கு இது தேவை’ என்று சொன்னார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. என் நண்பர்களும் அதிர்ச்சியடைந்திருந்தார்கள். குரு அப்படியெல்லாம் சொல்லக்கூடியவர் அல்லர். மரணத்தை முன்கூட்டி அறியக்கூடிய சக்தி மிக்கவராக அவர் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு அறிவாளி. நிறையப் படித்தவர். படிப்பின் மூலமும் சிந்தனையின் மூலமும் ஞானமடைந்தவர். மற்றபடி சித்தரோ, யோகியோ, வேறு எதுவுமோ அல்ல. மிக நிச்சயமாக அவர் ஒரு ஆன்மிகவாதியல்ல. இதை நான் நன்கறிவேன். அவரது ஆன்மிகம் என்பது அறிவின் பூரணத்துவத்தை தரிசித்துவிட்டு அதனை உதிர்த்துவிடுவது. அதனால்தான் அவர் சொன்னபோது என்னால் அதை நம்ப முடியவில்லை.

ஆனால் அந்தக் கடைக்காரன் ஒரு காரியம் செய்தான். குருநாதர் அவனிடம் கொடுத்த பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டான். ஏன் என்று கேட்டதற்கு, ‘பரவாயில்லை. உங்கள் சீடன் நலமாயிருக்க நானும் பிரார்த்தனை செய்வேன்’ என்று சொன்னான்.

அந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. நான் இறந்தாலும் சரி. இறப்பில் இருந்து அன்று தப்பினாலும் சரி. பகுதியளவு புண்ணியம் அவனைப் போய்ச் சேரும் என்று ஏனோ தோன்றியது. பாவ புண்ணியங்களை நான் நம்பத்தொடங்கிவிட்டேனா? அல்லது மரணத்தைக் குறித்த எண்ணம் எழும்போது இயல்பாக அவையெல்லாம் வந்து ஒட்டிக்கொண்டுவிடுமா? நெடுநேரம் நான் அது குறித்தே யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் குருநாதர் அதன்பின் அந்தப் பேச்சையே எடுக்கவில்லை. அவர் ஏதாவது சொன்னால், தொடர்ச்சியாகச் சிறிது உரையாடலாம் என்று நாங்கள் நான்கு பேருமே நினைத்தோம். ஆனால் அவர் மிகவும் கவனமாக அந்தப் பேச்சைத் தவிர்ப்பதாகப் பட்டது. வழியெங்கும் கண்ணில் தென்பட்ட சாதுக்களை உற்றுக் கவனிக்கச் சொன்னார். ‘இவர்கள் எல்லோருமே உங்களைப் போலத்தான். எதையோ கண்டு பயந்துபோய் ஓடிவந்தவர்கள்’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

‘அப்படியா? நீங்களும் எதையோ கண்டு பயந்துதானே ஓடி வந்தீர்கள்?’ என்று கேட்டேன்.

‘இல்லை விமல். என்னைப் பார்த்து யாரும் பயந்துவிடக் கூடாது என்ற பெருந்தன்மையால் விலகி வந்தவன் நான்’ என்று சொன்னார். அன்று மாலை வரை அலைந்து திரிந்துவிட்டு, இரவு அந்தச் சத்திரத்தில் படுப்பதற்காகப் போனோம். வழக்கத்துக்கு விரோதமாக அன்றைக்கு நான் சீக்கிரமே உறங்கிவிட்டேன். குருநாதரும் என் நண்பர்களும் உறங்காமல் என் பக்கத்திலேயே இரவெல்லாம் கண் விழித்து உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது அதிகாலை நான் கண் விழித்தபோதுதான் தெரிந்தது.

‘ஏன் நீங்கள் தூங்கவில்லை?’ என்று கேட்டேன்.

‘கண்ணெதிரே ஒரு மரணம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் இவர்கள் தூங்கவில்லை. அது எப்படி நிகழாது போகிறது என்று பார்ப்பதற்காக நானும் உறங்கவில்லை’ என்று குரு சொன்னார். நான் சிரித்தேன். அணிந்திருந்த அந்த ருத்திராட்சத்தை கழட்டி குருவின் கரங்களில் போட்டேன். ‘ரொம்ப கனம்’ என்று சொன்னேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. ‘சீக்கிரம் கிளம்புங்கள். நாம் கும்பமேளா பூஜைகளைப் பார்க்கப் போகலாம்’ என்று சொன்னார்.

நான் சிறிது யோசித்துவிட்டு, ‘குருஜி, நீங்கள் என்னையும் தூங்கவிடாமல் உட்கார வைத்திருக்கலாம். வந்த மரணத்தைப் பார்த்துவிட்டாவது அனுப்பியிருப்பேன்’.

‘நீ என்னை நம்பவில்லை’. அவர் குரலில் லேசான வருத்தம் இருந்தது.

‘மன்னியுங்கள். நம்ப முடியவில்லை. ஏனென்றால், ஒரு விபத்துக்கான சாத்தியம் ஏதும் நிகழவில்லை. அதிர்ச்சிதரத்தக்க சம்பவம் ஒன்றும் நடக்கவில்லை. திடீர் உடல்நலக் குறைவுகூட ஏற்படவில்லை. ஒரு விஷப்பாம்போ, பூரானோ, தேளோகூட என்னை நெருங்கவில்லை. எப்போதும்போல் படுத்தேன். எப்போதும்போல் எழுந்தேன். இதில் மரணம் எங்கே வந்து சென்றது என்று புரியவேயில்லை’.

‘நாந்தான் சொன்னேனே, அதை இந்த ருத்திராட்சம் தடுக்கும் என்று?’

‘நல்ல கதையாக இருக்கிறதே. இத்தனை வருடங்களாகவும் நான் இரவுகளைக் கடந்துதான் எழுந்திருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு பல் துலக்கப் போனேன். நான் என் குருவைச் சிறிதாவது நம்பியிருக்கலாம். அவர் விளையாடக்கூடியவரோ, பொய் சொல்லக்கூடியவரோ அல்ல என்பதை நான் அறிவேன். இருந்தாலும் எதை வைத்து அவர் அன்று நான் இறப்பின் வாசலைத் திறந்து மூடுவேன் என்று சொல்லியிருப்பார் என்பதை என்னால் அறிய முடியவில்லை.

அந்த மூன்றாம் நாள் இரவு நான் உறக்கமின்றி வெளியே அலையப் போனபோது எனக்கு அதற்கான காரணத்தை அறிய நேர்ந்தது. அது நான் சற்றும் எதிர்பாராதது. உண்மையில் நான் என் குருவை விட்டு விலகிவிட வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன். செயல்படுத்தத்தான் மேலும் சில ஆண்டுகள் காத்திருக்கும்படியாகிவிட்டது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com