89. பெண் வாசனை

ஞானம் என்ன பலசரக்கா, கடையில் போய் வாங்கி வர? அது உள்ளே இருப்பது. தேடி எடுப்பது மட்டுமே நம் வேலை.

அவருக்குப் பெயர் கிடையாது. அதாவது அவர் தனது பெயரை யாரிடமும் சொன்னதில்லை. பெயரற்ற ஒருவராகத் தனது அடையாளத்தை நிறுவிக்கொள்வதில் அவருக்கு இளம் வயதில் ஓர் ஆர்வம் இருந்திருக்க வேண்டும். பழகிவிட்ட பின்பு அதையே பின்பற்ற வேண்டியது ஒரு கட்டாயமாகியிருக்கும்.

ஆரம்பத்தில் அவர் பெயர் தெரியாது என்று மற்ற சீடர்கள் சொன்னபோது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. உங்கள் பெயர் என்ன என்று நான் கேட்டபோது அவர் வெறுமனே சிரித்தார். ‘அது அத்தனை முக்கியமா?’ என்று கேட்டார்.

முக்கியமில்லைதான். ஆனாலும் குறிப்பிடுவதற்கு ஒரு பெயர் அவசியமல்லவா?

‘யாரிடம் என் பெயரை நீ குறிப்பிட நினைக்கிறாய்?’

‘அப்படி இல்லை. யாராவது கேட்டால்?’

‘யார் கேட்பார்கள் என்று நினைக்கிறாய்?’

யோசித்துப் பார்த்தேன். அவர் சொல்வது நியாயம்தான். யார் அவர் பெயரைக் கேட்கப் போகிறார்கள்? ஆசிரமத்துக்கோ, அவர் பெயருக்கோ கடிதங்கள்கூட வருவது கிடையாது. அங்கே அப்படி ஒரு ஆசிரமம் இருப்பதுகூடப் பெரும்பாலும் தெரிந்திருக்காது. அவர் மடாதிபதி அல்ல. யோகா ஆசிரியரும் அல்ல. மக்களைக் கூப்பிட்டு உட்கார வைத்துக்கொண்டு நீதிபோதனை வகுப்பெடுக்கும் வழக்கம் அவருக்கு இல்லை. பிரசங்கம் செய்ய மாட்டார். அற்புதங்கள் புரியும் நபரும் அல்ல. ஆனால் அவர் ஒரு சன்னியாசி. அக்கம்பக்கத்தில் இருக்கும் ஒரு சிலருக்குத்தான் அவரைத் தெரியும். பார்த்தால் புன்னகை செய்யும் அளவுக்குப் பழக்கம் உள்ளவர்கள். மற்றபடி அவர் மக்களுக்கான சன்னியாசி அல்ல. கடவுளுக்கான சன்னியாசியா என்றால் அதுவும் இல்லை. பூஜை புனஸ்காரங்கள் கிடையாது. தியானம், தவம் கிடையாது. மந்திர உச்சாடனங்கள் இல்லை. வேள்விகள் இல்லை. அவர் ஒரு நபர். ஞானம் அடைந்தவர். அவ்வளவுதான்.

இந்த அம்சம்தான் முதலில் என்னை அவர்பால் ஈர்த்தது.

‘நீங்கள் தவம் புரியாமல் எப்படி ஞானம் அடைந்தீர்கள்?’ என்று கேட்டேன்.

‘ஞானம் என்ன பலசரக்கா, கடையில் போய் வாங்கி வர? அது உள்ளே இருப்பது. தேடி எடுப்பது மட்டுமே நம் வேலை’.

எனக்கு அது சரியாகப் பட்டது. நிற்காமல் ஊர் சுற்றிக்கொண்டே இருந்ததுதான் தனது தவம் என்று அவர் சொன்னார். ‘யாருடனும் அப்போது நான் பேசவில்லை. கூடியவரை மிகவும் குறைவாக உணவு உட்கொண்டேன். ஒரு நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்தேன். மூன்று நாள்களுக்கு ஒருமுறைதான் குளியல். அதுவும் நீர்நிலை ஏதேனும் கண்ணில் பட்டால் மட்டும். மற்றபடி நடந்துகொண்டே இருப்பேன். யோசித்துக்கொண்டே இருப்பேன்’ என்று அவர் சொன்னார்.

‘எதைக் குறித்து யோசித்தீர்கள்?’

‘வேறென்ன? மரணம்தான்’.

‘என்ன தெரிந்தது?’

‘உள்ளுக்குள் அழகான அனைத்தும் வெளித்தோற்றத்தில் கொடூரமானவை. வெளியே கொடூரமாகத் தெரியும் அனைத்தும் உள்ளழகு கொண்டவை’.

‘இதுதான் ஞானமா?’

‘இதைக் காட்டிலும் ஒரு பெரிய உண்மையை உன்னால் முடிந்தால் நீ கண்டுபிடி’ என்று சொன்னார்.

நான் யோசிக்க ஆரம்பித்தேன். மரணத்தைப் பொறுத்தவரை அவர் சொன்னது சரிதான் என்று தோன்றியது. மரணம் அழகானது. சட்டென்று இல்லாமல் போவதைக் காட்டிலும் ஒரு பேரழகு வேறென்ன இருந்துவிட முடியும்? ஆனால் மரணம் தரும் வலியும் துக்கமும் சகிக்க முடியாதது. இறப்புக்குப் பின் ஒரு உயிர் அதை உணருமா என்று தெரியவில்லை. ஆனால் இருப்பவர்களுக்கு வலி நிச்சயம். யாருக்கு வலித்தால் என்ன? வலி உண்டு. வலி உண்மையானது. அதுதான் கொடூரமானது.

‘விமல், உனக்கு நான் சொல்லித்தரக்கூடிய ஆகப்பெரிய பாடம் ஒன்றுதான். உடல், உயிர், ஆன்மா என்று ஒருபோதும் யோசிக்காதே. உடல், காற்று, கரி என்று யோசித்துப் பழகு’ என்று அவர் சொன்னார். நான் பார்த்த வரையில் அவர் நாளெல்லாம் உபநிடதங்களையே படித்துக்கொண்டிருந்தார். சுக்ல யஜுர்வேதமும் சாமவேதமும் அவருக்கு முழுதாகத் தெரியும். வரி வரியாக அர்த்தம் சொல்லி விளக்கக்கூடியவர். ஆனாலும் இறப்புக்குப் பிந்தைய நிலை பற்றி உபநிடதங்கள் சொல்லுகிற அனைத்தையும் அவர் நிராகரிப்பவராக இருந்தார்.

‘நம் அறிவுக்கு எட்டாத ஒன்று நம்மைப் பொறுத்தவரை இல்லாததுதான். அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாதே’ என்று ஒருநாள் சொன்னார்.

‘பிறகு எதற்கு நாளெல்லாம் இதைப் படிக்கிறீர்கள்?’

‘எழுதி வைத்துவிட்டார்களே’.

‘அதனால் படித்துத்தான் தீரவேண்டுமா?’

‘படிப்பு என் பலவீனம்’ என்று அவர் சொன்னார். எனக்கு அது பிடித்திருந்தது. அவரிடம் இருந்துதான் எனக்கும் படிக்கும் பழக்கம் பிடித்துக்கொண்டது. குருநாதரிடம் ஒரு பெரிய புத்தகச் சேகரம் இருந்தது. அவர் இன்னதுதான் படிப்பார் என்று சொல்ல முடியாது. வேத உபநிடதங்களில் இருந்து அம்பேத்கர் வரை படிப்பார். மேலை தத்துவம், கீழைத்தத்துவம், ஜென் பவுத்தம், தாவோயிசம் எதையும் விடமாட்டார். அவருக்குக் கவிதைகள் பிடிக்கும். காதல் கவிதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். திடீர் திடீரென்று ஏதாவது ஒரு காதல் கவிதையைப் படித்துவிட்டு புத்தகத்தோடு வந்துவிடுவார். ‘இதைக் கேள். எப்படி எழுதியிருக்கிறான் பார்’ என்று வரி வரியாக எடுத்துச் சொல்லிப் புளகாங்கிதமடைவார்.

‘எதற்கு இதெல்லாம் உங்களுக்கு?’ என்று கேட்டால், ‘என்ன தப்பு? உயிரை உருக்கி எழுதியிருக்கிறான் பாவம். நான் படிப்பதால் அவன் கதிமோட்சம் உறுதியாகிறதல்லவா?’

‘குருஜி, நீங்கள் காதலித்திருக்கிறீர்களா?’

‘இல்லை’ என்று சற்றும் யோசிக்காமல் சொன்னார்.

‘அமையவில்லையா? விருப்பமில்லையா?’

‘நேரமில்லை’ என்று சொன்னார்.

ஆசிரமத்துக்கு அப்போதுதான் சிறிது சிறிதாக மக்கள் வந்து போக ஆரம்பித்திருந்தார்கள். அந்தக் குற்றத்துக்கு நானே காரணம் என்று ஒருநாள் அவர் என்னைக் கோபித்துக்கொண்டார். காலை நடை, மாலை நடையின்போது வழியில் சந்திக்கும் நபர்கள் சிலர் அப்போது எனக்கு சிநேகமாகியிருந்தார்கள். என்னைக் குறித்துப் பேச நேர்ந்தபோதெல்லாம் நான் குருநாதரைப் பற்றியும் சிறிது சொல்ல ஆரம்பித்தேன். சரி வந்து பார்க்கலாம் என்று ஒருவர் இருவராக வர ஆரம்பித்து, விரைவில் பத்திருபது பேர் தொடர்ச்சியாக தினமும் ஆசிரமத்துக்கு வரக்கூடியவர்களாக மாறியிருந்தார்கள். வேறு வழியில்லாமல் குருநாதர் அவர்களுடன் உட்கார்ந்து பேசும்படியானது.

‘விமல் எனக்குக் கற்றுத்தரத் தெரியாது. ஆனால் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில் ஆட்சேபணை இல்லை. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடு’ என்று சொன்னார். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. தினமும் மாலை ஒரு மணிநேரம் குருநாதர் பேசுவார். அந்தப் பேச்சைக் கேட்பதற்கு நானே போய் ஆட்களைத் திரட்டிக்கொண்டு வருவேன்.

அப்படித்தான் தற்செயலாக ஒருநாள் மஞ்சு ஆசிரமத்துக்கு வந்தாள். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பெண். எங்கள் ஆசிரமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவளது வீடு இருந்தது. அவளது தாய்மாமன் மூலம் குருஜியைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு மாலைக் கூட்டத்துக்கு வந்தவள், தொடர்ச்சியாக தினமும் ஆசிரமத்துக்கு வர ஆரம்பித்தாள்.

மஞ்சு, எங்கள் ஆசிரமத்துக்கு வந்த முதல் பெண். அதனாலேயே என்னால் அவளை மறக்க முடியாது. அவள் அழகாக இருந்தாள். சிறிய முகம். சிறிய உடல். ஒரு தாளைச் சுருட்டுவது போலச் சுருட்டி சொருகிக்கொண்டு போய்விடலாம் போலிருப்பாள். குருஜி பேசும்போது கண்ணிமைக்காமல் உட்கார்ந்து கவனிப்பாள். இப்படி அப்படி அசைய மாட்டாள். சொற்பொழிவு முடிந்தபின் எழுந்து அவர் எதிரே வந்து விழுந்து வணங்கிவிட்டு ஒன்றும் பேசாமல் போய்விடுவாள். மீண்டும் மறுநாள் வருவாள்.

ஆசிரமத்தில் குருஜியைத் தவிர நாங்கள் நான்கு பேர் இருந்தோம். மற்ற மூவரும் எனக்கு முன்னால் அவரோடு வந்து சேர்ந்தவர்கள். ஒருவன் மைசூர்க்காரன். எலக்டிரானிக்ஸ் படித்துவிட்டு வந்து சன்னியாசி ஆனவன். இன்னொருவன் மடிகேரியிலேயே பிறந்து வளர்ந்தவன். பெற்றோர் கிடையாது. சிறு வயதில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்துவிட்டு அதன்பின் எப்படியோ குருஜியிடம் வந்து சேர்ந்தவன். அவனுக்கு குருஜி இன்னமும் தீட்சை தராதிருந்தார். காரணம் சொல்லவில்லை. மூன்றாமவன் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவன். ஆசிரமத்துக்கு வந்து சேருவதற்கு முன்பே அவனுக்கு யோகக் கலையின் சில பகுதிகள் தெரிந்திருந்தது. அவன்தான் எங்களிடம் அதைப் பயில வற்புறுத்தி வகுப்பாக ஆரம்பித்தவன். ‘தப்பில்லை. கற்றுக்கொள்’ என்று குருஜி சொன்னார்.

‘ஆனால் இந்த உடல் வருத்திக்கொள்வதற்கானதில்லை. எந்த ஒரு சிறந்த கலையும் எளிமையானதாகத்தான் இருக்க முடியும். எளிமையாக இல்லாத எதுவும் சிறந்ததாக இருக்காது’ என்று சொல்லுவார்.

நாங்கள் நான்கு பேரும் இரவு நேரங்களில் உறங்கப் போகும் முன்னர் மஞ்சுவைக் குறித்துப் பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டோம். ஏனோ எங்களுக்கு அது பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் அணிந்து வரும் ஆடையைப் பற்றிப் பேசுவோம். குருஜி பேசிக்கொண்டிருக்கும்போது அவள் வேறு எந்தப் பக்கமும் பாராமல் அவரையே உற்று நோக்குவது குறித்துப் பேசுவோம். அவள் வயதுக்கு குருஜி பேசுகிற சங்கதிகள் மிகவும் கடினமானவை என்று நாங்கள் நினைத்தோம். அவளுக்கு அதெல்லாம் புரியுமா என்று விவாதிப்போம். ஆனால் மிகவும் கவனமாக அவள் அழகைக் குறித்துப் பேசுவதை நாங்கள் தவிர்த்து வந்தோம். இது எங்கள் நான்கு பேருக்குமே தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும் தவிர்த்தோம். தவிர்க்கிறோம் என்பதை உணர்ந்தே தவிர்த்தோம். என்றோ ஒருநாள் தற்செயலாக நாந்தான் முதல் முதலில் அந்தத் தடுப்பை உடைத்தேன்.

‘மஞ்சு எவ்வளவு அழகான பெண்!’ என்று சொன்னேன்.

அவர்கள் மூன்று பேரும் மிகுந்த அதிர்ச்சியடைந்தார்கள். ‘நாம் சன்னியாசிகள். பெண்களின் அழகு நாம் பொருட்படுத்தத்தக்கதல்ல’ என்று சொன்னார்கள்.

‘அப்படியா? குருநாதரைக் கேட்டுவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு நான் எழுந்து அவரிடம் போனேன்.

‘என்ன?’

‘குருஜி, மஞ்சு மிகவும் அழகான பெண் என்று நான் சொன்னேன். அப்படிச் சொல்வது தவறு என்று அவர்கள் நினைக்கிறார்கள். அழகை அழகென்று சொல்வது குற்றமா?’ என்று கேட்டேன்.

அவர் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தார். பிறகு, ‘அழகு என்று பொதுவாகச் சொல்லாதே. அங்கம் அங்கமாக உன்னால் முடிந்தால் வருணித்துக் காட்டு. அழகா இல்லையா என்று பிறகு முடிவு செய்வோம்’ என்று சொன்னார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com