84. இறக்கி வைத்தல்

வேட்டியைக் களைந்து இடாகினியை அதில் இறக்கி வைத்தான். ஒரு கூழாங்கல்லை எடுத்துத் தனது நான்கு விஷப் பற்களைத் தட்டி உடைத்து அதில் போட்டான். ரத்தம் வந்தது. வலித்தது.

வினய் கேரளத்தில் திரிந்துகொண்டிருந்த காலத்தில் நிறைய மழைகளைக் கண்டிருக்கிறான். நின்று அடிக்கும் மழை. ஒரே வீச்சாகக் கொட்டிக் கவிழ்த்துவிட்டு ஓடிவிடுகிற மழை. நசநசவென்று நடக்க விடாத தூறலால் படுத்தியெடுக்கும் மழை. பருவ காலங்களின் ஒழுக்கம் காத்து அடிக்கிற சாரல் மழை. ஆனால் கேரளத்து மழைக்கும் காமாக்யாவில் அவன் பார்த்த மழைக்கும் சம்பந்தமே இல்லை என்று தோன்றியது. இந்த மழையில் ஓர் உக்கிரம் இருந்தது. ஆவேசம் இருந்தது. எதையோ உருட்டிப் புரட்டிக்கொண்டு ஓடிவிடும் வேகம் தெரிந்தது. எப்போதும் இப்படித்தானோ என்று வினய் நினைத்தான். ஏனென்றால் மக்கள் அந்த மழை வேகத்தைப் பெரிதாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மழை அடிக்க ஆரம்பித்ததும் அவர்கள் ஆங்காங்கே கடைகளில் ஒதுங்கிக்கொண்டார்கள். குடை கொண்டு வந்தவர்கள் குடையை விரித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். கோயிலுக்குப் போய்க்கொண்டிருந்தவர்கள்கூட பெரிதாக மழைக்குக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முகத்தை மட்டும் அவ்வப்போது துடைத்துக்கொண்டு மலை ஏறியபடியேதான் இருந்தார்கள். அவனுக்குத்தான் காற்றும் மழையும் கலந்தடித்த அந்த வேகம் பயங்கரமாக இருந்தது. இந்த மழையும் தனக்காகவே அனுப்பப்பட்டதாக நினைத்தான். ஒரு குறியீட்டைப் போல மழை தன்னை விடாமல் துரத்தி வருகிறதென்று அவனுக்குத் தோன்றியது. அதன் பொருளை யோசித்தபடி அவன் மெல்ல மெல்ல மலையேறிக்கொண்டிருந்தான்.

பாதி வழி கடந்திருந்த நேரம் மலைப் பாதையில் மழைக்குத் தன்னைத் தின்னக் கொடுத்தபடி யாரோ ஒருவன் சிவனேயென்று அமர்ந்திருந்ததை வினய் பார்த்தான். பரதேசிக் கோலம் இல்லை. மழுங்கச் சிரைத்த முகம். திருத்தமாகச் சீவப்பட்ட தலைமுடி. ஒரு ஜிப்பாவும் தொளதொளவென்று பைஜாமாவும் அணிந்திருந்தான். மழைக்கும் தனக்கும் தொடர்பே இல்லாதது போல மலைப்பாதையில் அமர்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவன் கையில் ஒரு ஜபமாலை இருந்தது. அதுதான் வினய்யை அவன்பால் ஈர்த்தது. அவனுக்கு எப்படியும் நாற்பதில் இருந்து நாற்பத்து ஐந்து வயதிருக்கும் என்று நினைத்தான். வெள்ளை என்றோ மாநிறம் என்றோ சட்டென்று சொல்லிவிட முடியாத அசாமிய முகம். மூக்கை அழுத்தி முன் நெற்றி சற்று மேடிட்டிருந்தது. புருவங்களுக்கு அடியில் வெகு தூரத்தில் கண்கள் இருப்பது போலத் தெரிந்தது.

கோயிலுக்கு வந்த யாரோ ஒருவன் மழையை அனுபவிக்க அப்படி வழியில் அமர்ந்திருக்கிறான் என்று வினய் நினைத்தான். நெருங்கியபோதுதான் அது இல்லை என்பது புரிந்தது. நான்கடி தூரத்தில் வினய் அவனை நெருங்கி வந்தபோது அவன் ‘நில்’ என்று சொன்னான்.

‘என்ன?’

‘கையில் என்ன கட்டு?’

வினய் தன் இடக்கை கட்டை விரலைப் பார்த்தான். அவன் சுற்றியிருந்த துணி ஈரமாகியிருந்தது. அவன் சட்டென்று விரல்களை மடக்கி ஈரத்தைப் பிழிந்தான்.

‘எதற்குக் கோயிலுக்குப் போகிறாய்?’

‘தேவியை தரிசிக்க’.

‘என்ன கேட்கப் போகிறாய்?’

‘உனக்கு எதற்கு அது?’

‘இடாகினிகளை அவள் அனுமதிப்பதில்லை’ என்று அவன் சொன்னான். வினய்க்கு திடுக்கிட்டுப் போனது. ‘உனக்கெப்படித் தெரியும்?’ என்று திரும்பக் கேட்டான்.

‘உன் பற்கள் நான்கில் கருநாக விஷம் உள்ளது. அதையும் அவள் விரும்ப மாட்டாள்’.

‘ஐயோ’.

‘உன் நாற்பத்து எட்டு நாள் விரதம் உனக்குப் பலனளிக்க வேண்டாமா?’

‘இல்லை. நிச்சயமாகப் பலன் வேண்டும். எனக்கு தேவியின் அருள் வேண்டும்’.

‘அப்படியானால் போ. பிரம்மபுத்திராவில் போய் முக்குப் போடு. உன் கட்டை விரலில் வைத்திருப்பதோடுகூட அந்த நான்கு பற்களை உடைத்துச் சேர்த்து ஒரு மூட்டையாகக் கட்டு. பின்புறமாகத் திரும்பி நின்று நதியில் போட்டுவிட்டு மீண்டும் தலை முழுகிவிட்டு எழுந்து வா’.

வினய் திகைத்துப் போய் அப்படியே நெடுநேரம் நின்றிருந்தான். அவனாகப் பேசட்டும் என்று அந்த அசாமியன் காத்திருந்தான். மழை நிற்கவேயில்லை. அடித்து வெளுத்துக்கொண்டிருந்தது. கோயிலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தவர்களும் கோயிலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தவர்களும் மறைந்துவிட்டார்கள். பிராந்தியத்தில் உயிருடன் இருந்ததே அவர்கள் இருவர் மட்டும்தான் என்பது போலிருந்தது. நெடு நேரம் யோசனைக்குப் பிறகு வினய் சொன்னான், ‘இந்த ஒரு இடாகினிக்காக நான் எட்டு வருடங்கள் செலவிட்டிருக்கிறேன்’.

‘சரி’.

‘விஷ ஜந்துக்கள் என்னை நெருங்க இயலாதபடிக்கு என் உடலையே ஒரு விஷப் பாத்திரமாக்கி வைத்திருக்கிறேன்’.

‘தெரியும். அதனால்தான் சொல்கிறேன். தேவியின் முன்னால் காலிப் பாத்திரங்களை மட்டுமே வைக்க வேண்டும். அவள் நிரப்பித்தர இடமில்லாத பொருள்களுக்கு சன்னிதானத்தில் இடமில்லை’.

வினய்க்கு அழுகை வந்தது. சிறிது நேரம் கதறிக் கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும்வரை காத்திருந்த அசாமியன், ‘எதற்கு அழுதாய்?’ என்று பிறகு கேட்டான்.

‘தெரியவில்லை. நான் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இங்கு வந்திருக்கிறேன்’.

‘தெரியும்’.

‘நீங்கள் சித்தரா?’

‘என்னவாயிருந்தால் உனக்கென்ன? உனக்குச் சொன்னது உனக்குப் புரிந்ததா இல்லையா? இங்கிருந்து நதிப் படுகையை பதினொரு மணி நேரத்தில் நீ அடையலாம். உன் இடாகினியைப் பயன்படுத்தாதே. நடந்து செல். அல்லது பஸ்ஸில் ஏறிப் போ. மூன்று மணி நேரத்தில் போகலாம்’.

‘என்னிடம் பணமில்லை’.

‘பிச்சை எடு’.

வினய்க்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் நிச்சயமாக ஒரு சாதாரண மனிதன் இல்லை என்று தெரிந்தது. ஒரு சித்தனாகவோ யோகியாகவோ இருக்கலாம். தனக்காக அவன் தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டும் வந்து அமர்ந்திருக்கலாம் என்று தோன்றியது. அது ஒருவேளை அண்ணாவாகவே இருக்குமோ என்றும் அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. கேட்கத் தயக்கமாக இருந்தது.

‘என்ன யோசிக்கிறாய்?’

‘நீங்கள் சொல்வதெல்லாம் சரி. காமரூபிணியின் சன்னிதியில் நான் இந்த இடாகினியுடன் போய் நிற்பது அபசாரம்தான். ஆனால் இவளும் என்னை விட்டுப் போய்விட்டால் நான் ஒன்றுமில்லாதவன் ஆகிவிடுவேன்’.

‘இப்போது மட்டும் உன்னிடம் என்ன இருக்கிறது?’

‘அதுவும் சரிதான். ஒன்றுமில்லாதவன் தான். ஆனால் உயிருடனாவது இருக்கிறேன்’.

‘கேவலம் ஒரு பேயைப் பிரிந்தால் இறந்துவிடுவாயா? அத்தனை பலவீனமானவனா நீ?’

‘தெரியவில்லை. அப்படித்தான் நினைக்கிறேன். நான் நிறைய அடிபட்டவன். எனக்கு குருவருள் கூடவில்லை. அத்தனை பெரிய பாவி’.

அவன் நெடுநேரம் வினய்யை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். மழை சற்று விட்டிருந்தது. தூறல் மட்டுமே அப்போது இருந்தது. குளிர்க்காற்று ஒரு குத்தீட்டியைப் போல உடலெங்கும் குத்திக் கிழித்துக்கொண்டிருந்தது.

‘நீ தவமிருந்து வெளிச்சம் கண்டிருக்கிறாய். என்றால் அவள் சன்னிதானத்துக்குள் நுழைய உனக்கு அனுமதி கிடைத்திருக்கிறது என்று பொருள். முழுக்க நம்பி அவளைச் சரணடைந்தால் நீ நினைத்தது நடக்கும். இதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட்டு அவன் எழுந்துகொண்டான். வினய் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன் அவன் விறுவிறுவென்று நடந்து காணாமல் போனான். வினய்க்கு மிகவும் சங்கடமாக இருந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை. இத்தனை பேசிய மனிதன், நீ சன்னிதிக்குள் நுழைந்த கணம் எல்லாம் நடந்துவிடும் என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் என்று நினைத்தான். பிறகு தன் நினைப்பின் அபத்தம் புரிந்து சற்று வெட்கப்பட்டான். என்ன செய்யலாம் என்று புரியாத குழப்பத்துடன் மீண்டும் குன்றை ஏறிக் கடந்து கோயிலை நெருங்கினான்.

தயக்கமாக இருந்தது. கைக்கட்டுடன் உள்ளே போகாதே என்று அந்த அசாமியன் சொல்லியிருந்தான். போனால் என்ன ஆகும் என்று சொல்லவில்லை. போய்ப் பார்த்தால்தான் என்ன என்று சபலமாக இருந்தது. போன காரியம் நடக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று பயமாகவும் இருந்தது. அன்று முழுவதும் அவன் மன ஊசலாட்டத்துடன் அங்கேயே நின்று கோயிலைப் பார்த்தபடியே கழித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்து சன்னிதிக்குள் நுழையாமல் விறுவிறுவென்று கீழே இறங்கினான். நெருக்கத்தில் உள்ள நதிக்கரை எங்கே என்று கேட்டறிந்து அந்தத் திசை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

இரண்டு நாள் இடைவிடாமல், மறு சிந்தனை இல்லாமல் நடந்து அவன் நதிப் படுகையை அடைந்தான். ஒரு பெருங்கடலை நிகர்த்த தோற்றத்துடன் பிரம்மபுத்திரா அங்கே ஆரவாரமுடன் அலையடித்துப் பொங்கிப் பொங்கித் தணிந்துகொண்டிருந்தது. வினய் அதன் கரையில் வந்து நின்றான். தனது இடது கை கட்டைவிரலைப் பார்த்தான். அதன் கட்டை அவிழ்த்தான். தன் வேட்டியைக் களைந்து இடாகினியை அதில் இறக்கி வைத்தான். ஒரு கூழாங்கல்லை எடுத்துத் தனது நான்கு விஷப் பற்களைத் தட்டி உடைத்து அதில் போட்டான். ரத்தம் வந்தது. வலித்தது. பொறுத்துக்கொண்டு வேட்டியை இறுக்கிக் கட்டி முடிச்சுப் போட்டு ஒரு மூட்டையாக்கினான். தலைக்குமேலே அதை ஏந்தி எடுத்துக்கொண்டு நதிக்குள் இறங்கினான். அந்த அசாமியன் சொன்னதைப் போல நதிக்கு எதிர்முகமாகத் திரும்பி நின்றுகொண்டு கண்ணை மூடிக் காமரூபிணியை நினைத்தான்.

நெடு நேரம் நினைத்தும் அவள் வரவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com