83. காமரூபிணி

தேவியின் சன்னிதியைத் தன் மானசீகத்தில் அவன் நெருங்கப் பார்த்தான். இருளும் புகையும் ஈரமும் குங்கிலிய மணமுமாக அந்தக் குகை நீண்டுகொண்டே சென்றது.

‘சித்ரா விஷயத்தில் நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அவளிடம் என் விருப்பத்தை நான் சொல்லியிருக்க வேண்டும். அது நிகழ்ந்திருந்தால் இத்தனை அவலங்களில் நான் சிக்கியிருக்க வேண்டி இருந்திருக்காது’ என்று வினய் சொன்னான். ‘எனக்குக் காரணமே புரியவில்லை விமல். உன்னிடம் ஆரம்பித்து உலகில் உள்ள அத்தனை பேரிடமும் நான் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம் வரை பெரும் பொய்யனாக மட்டுமே இருந்திருக்கிறேன். மனத்தில் நினைக்கும் எதையும் யாரிடமும் சரியாகச் சொன்னதே இல்லை’.

‘இப்போதும் அப்படித்தானா?’ என்று கேட்டேன்.

‘நிச்சயமாக இல்லை. இப்போது என்னிடம் ரகசியங்கள் என்று ஏதுமில்லை. என் யோகம், என் தவம் எல்லாமே என் பொய்களைப் பொசுக்கியதுதான்’.

‘பெரிய விஷயம் வினய். அநேகமாக அது பெரும்பாலானவர்களுக்குக் கைகூடாது’.

‘ஆம். சிரமம்தான். ஆனால் நான் அதை ஓர் அப்பியாசமாகச் செய்தேன்’ என்று அவன் சொன்னான். செய்திருப்பான் என்றுதான் தோன்றியது. வழியெங்கும் அவன் தன்னைப் பற்றி சொல்லிக்கொண்டு வந்த பல கதைகள் மிகவும் பயங்கரமாக இருந்தன. காமத்தின் பேரழகை எப்படியெல்லாம் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அவன் முயற்சி செய்திருந்தான். சற்றும் பதற்றமின்றி, யாரைக் குறித்த பயமும் இன்றி, எது பற்றிய அக்கறையும் இன்றிப் பெண்ணுடலைப் பிளந்து கடக்கப் பார்த்திருக்கிறான். ஒரு குரு அமையாமல் போய்விட்டதன் விளைவாக முகிழ்த்த பெரும் பித்தத்தின் உச்ச நிலையில் அவன் தன்னையே குருவாக நியமித்துக்கொள்ளப் பார்த்ததில் ஆரம்பித்திருக்கிறது பிசகு.

வினய் அப்போது யோனி மண்டல வாஸினியின் சன்னிதியில் இருந்தான். கௌஹாத்தியில் அப்போது பெரும் மழைக்காலம். நிலாச்சல் மலைக்குன்றை ஏறிக் கடக்கும்போதே காற்றும் மழையும் எண்திசைகளிலிருந்தும் பீறிட்டடித்துத் தாக்கியது. எந்தக் கணமும் தான் சரிந்து விழுந்துவிடுவோம் என்று வினய்க்குத் தோன்றியது. தவறான நேரத்தில் புறப்பட்டுவிட்டது பற்றிச் சிறிது வருத்தம் ஏற்பட்டது. ஆனாலும் அவனுக்குத் திரும்ப மனமில்லை. உயிரே போனாலும் காமரூபிணியின் சன்னிதானத்தில் போகட்டும் என்று முடிவு செய்துகொண்டு மலை ஏறிக்கொண்டிருந்தான். குத்தீட்டி போல உடலெங்கும் குத்திக் கிழித்த மழை வேகம் அலுப்பூட்டியது. சற்று பயமாகவும் இருந்தது. காமாக்யாவில் அப்போது படிக்கட்டு வசதிகள் கிடையாது. போக்குவரத்து அத்தனை எளிதல்ல. சிறிய குன்றுதான் என்றாலும் அபாயங்கள் அதிகம். கால் வைக்கும் இடம் கல்லா, மண்ணா, புதைச் சேறா என்று எளிதில் கண்டறிய முடியாது. சரிந்து விழ நேர்ந்தால் எழுவது சிரமம். புதர்கள் மண்டிய அதன் சரிவுகளில் விஷ நாகங்கள் வசித்தன. ஒன்றிரண்டு, பத்து நூறல்ல. கணக்கற்ற நாகங்கள். நாகத்தின் விஷத்துக்காகவே காமாக்யாவுக்கு வந்து போகும் ஒன்றிரண்டு பேரை அவன் அறிவான். அவர்கள் மூலமாகத்தான் அவன் தேவியின் சக்திகளைக் கேட்டறிந்திருந்தான்.

ஒரு தரிசனம். ஒரு பார்வை. ஒரு சொட்டு அருள். ஒரு சில்லுடையும் கணத்தில் தனக்குள் என்னவாவது நிகழ்ந்துவிடாதா என்று அவன் எதிர்பார்த்தான். அதுநாள் வரை அவன் வனதுர்க்கையைத் தவிர வேறு யாரையும் வணங்கியிருந்ததில்லை. அவள் அருளால்தான் அவனுக்குச் சில சக்திகள் கைகூடியிருந்தன. அவன் எதிரி பயமற்றவன். காயங்கள் உண்டாகாத உடல் அவனுக்கு வாய்த்திருந்தது. தனது மேல் வரிசைப் பற்களில் நான்கை விஷமேற்றி வைத்திருந்தான். இடது கை கட்டை விரல் நகத்துக்குள் அவன் பாதுகாத்து வளர்த்து வந்த இடாகினி, அவன் எண்ணும் காரியங்கள் உடனுக்குடன் நிறைவேற உதவி செய்துகொண்டிருந்தாள். அவள் வனதுர்க்கையின் அருளால் வாய்த்தவள். சிறுமி. சொன்னதைச் செய்பவள்.

போதும் என்று உட்கார்ந்துவிட ஏனோ அவனுக்கு விருப்பமில்லை. எல்லாம் அடைந்துவிட்டாற்போன்ற எண்ணம் வரும்போதெல்லாம் எதுவுமே அடையக்கூடியதாக இல்லை என்னும் எண்ணமும் சேர்ந்து எழுந்தது. எந்தக் கணமும் இடாகினி தன் கட்டை விரலில் இருந்து உதிர்ந்து ஓடிவிடுவாள் என்ற அச்சத்தில் எப்போதும் கட்டை விரலுக்குக் கட்டுப் போட்டு வைத்திருந்தான். அழகான அனைத்தும் அபத்தமானவையாகவும் ஒருசேரக் காட்சியளிக்கின்றன. அபத்தங்கள் களைந்த ஒரு பெருவாழ்வை உத்தேசிப்பது அத்தனை பெரிய பிழையா? எல்லாம் வேண்டும், எதுவும் வேண்டாம், எல்லாம் இருக்கிறது, எதுவும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்னும் நான்கு முனைகளுக்கிடையே சிக்கி ஊசலாடிக்கொண்டிருந்தது அவன் மனம்.

‘நீ காமரூபிணியை குருவாகக் கொள். உன் பிரச்னையை அவள் சரி செய்து கொடுப்பாள்’ என்று கௌஹாத்தியில் அவன் சந்தித்த தந்திரி ஒருவன் சொன்னான்.

‘அன்னை எப்படி குருவாவாள்? அவளை அடைவதற்கே எனக்கு ஒரு குருமுகம் தேவைப்படுகிறதே?’

‘அது மற்ற ரூபங்களுக்கு. காமரூபிணி வெறும் சக்தி பீடாதிபதியல்ல. குரு பீடமும் அவளே ஆவாள். நீ எத்தனைத் தீவிரத்துடன் அவளை அணுகுகிறாய் என்பதில் இருக்கிறது’ என்று அந்த தந்திரி சொல்லி அனுப்பினான். இத்தனை அலைச்சல்களுக்குப் பிறகும் ஒரு குரு அமையாத வெறுமையில் இருந்த வினய்க்கு அந்தச் சொற்கள் மிகுந்த நிம்மதியளித்தன. அன்று முதல் நாற்பத்து எட்டு தினங்களுக்கு அவன் காமரூபிணியைக் குறி வைத்துத் தவமிருக்க ஆரம்பித்தான். மூன்று தினங்களுக்கு ஒருமுறை உணவு. அரைக் கிலோ கோழிக்கறி அல்லது பத்து முட்டைகள். இரண்டு வாழைப் பழங்கள். இரவு ஒன்பது மணிக்கு உண்டு முடித்துவிட்டு தியானத்தில் அமர்ந்தால் இடைவிடாமல் எழுபது மணி நேரம். தந்திரி அவனிடம் சொல்லியிருந்தான். ‘யோனி என்பது ஒரு வாசல். பெண்ணின் உறுப்பு என்று நீ நினைத்தால் அது. பிரபஞ்சத்தின் கர்ப்ப கிரகத்தின் நுழைவாயில் என்று எண்ண முடியுமானால் அதுவாகும். விஸ்வ யோனி என்று விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வருகிற சொல்லை எண்ணிப் பார்’.

கௌஹாத்தியில் இருந்து தென் கிழக்கே சுமார் முன்னூறு கிலோ மீட்டர் தள்ளி சில்ச்சார் என்ற இடத்தில் அவன் அப்போது இருந்தான். கடும் குளிரும் அடர்ந்த மலைக்கானகமும் திடீர் திடீர் என்று பெய்த பெருமழையும் அவனது தவத்துக்காகவே உருவாக்கப்பட்டவை போல அவனுக்குத் தோன்றியது. உள்ளூர் ஆதிவாசிகளின் உதவியுடன் ஒரு சிறிய குகையைத் தன் வசிப்பிடமாக்கிக்கொண்டு அமர்ந்தான். பாம்புகளைத் தவிர வேறு அபாயமில்லை என்று ஆதிவாசிகள் சொன்னார்கள். பாம்புகள் எனக்குப் பிரச்னை இல்லை என்று வினய் சொன்னான். தனக்கு உதவி செய்த ஆதிவாசிகளுக்கு அவன் தனது இடாகினியின் உதவியால் சில அன்பளிப்புகளைத் தந்து சகாயம் பிடித்திருந்தான். மூன்று நாள்களுக்கு ஒருமுறை அரைக் கிலோ கோழிக்கறி மட்டும் கிடைத்தால் போதும் என்று சொல்லியிருந்தான். கறி கிடைக்காவிட்டால் பத்து முட்டைகள். அதற்குமேல் தனக்கு எந்தத் தேவையும் இல்லை என்று அவன் சொன்னது ஆதிவாசிகளுக்கு வியப்பாக இருந்தது. யாரோ யோகி வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டு கும்பிட்டுவிட்டுப் போனார்கள்.

வினய் அந்த நாற்பத்து எட்டு தினங்களும் அந்தக் குகையைவிட்டு வெளியே வரவேயில்லை. ஒரு யோனியின் தோற்றத்தைத் தனது தவப் பொருளாகப் புருவ மத்தியில் கொண்டு நிறுத்தினான். காமாக்யா தேவியை அதில் ஆவாஹனம் செய்து மானசீக பூஜை நிகழ்த்தினான். ஒரு புள்ளியாகத் தோன்றிய அந்த யோனி மெல்ல மெல்ல விரிவடைந்து ஒரு வளையல் அளவு வட்டமானது. தேவியின் சன்னிதியைத் தன் மானசீகத்தில் அவன் நெருங்கப் பார்த்தான். இருளும் புகையும் ஈரமும் குங்கிலிய மணமுமாக அந்தக் குகை நீண்டுகொண்டே சென்றது. வினய் அந்த இருளுக்குள் தன் பயணத்தை ஆரம்பித்தான். எங்குமே வெளிச்சத்தின் சிறு புள்ளியும் இல்லாத அடர் இருள். ‘அப்படித்தான் இருக்கும்; பயந்துவிடாதே. நடப்பதை நிறுத்தியும் விடாதே’ என்று தந்திரி சொல்லியிருந்தான். ‘எங்கே உனக்கு வெளிச்சத்தின் முதல் சொட்டு தரிசனமாகிறதோ அதுதான் தேவி. அது தெரிந்ததும் எழுந்து காமாக்யாவுக்குச் செல்’.

நாற்பத்து எட்டு தினங்கள். விரதம் முடிவுறும் கணத்துக்குச் சில மணி நேரங்கள் முன்னதாகவே அவன் வெளிச்சத்தைப் பார்த்துவிட்டான். பரவசத்தில் அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்துகொண்டே இருந்தது. இதுதான், இதுதான் என்று உள்ளுக்குள் ஆனந்தக் கூத்தாடினான். ஒரு புள்ளி. ஒரே ஒரு புள்ளி வெளிச்சம். அது தெரிந்துவிட்டது. ஆனால் தொலை தூரமாக இருந்தது. வினய் அந்தப் புள்ளியை நோக்கி ஓடத் தொடங்கினான். எவ்வளவு நேரம் ஓடியிருப்பான் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் ஓடிக்கொண்டே இருந்தான். மிகச் சிறிய புள்ளியாகத் தெரிந்த அந்த தரிசன வெளிச்சம் சற்றே பெரிதாகத் தோற்றம் கொள்ளத் தொடங்கியபோது அவன் அம்மா என்று அலறினான். அடுத்தக் கணம் கண்ணை விழித்துத் துள்ளி எழுந்தான். தனது இடாகினியின் கட்டை அவிழ்த்து வெளியே இறக்கிவிட்டு உடனே தன்னைக் காமாக்யாவுக்குத் தூக்கிச் செல்லும்படிச் சொன்னான்.

அவன் அங்கு வந்து சேர்ந்தபோது பலத்த மழை பெய்துகொண்டிருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com