78. வெறி தணிதல்

ஒரு கொத்துப் புல்லைத் தன் இடது கையால் அழுத்திப் பிடித்தான். அடுத்தக் கணம் அவன் கைப்பிடிக்குள் அடங்கிய பசும்புற்கள் தீப்பற்றி எரிந்தது.

முகமது குட்டி ஒரு குடிசைக்கு வெளியே படுத்திருந்தான். அத்தனை பெரிய தென்னந்தோப்புக்குள் அந்த ஒரு குடிசை மட்டும் கவிழ்த்த பிரம்புக் கூடை போலக் கிடந்தது. ஒரு காவலாளி இருந்தான். கையில் ஒரு கோலை வைத்துக்கொண்டு தரையில் தட்டியபடியே தோப்புக்குள் அவன் சுற்றிச் சுற்றி வந்தான். வினய் அங்கே ஒரு தோப்பு இருப்பதையே கவனிக்காதவன் போல எங்கோ பார்த்தவாறு தோப்பைக் கடந்து போனான். காவலாளியின் பார்வையில் இருந்து மறைந்தபின்பு தோப்பின் பின்புறமாக மீண்டும் சுற்றி வந்தான். சுற்றிலும் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. முன் பகுதியில் சிறிது தூரத்துக்கு மட்டும் நாலடி உயரத்துக்குச் சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தது. பெரிய கதவுகளோ நுழைவாயிலோ இல்லை. இரண்டு ஆள் உள்ளே போகும் அளவுக்கு இடைவெளி விட்டு அங்கே ஒரு ஸ்டூலைப் போட்டுக் காவலாளி அமர்ந்திருந்தான். உள்ளே நுழைவதில் பெரிய பிரச்னை இருக்காது என்று வினய்க்குத் தோன்றியது. அவன் கம்பி வேலிக்குள் மிக எளிதாகத் தன் உடலை நுழைத்து உள்ளே போய்விட்டான்.

ஒரு முசல்மான் சந்திராஷ்டம தினத்துக்கு முக்கியத்துவம் தருவது அவனுக்கு வினோதமாக இருந்தது. அன்றைக்கு மகரத்தில் சந்திரன் சஞ்சரித்துக்கொண்டிருந்த நாள். மகரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்தால் மிதுன ராசிக்காரர்களுக்குச் சிக்கல். சிறிய மனக்குழப்பம் முதல் பெரும் சண்டை சச்சரவுகள் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எந்த ராசியில் பிறந்தவரானாலும் மாதம் ஒருமுறை அந்த தினத்தைக் கடந்துதான் தீர வேண்டும். சொரிமுத்துதான் வினய்க்கு இந்த சந்திராஷ்டம சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுத்திருந்தான்.

‘அன்னிக்கு ஒரு நாள் காணாம போயிடுடா. யாரையும் பாக்காத. யார்ட்டயும் பேசாத. சன நடமாட்டம் இல்லாத இடத்துக்குப் போயி உக்காந்து தியானம் பண்ணு’ என்று சொரிமுத்து சொல்லுவான். சொல்லி வைத்த மாதிரி மாதம் ஒருநாள் அவன் அப்படித்தான் காணாமல் போவான். பொன்மலை ரயில்வே ஸ்டேஷனுக்கோ, துவாக்குடி பொறியியல் கல்லூரி மைதானத்துக்கோ போய் உட்கார்ந்திருப்பான். மறுநாள் காலை வினய் எழுந்திருப்பதற்கு முன்னால் வீட்டுக்கு வந்து படுத்துவிடுவான்.

‘உங்களுக்கு இதுலல்லாம் நம்பிக்கை இருக்கா?’ என்று வினய் கேட்டான்.

‘கெரகம் ஒன்னையும் என்னையும்விட பெரிசா இல்லியா?’

‘ஆமா.’

‘அவ்ளதான். சைக்கிள்ள போறவன் லாரிக்காரன் ஆரன் அடிச்சா ஒதுங்குவானா இல்லியா?’

‘ஆமா.’

‘அதேதான் இது. இருவத்தி நாலு மணி நேரம் தியானத்துல உக்கார ஒரு நாள் கிடைச்சிதுன்னு எடுத்துக்க. உக்காந்து சாதகம் பண்ணு. குண்டலினிய எழுப்பிக் கொண்டாந்து சஹஸ்ராரத்துல நிப்பாட்டு. இல்லியா? பாம்பு சண்ட போடு’ என்பான்.

சொரிமுத்துவிடம் வினய் கற்ற வித்தைகளுள் மிக முக்கியமானது அதுதான். பாம்புச் சண்டை. வயிற்றுக்கும் ஆண்குறிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நரம்பை சில மூச்சுப் பயிற்சிகளின் மூலம் நிமிர்த்தி, ஒரு கம்பியைப் போல நிற்க வைப்பது முதல் படி. அது நெஞ்சக் குழி வரை எழுந்து நிற்கக்கூடிய பெரும் நரம்பு. பிறகு உச்சந்தலையில் இருந்து ஒரு நரம்பை விரித்து முன் நெற்றி வழியே கீழே இறக்கினால் அது சரியாக அடி வயிற்று நரம்பு எழுந்து நிற்கும் எல்லையை வந்து தொடும். இந்த இரு நரம்புகளையும் பின்னல் போல் பிணைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதைத்தான் சொரிமுத்து பாம்புச் சண்டை என்று சொல்லுவான். அது அத்தனை எளிதல்ல. முற்றிலும் வலது நாசியின் வழியாக மட்டும் காற்றை உள்ளே செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஏழு வினாடிகள் இழுக்கும் காற்றை இருபத்தியொரு வினாடிகள் உள்ளே தேக்கி அதில் சரி பாதி அளவை இடது நாசி வழியாக மட்டும் வெளியே விட வேண்டும். இடைவெளியே இல்லாமல் இப்பயிற்சியை ஆயிரம் முறை செய்யும்போது இரண்டு நரம்புகளும் அசைந்து கொடுக்கும். கீழே இருப்பது மேலே எழவும், மேலே உள்ளது கீழே இறங்கவும் ஆரம்பிக்கும். இரண்டு நரம்புகளும் ஒன்றையொன்று தொடும்போது சவாசனத்துக்குப் போய்விட வேண்டும். உடலுக்குள் உள்ள பிராண சக்தியை மொத்தமாக வெளியேற்றிவிட்டு இரண்டும் தொட்டுக்கொள்ளும் தருணத்துக்குக் காத்திருக்க வேண்டும். அப்படித் தொடுகிற விநாடி உடலுக்குள் பாய்கிற மின்சாரம் ஒரு ஊரை எரிக்கிற அளவுக்கு வல்லமை கொண்டது. சொரிமுத்து அதை நாபியில் சேமித்து வைப்பதாகச் சொல்லுவான். ‘சிலபேரு உச்சந்தலைல சேத்து வெப்பாங்க. அது டேஞ்சரு. அப்பிடி செஞ்சிதான் விவேகானந்தர் செத்தாரு. நமக்கு வயிறுதாஞ்செரி.’

‘நெஜமாவே எரிக்குமா?’ என்று வினய் கேட்டான்.

சில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு, ‘செரி, நீயே எதுனா ஒண்ண சொல்லு. எரிச்சிக் காட்டுறேன்’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய் சட்டென்று வீட்டு வாசலில் முளைத்திருந்த பச்சைப் புற்களைச் சுட்டிக் காட்டி, ‘அதை எரியுங்கள்’ என்று சொன்னான்.

சொரிமுத்து எழுந்து வாசலுக்கு வந்தான். குனிந்து ஒரு கொத்துப் புல்லைத் தன் இடது கையால் அழுத்திப் பிடித்தான். அடுத்தக் கணம் அவன் கைப்பிடிக்குள் அடங்கிய பசும்புற்கள் தீப்பற்றி எரிந்ததை வினய் கண்டான். சொரிமுத்து கையை விடுவித்துக்கொண்டு, மேற்கொண்டு தீ பரவாமல் அதே கையால் அணைத்துத் தணித்தான்.

‘போதுமா?’

வினய்க்கு அது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. எப்படியாவது அதைக் கற்க வேண்டும் என்று தீர்மானித்தான். அன்று முதல் நாளெல்லாம் மூச்சுப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தான். இரண்டு வருடங்களில் அவனால் ஓரளவு வெற்றி பார்க்க முடிந்தது. சொரிமுத்து திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது ஒன்றுதான். உனக்கு கவனம் குவிவதில்லை.

‘உள்ளார இழுக்குற காத்த நீ மானசீகத்துல பாக்கணும்டா. காத்த எப்பிடி பாக்குறதுன்னு கேக்காத. காத்துதான் கடவுள். பாக்க டிரை பண்ணிக்கிட்டே இருக்கணும். எதுவா நினைச்சிக்கிட்டா புத்தி அதுல நிக்குமோ, அதுவா நினைச்சிக்க. ஆனா பாக்கணும். ஏழு செகிண்டு காத்த இழுக்கிறியா... ஒரு லிங்கத்த கொண்டு போயி உள்ளார சொருகுறேன்னு நெனச்சிக்க. காத்த லிங்கமா பாரு. அப்ப மனசு அதுல தோயும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய்க்குக் காற்றை லிங்கமாக உருவகம் செய்துகொள்ள முடியவில்லை. அவனுக்கு உள்ளே போகும் காற்றை ஒரு சேலையாக எண்ணிக்கொள்வது வசதியாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் சேலையை நினைக்கும்போதும் சித்ராவின் நினைவு வந்து அவனை அலைக்கழித்தது. சித்ரா சேலையணிந்து அவன் பார்த்ததில்லை. தாவணியில் பார்த்திருக்கிறான். வீட்டு வாசல் வரை அடியெடுத்து வைத்து நடந்து வருபவள், வீட்டுக்குள் செல்லும்போது மட்டும் ஒரே தாவில் மூன்று படிகளைத் தாண்டிக் குதித்து உள்ளே போகிற வழக்கம் அவளுக்கு உண்டு. ஒரு வண்டு பறப்பது போல அந்த ஒரு கணத்தில் நிகழும் உருமாற்றத்தை வினய் மிகவும் ரசிப்பான். தாவிக் குதிக்கும்போது அவளது தாவணியின் முந்தானை ஒரு விசிறியைப் போல விரிந்தெழுந்து அடங்கும்.

‘அந்த ஒரு காட்சிக்காகவே எத்தனையோ தினங்கள் அவள் வீட்டு வழியாகப் போகிறவனைப் போலப் போய்ப் போய் நின்றிருக்கிறேன்’ என்று வினய் என்னிடம் சொன்னான்.

மூச்சுக்காற்றை ஒரு சேலையாக மட்டுமே தன்னால் எண்ண முடிவதை வினய் கடைசிவரை சொரிமுத்துவிடம் சொல்லவில்லை. அந்தப் பிரச்னையைச் சொல்லியிருந்தால் சொரிமுத்துவே அதற்கு ஏதாவது தீர்வு சொல்லியிருப்பான். அதனால்தான் ஆறு மாதப் பயிற்சியில் சாத்தியமாகிவிடும் என்று சொரிமுத்து சொல்லியிருந்த பாம்புச் சண்டையை அவன் வெற்றிகரமாக நிகழ்த்தி முடிக்க இரண்டாண்டுகள் தேவைப்பட்டன.

தென்னந்தோப்பில் முகமது குட்டி அம்மாதிரியான அப்பியாசங்கள் எதையாவது செய்துகொண்டிருப்பானோ என்று வினய்க்கு சந்தேகமாக இருந்தது. சந்திராஷ்டம தின அப்பியாசங்கள். ஆனால் அவன் சாதகம் ஏதும் செய்வதாகத் தெரியவில்லை. குடிசைக்கு வெளியே வெறும் தரையில் கால் விரித்துப் படுத்துக் கிடந்தான். வினய் காலை ஏழு மணிக்கு அந்தத் தோப்புக்குச் சென்றான். பிற்பகல் மூன்று மணி வரை முகமது குட்டி படுத்த கோலத்தில் இருந்து எழவேயில்லை. மூன்றரை மணிக்கு தோட்டக் காவலன் அங்கு வந்தபோது வினய் ஒரு மரத்தின் பின்னால் பதுங்கிக்கொண்டு நின்றான். தோட்டக்காரன் முகமது குட்டிக்கு உணவு எடுத்து வந்து கொடுத்தான். முகமது குட்டி சாப்பிட்டுவிட்டுத் தட்டிலேயே கை கழுவினான். வாயைக் கொப்பளித்துத் தட்டிலேயே துப்பினான். காவல் காரன் அதை எடுத்துச் சென்று கழுவி குடிசைக்குள் வைத்துவிட்டு மீண்டும் தன் இடத்துக்குப் போய்விட்டான். முகமது குட்டி இப்போது ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

வினய் மேலும் பதினைந்து நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தான். முகமது குட்டி நன்றாக உறங்கிவிட்டான் என்பது தெரிந்ததும் தான் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியே வந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். சிறிது தூரத்தில் ஒரு கடப்பாறையும் கோடரியும் மண்வெட்டியும் ஓரிடத்தில் கிடந்தன. தோட்டப் பணிக்காகப் பயன்படுத்துவானாயிருக்கும் என்று எண்ணிக்கொண்டான். சத்தமில்லாமல் கோடரியை மட்டும் எடுத்துக்கொண்டு முகமது குட்டி இருந்த இடத்துக்கு வந்தான். அவன் உண்மையிலேயே நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான்.

சரி, நீ இறந்துவிடு என்று சொல்லிவிட்டுக் கோடரியை ஓங்கி அவன் தலையில் அடித்தான். முகமது குட்டியின் மண்டை பிளந்து ரத்தம் வெளிப்பட்டது. அவன் அலறத் தொடங்கும் முன் வினய் தன் இடது பாதத்தைத் தூக்கி அவன் வாயில் வைத்து அழுத்தினான். மொத்தம் பதிமூன்று வினாடிகள் முகமது குட்டியின் உடல் துடித்தது.  பிறகு அடங்கிவிட்டது. ஆனால் ரத்தம் மட்டும் பொங்கி வழிந்துகொண்டே இருந்தது. வினய் பதற்றமடையவேயில்லை. ஆறேழு நிமிடங்கள் அவன் இறந்த முகமது குட்டியின் உடலைப் பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான். பிறகு அவனைத் தூக்கித் தன் தோளில் போட்டுக்கொண்டு தோப்பின் தெற்கு எல்லைக்குச் சென்றான். தோட்டக் காவலன் தன் இடத்தில் இருந்து எழுந்து வருவது போலத் தோன்றவே ஒரு கணம் யோசித்துவிட்டு முகமது குட்டியின் உடலைக் கம்பி வேலிக்கு வெளியே தூக்கி எறிந்துவிட்டு அவனும் வெளியே குதித்தான். மீண்டும் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com