75. ஒரு தற்கொலை

உண்மையின் கோர தகிப்பில் இருந்து வெகுதூரம் விலகி நிற்க விரும்பும் சராசரி ஆத்மாக்களுக்கு இது ஒரு பிரச்னை. புரிவதும் புரியாததும் அல்ல. புரிந்துகொள்ள மேற்கொள்ள வேண்டிய எளிய முயற்சியைத் தள்ளிப்போடுவது.

ஆசிரமத்துக்கு வெளியே இருந்த புல்வெளியில் நான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். கேசவன் மாமா என்னெதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இருவருக்கும் இடையில் ஒரு சிறு மர ஸ்டூல் இருந்தது. அதன் மீது இரண்டு காப்பிக் கோப்பைகள். நான் குடித்துவிட்டிருந்தேன். மாமா காப்பியைத் தொடவேயில்லை. அவர் காப்பியைக் குடித்து முடித்த பின்பு நான் வினோத்தைப் பற்றிக் கேட்டிருக்க வேண்டும். தவறு செய்துவிட்டேன். அந்தக் காப்பி ஆறியே போய்விட்டது. சுற்றுமுற்றும் பார்த்தேன். உதவியாளர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ‘மாமா நானே போய் காப்பி எடுத்து வருகிறேன். இது ஆறிவிட்டது’ என்று சொன்னேன்.

‘உக்காருடா. நான் ஒண்ணும் காப்பி சாப்பிடறதுக்காக இங்க வரலை’ என்று கேசவன் மாமா சொன்னார். சிரித்தேன்.

‘சரி சொல்லுங்கோ. வேற எதுக்கு வந்தேள்?’

‘உங்கண்ணன் ஒரு சுவடி வெச்சிருந்தான். உனக்கு ஞாபகம் இருக்கும்.’

‘ஓ, தெரியுமே? வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய் விசாரிச்சுட்டு அது ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சிண்டு வந்தோமே?’

‘ஆமா, அதுதான். ஆனா அதுல என்னமோ இருந்திருக்குடா விமல். ஒண்ணு அந்த நாடி ஜோசியனுக்கு அது புரியலை. இல்லேன்னா அவன் சொல்லாம மறைச்சிட்டான்’ என்று மாமா சொன்னார்.

நான் சில விநாடிகள் அமைதியாக யோசித்தேன். ஏனோ எனக்கு மாமாவிடம் அப்போது உண்மையைச் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. உண்மையின் ஒரு பகுதியை மட்டும். இனி அவருக்கு அது வியப்பை வேண்டுமானால் தரலாமே தவிர அதிர்ச்சி தர வாய்ப்பில்லை என்று நினைத்தேன். நான்கு பேருமே வீட்டைத் துறந்துவிட்டோம். ஓடிக் கழிந்த வருடங்களில் எனக்கே தலைமுடியும் தாடியும் வெகுவாக நரைத்துவிட்டது. மிகவும் கவனமாக தினமும் சாயம் பூசிக்கொள்கிறேன். வினய் இப்போது எப்படி இருப்பான் என்று யூகிக்கக்கூட முடியவில்லை. அண்ணா மிக நிச்சயமாகப் பதினெட்டு வயதுத் தோற்றத்தை எட்டிப் பிடித்திருப்பான். அவனுக்கு நரைத்திருக்காது. காடுகளிலும் மலை முகடுகளிலும் நடந்து நடந்து அவன் மொத்த உடலும் ஒற்றை எலும்பாகியிருக்கும். தீவிரமான உணவுக் கட்டுப்பாடும் பிராணப் பயிற்சிகளும் அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுளை அளித்திருக்கும். ஒருவேளை அது வேண்டாம் எனக் கருதி அவன் தேக வியோகமேகூடச் செய்திருக்கலாம். யாருக்குத் தெரியும்? வினோத்துக்கும் நிறைய நரைத்திருக்கும். கன்னங்கள் சுருங்கி, உடல் வற்றி மிக நிச்சயமாக வேறு யாரோ ஆகியிருப்பான். வீட்டைத் துறந்து வெளியேறி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு முழு வெள்ளைத் தாளில் ஒரே ஒரு வரி. அம்மா இறந்தால் வீரகேசரி பத்திரிகையில் ஒரு விளம்பரம் தரவும். அவ்வளவுதான். வீரகேசரி என்பது இலங்கையில் இருந்து வெளியாகிற பத்திரிகை என்பது அக்கடிதம் வந்த பிறகுதான் அவர் விசாரித்து அறிந்திருக்கிறார்.

‘தேடி வரமாட்டோம்னு நினைச்சிண்டு அங்க ஓடிப் போயிட்டான் போலருக்கு. நான் விடலியே? இலங்கைக்குப் போயிட்டேன்’ என்று மாமா சொன்னார்.

‘கிடைச்சானா?’

‘இல்லை’ என்று சொல்லிச் சில விநாடிகள் வருத்தப்பட்டார். அதற்குப் பிறகுதான் எனக்கு மாமாவிடம் உண்மையின் ஒரு பகுதியைச் சொல்லலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

‘மாமா, நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது நாம் தீர்மானிப்பதல்ல. இயற்கை அல்லது விதி செய்வது.’

‘அதான் தெரிஞ்சிதே.’

‘ஆனால் இதுதான் நடக்கும் என்று அந்தச் சுவடியில் எழுதப்பட்டிருந்தது உண்மை.’

‘அப்படியா?’ என்று மாமா கேட்டார்.

‘ஆமாம். அது வம்சத்தில் யாரோ செய்த பாவத்துக்குக் கிடைத்த சாபம். அந்தச் சுவடியில் அது இருந்தது.’

‘உனக்கு எப்போ தெரியும்?’

‘அண்ணா சொன்னான். ஒருமுறையல்ல. இருமுறை.’

‘ஆனா அது எதோ மருந்து சுவடின்னு அந்த நாடி ஜோசியன் சொல்லிட்டானேடா?’

‘அவர் சொன்னதும் உண்மை.’

‘புரியலியே?’

‘அது கண்கட்டு. அண்ணா அந்தச் சுவடியின் வரிகளை மறைத்து, மாற்றிவிட்டான்.’

‘அதெல்லாம் முடியுமோ?’

‘முடியும். சித்தர்களால் முடியாதது இல்லை.’

‘விஜய் சித்தனா?’

‘ஆம். ஆனால் அது மட்டுமல்ல என்று நினைக்கிறேன். உங்களுக்குப் புரியாது.’

மாமா ஒரு பெருமூச்சு விட்டார். அதில் அவரது துக்கத்தின் வாசனை கலந்திருந்தது. ‘எனக்கு என்னதான் புரியும்? வெறும் மக்கு பிராமணன். சமையக்காரன். அக்கா பிள்ளைகள் நாலும் இப்படிப் போயிடுத்தேன்னு எழுவத்தி நாலு வயசுலயும் உக்காந்து அழுதுண்டிருக்கற அசமஞ்சம்’ என்று சொல்லிவிட்டுக் கேவிக் கேவி அழுதார்.

நான் எழுந்து சென்று அவரைத் தொட்டேன். அவர் கண்ணை உற்றுப் பார்த்துப் புன்னகை செய்தேன். ‘அழாதீர்கள். இது விதி. நாம் இதை ஒன்றும் செய்ய முடியாது.’

‘புரிஞ்சிடுத்து. வினோத் கடுதாசி எழுதி வெச்சிட்டு ஓடிப் போனபோதே புரிஞ்சிடுத்து’ என்று மாமா சொன்னார். நியாயமாக வினய் காஞ்சீபுரத்துக்குப் புறப்பட்டு, பாதி வழியில் திசை மாறியபோதே அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். குறைந்தது ஸ்ரீரங்கத்தில் நான் காணாமல் போனபோதாவது. உண்மையின் கோர தகிப்பில் இருந்து வெகுதூரம் விலகி நிற்க விரும்பும் சராசரி ஆத்மாக்களுக்கு இது ஒரு பிரச்னை. புரிவதும் புரியாததும் அல்ல. புரிந்துகொள்ள மேற்கொள்ள வேண்டிய எளிய முயற்சியைக் காலவரையறையற்றுத் தள்ளிப் போடுவது. இடையில் ஏதாவது அற்புதம் நிகழ்ந்துவிடாதா என்கிற அற்ப ஆசை. நானறிந்தவரை மனித வாழ்வில் அற்புதம் என்று ஏதும் நிகழ்வதில்லை. பிள்ளையார் சிலையை அல்ல; என்னை யாராவது ஒரு வாழைப்பழத்துக்குள் இருந்து எடுத்துக்கொடுத்தால் வேண்டுமானால் நம்புவேன். மாமாவிடம் இதைச் சொன்னபோது இதுவும் அவருக்குப் புரியவில்லை. ‘என்னமோ போடா’ என்று சொல்லிவிட்டு மேல் துண்டால் கண்ணைத் துடைத்துக்கொண்டார்.

அவரால் ஜீரணிக்கவே முடியாத விஷயம், வினோத் ஏன் திருமணத்துக்கு முதல் நாள் அப்படியொரு காரியம் செய்தான் என்பதுதான். என்னிடம் அதைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிப் புலம்பினார்.

‘நாலு தடவை. நாலு தடவை அந்தப் பொண்ண கூட்டிண்டு வெளிய போய் சுத்திட்டு வந்தாண்டா! ஊரைக் கூட்டி கல்யாணம் ஏற்பாடு பண்ணியாச்சு. மொத நாள் சாயந்திரம் ஜானவாச கார்ல உக்காந்துண்டு மாடவீதி நாலையும் சுத்தியாச்சு. அதுக்கப்பறம் இப்படி ஒரு காரியம் பண்ணுவானோ ஒருத்தன்? அந்தப் பொண்ணு வாழ்க்கை சர்வ நாசமாயிடுமேன்னு கூடவா தோணாது? தற்கொல பண்ணிண்டு செத்தாளே! அந்தப் பாவம் இவனை விட்டுடுமா? என்ன பெரிய சிவன்? என்ன பெரிய தரிசனம்? அந்தப் பாஷாண்டி ஒண்ணுக்கு ரெண்டு பொண்டாட்டி கட்டிண்டவன். அவனைப் பிடிச்சித் தொங்கிண்டு இப்படி விட்டுட்டு ஓடறோமேன்னு தோணாதா? க்ஷண நேரத்துல துறக்கறதெல்லாம் எங்கேருந்துடா வரும்? அதுவும் மொத நாள் வரைக்கும் அவ கைய கோத்துண்டு கூத்தடிச்சிட்டு... சீ!’ என்றார் மாமா.

எனக்கு சித்ரா தற்கொலை செய்துகொண்டது மிகுந்த வருத்தமளித்தது. உண்மையில் அழுகையே வந்தது. ஆனால் நான் அழவில்லை. இது கணப் பொழுதில் நிகழ்வதுதான் என்று நான் எப்படி மாமாவிடம் சொல்வேன்? அவருக்கு அது புரியாது. யாருக்குமே புரியாதுதான். இத்தனைக்கும் வினோத் மிகவும் நேர்மையாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறான். நான்கு வரிக் கடிதம். அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ அல்ல. நேரடியாக சித்ராவின் பெயருக்குத்தான் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

என்னை மன்னித்து விடு. அல்லது சபித்து விடு. இன்றிரவு என் லிங்கம் பிளந்து சிவ தரிசனமாகிவிட்டது எனக்கு. இனி நான் உன்னோடு வாழ முடியாது. வேறு யாரோடும்கூட.

இவ்வளவுதான் அந்தக் கடிதம். அம்மாவின் ஒரு ஓலக் குரலில் ஏழு மணி முகூர்த்தம் ரத்தாகிப் போனது. ஊர் முழுதும் வீட்டு வாசலில் கூடி நின்று என்ன, என்ன என்று விசாரித்துக்கொண்டே இருந்தது. யாருக்கும் அந்தக் கடிதம் புரியவில்லை. பத்மா மாமி தலை தெரிக்கக் கோயிலுக்கு ஓடி தாயார் சன்னிதித் தூணில் முட்டிக்கொண்டு கதறினாள். அவளது கணவர் மயங்கி விழுந்ததும் தெரியாது; யார் அவரை வண்டி ஏற்றி அழைத்துச் சென்று திருப்போரூர் மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்றும் தெரியாது. பல மணி நேரம் கழித்து பத்மா மாமியும் அவரும் வீடு வந்து சேர்ந்தபோதுதான் சித்ரா விஷம் குடித்து இறந்திருந்த விவரமே தெரிய வந்திருக்கிறது.

எல்லாம் ஒரே நாள். கல்யாணத்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் சித்ராவின் பிணத்தை எடுத்துச் செல்லும்வரை இருந்து அழுதுவிட்டு வீடு போய்ச் சேர்ந்தார்கள்.

சொல்லிக்கொண்டே வந்தபோது கேசவன் மாமாவுக்குத் தொண்டை அடைத்தது. தனது மரணத்துக்கு முன் சித்ரா ஒரு நல்ல காரியம் செய்திருந்தாள். நீலாங்கரை உணவு விடுதியில் வினோத் தன்னிடம் சொல்லியிருந்த சங்கதிகளை அவள் தன் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறாள். ஒரு கணம் எனக்கு மிகுந்த வெட்கமாகிவிட்டது. அந்தத் துணிச்சல் சிறு வயதில் எனக்கு இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் அண்ணா வீட்டை விட்டு வெளியேறியதுமே எனக்குத் தெரிந்த அனைத்தையும் நான் சொல்லியிருப்பேன். குறைந்தது அந்தச் சுவடியையாவது எடுத்துக் கொடுத்து விவரம் சொல்லியிருக்கலாம். ஆனால் இத்தனை ஆண்டுக்காலம் அம்மா உயிருடன் இருந்திருப்பாளா என்பது சந்தேகம்.

வினோத் போனதுதான் அப்பாவின் மரணத்துக்குக் காரணம் என்று கேசவன் மாமா சொன்னார். அடுத்தடுத்து வந்த இரண்டு மாரடைப்புகள். ஆஸ்பத்திரி வாசம். மருந்து மாத்திரைகள். அவன் வீட்டை விட்டு விலகிய நான்கு மாதங்களில் அப்பா போய்விட்டார். எங்கள் நான்கு பேரில் என் இருப்பிடம் மட்டுமே அப்போது கேசவன் மாமாவுக்குத் தெரியும். எனக்கு அவர் தந்தி கொடுத்திருந்தார். நான் அப்போது வட இந்திய சுற்றுப் பயணத்தில் இருந்தேன். காரியத்தை நீங்களே செய்துவிடுங்கள் என்று அவருக்கு பதில் தந்தி கொடுத்துவிட்டு அந்த நினைவை நகர்த்தி வைத்துவிட்டேன். எல்லாம் முடிந்திருக்கும் என்று ஒரு கணக்குப் போட்டு அப்பா இறந்த பதினேழாம் நாள் மாமாவுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

மன்னித்துக்கொள்ளுங்கள். ஆனால் அம்மா இறக்கும்போது அவசியம் வருவேன். நான் மட்டுமல்ல. நான்கு பேருமே வருவோம்.

வந்தால் காலை வெட்டிவிடுவேன் என்று மாமா பதிலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதை பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டேன். ஞாபகமாக அந்தக் கடிதத்தை இப்போது எடுத்து வந்து அவரிடம் காட்டிப் புன்னகை செய்தேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் சிறிது நேரம் அழுதார்.

நேரம் மாலை ஆறாகிவிட்டிருந்தது. நான் சொற்பொழிவுக்குத் தயாராகவேண்டும் என்பதால் எழுந்துகொண்டேன். மாமாவை இரண்டு நாள்களாவது ஆசிரமத்தில் தங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர் உடனே, ‘இல்லே. நாளைக்குப் போயிடுவேன்’ என்று சொன்னார். நான் வற்புறுத்தவில்லை.

‘என்னமோ உன்னைப் பாத்துட்டுப் போகணும்னு தோணித்து. அங்க அக்கா பாவம் தனியா கஷ்டப்படுவா. இப்பல்லாம் கண்ணு சரியா தெரியறதில்லே’ என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, ‘அவளை இங்கே ஒரு நடை கூட்டிண்டு வரட்டுமா? நீ ஒண்ணும் சொல்ல மாட்டியோல்யோ?’

நான் உடனே வேண்டாம் என்று சொன்னேன். அவர் ஏன் என்று கேட்கவில்லை. என்னுடன் விவாதம் செய்யவும் இல்லை. நான் அந்த பதிலைத்தான் சொல்லுவேன் என்று எதிர்பார்த்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com