71. முதலீடு

அரைக் கிலோ பச்சை வெள்ளரிக்காயும் கேரட்டும் சாப்பிட்டுவிட்டு, ஒரு சொம்பு நிறையத் தயிர் அருந்தி நான் என் மதிய உணவை முடித்துக்கொண்டேன். அவனால் அதை நம்பவே முடியவில்லை.

புவியின் முடிவற்ற விளிம்பை நோக்கிப் போய்க்கொண்டே இருந்தது அந்தச் சாலை. எங்குமே வளையவில்லை. எங்குமே எதிரே ஒரு வண்டி வரவில்லை. சாலையின் இரு புறங்களிலும் கோதுமை வயல்கள் பழுப்பு நிறத்தில் அசைந்தாடிக்கொண்டிருந்தன. அபூர்வமாக ஓரிரு இடங்களில் கொத்துக் கொத்தாகச் சாலையோரம் சில மரங்கள் வளர்ந்திருந்தன. மெக்ஸிகோ நகரத்தில் நான் கவனித்த சந்தடியும் நாகரிகமும் வண்ணமயமும், நகரை நீங்கிய இருபது நிமிடங்களில் எங்கு போனதென்றே தெரியாத அளவுக்கு கிராமத்தின் எளிய உருவம் புவியைப் பூசி நின்றது. உண்மையில் எனக்கு அது பிடித்திருந்தது. ஒவ்வொரு தேசத்தின் நிலப்பரப்பும் அத்தேசத்தின் மனிதர்களைப் போலத்தான். எண்ணாத கணங்களில் சட்டென்று தன் முகத்தை மாற்றிக்கொள்ளும் திறன் பெற்றது.

மெக்ஸிகோவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் நான் சந்தித்த அந்த ஆயுத வியாபாரி, நான் உள்ளே நுழைந்த நேரம் யோகா செய்துகொண்டிருந்ததைக் கண்டபோது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவனிடம் நான் இதைச் சொன்னபோது, ‘உண்மைதான் சுவாமிஜி. ஒரேமாதிரி இருப்பது விரைவில் அலுத்துவிடுமல்லவா?’ என்று கேட்டான். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் அவன் அமெரிக்காவில் சந்தித்த யாரோ ஒரு இந்தியன் அவனுக்கு யோகா சொல்லிக் கொடுத்திருக்கிறான். உடல் ஆரோக்கியத்துக்கு எனக்கு இது ஒன்றுதான் ஒரே வழி என்று அவன் சொன்னான்.

அவனுக்குத் தீராத ஆச்சரியம், எனக்கு கேம்போவை எப்படித் தெரிந்திருந்தது என்பது. அப்போதுதான் நான் கேம்போவைக் குறித்த கூடுதல் விவரங்கள் சிலவற்றை அறிந்தேன். பொதுவாக, அவன் புதியவர்கள் யாரையும் சந்திப்பதே இல்லை என்று அந்த மெக்ஸிகன் சொன்னான். புதிய அறிமுகங்களை அவன் விரும்புவதே கிடையாது. தெரிந்த மிகச் சிலர் மூலம்தான் அவனது தொழில் நடந்துகொண்டிருந்தது.

‘எந்தத் தொழிலாக இருந்தாலும் இந்த மனோபாவம் சரியில்லையே?’ என்று நான் கேட்டேன்.

‘அது உண்மைதான். ஆனால் கேம்போ அப்படித்தான். உங்கள் நாட்டு அமைச்சர் ஒருவரை அவன் அறிந்திருந்தாலும், உங்களைச் சந்திக்க ஒப்புக்கொண்டது என்னளவில் வியப்புக்குரியதுதான். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் என்னைக் குறித்து உங்களுக்குத் தெரிவித்து, எனக்கும் போன் செய்து தகவல் சொல்லி நம்மைச் சந்திக்க வைக்கிறான் என்றால் இது என்னால் நம்ப முடியாததாக உள்ளது’ என்று சொன்னான்.

நான் தங்கியிருந்த விடுதி வாசலில் அன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து அவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘என்ன செய்ய? சில கொலைகள் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன. அரசியல் கொலைகளுக்குக் காரணமெல்லாம் கேட்காதீர்கள்’ என்று சிரித்தான்.

எனக்கு காரணங்கள் அநாவசியம். காரியமுமேகூட. நான் ஒரு திட்டத்துடன் அவனிடம் சென்றிருந்தேன். அவன் ஆயுதங்கள் உற்பத்தி செய்பவன். கனரகத் துப்பாக்கிகள். வெடி மருந்துகள். சிறிய ரக பீரங்கிகள். மட்ட ரக ராக்கெட் லாஞ்ச்சர்கள். அவனது இரண்டு தொழிற்சாலைகளுள் ஒன்று மெக்ஸிகோவிலும் இன்னொன்று ஆப்பிரிக்காவில் காங்கோவிலும் உள்ளதாக அவன் சொன்னான். உலகெங்கும் புரட்சி நடக்கிற தேசங்களில் அவனுக்குக் கடைகள் உண்டு. புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் ஆயுதங்கள் சம்பாதிப்பதற்காக மக்களிடம் வரி வசூலிக்கிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். போதைக் கடத்தலில் ஈடுபட்டுப் பணம் ஈட்டுகிறார்கள். அந்தப் பணம் கணக்கற்றது. எண்ண முடியாத அளவுக்குப் பெரும் தொகையாக இருப்பது. அதில் அவர்கள் தமக்கென்று எதையும் சேமித்து வைப்பதில்லை. அத்தனைக் காசும் ஆயுதங்களில் போய் விழுகின்றன.

அந்த மெக்ஸிகன் தனது பெயரைச் சொன்னபோது, அது என் நினைவில் தங்குவது சிரமம் என்று தோன்றியது. அதை நான் அவனிடம் சொன்னபோது சிரித்துவிட்டு, ‘நீங்கள் என்னைச் சுருக்கமாக ஜிக்ரா என்று அழைக்கலாம்’ என்று சொன்னான். அவனைக் குறித்து கேம்போ என்னிடம் சொன்னபோது, ஜிக்ரா என்ற பெயரைப் பயன்படுத்தவில்லை. பதினாறு எழுத்துகள் கொண்ட அவனது முழுப் பெயரைத்தான் குறிப்பிட்டான்.

‘ஜிக்ரா, நான் ஒரு நடு மனிதன். நீங்கள் இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். என்னிடம் பணம் கிடையாது. சல்லிக் காசுகூடக் கிடையாது. நான் ஒரு சன்னியாசி. பிட்சை எடுத்து உண்கிறவன்.’

‘அப்படியா?’ என்று அவன் வியப்பாகக் கேட்டான்.

‘ஆம். எனக்கென்று ஒரு வங்கிக் கணக்குக்கூடக் கிடையாது. ஆனால், என்னை நம்பி எங்கள் நாட்டில் சில பெரிய மனிதர்கள் தங்கள் பணத்தைக் கொடுக்கிறார்கள். நான் சதவீத கமிஷன் கேட்பதில்லை என்பது ஒரு காரணமாயிருக்கலாம். பணத்தின் தேவை எனக்கு இல்லை என்பது இன்னொரு காரணமாயிருக்கலாம்.’

‘அதெப்படி முடியும்? பணமே இல்லாமல் எப்படி வாழ்வீர்கள்?’ என்று அவன் மீண்டும் ஆச்சரியப்பட்டான்.

‘இதோ பார். நான் பதிமூன்றாயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து இங்கே உன்னை வந்து சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இத்தனை தூரப் பயணத்துக்கு என்ன செலவு பிடிக்கும் என்று எனக்குத் தெரியாது. யாரோ எனக்குப் பயணச் சீட்டு எடுத்துக் கொடுத்தார்கள். வேறு யாரோ என்னை மெக்ஸிகோ நகரத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்கள். உங்கள் ஊர் சாப்பாடு எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனாலும் நான் பசியோடு இல்லை. இதோ, நீ வண்டி அனுப்பி என்னை உன் இருப்பிடத்துக்கு அழைத்து வந்திருக்கிறாய். நீயேதான் என்னைத் திருப்பிக் கொண்டு விடவும் போகிறாய். நான் என் ஊருக்குத் திரும்ப வேறொருவர் பயணச் சீட்டு தருவார். அங்கே நான் விமான நிலையம் வந்து சேர்ந்த தகவல் தெரிந்ததும், இன்னொருவர் வண்டி எடுத்துவந்து அழைத்துச் சென்று விடுவார்.’

அவனுக்குப் புரிந்தது. மிகவும் அதிசயமாக என்னைப் பார்த்தான். வெகு நேரம் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தவன் சட்டென்று, ‘நீங்கள் மாயாஜாலமெல்லாம் செய்கிற சுவாமிஜியா?’ என்று கேட்டான்.

‘இல்லை. எனக்கு அதெல்லாம் தெரியாது.’

‘ஓ. பொதுவாக இந்திய சாமியார்கள் சித்து வேலைகள் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.’

‘எல்லோரும் அல்ல. மிகச் சிலர். ஆனால் அவர்கள் கள்ள ஆயுத உற்பத்தியில் முதலீடு செய்யவெல்லாம் வரமாட்டார்கள்.’

‘அப்படியானால் நீங்கள் போலிச் சாமியார்!’ என்று சொல்லிவிட்டு, அவன் விழுந்து விழுந்து சிரித்தான். அவன் சிரித்து முடிக்கும்வரை காத்திருந்துவிட்டு, ‘போலி மனிதர்கள்தாம் உண்டே தவிர, போலிச் சாமியார்கள் என்று யாருமில்லை’ என்று சொன்னேன்.

‘ஆன்மிகத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர் போலிச் சாமியார்தானே?’

‘அதைத்தான் சொன்னேன். அவன் போலி மனிதன். அவன் சாமியார் கிடையாது. என் விஷயத்தில் நான் ஆன்மிகத்தின் பக்கம் ஒதுங்குவதே இல்லை. எனக்கும் அதற்கும் வெகுதொலைவு. நான் ஒரு நாத்திகன்’ என்று சொன்னேன்.

அதற்குமேல் அவன் என்னுடன் விவாதிக்கவில்லை. சிறிது நேரம் நாங்கள் வந்த விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உண்மையில், அவன் மிகப்பெரும் பணத்தேவையில் இருந்த சமயம் அது. சோமாலியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் ஏராளமான ஆயுதங்களை உற்பத்தி செய்து அனுப்பிவிட்டு, வர வேண்டிய பணம் வந்து சேராமல் தவித்துக்கொண்டிருந்தான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தொழிலில் கூடவா கடனுக்குக் கொள்முதல் நடக்கும்?

‘பொதுவாக அப்படி நடக்காது. ஆனால் இம்முறை இரு இடங்களிலும் எனது நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் ஒன்று தலைமறைவாகிவிட்டார்கள்; அல்லது இறந்துவிட்டார்கள்’ என்று சொன்னான்.

‘அடடா!’

‘இருபது மில்லியன் டாலர் வரை பணம் மிச்சம் உள்ளது. நான் உஸ்பெக்குக்கு ஒரு பயணம் மேற்கொள்ள இருந்த நேரத்தில்தான் நீங்கள் வந்துவிட்டீர்கள்’ என்று சொன்னான்.

அன்று மதியம் நான் அவனோடுதான் உணவு உட்கொண்டேன். அரைக் கிலோ பச்சை வெள்ளரிக்காயும் கேரட்டும் சாப்பிட்டுவிட்டு, ஒரு சொம்பு நிறையத் தயிர் அருந்தி நான் என் மதிய உணவை முடித்துக்கொண்டேன். அவனால் அதை நம்பவே முடியவில்லை. இவ்வளவுதானா! இவ்வளவுதானா! என்று திரும்பத் திரும்பக் கேட்டான். ‘உங்களைப் பட்டினி போட்டு அனுப்புவதுபோல உணர்கிறேன்’ என்று சொன்னான். ‘ஒரு சிக்கன் துண்டாவது எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கெஞ்சினான்.

‘நான் இரவில் மட்டும்தான் மாமிசம் உட்கொள்வது வழக்கம். மதிய வேளைக்கு எனக்கு இது போதும்’ என்று சொன்னேன்.

கிளம்பும்போது, அவன் தனது ஞாபகார்த்தமாக எனக்கு ஒரு சிறிய பிஸ்டலைப் பரிசளித்தான். உள்ளங்கையைவிடச் சிறிது. ‘இது இன்னும் புழக்கத்துக்குப் போகவில்லை. என்னுடைய புதிய கண்டுபிடிப்பு இது. பத்தடி தூரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் வீரியம் அதிகம்’ என்று சொன்னான். அந்த பிஸ்டலுக்குரிய ரவைகள் அடங்கிய சிறு பெட்டி ஒன்றையும் சேர்த்து அளித்தான். ஶ்ரீரங்கப்பட்டணத்து நடிகரின் பணத்தை அவனுக்கு அனுப்பிவைப்பதற்கான முறைகளைப் பேசி, இருவரும் தெளிவுபடுத்திக்கொண்ட பிறகு நான் புறப்பட்டேன்.

ஹோட்டல் அறைக்கு நான் வந்து சேர்ந்தபோது, ஆசிரமத்தில் இருந்து எனக்கொரு தகவல் வந்திருந்தது. கேசவன் மாமா அங்கே என்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com