68. முதலும் ஈடும்

மனிதர்கள், பணத்தைக் காட்டிலும் வலிமை மிக்கவர்கள். எனக்குத் தெரிந்த இந்த உண்மை என்னைத் தவிர பிறருக்குத் தெரியாது என்பதுதான் என் அதிர்ஷ்டம்.

திட்டமிட்ட தேதியில் நான் அந்த ஸ்ரீரங்கப்பட்டணத்து நடிகரைப் பார்க்க முடியவில்லை. வினய் அதைக் கெடுத்தான். முப்பது வருடங்களுக்குப் பிறகு என் உடன் பிறந்த சகோதரனைச் சந்திக்கிறேன் என்பதை மிருதுளாவின் தந்தை நல்லவிதமாகப் புரிந்துகொண்டதால், அவரிடம் சொல்லி ஒரு நாள் தள்ளி மீண்டும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அந்த மனிதரை நான் ஒரு அரசியல்வாதியாக என்றுமே எண்ணிப் பார்த்ததில்லை. ஆனால் கர்நாடகத்து அரசியலில் அவருக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. அதுவும் நெடுங்காலமாக. ஒரு கட்சிக்காரராகத் தன்னைக் காட்டிக்கொள்ளாமலேயே எட்டாண்டுகள் அவர் அரசியல் செய்திருக்கிறார் என்பது வியப்பாக இருந்தது. முதுமையும் தள்ளாமையும் நெருங்கியபோதுதான் அவர் தன்னை ஒரு கட்சியுடன் இணைத்துக்கொண்டார். தேசியக் கட்சி.

‘சுவாமிஜி, கட்சி என்கிறோம். கொள்கை என்கிறோம். அரசியல் பேசுகிறோம். மக்களைக் குறித்துப் பேசுகிறோம். எல்லாவற்றுக்கும் அடிப்படை ஒன்றுதான்’ என்று அவர் சொன்னார்.

‘ஆம். பணம்.’

‘மற்றத் துறைகளில் பணம் இல்லாமல் இல்லை. இங்கு சற்று அதிகம். சினிமாவைவிட அதிகம்.’

‘சரி.’

‘நீங்கள் எங்கள் கட்சியில் பல பேருக்கு பினாமியாகச் செயல்படுவதாக லிங்கப்பா சொன்னார். நான் சுற்றி வளைக்காமல் கேட்கிறேன். எனக்கு நீங்கள் வேலை செய்ய முடியுமா?’

நான் யோசித்தேன். என்னிடம் அப்போது ஒன்பது கஸ்டமர்கள் இருந்தார்கள். ஆறு அரசியல்வாதிகள் ஒரு அதிகாரி. இரண்டு நடிகைகள். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை என்னிடம் அனுப்பிவிடுவார்கள். பிரேசிலில் ஒரு காப்பிக் காடு நான் அனுப்பும் பணத்தில்தான் விளைந்துகொண்டிருந்தது. மூன்று மத்தியக் கிழக்கு எண்ணெய் கம்பெனிகளில் முதலீடு செய்திருந்தேன். இது போக ஒரு நகைக்கடை. பிரம்மாண்டமானது. தேசமெங்கும் அதற்கு ஏழெட்டுக் கிளைகள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு என்னைப் பிடித்துப் போக ஒரே ஒரு காரணம்தான். அவர்கள் தரும் பணத்தில் ஒற்றைக் காசைக்கூட நான் தொடுவதில்லை. நான் துறவி. எனக்கு எதற்குப் பணம்? என் உணவுத் தேவைகளைக் கவனித்துக்கொள்ள ஆள் இருந்தால் போதும். என் உறைவிடம் இன்னொருவர் பொறுப்பு. பயணங்கள், தங்குமிடச் செலவுகள் வேறொருவருடையது. ஆசிரமத்துக்குத் தேவையானவற்றை பக்தர்களே நிறைவேற்றிவிடுகிறார்கள். இதற்குமேல் ஒண்டிக்கட்டையான எனக்குப் பணத்தின் தேவைதான் என்ன?

யோசித்துப் பார்த்தால் எனக்கே அது சற்று வியப்பாகத்தான் இருந்தது. இத்தனை ஆண்டுகளில் வங்கிக் கணக்கு என்ற ஒன்று எனக்கு இருந்ததே இல்லை. அதற்கு அவசியமும் வந்ததில்லை. முதல் முறை நான் வெளிநாடு செல்ல நேர்ந்தபோது, வங்கிக் கணக்கும் பண அட்டையும் அவசியம் என்று சொன்னார்கள். நான் சிரித்தேன். ‘என்னை அழைப்பவர்களிடம் அவை இருக்கிறதல்லவா? போதும்’ என்று சொன்னேன். என் ஆசிரமத்துக்கு வருவோருக்குச் சில நிபந்தனைகள் உண்டு. வெளியே அவர்கள் செருப்பை அவிழ்த்து விடும்போது, பர்ஸையும் சேர்த்துத்தான் விட்டு வர வேண்டும். லாக்கர்கள் இருக்கும். அவரவர் பணப்பையை அதில் வைத்துப் பூட்டிக்கொள்ளலாம்.

‘பணத்தைத் தொடாமல் ஒரு மணி நேரம் இருப்பதும் ஒருவித தியானம்தான்’ என்று அடிக்கடிச் சொல்வேன். உண்மையில் அது என்னுடைய அபாரமான கண்டுபிடிப்பு. எந்தத் துறவியும் ஞானியும் சொல்லாதது. நான் பணமற்றவன். அதற்கான தேவையும் அற்றவன். எனது சம்பாத்தியம் என்பது மனிதர்கள் மட்டுமே. இதனாலேயே நான் என்ன நினைத்தாலும் நடந்தது. எது கேட்டாலும் கிடைத்தது. என்னை நம்பிப் பணத்தை ஒப்படைக்கும் அத்தனை பேருக்கும் கணக்கு சுத்தமாக வருடம்தோறும் நேரடியாகப் பணம் போய்விட ஏற்பாடு செய்திருந்தேன். அடுத்தவர் பணம். யாரோ எங்கோ உழைத்து அதைப் பெருக்கித் தருகிறார்கள். அவர்களுக்கான சம்பளத்தை இன்னும் யாரோ கொடுக்கிறார்கள். இடையில் நின்று கைகாட்டிவிடுவது மட்டுமே நான். வெறும் இடையன். வெறும் மேய்ப்பன். வருமான வரித் துறைக்கு வேலையே வைக்காத ஒரு ஆசிரமத்தை நடத்திக்கொண்டிருப்பதால், என்னை நம்பியவர்கள் என்றும் நிம்மதியுடன் இருந்தார்கள்.

அந்த முன்னாள் நடிகரிடம் நான் கேட்டேன், ‘உங்களுக்கு எந்தத் தொழிலில் முதலீடு செய்ய விருப்பம்?’

‘தங்கம் வேண்டாம். காப்பி வேண்டாம். எண்ணெய் வேண்டாம்.’

‘என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.’

‘எனக்கு வேண்டியது பெரும் பணம். சுவாமிஜி, இன்னும் மூன்றாண்டுகளில் பொதுத் தேர்தல் வந்துவிடும். அந்தத் தேர்தல்தான் என் இலக்கு. என் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிற தேர்தல் அது.’

எனக்கு சிரிப்பு வந்தது. அவருக்கு எப்படியும் அறுபத்து ஐந்தில் இருந்து எழுபது வயதுக்குள் இருக்கும் என்று தோன்றியது. எதிர்காலம் என்பது இன்னும் எத்தனை ஆண்டுக்காலம் இருக்கும் என்று உத்தேசித்திருக்கிறார்? நான் சட்டென்று கேட்டேன், ‘உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா?’

‘ஆம்.’

‘ரத்த அழுத்தம்?’

‘உண்டு.’

‘வேறு ஏதேனும் உடல் நலன் சார்ந்த சிக்கல்கள் இருந்தால் சொல்லுங்கள்.’

அவர் யோசித்துவிட்டு, ‘இல்லை. இந்த இரண்டும்தான்.’

‘எத்தனைக் காலமாக?’

‘குறைந்தது முப்பது வருடங்கள்.’

‘மாத்திரைகளை ஒழுங்காக எடுத்துக்கொள்கிறீர்களா?’

‘ஒருநாளும் தவறுவதில்லை.’

சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். பிறகு, ‘நான் சொல்கிற மாதிரி உங்களால் சாப்பிட முடியுமானால், இந்த இரண்டு வியாதிகளில் இருந்தும் நீங்கள் நிரந்தரமாக விடுதலை பெறலாம். உங்கள் அரசியல் எதிர்காலத்தை வியாதி தின்றுவிடக் கூடாதல்லவா?’

அவர் உற்சாகமாகிவிட்டார். ‘உண்மையாகவா? சர்க்கரை நோய் தீரவே தீராது என்றல்லவா சொல்கிறார்கள்?’

நான் புன்னகையுடன் அவர் நாடி பிடித்துப் பார்த்தேன். ‘உங்கள் எடை என்ன?’ என்று கேட்டேன். அவர் யோசித்துவிட்டு, ‘சமீபத்தில் பார்க்கவில்லை. எப்படியும் தொண்ணூறு கிலோ இருப்பேன் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னார்.

‘சரி. நாளை முதல் ஒரு வாரத்துக்கு முட்டை தவிர வேறு எதையும் உண்ணாதீர்கள்’ என்று சொன்னேன்.

‘என்ன?’

‘வெறும் முட்டை. பசிக்கும்போதெல்லாம் முட்டை. பசி அடங்கும்வரை முட்டை.’

‘அப்படிச் சாப்பிட்டால் என்ன ஆகும்?’

‘ஒருவாரம் சாப்பிட்டுவிட்டு ஒரு ரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். உங்களுக்கே புரியும்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.

உண்மையில், நான் அவரது பணத்துக்குப் பொறுப்பேற்றதைவிட அவர் அதிகம் மகிழ்ச்சி கொண்டது அதில்தான். எண்ணி ஒரு வாரம். வெறும் முட்டை மட்டுமே சாப்பிட்டதில், அவரது ரத்த சர்க்கரை கணிசமாகக் குறைந்துவிட்டிருந்தது. அலறிக்கொண்டு எனக்கு போன் செய்து இந்தத் தகவலைச் சொன்னார். ‘என் மருத்துவர், மாத்திரைகளின் அளவைப் பாதியாகக் குறைத்துவிட்டார். இது எப்படி? என்ன செய்தீர்கள் நீங்கள்?’

நான் ஒன்றுமே செய்யவில்லை என்பதைச் சொல்லவில்லை. அவருக்கான என் பிரார்த்தனையைப் பரம்பொருளிடம் சேர்ப்பித்துவிட்டதாகச் சொன்னேன். என் சீடன் ஒருவன் மூலம் அவருக்கு நான் அனுப்பிவைத்த முட்டைகளுக்குள் ஏதோ மந்திரித்து சேர்த்து அனுப்பிவைத்திருப்பதாக அவர் மனப்பூர்வமாக நம்பினார். என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு நன்றி சொன்னார். அவரது மனைவி, சந்தோஷத்தில் எனக்கு ஒரு பெரிய விருந்தே அளித்தார். அந்த விருந்தின்போதுதான் அவர் சொன்னார், ‘ஆயுதங்களில் முதலீடு செய்யுங்கள். புரட்சி நடக்கும் தேசங்களில் விளைச்சல் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.’

நான் உடனடியாக அவருக்குச் சம்மதம் சொல்லவில்லை. ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றேன். அமெரிக்காவில் எனக்கு அப்போது சில சீடர்கள் சேர்ந்திருந்தார்கள். விடுமுறைக்கு இந்தியா வந்தபோது, என் சொற்பொழிவுகளைக் கேட்டு சீடர்களானவர்கள். அந்த தேசத்துக்கு என்னைச் சொற்பொழிவாற்ற வரச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கடிதம் எழுதினேன். நான் அமெரிக்கா வருகிறேன். ஆனால் அங்கிருந்து மெக்ஸிகோ செல்ல விரும்புகிறேன். அந்தப் பயணத்துக்கும் சேர்த்து ஏற்பாடு செய்ய முடிந்தால் நல்லது.

அமெரிக்கச் சீடர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். உடனடியாக எனது பயணத்துக்கு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார்கள். நான் மீண்டும் அந்தக் கன்னட நடிகரைச் சந்தித்து, ‘ஒரு மாதம் போதாது. இன்னொரு மாதம் காத்திருங்கள்’ என்று சொல்லிவிட்டு மிருதுளாவின் தந்தையை என்னோடு அமெரிக்காவுக்கு வரமுடியுமா என்று கேட்டேன். இடைப்பட்ட நாள்களில் அடிக்கடி என்னை அவர் சந்தித்ததில் மிருதுளாவைப் போலவே அவரும் என் வயமாகியிருந்தார். நான் மொழியின் குழந்தை. ஒரு தையல்காரனின் லாகவத்துடன் என்னைத் தேடி வருகிறவர்களுக்கான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுகிறேன். அவர்கள் என் சொல்லில் மூழ்கித் திளைக்கிறார்கள். என் வங்கியின் மனிதக் கணக்கு, பணத்தைக் காட்டிலும் வேகமாகப் பெருகுகிறது. மனிதர்கள், பணத்தைக் காட்டிலும் வலிமை மிக்கவர்கள். எனக்குத் தெரிந்த இந்த உண்மை என்னைத் தவிர பிறருக்குத் தெரியாது என்பதுதான் என் அதிர்ஷ்டம்.

அந்த மனிதர் தன்னால் அமெரிக்காவுக்கு வர முடியாதது பற்றி மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் மிருதுளாவை அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com