65. தாகம்

எது ஒண்ண நீ திரும்பத் திரும்ப நினைக்கிறியோ, அதைத்தான் உன்னால சுளுவா நெருங்க முடியும். நல்லதா கெட்டதான்னு கிடையாது. தேவையா இல்லியான்னும் இல்ல.

ஒரு பயணத்திட்டத்தைச் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த முகமது குட்டி குலைத்துப் போட்டுவிட்டான். எத்தனைத் திறமையாகத் தன்னை ஏமாற்றிவிட்டு அந்த எள்ளுருண்டையை எடுத்துக்கொண்டு போனான்! நினைக்க நினைக்க வினய்க்கு அவமான உணர்வும் துக்கமும் பொங்கிப் பொங்கித் தணிந்தது. ஏதாவது செய்து அவன் வாழ்நாளிலேயே மறக்க முடியாத பேரிடியை அவனுக்குத் தந்துவிட வேண்டும் என்று நினைத்தான். சற்றும் இலக்கில்லாமல் அந்த நாய் சென்ற வழியே அதன் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

அந்த நாய் நடந்துகொண்டே இருந்தது. எங்குமே நிற்கவில்லை. வினய்க்கு அது ஒரு குறியீடாகத் தோன்றியது. தன்னைச் செலுத்திப் போகிற குறியீடு. உண்மையில் அப்படி இல்லாவிட்டாலும், அப்படி நினைத்துக்கொள்வது வசதியாக இருப்பதாக அவனுக்குப் பட்டது. சொரிமுத்து அவனுக்குச் சொல்லியிருந்த ஒரு விஷயத்தை மட்டும் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்துக்கொண்டான்.

‘ஒண்ணு சொல்றேன் மனசுல வெச்சிக்க. எது ஒண்ண நீ திரும்பத் திரும்ப நினைக்கிறியோ, அதைத்தான் உன்னால சுளுவா நெருங்க முடியும். நல்லதா கெட்டதான்னு கிடையாது. தேவையா இல்லியான்னும் இல்ல. நெனப்பு மனசுக்குள்ளாற அப்பிடியே சர்ப்புல நனச்ச வேட்டியாட்டம் ஊறணும். ஊறி ஊறி உன் நெனப்பும் நீயும் ஒண்ணுன்னு ஆயிரணும். தூக்கத்துலகூட அந்த நெனப்பத் தவிர வேறெதுவும் இருக்கக் கூடாது. அதுக்குப் பேருதான் யோகம். பரமாத்ம சொரூபத்த நினைக்கறது அல்டிமேட்டு. அதுதான் பெருவழி. அந்த ரூட்ல போவசொல்ல, வழில நீ நினைக்கறதுக்கு நிறைய கிடைக்கும். நின்னு பாத்து ரசிக்க எத்தினியோ வரும். சித்தெல்லாம் அதுல ஒண்ணுதான்.’

வினய், முகமது குட்டியை தண்டிப்பதைத் தவிர வேறெதையும் நினைப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டான். தண்டித்து முடிக்கும்வரை மட்டுமே அவன் நினைப்பு. அதன்பின் மறந்துவிட வேண்டும். தன் வழி வேறு. தன் பாதை வேறு. சட்டென்று நகர்த்தி வைத்துவிட்டுத் திருவானைக்கா போய்விட வேண்டும். எப்படியும் சொரிமுத்து கடிந்துகொள்வான். இதெல்லாம் வேண்டாத வேலை என்றுதான் சொல்லுவான்.

‘பாரு, ஆறு வருசம் அப்பியாசம் பண்ணி சேத்த சொத்தெல்லாம் போச்சே?’ என்பான். பரவாயில்லை என்று வினய்க்குத் தோன்றியது. சொத்து சேர்க்கும் கலையை அவன் அறிவான். ஆறு வருட அப்பியாசம். ஆயுள் இன்னும் இருக்கிறது. மீண்டும் ஆரம்பிக்கலாம். சொரிமுத்துவிடம் சொல்லிவிட்டுத் தனியே எங்காவது போகலாம். அண்ணா சுடுகாடு தேடி ஆந்திரத்துக்குப் போனதாக சொரிமுத்து சொன்னான். தனக்குச் சுடுகாடு வேண்டாம் என்று வினய்க்குத் தோன்றியது. அவன் மனத்தில் ஒரு நீர்நிலை நிழற்படமாக எப்போதும் எழுந்து வந்து நிற்கும். அது நதியல்ல. ஏரியோ குளமோ கடலோ அல்ல. ஒரு ஆர்மோனியம் வாசிப்பவரின் இடது கை அசைவை நிகர்த்த சலசலப்பு அந்த நீர்ப்பரப்பில் இருக்கும். நீரின் நிறம் இளஞ்சிவப்பாக இருக்கும். சட்டென்று வெளிர் மஞ்சளாக மாறும். கண்ணை மூடும்போதெல்லாம் அந்த நீர்ப்பரப்பு அவனுக்குள் உதித்து எழுந்து வரும். இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் அப்படியொரு நீர்நிலை இருக்கத்தான் வேண்டும் என்று வினய் எப்போதும் நினைப்பான். கரையற்ற, முற்றுமுழுதான நீர்நிலை. எல்லைகளற்றது. அதன் ஆழம் தெரியாது. அதில் மீன்கள் உண்டா, வேறு நீர்வாழ் விலங்குகள் உண்டா என்று தெரியாது. அவன் கண்ணுக்கு அது தென்படும்போதெல்லாம் ஆர்மோனிய அசைவு மட்டும்தான் அதில் இருக்கும். அமைதியான இடம். அந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்று அமர்ந்துவிட வேண்டும் என்று வினய் நினைத்துக்கொண்டான்.

இரண்டு மணி நேரம் அந்த நாய் இடைவிடாமல் நடந்துகொண்டே இருந்தது. பல்வேறு சாலைகளைக் கடந்து கிராமாந்திரமான ஒரு இடத்துக்கு அவனை அழைத்துச் சென்றது. இங்கொன்றும் அங்கொன்றுமாக பத்திருபது குடிசை வீடுகள் கண்ணில் பட்டன. விரித்துப்போட்டாற்போல ஊரைச் சுற்றி வயல்வெளி நிறைந்திருந்தது. உழவு முடித்த மனிதர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு குடிசைக்குள் இருந்து மாநிலச் செய்திகள் கேட்டது. நாய் அந்த குடிசை வாசலுக்குப் போய் சற்று நின்றது. வினய்யும் நின்றான். அதுவரை திரும்பிப் பாராமல் நடந்துகொண்டிருந்த நாய் அங்கே நின்றதும் வினய்யைத் திரும்பிப் பார்த்தது. ஒரு கணம் உட்கார்ந்துவிட்டு உடனே எழுந்து ஓடிவிட்டது.

வினய்க்கு அது புரியவில்லை. ஒருவேளை அது தனக்கான சூசகமாக இருக்குமோ என்று நினைத்தான். நாய் நடந்துகொண்டிருந்தவரை பின்னால் நடந்து வந்தவன், அது ஓடத் தொடங்கியதும் தானும் ஓடுவதா வேண்டாமா என்று யோசித்தான். இதற்குமேல் தன்னால் ஓட முடியாது என்று அவனுக்குப் பட்டது. எனவே, அந்த குடிசையின் வெளித் திண்ணையில் உட்கார்ந்துகொண்டான். சாணம் மெழுகிய சிறு மேடை போலிருந்தது அது. கால் நீட்டிப் படுத்தால் உடனே தூங்கிவிடுவோம் என்று தோன்றியது. ஆனால் அவன் தூங்க விரும்பவில்லை. அன்று இரவுக்குள் முகமது குட்டியைக் கண்டுபிடிக்க ஒரு வழி தேடியாக வேண்டும். எத்தனைக் குயுக்தியாகத் தன்னிடம் இருந்து எள்ளுருண்டையை அவன் அபகரித்துச் சென்றானோ, அதே வழியில் அவனிடமிருந்து அதை மீட்க வேண்டும். தவிர அவன் வாழ்நாளில் மறக்க முடியாதபடி ஒரு தண்டனை. அதைப் பிறகு யோசித்துக்கொள்ளலாம். முதலில் உருண்டையை மீட்பது.

அவனுக்குத் தாகமாக இருந்தது. வீட்டுக் கதவு மூடியிருந்தது. உள்ளே யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. வேலைக்குப் போயிருந்தாலும் இந்நேரம் திரும்பியிருப்பார்களே என்று நினைத்தான். எங்காவது சென்று தன்ணீர் மட்டும் குடித்துவிட்டு வரலாம் என்று நினைத்து அவன் எழுந்தபோது கதவு திறந்து ஒரு பெண் வெளிப்பட்டாள்.

‘யாரு?’ என்று கேட்டாள்.

‘நான் திருச்சினாப்பள்ளிலேருந்து வரேன். மார்த்தாண்டம் போகணும். வழியிலே ஒரு சிக்கல்... வந்து.. எனக்குக் குடிக்க தண்ணி வேணும்.’

அந்தப் பெண் உள்ளே சென்று ஒரு சொம்பில் நீர் எடுத்துவந்து கொடுத்தாள். குடித்து முடித்தபோது வினய்க்கு மனம் நெகிழ்ந்திருந்தது. வெறும் தண்ணீர். ஆனால் தாகத்துக்குக் கிடைக்கிறபோது, அது வேறு பரிமாணமல்லவா எய்திவிடுகிறது? அவனுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. சொரிமுத்துவுடன் ஒருநாள் அவன் பிட்சைக்குப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று சொரிமுத்து, ‘டேய் எனக்கு டீ குடிக்கணும்டா இப்பொ’ என்று சொன்னான். அவர்களிடம் அப்போது ஒரு பத்து பைசா நாணயம்கூட இல்லை. நாற்பது நாள்களுக்குக் காசுப் பிச்சை ஏற்பதில்லை என்று சொரிமுத்து விரதம் கொண்டிருந்தான். உணவுக்கு மட்டுமே கையேந்தும் விரதம். அப்படி இருக்கையில், டீ குடிக்கப் பணத்துக்கு எங்கே போவது?

ஒரு வீட்டு வாசலில் நின்று பிட்சை கேட்டபோது, அந்த வீட்டுப் பெண்மணி ‘கஞ்சிதான் இருக்கு. பரவால்லியா?’ என்று கேட்டாள்.

‘பரவால்ல’ என்று சொரிமுத்து சொன்னான். அவள் உள்ளே சென்று ஒரு கலயத்தில் கஞ்சியை எடுத்துவந்து கொடுத்து, ‘குடிச்சிட்டு அப்படி வெச்சிட்டுப் போயிடு’ என்று சொன்னாள்.

சொரிமுத்து கஞ்சியைப் பார்த்தான். வினய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

‘சரி, நீ குடி’ என்று வினய்யிடம் கலயத்தை நீட்டினான்.

‘பரவால்ல. நீங்க முதல்ல குடிங்க’ என்று வினய் சொன்னான். ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் மட்டுமே சென்று கையேந்த வேண்டும். எந்த வீடு முதல் பிட்சை போடுகிறதோ, அதுதான் அன்றைய உணவு. அளவு குறைவாக இருந்தாலும் அவ்வளவுதான். அதிகமாக இருந்தாலும் அவ்வளவுதான்.

அந்தப் பெண்மணி கொண்டுவந்து கொடுத்த கஞ்சி மிஞ்சிப்போனால் ஒன்றரை தம்ளர் அளவுக்கு இருக்கும். கண்டிப்பாக ஒருவர் பசியைக்கூட அது தணிக்காது. அதனால்தான் வினய், சொரிமுத்துவை முதலில் அருந்தச் சொன்னான்.

‘டேய் நீ குடிடான்றன்ல? கடேசில ஒரு வாய் மட்டும் மிச்சம் வெச்சிட்டுக் குடி’ என்று சொரிமுத்து மீண்டும் சொன்னான்.

வேறு வழியின்றி வினய் அந்தக் கஞ்சியைக் குடித்து முடித்தான். கலயத்தில் மிகச் சிறிய அளவு கஞ்சி மட்டுமே எஞ்சியிருந்தது. சொரிமுத்து அதை வாங்கிப் பார்த்தான். சட்டென்று, ‘எனக்கு இப்பம் டீ குடிக்கணும்’ என்று மீண்டும் சொன்னான். வினய்க்குப் புரிந்தது. சில விநாடிகள் கண்மூடி மந்திரம் சொல்லிக் கலயத்தைக் கையால் மூடித் திறந்தான். உள்ளே சுடச்சுடத் தேநீர் இருந்தது. சொரிமுத்து அதை வாங்கி ஒரே வாயில் குடித்து முடித்தான்.

வினய்க்கு அது சற்று வியப்பாக இருந்தது. சொரிமுத்து ஒருநாளும் தனது சித்து வேலைகளைத் தன் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்துபவனல்லன். வினய்யைக் கொண்டு தேநீர் வரவழைத்தாலும், அது தனக்குத்தானே செய்துகொள்வதுதான் அல்லவா? எனவே சொரிமுத்துவிடம் அவன் தனது சந்தேகத்தைக் கேட்டான்.

‘இந்த வீட்டுலேருந்தேதானே எடுத்த?’ என்று சொரிமுத்து கேட்டான்.

‘ஆமா. அந்தம்மா உள்ள டீ போட்டு வெச்சிருந்தாங்க.’

‘தெரியும். அதுல பல்லி விழுந்திருச்சி. அத்தக் குடிச்சிட்டு அவ புருசன் பேதி புடுங்கிக்கிட்டு நிப்பான். எதுக்கு பாவம்னுதான் நான் எடுத்துக் குடிச்சிட்டேன்‘ என்று சொன்னான். ‘ஒனக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்தினவளுக்கு எதோ என்னால முடிஞ்சது.’

அந்தப் பெண் கொடுத்த தண்ணீரைக் குடித்து முடித்தபோது, ஏனோ வினய்க்கு இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. இவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. குடித்து முடித்த சொம்பைச் சில விநாடிகள் உற்றுப் பார்த்தான். பிறகு வலது கையால் ஒருமுறை அதை மூடித் திறந்தான். ‘இந்தாம்மா’ என்று நீட்டினான்.

ஒரு காலிச் சொம்பை எதிர்பார்த்துக் கை நீட்டியவள், சொம்பு நிறையப் பால் இருப்பதைக் கண்டு திகைத்துப்போனாள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com