62. எள்ளுருண்டை

செருப்பைச் சாணியில் தோய்த்து முகத்தில் அடித்தால் அதே கருமம் தொலைந்துவிடுகிறது. அடிக்கிற கை எது, தோய்க்கிற சாணி எது என்பது சங்கதி. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை.

திருச்சிராப்பள்ளியில் இருந்து மார்த்தாண்டம் போகிற பஸ்ஸில் வினய்யை ஏற்றிவிட்டுத் தானே டிக்கெட்டும் எடுத்துக்கொடுத்த சொரிமுத்து, வழிச் செலவுக்குப் பத்து ரூபாய் பணமும் கொடுத்தான்.

‘இது போதாதே? திரும்பி வர என்ன செய்ய?’ என்று வினய் கேட்டபோது, ‘அங்க ஒருத்தன் டிக்கெட் எடுத்துத் தருவான் போ’ என்று சொல்லியிருக்கிறான். வழியெல்லாம் வினய் அந்த எள்ளுருண்டையையே நினைத்துக்கொண்டிருந்தான். அது ஒரு நோய். தீர்க்கவே முடியாத நோய். ஒரு எள்ளுருண்டைக்குள் ஒரு நோயை அடைக்கிற வித்தை பெரிதல்ல. நோய் என்று தெரிந்தும் அதை எடுத்துச்சென்று ஒருவனுக்கு அளிக்க வேண்டிய பணி அவனுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.

‘ரொம்ப சிந்திக்காதடா. மூள சூடாயிரும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘அப்படித்தான் நினைக்கறேன். ஆனாலும் மனசுக்கு கஷ்டமாவே இருக்கு’ என்று வினய் பதில் சொன்னான்.

‘என்னா கஸ்டம்?’

‘இல்லே. இது ஒரு வியாதின்னு தெரியும். இதைக் கொண்டுபோய் ஒருத்தனுக்குக் குடுத்து அனுபவின்னு சொல்லிட்டு வர்றது குரூரம் இல்லியா?’

‘அது அவனுக்கு விடுதலையா இருந்திச்சின்னா?’

‘அது தெரியலை. ஆனாலும் கஷ்டப்பட்டு அப்பறம்தானே சாவான்? சாவுதான் விடுதலைன்னா, ஒரு சொட்டு விஷத்த குடுத்து சாகடிச்சிடலாமே?’

‘லூசு. அவங்கர்மம் கழிய வேணாவா?’ என்று கேட்டான்.

கண்ணுக்குத் தட்டுப்படாத கர்மம். அதைத்தான் சொரிமுத்து மூச்சுக்கொரு முறை சொல்லிக்கொண்டிருந்தான். முன்னெப்போதோ வாங்கிய கடனுக்கு தண்டம் கட்டுகிற சோலி. ஆனால் அதைச் செய்துதான் தீர வேண்டும் என்று சொரிமுத்து சொன்னான்.

‘மனுசன் சொமக்குற எடையில பேர்பாதி கர்மந்தான். அதக் குறைக்கறதுக்கு ஒலகத்துல டயட்டே கிடையாது. சொமந்துதான் தீரணும்’ என்று சொரிமுத்து சொன்னது வினய்க்கு மிகுந்த குழப்பமாக இருந்தது. செருப்பைச் சாணியில் தோய்த்து முகத்தில் அடித்தால் அதே கருமம் தொலைந்துவிடுகிறது. அடிக்கிற கை எது, தோய்க்கிற சாணி எது என்பது சங்கதி. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. விழுகிற எல்லா செருப்படிகளும் கருமம் தொலைப்பதுமில்லை.

‘ஒனக்கு இதெல்லாம் புரியணுன்னா நீ தவஞ்செய்யணும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

சொரிமுத்து தினமும் தவம் செய்வான். சரியாக இரவு பதினொரு மணிக்கு அவனது தவம் ஆரம்பிக்கும். வீட்டுக்குள்தான் செய்வான். படுத்திருக்கும் பாயை எடுத்து சுருட்டி வைத்துவிட்டு வெறுந்தரையில் மீண்டும் அதே போலப் படுப்பான். இடது காலையும் வலது கையையும் செங்குத்தாக உயர்த்தி நிறுத்தி வைப்பான். கண் மூடியிருக்கும். மூன்றில் இருந்து நான்கு மணி நேரம் அப்படியே அசையாது கிடப்பான். அந்த நேரத்தில் அவனைத் தொட்டால், கிள்ளினால், அடித்தால், உதைத்தால் அவனுக்கு உறைக்காது. சற்றும் அசையாமல் கிடப்பான். வினய் ஓரிரு சமயம் அவன் தவத்தில் இருக்கும்போது உயர்த்தியிருக்கும் அவனது காலைப் பிடித்துக் கீழே இறக்கிவைத்திருக்கிறான். ஒரு ரப்பரைப் போல அந்தக் கால் மீண்டும் உயர்ந்து செங்குத்தாக நிற்கும். சொரிமுத்து கண்ணைத் திறக்க மாட்டான்.

அவனது அன்றைய சாதகம் முடிந்து அவனாகக் கண்ணைத் திறக்கும்போதுதான் அவனுக்கு சூழல் தெரிய ஆரம்பிக்கும்.

‘நான் உங்க காலைப் பிடிச்சி இழுத்தேன்’ என்று வினய் சொன்னான்.

‘அப்பிடியா?’ என்றுதான் சொரிமுத்து கேட்டான். சுய உணர்வற்றுப் போகிற சாதகம். அவன் பேசிய பல விஷயங்கள் வினய்க்குப் புரியவில்லை. ஒரே ஒருமுறை முக்கால் மணி நேரம் சமாதி நிலையில் இருந்திருப்பதாக ஒரு நாள் சொரிமுத்து சொன்னான். ‘அப்ப எங்குருநாதர் பக்கத்துல இருந்தாரு. அதுக்கப்பறம் தனியா எவ்ளவோ டிரை பண்ணிப் பாத்துட்டேன். எனக்கு அது விதிக்கலை’.

‘அண்ணா இருப்பானா?’

‘தெரியாது’ என்று சொன்னான். ‘எனக்குத் தெரிஞ்சி ராமகிருஷ்ண பரமஹம்சர் இருந்திருக்காரு. அவருதான் லாஸ்டு. அதுக்கப்பறம் சமாதியோகம் தெரியுன்னு சொல்லிக்கிட்டுத் திரியறவன் பூராம் ஃப்ராடு. பத்து நிமிசம், இருவது நிமிசம், ஒன்னவர் இருக்கலாம். நாள் கணக்கா நம்மளால எல்லாம் முடியாது.’

‘எப்படி இருக்கறது?’

‘சொன்னேன்ல? காத்து. ட்யூபுலேருந்து புடுங்கி உடுற மாதிரி காத்த புடுங்கி வெளிய வெச்சிடுறது. டைம் செட் பண்ணிட்டு அப்பறம் திரும்ப உள்ளார கொண்டு வெச்சிடுறது.’

காற்றை நிகர்த்த கேன்சர். ஒரு உள்ளிருந்து எடுத்துச் சிறிது காலம் வெளியே வைத்திருந்துவிட்டு மீண்டும் இன்னொரு உள்ளுக்குக் கொண்டுபோய் வைக்க முடிகிற பொருள்.

பொருளா! ஆம். அப்படித்தான் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லுவதற்கு வசதியாகத்தான் சொரிமுத்து அதை ஒரு எள்ளுருண்டையாக்கிக் கொடுத்திருந்தான். செல்லும் வழியெல்லாம் வினய் தன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த எள்ளுருண்டையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். அடிக்கடி அதைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான்.

‘பாரு, நீ மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டுலே இறங்கினதும் அங்கேருந்து களியக்காவிளைக்கு எப்படிப் போவணுன்னு யார்ட்டயாச்சும் கேளு. பஸ்ஸு போவுற ரூட்டுல நடந்து போய்க்கிட்டே இரு. சரியா மூணாங் கிலோமீட்டர்ல அவன் ஒன்னைய வந்து பாப்பான்.’

‘யாரு?’

‘இசக்கியப்பன்.’

‘கிறிஸ்டியனா?’

‘என்ன களுதையானா ஒனக்கென்ன?’

‘இல்லே. நான் அதுக்கு கேக்கலை. இசக்கியப்பனுக்கு விடுதலை வேணும்னா அவர் அவரோட சர்ச் ஃபாதர்கிட்டயோ, நேரா இயேசுநாதர்ட்டயோ கேட்டுக்கப் போறார். நீங்க எதுக்கு அவருக்கு?’

சொரிமுத்து சிரித்தான். ‘மண்ட பூராம் குப்பை. ம்ம்?’ என்று மீண்டும் சிரித்தான்.

‘இல்லே. தெரிஞ்சிக்கறதுக்காகத்தான் கேக்கறேன்.’

‘இதெல்லாம் சொல்லித் தெரியாதுடா. தானா அப்பப்ப வெளங்கும். நீ கெளம்பு’ என்று சொன்னான்.

முகமறியாத இசக்கியப்பனைத் தேடி, வினய் மார்த்தாண்டம் பஸ்ஸில் ஏறிப் பயணம் செய்ய ஆரம்பித்தான். இரவெல்லாம் உறங்காதிருந்து மறுநாள் காலை பேருந்து திருநெல்வேலியைக் கடந்து டீ குடிக்க ஓரிடத்தில் நின்றபோது, வினய் கீழே இறங்கினான். ஒதுங்கிச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு வந்து பேருந்தின் அருகே நின்றான்.

அப்போதுதான் அவன் முகமது குட்டியைச் சந்தித்தான். அவன் அதே பேருந்தில் வந்தவனா, வேறு வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தவனா என்று வினய்க்குத் தெரியவில்லை. எங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்த முகமது குட்டி சட்டென்று நினைவுக்கு வந்தவன் போல நேரே வினய்யிடம் வந்து, ‘எனக்கு அந்த எள்ளுருண்டை தேவைப்படுகிறது. தருவாயா?’ என்று கேட்டிருக்கிறான்.

வினய்க்கு அச்சமாகிவிட்டது. தன்னிடம் உள்ள எள்ளுருண்டையைப் பற்றி இவனுக்கு எப்படித் தெரியும்? சொரிமுத்து வீட்டில் வேட்டி மடிப்பில் வைத்து முடிந்துகொண்ட பிறகு இன்னும் அவனே அதை வெளியே எடுக்கவில்லை. அப்படி இருக்கையில், முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவன், தான் கொடுத்து வைத்ததை வந்து கேட்பது போல அல்லவா இவன் கேட்கிறான்!

‘நீ எனக்கு அதை சும்மா தரவேண்டாம். பதிலுக்கு நீ எதையாவது விரும்பிக் கேட்டால் அதை நான் உனக்கு வரவழைத்துத் தருவேன்’ என்று முகமது குட்டி சொன்னான்.

‘நீங்கள் யார்?’

‘அது அத்தனை அவசியமா? உன் இடுப்பு மடிப்பில் உள்ள எள்ளுருண்டையை அறிந்தவன் என்பது போதாதா?’

‘அது புரிந்தது. அந்த எள்ளுருண்டைக்குள் என்ன இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.’

‘ஆம். கேன்சர்.’

‘உங்களுக்கு அது எதற்கு?’

‘எனக்கல்ல. வேறு ஒருவனுக்கு.’

‘உருவாக்கி எடுத்துச் செல்ல வேண்டியதுதானே?’

‘அது என் திட்டமில்லை. உனக்குச் சொன்னால் புரியாது. உன்னால் தர முடியுமா? முடியாதா?’

‘நான் அனுமதி கேட்க வேண்டும்.’

‘யாரிடம்?’

‘என் குரு.’

‘சரி கேள்’ என்று முகமது குட்டி சொன்னான்.

வினய்க்குக் குழப்பமாக இருந்தது. கண்ணை மூடி மனத்துக்குள் சொரிமுத்துவை நினைத்தான். நெருக்கடி நேரத்தில் கண்ணை மூடி என்னை நினைத்துக்கொண்டால் நான் உன்னோடு பேசுவேன் என்று சொரிமுத்து அவனிடம் சொல்லியிருந்தான். ஏற்கெனவே ஓரிரு முறை அப்படிப் பேசியும் இருக்கிறான். அந்த நம்பிக்கையில் அம்முறையும் கண்ணை மூடி சொரிமுத்துவை நினைத்தான். முழுதாக ஒரு நிமிடம் ஆகியும் சொரிமுத்து அவனிடம் வரவில்லை.

‘என்ன?’ என்று முகமது குட்டி கேட்டான்.

‘இன்னும் உத்தரவு வரவில்லை.’

‘சரி, மீண்டும் முயற்சி செய்’ என்று சொல்லிவிட்டு, அவன் வேறு புறம் திரும்பி நின்றுகொண்டான்.

வினய் மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு சொரிமுத்துவை உள்ளுக்குள் கூப்பிட்டுப் பார்த்தான். அவன் வரவில்லை. இதற்குள் டீ குடிக்கப்போயிருந்த ஓட்டுநரும் நடத்துநரும் வந்துவிட்டார்கள். பயணிகள் பேருந்துக்குள் ஏறத் தொடங்கிவிட்டார்கள்.

‘என்ன? கிடைத்ததா?’ என்று முகமது குட்டி அவசரப்படுத்தினான்.

‘இல்லை. மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு அவன் பேருந்தில் ஏறப் போனபோது, முகமது குட்டி அவனைத் தொட்டு நிறுத்தினான். ‘இதோ பார், எனக்கு அது வேண்டும். உன்னிடம் அது உள்ளது என்று தெரிந்துகொள்ள முடிந்தவனால் உனக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்ளவும் முடியும். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை, பார்த்தாயா?’

இப்போது வினய்க்குக் கோபம் வந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com