60. சபித்தவன்

தகதகவெனப் பணத்தின் செழுமையில் ஒளிர்ந்துகொண்டிருந்த அந்தப் பெரிய, குளிரூட்டப்பட்ட அறையில் நாங்கள் இருவரும் சோபாக்கள், நாற்காலிகளைப் புறக்கணித்துவிட்டு தரையில் கால் நீட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

தனக்கு நடந்தவற்றை வினய் சொல்லிக்கொண்டே வந்தபோது எனக்கொரு சந்தேகம் எழுந்தது. அவனை சன்னியாசியாக்கித் திரிய விடுவதற்காக அண்ணா அவனை சொரிமுத்துச் சித்தனிடம் அனுப்பியிருக்க மாட்டான் என்று நினைத்தேன். வினய்யிடம் ஏதோ ஒரு பிரச்னை இருப்பதாக அவன் நினைத்திருக்க வேண்டும். அதை மட்டும் சரி செய்துவிட்டால், அவன் வாழ்க்கை சிக்கலில்லாமல் போகும் என்று தோன்றியிருக்கும். அவனறிந்த உலகில், அவனறிந்த மனிதர்களில் சொரிமுத்துச் சித்தன் சரியாக இருப்பான் என்று எண்ணியிருப்பான். இவன்தான் அதைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டானோ?

வினய்யிடம் நான் எனக்குத் தோன்றியதைச் சொன்னபோது, ‘இல்லே விமல். சன்யாசம் என் விதி’ என்று சொன்னான்.

‘யாரு சொன்னது?’

‘சொரிமுத்து. எனக்கு மட்டுமில்லே. நம்ம நாலு பேருக்குமே அதுதான் விதி. நாம யாரும் வீடு தங்கப் பொறக்கலை.’

‘அவனுக்கு எப்படி தெரியுமாம்?’

அப்போதுதான் அவன் அந்தச் சுவடியைப் பற்றிச் சொன்னான். அண்ணா வைத்திருந்த சுவடி. அது ஒரு மருத்துவச் சுவடிதான் என்று வைத்தீஸ்வரன் கோயில் நாடி வல்லுநர் சொல்லிவிட்ட பின்பு வீட்டில் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அது மீண்டும் பரணுக்குச் சென்றதா அல்லது கீழேயே கிடக்கிறதா, அம்மா வெளியில் தூக்கிப் போட்டிருப்பாளா என்றுகூட எனக்குத் தெரியாது. ஓரிரு முறை கேசவன் மாமாவைச் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் அதைக் குறித்துக் கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வேன். எப்படியோ மறந்துவிடும்.

ஆனால் அது மருத்துவச் சுவடியல்ல என்று வினய் சொன்னான். ‘அண்ணா அதை அப்படி மறைச்சி, மாத்தி வெச்சிருக்காண்டா. உண்மைல அது நம்மோட வம்ச சரித்திரம். அதுல ஒரு செய்தி இருக்கு.’

‘என்ன செய்தி?’

‘செய்தியில்லே. ஒரு ரகசியம். ஒரு பயங்கரமான கதை.’

‘நாலு வரி பயங்கரக் கதையா?’

‘நீ நம்பலை இல்லே?’ என்று வினய் கேட்டான்.

நான் எதையும் நம்பவும் நம்ப மறுக்கவும் கூடாதென்ற விரதத்தில் உள்ளதை அவனுக்கு எப்படிப் புரியவைப்பேன்? எத்தகைய அற்புதங்களையும் வெறும் தகவல்களாக்கி உள்ளே போட்டுக்கொள்வதில் ஒரு குரூரமான சந்தோஷம் இருக்கிறது. மிகச் சிறந்ததொரு லௌகீகியால் மட்டுமே அந்த சந்தோஷத்தை நுகர முடியும். நான் புன்னகை செய்தேன். ‘வினய், அது ஒரு பொய். புனைவு. என்னைப் பார். என் உடை மட்டும்தான் காவி. நான் சன்னியாசி இல்லை. மிக நிச்சயமாக நான் எதையும் துறக்கவில்லை’ என்று சொன்னேன்.

‘அப்படியா?’

‘ஆம். என்னிடம் பணம் இருக்கிறது. எங்கெங்கிருந்தோ, யார் யாரோ கொண்டு வந்து தருகிறார்கள். என்னை ஒரு விசையாகக் கருதித் தமக்காகச் செலுத்தும் அரசியல்வாதிகள் என் சௌக்கியத்துக்கு பங்கமின்றிப் பார்த்துக்கொள்கிறார்கள். அழகிய இளம்பெண்கள் பலரை நான் அறிவேன். நான் அவர்களைத் தொடுகிறேன். சுவைக்கிறேன். சுகிக்கிறேன். நான் எதையும் அடக்குவதில்லை. எதையும் விட்டு உதறுவதும் இல்லை.’

அவன் அதிர்ந்து போய்ப் பார்த்தான். ‘நிஜமாவா?’ என்று கேட்டான்.

‘நான் என் சகோதரனிடம் பொய் சொல்லவே மாட்டேன். உண்மையிலேயே நான் ஒரு பரம லௌகீகி. பணம், பெண், புகழ், போதை எதையும் துறக்கவில்லை.’

‘ஆனா வீட்டைத் துறந்தியே?’ என்று வினய் சொன்னான்.

யோசித்துப் பார்த்தால், ஒருவிதத்தில் அது மட்டும்தான் உண்மை. நான் வீட்டைத் துறந்துதான் வந்தேன். ஆனால் யாருடைய நினைவையும் துறக்கவில்லை. இன்றுவரை அம்மாவின் அன்பும் புன்னகையும் எனக்கு நினைவில் இருக்கின்றன. அப்பாவின் வாசனை நினைவில் இருக்கிறது. கேசவன் மாமாவின் பாசம், திருவிடந்தை கோயிலின் தயிர்சாத வாசனை, சித்ராவின் மார்புச் செழுமை.

வினய் வாய்விட்டு உரக்கச் சிரித்தான். ‘ஆனாலும் அநியாயம். அண்ணன் தம்பிகள் மொத்தமாக நாம் அவளை நினைவில் தொட்டுத் தோய்ந்திருக்கிறோம்.’

‘அண்ணாவுமா?’ என்று கேட்டேன்.

‘தெரியலை. ஆனா அதெப்படி இல்லாம இருக்கும்?’ என்று வினய் சொன்னான்.

‘அடுத்த தடவை அவனைப் பாத்தேன்னா மறக்காம கேளு’ என்று சொன்னேன்.

‘ஏன் நீயே கேக்கலாமே?’

‘நான் பாக்க மாட்டேன்.’

‘ஏன்?’

‘ஏனோ? எனக்கு அப்படித்தான் தோணறது. என்னிக்கும் நான் அவனைப் பார்க்கப் போறதில்லை.’

அன்றைக்கு ஶ்ரீரங்கப்பட்டணத்து முன்னாள் நடிகரும் அரசியல்வாதியுமான பிரமுகரை நான் பார்க்க முடியவில்லை. மிகவும் நேரமாகிவிட்டபடியால் மறுநாள் வந்து பார்ப்பதாகத் தகவல் மட்டும் அனுப்பிவிட்டு ஓட்டலுக்குத் திரும்பிவிட்டேன். மிருதுளாவின் அப்பாவுக்குத் தீராத வியப்பு. என் சகோதரனும் ஒரு சன்னியாசி என்பதை அவரால் நம்பவே முடியவில்லை. நான் அவருக்கு வினய்யை அறிமுகம் செய்து வைத்தேன். அவனை மிகவும் கட்டாயப்படுத்தித்தான் நான் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்ல முடிந்தது. அவன் மிகவும் யோசித்தான். வேண்டாமே என்று மறுத்துப் பார்த்தான்.

‘எல்லாம் பரவால்ல வா’ என்று சொன்னேன்.

‘இல்லே. நான் அந்த மாதிரி இடத்துல எல்லாம் தங்கறதில்லே.’

‘ஏன், தங்கினா விரதம் கெட்டுடுமா? ஒரு இடம் உன்னை மாத்தும்னா அப்பறம் அது என்ன பெரிய சன்னியாசம்?’

‘இடம் இல்லை. சொகுசு’ என்று வினய் சொன்னான்.

‘எல்லாம் பரவாயில்லை. நான் கட்டிலில் படுத்துக்கறேன். நீ தரையில் படு’ என்று சொல்லித்தான் அழைத்துப் போனேன். அன்று இரவு முழுதும் நாங்கள் தூங்கவில்லை. அவன் துறந்தவன் என்பதையே மறந்து, என்னிடம் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தான். சில சமயம் அவன் என்னைச் சகோதரனாக எண்ணிப் பேசுவதுபோலத் தோன்றும். சட்டென்று நான் கவனிக்காத கணத்தில் அவன் பொதுவில் யாருடனோ பேசுவதுபோலப் பேசினான். எனக்கு இரண்டுமே பரவாயில்லை என்றுதான் தோன்றியது. இரவு பதினொரு மணி வரை நாங்கள் சாப்பிட மறந்து பேசிக்கொண்டே இருந்தோம். சட்டென்று நாந்தான் கேட்டேன். ‘டேய் உனக்குப் பசிக்குமே? எதாவது ஆர்டர் பண்ணவா?’

‘வேண்டாம்’ என்று வினய் சொன்னான்.

‘இல்லை. இங்க சாப்பாடு நன்னாருக்கு. சிம்பிளா எதாவது சொல்றேனே?’

வேண்டவே வேண்டாம் என்று அவன் மறுத்துவிட்டான். நான் எனக்கு மட்டும் நான்கு சப்பாத்திகளும் ஒரு பருப்புக் கூட்டும் வரவழைத்து உண்டேன். தகதகவெனப் பணத்தின் செழுமையில் ஒளிர்ந்துகொண்டிருந்த அந்தப் பெரிய, குளிரூட்டப்பட்ட அறையில் நாங்கள் இருவரும் சோபாக்கள், நாற்காலிகளைப் புறக்கணித்துவிட்டு தரையில் கால் நீட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

வினய் அந்த ஓலைச் சுவடியைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தான். அண்ணாவின் சுவடி. சொரிமுத்து அவனுக்கு அந்தச் சுவடியைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். பாரத தேசத்தில் இதுவரை ஆறு பேர் வீடுகளில் இம்மாதிரி நடந்திருக்கிறது. பிறக்கிற பிள்ளைகள் அத்தனை பேரும் துறவு கொண்டு போகிற சம்பவம்.

‘யாரந்த ஆறு பேர்?’ என்று கேட்டேன்.

‘அது அவன் சொல்லவில்லை. ஒரிசாவில் ஒரு குடும்பத்தைச் சொன்னான். ஜம்முவில் ஒரு குடும்பம். தமிழ்நாட்டிலேயே இன்னொரு குடும்பம் இருக்கிறதாம். ராமேஸ்வரத்தில் என்று சொன்னான்.’

‘பிறகு?’

‘ராஜஸ்தானில் ஒன்று. அருணாசல பிரதேசத்தில் ஒன்று.’

எனக்கு அந்தக் கதை சுவாரசியமாக இருந்தது. அது ஒரு குல சாபம் என்று வினய்யிடம் சொரிமுத்து சொல்லியிருக்கிறான். என் அம்மாவின் பாட்டனாருக்கு இடப்பட்ட சாபம். சாபமிட்ட முனிபுங்கவர் யாராக இருப்பார்? அது தெரியவில்லை. ஆனால் சாபம்தான். உன் வம்சத்தில் ஆண் குழந்தைகள் பிறக்காது. பிறந்தால் ஒரே குடும்பத்தில் மொத்தமாகப் பிறக்கும். மொத்தமாக அவை சன்னியாசம் பெற்றுச் சென்றுவிடும்.

‘இதுதான் அந்த ஓலைச்சுவடியில் இருந்ததா?’

‘ஆம்’ என்று வினய் சொன்னான்.

‘நீ இப்படியொரு முட்டாளாக இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை வினய். ஒரே குடும்பத்தில் மொத்தமாகப் பிறக்கும் ஆண் குழந்தைகள் சன்னியாசியாகும் என்றால், கேசவன் மாமா எந்தக் குடும்பத்தில் பிறந்தார்? அவர் ஏன் இன்னும் வீட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறார்?’

அவன் கணப்பொழுதும் சிந்திக்கவில்லை. ‘மாமா நம்ம தாத்தாவுக்குப் பொறக்கலை’ என்று சொன்னான்.

நான் சட்டென்று எழுந்துவிட்டேன்.

‘நம்ப முடியலை இல்லியா? ஆனா அதுதான் உண்மை. இது அம்மாவுக்கே தெரியாது.’

‘ஓ, மாமாவுக்குத் தெரியுமா?’

‘தெரியாது.’

‘சொரிமுத்துவுக்கு மட்டும்தான் தெரியுமா?’

‘அண்ணாவுக்குத் தெரியும்னு சொரிமுத்து சொன்னான்.’

சில விநாடிகள் நான் மாமாவைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். பெரிய அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஆனாலும் சிறிது வருத்தமாக இருந்தது. கேசவன் மாமாவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவிதமான ஆக்ரோஷப் பாசம் அவருடையது. தனது அக்காவின் குடும்பத்துக்காகத் தன்னை உருக்கி ஊற்றிக்கொண்டிருக்கிற மனிதர். ஒருக் கணமும் அவர் அம்மாவைப் பிரிந்ததே இல்லை.

மடிகேரியில் நான் இருக்கிற விவரம் அறிந்து முதல் முதலில் அவர் என்னைக் காண வந்தபோது ஒன்று சொன்னார். ‘பெத்த தாயைவிட எதுவும் பெரிசில்லே. சன்யாசம், ஞானம், தெய்வம் உள்பட.’

நான் தெய்வத்தையோ சன்னியாசத்தையோ பெரிதாக எண்ணுபவனல்ல என்பதை எப்படி அவருக்குப் புரியவைப்பது என்று யோசித்தேன். புரியும் என்று தோன்றவில்லை. லௌகீகம்தான் சரி என்று எண்ணுபவன் வீட்டுக்கு வந்து தொலைத்தால் என்னவென்று கேட்டுவிடுவார். நியாயமான கேள்விதான். ஆனால் என் தடுப்புச் சுவர்களை நான் மெல்ல மெல்ல நகர்த்திக்கொண்டே போய்க்கொண்டிருந்தேன். எல்லைகளற்ற உலகம் என ஒன்றில்லை. ஆனால் என் எல்லைக் கற்களை என்னால் நகர்த்தி வைக்க முடியும். அதன் தேவையும் முக்கியத்துவமும் மாமாவுக்குப் புரிய வாய்ப்பில்லை.

‘மாமா, அம்மான்றவ ஒருத்தி இல்லே. உறவுங்கறது நாலஞ்சு பேரோட முடியறதும் இல்லே.’

‘இருந்துட்டுப் போகட்டுமே? அவ அழுகைய விடவாடா உன் ஞானம் பெரிசு?’ என்று குழந்தை போலக் கேட்டார்.

ஞானமா! நான் அதன் கோரப் பிடியில் இருந்து என்னை முற்றிலுமாக விடுவித்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருப்பவன் அல்லவா? என்ன சொன்னால் இவர் சமாதானம் ஆவார் என்று யோசித்தேன். இறுதியில், ‘நான் தமிழ்நாட்டுக்குக் கூடிய சீக்கிரம் வருவேன். அப்ப உங்காத்துக்குக் கண்டிப்பா ஒரு நடை வரேன்’ என்று சொன்னேன்.

மாமா அதிர்ந்துபோனார். ‘எங்காமா!’ என்று திரும்பத் திரும்பக் கேட்டார். அவரை எழுந்து போகவைக்க எனக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. சீ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

வினய்யிடம் இதனைச் சொன்னேன். ‘பாவம் மனிதர்’ என்று வருத்தப்பட்டான்.

‘அவர் தாத்தாவுக்குப் பொறக்கலைன்னு எப்பவாவது அவர்கிட்டே நீ சொல்லுவியா?’ என்று கேட்டேன்.

‘அவசியமில்லைன்னு நினைக்கறேன். அவசியப்பட்டா அண்ணா சொல்லிப்பான்.’

இப்போது நான் வெடித்துச் சிரித்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com