56. எடுத்தலும் வைத்தலும்

கண்ணுக்குத் தெரியாத உலகில் உலவுகிற ஜீவராசிகள் அவன் சொல்பேச்சு கேட்கின்றன. ஒரு ஜீவனுக்கோ, ஒன்றுக்கு மேற்பட்ட ஜீவன்களுக்கோ அவன் மேய்ப்பனாக இருக்கிறான். அவ்வளவுதான்.

பரிசல் கரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. மழை பெய்ய ஆரம்பித்தால் பரிசலைத் திருப்பிவிட வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் யாரோ சொல்லியிருக்க வேண்டும். நான் பரிசல்காரனிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தும் அவன் அதற்குமேல் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டிருக்க முடியாது என்று சொல்லிவிட்டான். இரண்டு சன்னியாசிகளின் பாதுகாப்பு அவனுக்கு மிகவும் முக்கியம். மழையில் நனைந்து ஜலதோஷம் பிடித்துக்கொண்டால் உட்கார வைத்துத் தைலம் தேய்த்துவிட எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எனக்குச் சற்று எரிச்சலாக இருந்தாலும் அடக்கிக்கொண்டேன். சரி, எவ்வளவு நேரம்தான் நீர்ப்பரப்பில் அலைந்துகொண்டே இருப்பது? கரை ஏறித்தான் தீரவேண்டும்.

ஆனால் வினய்க்கு இன்னும் சிறிது நேரம் இருக்கலாம் என்று தோன்றியது. அவனும் பரிசல்காரனிடம் கெஞ்சிப் பார்த்தான். மழை விட்டதும் மீண்டும் வரலாம் என்று அவன் சொன்னான்.

‘விடு வினய். நாம் கரையிலேயே அமர்ந்து பேசுவோம். என்ன இப்போது?’ என்று நான் சொன்னேன்.

எனக்கு அவன் குளத்துக்கு அடியில் பயணம் மேற்கொண்டு கானகத்தை அடைந்த கதையைச் சொன்னபோதே புரிந்துவிட்டது. அண்ணா அவனுக்கு என்ன செய்திருக்கிறான் என்று தெரிந்துவிட்டபடியால் அதன்பின் அக்கதையில் எனக்குப் பெரிய ஆர்வம் உண்டாகவில்லை.

‘இரு. எப்படியும் நீ அந்த வாலாஜாபாத் கிழவி வீட்டில்தான் திரும்பக் கண் விழித்திருப்பாய். சரியா?’ என்று கேட்டேன்.

‘அதுதாண்டா எனக்கு ஆச்சரியம். கண் விழிச்சது அங்கேதான். ஆனா தொப்பலா நனைஞ்சிருந்தேனே?’

‘அவன் உம்மேல ஒரு குடம் தண்ணி ஊத்தியிருப்பான்’ என்று சொன்னேன். ‘இல்லேன்னா அந்தளவுக்கு வியர்க்க வெச்சிருப்பான்.’

‘வெறும் கனவுதான்னு சொல்றியா?’

‘கனவுதான். ஆனா தானா வந்ததில்லே. உன் கனவை அவன் எழுதியிருக்கான்.’

‘முடியுமா விமல்?’

‘ஏன் முடியாது? முழிச்சிண்டிருக்கறப்போ சொல்லிக்குடுக்கறதெல்லாம் மனசுல போய் உக்கார்றது இல்லியா? அதையேதான் அவன் கனவுல செஞ்சிருக்கான்.’

‘புரியலை.’

‘குழந்தை தூங்கறபோது அதோட கை கால் அகண்டிருந்தா அம்மா பார்த்து சரி பண்ணி படுக்க வெப்பாளே.. அந்த மாதிரி. உன் கனவு உன்னை இழுத்துண்டு போறப்போ, அதைத் தடுத்து நிறுத்திட்டு அவன் ஒரு கனவை அங்கே விதையாட்டம் தூவிட்டுப் போயிடுவான்.’

‘பயங்கரம்!’ என்றான் வினய். ‘ஆனா அன்னிக்கு நான் அவன் சொன்னதைக் கேட்டேன் விமல். என்னைத் திருவானைக்காவுக்குப் போகச் சொன்னான். சொரிமுத்து சித்தனைப் போய் பார்க்கச் சொன்னான்.’

‘அதைவிடு. குளத்துக்கு அடியிலே நீ கபிலரைப் பார்த்தியா?’

அவன் சில விநாடிகள் அமைதியாக இருந்தான். பிறகு, ‘ஆமா. பாத்தேன்’ என்று சொன்னான்.

‘எப்படி இருந்தார்?’

‘ஜடாமுடி இருந்தது. தாடி இருந்தது. நெத்தியிலே கோபி சந்தனம் வெச்சிண்டிருந்தார். ஆனா காவி இல்லே. வேட்டி பழுப்பா இருந்தது. கண்ணுக்கு நடுவிலே கருமணியே இல்லை.’

‘அதைவிடு. ஆன வயசுக்கு உதிர்ந்திருக்கும்’ என்று சொன்னேன். சிரித்தான்.

‘என்னமோ பண்ணிட்டாண்டா. நான் அப்படி மாறுவேன்னு நினைக்கவேயில்லை. அந்த கபிலர் என்னைத் தொட்டார். அது நிச்சயம். அவரோட இடது கை ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு என் உச்சந்தலை மேலதான் இருந்தது. கண்ணை மூடி என்னமோ சொன்னார். சொல்லிண்டே இருந்தார். அவர் முடிச்சிட்டு கைய எடுத்தப்போ எனக்கு வீடு, அப்பா அம்மா எல்லாம் மறந்துபோச்சு விமல். உடனே போயிடணும்னு தோணிடுத்து.’

‘எங்கே?’

‘தெரியலே.. எங்கயாவது போயிடணும். இமயமலைக்கா, வேற எங்கயாவதான்னு அப்ப எனக்கு நினைக்க முடியலை. ஆனா நான் வீட்டுக்கு சொந்தமானவன் இல்லைன்னு தோணிடுத்து.’

நான் சட்டென்று கேட்டேன். ‘சித்ராவையும் உதறிவிட்டா?’

அவன் என்னை உற்றுப் பார்த்தான். ‘நீ சித்ராவை மறக்கவேயில்லை’ என்று சொன்னான்.

நான் எப்படி மறப்பேன்? எதற்காக நான் எதையும் மறக்க வேண்டும்? நான் நினைவுகளின் முத்துச் சிமிழ். என் சிமிழுக்குள் பல்லாயிரம் கோடி நினைவுகளை நான் சேமித்துக்கொண்டே இருக்கிறேன். தேவைப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரியான நினைவுகளைச் சிப்பி திறந்து வெளியே எடுத்து விரிக்கிறேன். வண்ணமயமான அதன் மேற்புறத்தில் லாவாக்கள் நீந்திக்கொண்டிருக்கும். நானும் என் நினைவுகளும். என்றைக்குமே நான் அவற்றை உதறியதில்லை. உதற விரும்பியதும் இல்லை.

‘ஆனால் சொரிமுத்துச் சித்தன் என்னிடம் முதலில் சொன்ன வார்த்தையே, நிர்வாணம்தான்!’ என்று வினய் சொன்னான்.

‘எனக்குத் தெரியும் வினய். சாத்தியமில்லாதவற்றை சாத்தியப்படுத்த முயற்சி செய்யும் துறையில் அவர்கள் இயங்குகிறார்கள். இறுதியில் இது சாத்தியமில்லை என்று சொல்லிக் கையெழுத்திட்டுவிட்டுப் போய்விடுவார்கள். சேரும் இடமல்ல. பயணம்தான் அவர்களுக்குப் பெரிது.’

‘அண்ணா சென்றடைய மாட்டான் என்கிறாயா?’

‘வாய்ப்பே இல்லை.’

‘எப்படி இத்தனைத் தீர்மானமாகச் சொல்கிறாய்? அவனுக்கு என்னென்ன வித்தைகள் தெரிந்திருக்கின்றன தெரியுமா?’

நான் சிரித்தேன். ‘ஒரு வித்தைக்காரனாவதா சாதனை?’

‘இல்லையா? வித்தை என்ற சொல்லை மலினமாக எண்ணாதே. வாலாஜாபாத்தில் இருந்து கணப் பொழுதில் நான் திருவானைக்கா போய்ச் சேர்ந்தேன். அது கனவல்ல. நிஜத்தில் நடந்தது’ என்று வினய் சொன்னான்.

‘அப்படியா? எனக்கென்னவோ நீ வாலாஜாபாத்துக்கே போகவில்லை என்றுதான் தோன்றுகிறது.’

‘ஆனால் நான் சொரிமுத்துவைப் பார்த்தேனே? அவனோடு ஆறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன்!’

‘இதோ பார் வினய். கண்ணுக்குத் தெரியாத உலகில் உலவுகிற ஜீவராசிகள் அவன் சொல்பேச்சு கேட்கின்றன. ஒரு ஜீவனுக்கோ, ஒன்றுக்கு மேற்பட்ட ஜீவன்களுக்கோ அவன் மேய்ப்பனாக இருக்கிறான். அவ்வளவுதான். இதை என்னால் ஒரு சாதனையாக எண்ணக்கூட முடியாது.‘

வினய் வெகுநேரம் அமைதியாக இருந்தான். மழை விட்டிருந்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. ஏனோ எங்களுக்கு மீண்டும் நீருக்குள் செல்லத் தோன்றவில்லை. கேட்டிருந்தால் அந்தப் பரிசல்காரன் எங்களை மீண்டும் நதியில் அழைத்துச் சென்றிருப்பான். நாங்கள் கேட்கவில்லை. கரையிலேயே ஒரு பாறையின் மீது அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.

வினய், சொரிமுத்துச் சித்தனிடம் போய்ச் சேர்ந்த கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான். முதல் முதலில் அவனைக் கண்டபோது தனக்கு அருவருப்பாக இருந்ததாக வினய் சொன்னான்.

‘அவன் கிட்டேயே போக முடியாது. அப்படியொரு நாற்றம்’

‘அவன் வியாதிகளைத் தீர்ப்பவன்’ என்று நான் சொன்னேன்.

‘ஆம். உனக்கு அது தெரியுமா?’

‘யூகம்தான். வியாதிகளை அவன் துர்நாற்றமாக உருமாற்றித் தன் மீது பூசிக்கொண்டுவிடுகிறான். அவனைப்போலப் பல பேர் உண்டு. திருவண்ணாமலையில் நானும் ஓரிரண்டு பேரை அப்படிச் சந்தித்திருக்கிறேன்.’

‘ஆம். அவன் ஒரு மருத்துவன். நம்ப முடியாத மருத்துவன். ஒரு கேன்சர் நோயாளியை அவன் குணமாக்கியதை நேரில் பார்த்தேன். அன்றுதான் என் மானசீகத்தில் அவனுக்கு நான் சீடனானேன்’ என்று வினய் சொன்னான்.

‘என்ன செய்தான்?’

வினய் அந்தக் கதையை எனக்குச் சொன்னான். சமயபுரத்துக்கு அருகே வசித்து வந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி அவன். அவனுக்குப் புற்று நோய் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். சென்னை கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் அட்மிட் ஆகச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். தோராயமாக என்ன செலவாகும் என்று தெரியாத நிலையில், இருக்கும்வரை வாழ்ந்துவிட்டு, முடியும்போது இறந்துவிடலாம் என்று அவன் முடிவு செய்திருக்கிறான். ஆனால் வலி பொறுக்காமல் போனபோது கதறிவிட்டிருக்கிறான். வீட்டுக்கு விவரம் தெரிந்து யாரோ சித்த வைத்தியரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். வந்த மரியாதைக்கு அவர் ஏதோ சூரணத்தைக் கொடுத்துவிட்டு, திருவானைக்கா சித்தனைப் போய்ப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

மறுவாரம் வெள்ளிக்கிழமை அன்று காலை எட்டு மணிக்கு அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி சொரிமுத்துவின் வீட்டுக்கு வந்தான். அவனை அவனது மனைவி அழைத்து வந்திருந்தாள். சொரிமுத்து அப்போது வீட்டுக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்து தேங்காய் உரித்துக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் என்னவென்று விசாரித்தான். செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மனைவி விவரத்தைச் சொல்லி அழுதாள்.

‘சாமி நீங்க யாருன்னு எங்களுக்குத் தெரியாது. வைத்தியருங்களா? உங்கள போய் பாக்கச் சொல்லி தென்னூர் கண்ணபிரான் வைத்தியர் சொன்னாருங்க’ என்று சொன்னாள்.

சொரிமுத்து அவனை வீட்டுக்குள் வரச் சொல்லிவிட்டு எழுந்து உள்ளே போனான். அவன் பின்னால் சென்றபோது, ‘வெளிய ஒரு காய் உரிச்சேன் பாரு. அதக் கொண்டு வா’ என்று சொன்னான்.

அவனும் பதில் பேசாமல் மீண்டும் வெளியே வந்து அவன் உரித்து வைத்திருந்த தேங்காயை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். வினய் அப்போது வீட்டுக்குள் சொரிமுத்துவுக்குக் காலை உணவைச் சமைத்துக்கொண்டிருந்தான். நொய்க் கஞ்சி. வீட்டுக்கு யார் புதிதாக வந்திருப்பது என்று வினய் திரும்பிப் பார்த்தான். ‘சீக்கிரம் கஞ்சி ஆவட்டும்’ என்று சொரிமுத்து சொன்னான். வந்தவனை உட்காரவைத்து, அவன் எதிர்பாராத கணத்தில் அவன் தலையில் முட்டி தேங்காயை உடைத்தான். அவன் திடுக்கிட்டு ஆவென்று அலற, ‘சத்தம் போடாம இரு’ என்று சொன்னான்.

அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கும் அவன் மனைவிக்கும் அங்கே என்ன நடக்கிறது என்று புரியவில்லை. சொரிமுத்துவை ஒரு சித்தன் என்று அவர்களால் நினைக்க முடியவில்லை. கண்ணபிரான் வைத்தியரைவிடப் பெரிய வைத்தியராக இருக்கும் என்று எண்ணித்தான் அவர்கள் அங்கே வந்திருந்தார்கள். ஆனால் இதென்ன? அழுக்கு வேட்டியும் பரட்டைத் தலையுமாக ஒரு மொடாக்குடிகாரனின் தோற்றத்தில் கண் சிவந்து இருக்கிறானே இவன்?

வினய் கஞ்சியை இறக்கி வேறொரு பாத்திரத்தில் கொட்டித் தாளித்து ஒரு குவளையில் எடுத்துவந்து சொரிமுத்துவின் அருகே வைத்தான். அது சூடாக இருந்தது. ஆவி பறந்தது. சிறிது நேரம் அதைக் கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்த சொரிமுத்து, அதை அந்த செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் கொடுத்து, ‘ஒரே மூச்சுல குடி’ என்று சொன்னான். அவன் தயங்கினான்.

‘குடின்னு சொல்றேன்ல?’

அச்சத்தில் அவன் சட்டென்று அந்தக் கஞ்சியைக் குடித்துவிட்டான். குடிக்கும்போதே ஆஊ என்று சூடு தாங்கமாட்டாமல் அலறினான். என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் மனைவி திகைத்துப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ‘தொண்டைக்குள்ள விரலவிட்டு வாந்தி எடு’ என்று சொரிமுத்து சொன்னான். இப்போது வினய் அவன் அருகே வந்து நின்றுகொண்டான்.

‘என்ன சாமி?’

‘வாந்தி எடுடா’ என்று சொரிமுத்து மீண்டும் சொன்னான். மாட்டிக்கொண்டோமே என்று அவன் நினைத்திருப்பான். வேறு வழியின்றி தொண்டைக்குள் நடுவிரலை விட்டு வாந்தியெடுக்க முயற்சி செய்தான்.

‘நல்லா... நல்லா குடைஞ்சி எடு’ என்று சொரிமுத்து மீண்டும் சொன்னான்.

நான்கைந்து முறை அவன் முயற்சி செய்தபிறகு அவனுக்கு வாந்தி வந்தது. அவன் ஓக்காளமிட்டு வாந்தி எடுக்கத் தொடங்கியபோது சட்டென்று சொரிமுத்து, அவன் தலையில் அடித்து உடைத்த தேங்காயில் அதை ஏந்திக்கொண்டான். இரண்டு மூடிகள் நிறைய, அவன் எடுத்த வாந்தி.

‘சரியாப் போச்சி. நீ போவலாம்’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘சாமி?’

‘எந்திரிச்சிப் போடா. ஒனக்கு ஒண்ணுமில்லை’ என்று அவன் மீண்டும் சொன்னதும், விட்டால் போதும் என்று அவன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு கிளம்பிப் போய்விட்டான்.

சில நிமிடங்கள் சொரிமுத்து தன் கையில் வைத்திருந்த, அவன் எடுத்த வாந்தியை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். சட்டென்று அதைத் தான் எடுத்துக் குடித்தான்.

வினய் ஆடிப் போய்விட்டான். ‘என்ன பண்றிங்க?’ என்று கேட்டான்.

‘விட்றா. மருத்துவம் பாக்கப் பணமில்லாதவன். அவன் சம்சாரத்த பாத்தியா? தலைல அடிச்சிக் கையில குடுத்தா வாங்கிக்குவா. அவ்ளோ சாது. அப்பா அம்மா இல்லே. ஒரே ஒரு பொட்டப் புள்ள. பொழைக்கவெக்க வேணாமா?’

‘அதனால?’

‘அவன் புத்துநோயை நான் எடுத்துக்கிட்டேன்.’

‘ஐயோ!’ என்று வினய் அலறினான்.

‘கூவாத. நாஞ்சாவ மாட்டேன். இன்னொருத்தனுக்கு இது இப்ப தேவைப்படுது. அவனுக்குக் குடுக்கற வரைக்கும் என்கிட்ட இருக்கும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com