52. வாசனை

என் வழி வேறு. நான் பூரணமான லௌகீகம் கடைப்பிடிப்பவன். என் சூட்சுமங்கள் வேறு. என் கணித வரிசை வேறு.

எனக்குப் புரிந்தது. அது நிகழ வேண்டுமென்று முன்னெப்போதோ விதிக்கப்பட்டிருந்தது. ஓடிப்போய் பேருந்தில் ஏறி இடம் பிடிக்க சாமர்த்தியம் இல்லாதவனுக்காக இன்னொருவன் ஏறி அமர்ந்து இடம் தேடிக் கொடுப்பதை நிகர்த்ததுதான். எந்தப் பதற்றமும் அவசரமும் இன்றித் தன் தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்ட ஊழிற் பெருவலி வேறில்லை. ஆனால் எனக்குத் தீராத வருத்தம் அண்ணாவின் மீதுதான். இதென்ன கண்ணாமூச்சியாட்டம்? அவனைத் தேடி எங்கெங்கோ நாயைப்போல் அலைந்தவன் நான். பெரிய நோக்கங்கள் பிற்காலத்தில் இல்லாது போய்விட்டாலும், ஏனோ அவனைக் குறித்த செய்தி ஏதாவது காதில் விழும்போதெல்லாம் என்னையறியாமல் தேடிக் கிளம்பிவிடுபவனாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவன் தனது இருப்பின் மிச்சங்களை எனக்காக வைத்துச் செல்பவனாகவே இருந்திருக்கிறான். தன்னையல்ல. தன் ஸ்தூலத்தையல்ல. தன் நினைவுகளை மட்டும். சில சம்பவங்களை மட்டும். ஒரு சமயம் தன் வாசனையை அவன் எனக்காக வைத்துவிட்டுப்போனதும் நிகழ்ந்தது.

அதைச் சொல்ல வேண்டும். சிறு வயதில் அம்மா அடிக்கடி அவனிடம் குறைப்பட்டுக்கொள்ளும் சங்கதி ஒன்றுண்டு. அது அவன் ஒழுங்காகத் தேய்த்துக் குளிப்பதில்லை என்பது. எனக்குத் தெரிந்து அவன் குளியலறைக்குச் சென்றால் அரை மணி நேரத்துக்கு முன்பாக வெளியே வந்ததேயில்லை. ஆனால் உள்ளே அவன் குளிக்கத்தான் செய்தானா என்று தெரியாது. ஒருவேளை அந்தத் தனிமையை உதறிப் போர்த்திக்கொண்டு தியானத்தில் உட்கார்ந்திருக்கலாம். அல்லது தாழிட்ட அறையின் சௌகரியத்தைப் பயன்படுத்திக்கொண்டு வேறு ஏதேனும் யோகாப்பியாசங்கள் செய்து பார்த்திருக்கலாம். எப்படியாயினும் அவன் வெளியே வர அரை மணி நேரமாகும். ஆனாலும் அவனது ஆடையைத் துவைக்க எடுத்துச் செல்லும்போதெல்லாம் அம்மா சொல்லுவாள், ‘என்ன நாத்தம்! அழுகின தேங்கா மாதிரி. எங்கேருந்துடா உன் சட்டையெல்லாம் இப்படி நார்றது? ஒழுங்கா தேய்ச்சிக் குளி விஜய். இல்லேன்னா சொறி சிரங்குதான் வரும்.’

அண்ணாவின் வியர்வை நெடி அழுகிய தேங்காயின் நெடியைப் போலத்தான் இருக்கும். அவன் ஓடியாடி எதையும் செய்யாமல் வெறுமனே உட்கார்ந்திருக்கும்போதும் சமயத்தில் அந்த நெடியை உணர்ந்திருக்கிறேன். மிகவும் நெருங்கிச் சென்றால் தெரியும். இதை நான் இப்போது நினைவுகூர ஒரு காரணம் இருக்கிறது. வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அண்ணாவை நெருங்கித் தொட்டபோது அவன் மீது பச்சைக் கற்பூர நெடி அடித்ததாக வினய் என்னிடம் அப்போது சொன்னான். ‘இல்லையே, அவனது வாசனை அழுகிய தேங்காயின் வாசனை அல்லவா?’ என்று நான் கேட்டேன்.

‘அதென்னமோ தெரியலை. ஆனா நான் பிடிச்சி உலுக்கினப்போ பச்சைக் கற்பூர வாசனைதான் அடிச்சிது. அவன் இருந்த கோலத்துக்கும் அந்த அழுக்குக்கும் மூஞ்சில வழிஞ்ச எண்ணெய்க்கும் சம்மந்தமே இல்லாத நெடி.’

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஒரு சமயம். அது ஒரு மோசமான வெயில் காலம். மோசமென்றால் கண் இமை, நகக்கண்களெல்லாம் எரிகிற அளவுக்குக் கொளுத்தி எடுத்துக்கொண்டிருந்த வெயில். நான் அப்போது பீகாரில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தேன். ஆறு சொற்பொழிவுகள். இரண்டு முக்கியமான அரசியல் சந்திப்புகள். சொற்பொழிவுகள் பொதுமக்களுக்காக. சந்திப்பு தனிப்பட்ட சங்கதி. எனக்கு அப்போது ஒரு பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது. தேசிய அளவில் ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த ஒரு பிரகஸ்பதியைச் சற்று அடக்கிவைக்கிற பொறுப்பு.

‘எதையாவது செய்யுங்கள். எதைச் சொன்னால் அவன் வாலைச் சுருட்டிக்கொள்வான் என்று பாருங்கள். அதிகம் வேண்டாம். மூன்று மாதங்களுக்குப் போதும். நாட்டில் என்ன நிகழ்ந்தாலும் அவன் வாய் திறக்கக் கூடாது. மூன்று மாதங்களுக்கு அவன் நாட்டிலேயே இல்லாதிருக்கும்படிச் செய்தாலும் நல்லது’ என்று ஒரு அரசியல் தலைவர் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார். உருண்டு நகர்ந்த வருடங்களில், அம்மாதிரியான சிறு உதவிகள் பலவற்றை நான் பலபேருக்குச் செய்யத் தொடங்கியிருந்தேன். மந்திர தந்திரங்களெல்லாம் என்னிடத்தில் கிடையாது. கடவுள் கிடையாது. ஒன்றும் கிடையாது. நான் ஒரு சக்தி. நான் ஒரு விசை. என் பார்வையும் என் சொற்களும் எனக்காகப் பேசும். நான் நினைப்பதை அது சாதித்துத் தரும். ஒரு சில சொற்களில் எதிராளியின் வைராக்கியங்களைத் தகர்க்கத் தெரிந்தவனாக நான் மாறியிருந்தேன். அரசியலில் இருப்பவர்களுக்கு இந்தத் தோரணை அத்தனை எளிதில் பிடிபடாது. பிடிபடாதவற்றின் மீதான கவர்ச்சி மட்டும் நிரந்தரமாகத் தொக்கி நிற்கும் பிராந்தியம் அது.

நான் பீகாருக்குப் போனதன் முக்கியக் காரணம், அந்தக் குறிப்பிட்ட ஆசாமி அப்போது அங்கே முகாமிட்டிருந்ததுதான். அவன் நேரடி அரசியல்வாதி இல்லை. அரசியல் தொடர்பற்றவன் என்றும் சொல்லிவிட முடியாது. பெரும் பணக்காரன். வெளிப்பார்வைக்குத் தெரியும்விதமாக நான்கைந்து வர்த்தகங்களும், யாருக்குமே தெரியாத மேலும் நான்கைந்து வர்த்தகங்களும் அவனுக்கு இருப்பதாகச் சொன்னார்கள். அதில் மிக முக்கியமானது, ரஷ்ய எல்லையோரம் அவனுக்கு இருந்த ஒரு தாமிரச் சுரங்கம். அவன் பெயரோ, அவனது உறவினர்கள், நண்பர்கள் பெயரோ அந்த சுரங்க நிறுவனத்தின் பேரேடுகளில் இருக்காது. மகாகனம் பொருந்திய கொன்ஸ்டண்டின் செனங்கோ அமரராகி மிகைல் கோர்பசேவ் அப்போதுதான் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருந்தார். ஜாதகம் பார்க்காத, கிரக நிலை கவனிக்காத தேசம். சரியான கண்டச் சனி பிடித்திருந்த தருணத்தில் வந்து சேர்ந்திருக்கிறாரே என்று விவரமறிந்தவர்கள் கவலைப்பட்டார்கள். பதவிக்கு வந்த முதல் சில வருடங்களில் அவர் எந்த வெளியாட்களையும் சந்திக்கவேயில்லை. எனக்குத் தெரிந்து அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டுக்காரன் அந்தத் தாமிரச் சுரங்க முதலாளிதான். எதற்கு அந்தச் சந்திப்பு, என்ன பேசினார்கள், என்ன நிகழ்ந்தது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் சோவியத்து ரஷ்யா சிதறி உருண்டோடிய காலத்தில்கூட அவனது சுபிட்சத்துக்குக் குறைவேதும் வரவில்லை.

நான் அவனை பத்மா நதியில் மிதந்துகொண்டிருந்த ஒரு படகு இல்லத்தில் சந்திப்பதாக இருந்தேன். ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்த நிலையில், ஓரிரவு முழுவதையும் அவனோடு படகு இல்லத்தில் செலவிட ஆயத்தமாகி நான் நதிக்கரையை அடைந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னோடு ஆற்றங்கரைவரை வந்திருந்தார். கிளம்பும்போதுகூடச் சொன்னார், ‘அவன் என்ன கேட்டாலும் ஒப்புக்கொள்ளுங்கள். இது மிகவும் சிக்கலான தருணம். அவனது இருப்பு சிக்கல்களை மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாது.’

அந்த விவகாரத்தை நான் முழுதும் சொல்லுவதற்கில்லை. ஒருவேளை தேவைப்பட்டால் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இங்கே நான் முக்கியமாகச் சொல்ல நினைத்தது நான் அந்தப் படகு இல்லத்துக்குள் நுழைந்தக் கணம்.

உள்ளே காலெடுத்து வைத்ததுமே எனக்கு அந்த வாடை முகம் சுளிக்கவைத்தது. அழுகிய தேங்காயின் வாடை. வெகு இயல்பாக நான் அண்ணாவை அப்போது நினைத்துக்கொண்டேன். ஆனால் ஒரு படகு இல்லத்தை வாடகைக்கு எடுத்து அவன் உல்லாசம் அனுபவித்திருப்பான் என்று தோன்றவில்லை. ஒருவேளை அந்தத் தாமிர முதலாளியைச் சந்திக்க வந்திருப்பானோ? எப்படி யோசித்துப் பார்த்தாலும் அதற்கான நியாயங்கள் எனக்குப் பிடிபடவில்லை.

யோசித்தபடி நான் அவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். படகு கிளம்பி நதியில் ஓரிரு மைல்கள் ஓடி நின்றபோது இன்னொரு படகு அதன் அருகே வந்து நின்றது. சிப்பந்திகள் பரபரவென்று இரு படகுகளுக்கும் இடையே மரச் சட்டங்களைப் பொருத்தி பாலம் அமைத்தார்கள். அவன் ஒரு காகித அம்பைப்போல் அந்தப் படகில் இருந்து வெளிப்பட்டு மரப்பாலத்தைக் கடந்து நான் இருந்த படகுக்குள் வந்து சேர்ந்தான். ‘நமஸ்தே’ என்று கரம் குவித்தான்.

இரண்டுமே அவனுடைய படகுகள்தாம். அன்றைக்குக் காலை அவன் இந்தப் படகில்தான் இருந்திருக்கிறான். வேறொரு சந்திப்பு. வேறொரு விவகாரம். தீர்த்துவைக்கிற அவசரப் பணி. ‘நான் மிகவும் மதிக்கும் நபர்களை இந்தப் படகில்தான் சந்திப்பது வழக்கம். இது என் ராசிப் படகு’ என்று அவன் சொன்னான்.

‘அப்படியா? காலை யாரைச் சந்தித்தீர்கள்?’

‘அவர் ஒரு யோகி. மிகப் பெரிய மனிதர்.’

எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் இவன் ஒரு பொறுக்கியல்லவா? அயோக்கியன் அல்லவா? அண்ணா எப்படி இவனைச் சந்தித்திருக்கக்கூடும்? அதுதான் புரியவில்லை.

அவன் சொன்னான், ‘நீங்கள் சிரமப்பட வேண்டாம் குரு மகராஜ். போய் உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள். என்னால் அவருக்குச் சிக்கல் வராது.’

‘மன்னியுங்கள். எனக்கு யாரும் தலைவர் கிடையாது. நான் யாருக்கும் கட்டுப்பட்டவனும் இல்லை.’

‘ஆனாலும் நீங்கள் அவர் சார்பாகத்தான் வந்திருக்கிறீர்கள்.’

‘யார் சொன்னது?’

‘சொன்னேனே, ஒரு யோகி. அவர்தான் சொன்னார்.’

எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. நான் அதை நம்ப விரும்பவில்லை. பொருள்வயமான ஒரு பெருவெளியில் அண்ணாவின் சஞ்சாரம் அமையக்கூடும் என்று நான் நினைக்கவில்லை. என் வழி வேறு. நான் பூரணமான லௌகீகம் கடைப்பிடிப்பவன். என் சூட்சுமங்கள் வேறு. என் கணித வரிசை வேறு. அண்ணா அப்படியல்ல. தன் இல்லாமையில் அவன் நிலைநிறுத்திய அவனைக் குறித்த பிம்பம் முற்றிலும் வேறு.

‘அவர் மிகவும் தற்செயலாக என் வழியில் தென்பட்டார். அவரால் என் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. ஒன்று சொல்லவா? நான் இந்த தேசத்தைவிட்டே இன்னும் சில மாதங்களில் போய்விடுவேன்.’

‘அப்படியா?’

‘ஆம். திரும்பி வரவும் போவதில்லை. என் வர்த்தகம் இனி இங்கே இருக்காது. ஏனெனில், எனக்கு இங்கே பிழைப்பில்லை என்று அவர் சொல்லிவிட்டார்.’

‘அவர் உங்களைச் சீடராக ஏற்றுக்கொண்டிருக்கிறாரா?’ என்று கேட்டேன்.

‘இல்லை. அந்தத் தகுதி எனக்கில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், என் இடப்பெயர்ச்சி எனக்கும் இந்த நாட்டுக்கும் நல்லது என்று சொல்லியிருக்கிறார்.’

முற்றிலும் பூடகமான அந்தத் தகவல்கள் எனக்கு மொட்டவிழப் பல மாதங்கள் ஆயின. அண்ணாவை நினைத்து நான் பிரமித்துப்போன தருணம் அது. ஒரு அரசாங்கம், ஒரு ராணுவம் நிகழ்த்த வேண்டிய சாகசங்களை, இந்த தேசத்தின் உண்மையான யோகிகள் மறைமுகமாக நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு நபர்கள் முக்கியமில்லை. அவர்களது தராதரம்கூடப் பொருட்டில்லை. இது நிகழ வேண்டும் என்றால் நிகழ்ந்தாக வேண்டும். இயற்கையின் உத்தரவு என்று அண்ணா சொன்னதாக அந்தத் தாமிர முதலாளி என்னிடம் சொன்னான்.

ஒன்று சொல்ல வேண்டும். அண்ணா அவனுக்கு நல்லது செய்தானா, நாட்டுக்கு நல்லது செய்தானா என்பதல்ல. நான் ஒரு மகத்தான சக்தி மையமாக உருக்கொள்ள அந்தப் படகுப் பயணம் மிக முக்கியக் காரணமானது. கரைக்கு வந்து அவனிடம் இருந்து விடைபெற்றுப் போனபின் நான் உரியவர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னேன்.

‘அவனால் சிக்கலில்லை. அவன் வெளிநாடு போய்விடுவான். இனி திரும்பமாட்டான்.’

‘எப்படி? எப்படி?’ என்று ஆர்வம் தாங்கமாட்டாமல் அலறினார் அந்த அமைச்சர்.

நான் ஒரு கணம் அமைதியாக யோசித்தேன். என் மானசீகத்தில் அண்ணாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு கூசாமல் சொன்னேன், ‘அவன் மன வரைபடத்தை நான் கலைத்துப்போட்டு வேறு படம் எழுதிவிட்டேன்.’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com