47. தடம்

அரசியல், சினிமா, கிரிக்கெட். இந்தியாவில் இந்த மூன்று துறைகளில்தான் அதிகப்பணப் புழக்கம் என்பதை நான் அறிவேன்.

மிருதுளாவின் தந்தை, பழைய ஹிந்தி நடிகர் ஒருவரைப் போல இருந்தார். நான் நெடுநேரம் யோசித்தும், அப்போது எனக்கு அந்த நடிகரின் பெயர் நினைவுக்கு வரவேயில்லை. ஆனால் அம்முகத்தை நானறிவேன். பலமுறை நேரிலேயே பார்த்திருக்கிறேன். எனக்கு சினிமா அறிவு அதிகம் கிடையாது. நான் வீட்டை விட்டுப் போவதற்கு முன்னால் மொத்தமே இருபது திரைப்படங்களைப் பார்த்திருந்தால் அதிகம். கேளம்பாக்கம் ராஜலட்சுமி திரையரங்கத்தில் என்ன படம் வருகிறதோ அதுதான். அதிலும் எதைப் பார்க்கலாம் என்று அப்பா முடிவு செய்கிறாரோ அது மட்டும்தான். எங்கள் வீட்டில் டிவி இருந்ததில்லை. அப்படி ஒரு பொருள் தேவை என்று யாரும் கருதியதில்லை. ஊரில் அநேகமாக தினமும் ஏதாவது ஒரு படப்பிடிப்பு நடக்கும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்கள். பம்பாயில் இருந்தெல்லாம் திருவிடந்தைக்கு வந்து படப்பிடிப்பு நடத்தும் அளவுக்கு எங்கள் ஊர் அன்றைக்குப் பிரபலமான கிராமமாக இருந்தது. அந்தக் குளமும் சவுக்குத் தோப்பும் அதை ஒட்டிய அலைகள் குறைந்த கடற்பரப்புமே காரணம்.

அந்த மனிதரைப் பார்த்ததுமே எனக்கு ஏன் அந்த ஹிந்தி நடிகரின் நினைவு வந்தது என்று தெரியவில்லை. அந்த நடிகரை நான் திருவிடந்தையில் பார்த்திருக்கிறேன். ஒரு முறையல்ல; நாலைந்து முறை வேறு வேறு படங்களுக்காக வந்திருக்கிறார். ஜிப்பாவின் இடது புற பாக்கெட்டில் எப்போதும் உள்ளங்கை அளவு அகலமுள்ள சிகரெட் பெட்டி வைத்திருப்பார். ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அதை எடுத்துக் கையில் வைத்துக்கொள்வார். அருகே சென்றால் நூதனமானதொரு வாசனை திரவியத்தின் நெடியும் சிகரெட் நெடியும் சேர்ந்து அடிக்கும்.

மிருதுளாவின் அப்பாவுக்கு சிகரெட் பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவரும் ஒரு வாசனை திரவியம் பூசியிருந்தார். அந்த ஹிந்தி நடிகரைப் போல அவரும் ஜிப்பாதான் அணிந்திருந்தார். பல்லாண்டுக் காலமாகச் சேர்த்த பணத்தின் செழுமை அவரது முகத்திலேயே தெரிந்தது. அவருக்கு ஏராளமான கவலைகள், மன உளைச்சல்கள் என்று சொல்லித்தான் அந்தப் பெண் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். ஆனால் சந்தித்த கணம் முதல் அந்த மனிதர் என்னிடம் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். பள்ளிப் படிப்பை அவர் முடிக்கவில்லை. குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பதினாறு வயதிலேயே அவர் ஒரு வேலை தேடிக்கொள்ளும்படியாகிவிட்டது என்று சொன்னார். ஒரு அச்சகத்தில் எடுபிடிப் பையனாக அவரது வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது. அது போஸ்டர்கள், கலியாணப் பத்திரிகைகள், மரண அறிவிப்புக் கடிதங்கள் அச்சடிக்கும் அச்சுக்கூடம்.

ஏதோ ஒரு தேர்தல் காலத்தில் அங்கே அச்சுக்கு வந்த கட்சி போஸ்டரில் இருந்த சில பிழைகளை அவர் நீக்கி, அச்சுக் கோத்திருக்கிறார். தவிரவும் பிரசார வாசகங்களில் சில திருத்தங்கள் செய்திருக்கிறார். இதெல்லாம் ஒரு அச்சுக்கூடத்தில் வேலை பார்க்கும் சிறுவன் செய்யக்கூடிய காரியங்களல்ல. இருந்தாலும் அன்றைக்கு அவர் அதைச் செய்ததால்தான் கட்சி ஆட்களின் கண்ணில் பட்டிருக்கிறார்.

‘அந்தத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு நான் இருநூறு வாசகங்கள் எழுதிக் கொடுத்தேன். ஒரு குட்டித் தலைவரின் தேர்தல் சொற்பொழிவுகள் அனைத்தும் அன்றைக்கு நான் எழுதி அளித்தவைதான். தேர்தல் முடிந்த பிறகு எனக்குப் பத்தாயிரம் ரூபாய் பணம் தந்தார்கள்’ என்று சொன்னார்.

‘அது சரி, அந்தத் தேர்தலில் அவர்கள் வென்றார்களா?’

‘இல்லை. தோற்றுத்தான் போனார்கள். ஆனால் எனக்கு எதிர்க்கட்சிகளில் இருந்தெல்லாம் வாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்தியாவிலேயே அரசியல் கட்சிகளுக்கான தனி நபர் விளம்பர ஏஜென்சியாக முதல் முதலில் வேலை செய்தவன் நாந்தான்’ என்று சொன்னார்.

அது எனக்கு வியப்பாக இருந்தது. பன்னிரண்டுக்கு பத்தடி உள்ள ஓர் அறையை வாடகைக்கு எடுத்து அதில் ஒரு மேசை நாற்காலி மட்டும் போட்டு அமர்ந்து அவர் தம் தொழிலைத் தொடங்கியிருக்கிறார். கட்சிக்காரர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். பிரசார வாசகங்கள், கொள்கை விளக்கக் கையேடுகள், ஒரு வரி சுலோகன்கள், தேர்தல் அறிக்கைகள் என்று என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். அடிப்படைத் தரவுகளை அவர்கள் தந்துவிட வேண்டும். அதை இவர் சரியான மொழியில் வடிவமைத்துக் கொடுத்துவிடுவார்.

‘சொன்னால் நம்புவீர்களா? என் பதினாறு வயது வரை ஒரு நூறு ரூபாய்த் தாளை நான் கண்டதேயில்லை. ஆனால் பதினெட்டு வயதில் என்னிடம் ஆறு லட்ச ரூபாய் இருந்தது.’

இதை நம்புவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை. அரசியல், சினிமா, கிரிக்கெட். இந்தியாவில் இந்த மூன்று துறைகளில்தான் அதிகப்பணப் புழக்கம் என்பதை நான் அறிவேன். நாடெங்கும் வாழும் மக்களுக்காக ஒரு பகுதியும் இந்த மூன்று துறைகளைச் சேர்ந்தவர்களுக்காக வேறொரு பகுதியும் பணம் அச்சடிக்கிறார்கள் என்றுகூட எண்ணியிருக்கிறேன். ஒரு மாறுதலுக்கு நான் ஏன் நிறைய சம்பாதிக்கக் கூடாது?

அந்நாள்களில் நான் பணத்தைக் குறித்து நிறைய யோசித்திருக்கிறேன். என்னால் ஓர் அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்க்க முடியாது. யாருக்கும் கட்டுப்பட்டுப் பொருந்தியிருக்க முடியாது. நான் அதிகம் படித்ததில்லை. நானொரு பட்டதாரி அல்ல. நானொரு சன்னியாசி. அப்படித்தான் என்னைக் கண்டவர்கள் கருதினார்கள். உண்மையில் நான் அதுவுமல்ல. எனக்கு வேதங்களின் சில அங்கங்கள் தெரியும். தருக்கம் தெரியும். நாத்திகத்தைக் குறித்துச் சற்று நிறையவே வாசித்திருக்கிறேன். கம்யூனிச நாத்திகமோ, திராவிட நாத்திகமோ அல்ல. இது வேறு. முற்றிலும் வேறு.

விஷயம், அறிந்தவை என்ன என்பதல்ல. அது எப்படிப் பொருளாகும் என்பது பற்றியது. எனக்கு அப்போது நிறையப் பணம் தேவைப்பட்டது. ஆசிரமம் என்று சொன்னேனே தவிர என் இருப்பிடம் அப்போது மிகவும் சிறிதாக இருந்தது. மடிகேரியில் ஒரு வெங்காய வியாபாரிக்குச் சொந்தமான அரை ஏக்கராவுக்கும் குறைவான நிலத்தை எனக்கு அவர் நன்கொடையாக வழங்கியிருந்தார். என்னைத் தேடி வந்தவர்களுள் சற்றே வசதியானவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு ஒரு கட்டடம் எழுப்பித் தந்திருந்தார்கள். எளிய வரவேற்பரை. உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய ஹால். வெள்ளை வெளேரென்று உயரமான சுவர்களையும் விதானத்தையும் கொண்டது. அங்கே எந்தப் பொருளும் கிடையாது. அலங்காரச் சிற்பங்கள் கிடையாது. குத்து விளக்கு கிடையாது. நாற்காலிகள், மேசைகள் கிடையாது. மைக் கிடையாது. வெறும் ஹால். சுமார் நூறு பேர் அங்கே அமர முடியும். நான் உட்காரும் இடத்தை மட்டும் ஒன்றரை அடி உயரமாகக் கட்டச் சொல்லியிருந்தேன். மேலே சுழலும் மின் விசிறிகளின் சத்தம் அங்கு கேட்கும். இல்லாவிட்டால் நான் பேசும் மெல்லிய சத்தம். அவ்வளவுதான்.

அந்த ஹாலின் பின்புறம் ஒரு கதவு உண்டு. அந்த வழியாகப் போனால் ஒரு படிக்கட்டு வரும். ஏறி மேலே சென்றால் என் நூலகம். படுக்கையறை. அதனோடு இணைந்த ஒரு கழிப்பறை மற்றும் குளியலறை. அவ்வளவுதான் என் மொத்த ஆசிரமமே. அந்தக் கட்டடத்துக்கு வெளியே மிச்சமுள்ள இடங்களெங்கும் புல் வளர்த்து ஆங்காங்கே நிழற்குடை அமைக்கச் செய்திருந்தேன். எளிய மூங்கில் நிழற்குடைகள். வகுப்புகள் இல்லாத நேரங்களில் ஆசிரமத்துக்கு வருவோர் அந்தக் குடைகளின் அடியில் அமர்ந்து ஏதாவது படிக்கலாம். பேசலாம். ஓய்வெடுக்கலாம். அவர்கள் உபயோகத்துக்காக அங்கே தனியே ஒரு பெரிய கழிப்பறை மட்டும் இருந்தது.

மிகவும் யோசித்துத் திட்டமிட்டு நான் ஒரே ஒரு ஏற்பாடு செய்திருந்தேன். ஆசிரமத்துக்கென்று ஊழியர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதே அது. எந்தக் காலத்திலும் யாருக்கும் நான் கடமைப்பட்டுவிடவோ, எனக்கு இன்னொருவர் கடமைப்படவோ இடம் தரக் கூடாது என்ற முடிவில் இருந்தேன். என்னைத் தேடி வந்தவர்கள் ஆசிரமத்து வேலைகளைப் பங்கு போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தார்கள். அதைக்கூட நான் யாரிடமும் சொன்னதில்லை. எவருக்கும் எந்த உத்தரவும் அளித்ததில்லை. நான்கு பேர் சேர்ந்து ஆசிரம வளாகத்தைப் பெருக்கி சுத்தம் செய்வார்கள். இன்னும் நான்கு பேர் என் ஆடைகளைத் துவைத்துப் போட்டுக் காயவைத்து எடுத்து மடித்து வைப்பார்கள். நூலகத்தை இரண்டு பேர் பராமரிக்க ஆரம்பித்தார்கள். தோட்டப் பராமரிப்பு வேறு சிலரின் பொறுப்பாகிப்போனது. என்றைக்கோ ஒரு நாள் யாரோ சொன்னார்கள். ஆசிரமத்தில் உணவு தயாரிக்கலாம்.

சிறிய அளவில் ஒரு கேண்டீன் திறக்கப்பட்டது. பெங்களூரில் ஒரு பெரிய உணவகம் நடத்திக்கொண்டிருந்தவர் அங்கிருந்து எனக்குச் சில பேரை அனுப்பித் தந்தார். சமையல் கலைஞர்கள். அவர்கள் என்னிடம் பணியாற்றவில்லை. எனக்காகப் பணியாற்றினார்கள். ஆசிரமத்தில் அப்போது முதல் மதிய உணவும் மாலைச் சிற்றுண்டியும் கிடைக்க ஆரம்பித்தது. வருகிறவர்கள் மலிவு விலையில் பசியாறிக்கொள்ள ஒரு வழி. நான் அதன் கணக்கு வழக்குகளில் தலையிடுவது கிடையாது. கேண்டீன்காரர்கள் பெங்களூர் முதலாளிக்கு நேரடியாக பதில் சொல்லிக்கொள்வார்கள். இதில் எனக்கிருந்த ஒரே லாபம், என் உணவுப் பிரச்னை உடனடியாகத் தீர்ந்ததுதான். எனக்கான உணவை கேண்டீன் கலைஞர்கள் தனியே சமைத்துத் தந்தார்கள்.

பொதுவாக, நான் மதியம் மூன்று மணி வரை எதையும் சாப்பிடுவதில்லை. மூன்று மணிக்கு இரண்டு வெள்ளரிப் பிஞ்சுகளை மென்று தின்றுவிட்டு ஒரு கறுப்புத் தேநீர் அருந்துவேன். ஐந்தரை மணிக்கு இரண்டு ஸ்பூன் வெண்ணெய். இரவு எட்டு மணிக்கு இரண்டு சப்பாத்திகள், கொஞ்சம் சோறு, பருப்புக் கூட்டு, ஒரு கப் தயிர். கொஞ்சம் பழங்கள். இந்த உணவுப் பாணியை என் குரு எனக்குக் கற்றுத் தந்திருந்தார். உணவு சார்ந்த ஆர்வங்களும் அக்கறையும் இல்லாமல் போவது ஒரு வரம். ஒருவிதத்தில் அது ஒரு யோகம். பல யோக முறைகளுக்கு உள்ளே நுழைவதற்கான வாசலும்கூட.

இதில் ரசமான விவகாரம் என்னவெனில், பக்தர்களாகவும் நண்பர்களாகவும் சீடர்களாகவும் என்னை நோக்கி வந்தவர்களில் பெரும்பாலானவர்களை இழுத்துப் பிடிக்கும் அம்சமாக இந்த உணவு முறையே இருந்தது. ஒரு மனிதன் ஒருவேளை உண்டால் போதுமா? இது எப்படி சாத்தியம் என்று என்னிடம் கேட்காதவர்களே கிடையாது. ‘ஏன் உங்களாலும் முடியுமே? சொல்லப்போனால் மனிதனுக்கு ஒருவேளை உணவு போதுமானது. தேவைக்கு அதிகமாகத்தான் நாம் திணித்துக்கொண்டிருக்கிறோம்’ என்று சொல்வேன். சில உணவு மாற்றங்களைச் செய்துகொடுத்து என்னால் சில பேரின் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றை முற்றிலுமாகக் குணப்படுத்த முடிந்தது. உண்மையில் நான் மருத்துவனல்லன். எனக்கு உணவின் அறிவியலும் தெரியாது. என் குருநாதர் கடைப்பிடித்த சில வழிமுறைகளைப் பரீட்சை செய்து பார்த்ததுடன் சரி.

சொன்னேனே, ஞானிகளல்ல; நோய் தீர்க்கத் தெரிந்தவர்களே நிலைத்து நிற்கிறார்கள்.

மிருதுளாவின் தந்தைக்கு நான் எந்த விதத்தில் உதவ முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆரம்பத் தயக்கம், அறிமுகத்துக்குப் பிறகு அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசத் தொடங்கியிருந்தார். அவரது பிரச்னை என்னவென்று அவருக்கு நானே புரியவைக்க வேண்டியிருந்தது என்பதுதான் இதில் பெரிய விசித்திரம்.

தேசம் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தது. நிச்சயமாக இம்முறை காங்கிரஸ் ஆட்சிக்கு வரக் கூடாது என்று அவர் சொன்னார். உதிரிகளின் மிகப்பெரிய கூட்டணி ஒன்றை அரசியல் பெரியவர்கள் உத்தேசித்திருந்தார்கள். ஒரு சமஷ்டி அரசு. எல்லாக் கட்சிகளுக்குமான நியாயமான பிரதிநிதித்துவம். அனுபவம் மிக்கதொரு பிரதம மந்திரி வேட்பாளர். அவரை முன்னதாகவே அறிவித்தாக வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லை. கூட்டணி வென்றபின் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், அது அவ்வளவு முக்கியமில்லை என்று அவர் சொன்னார்.

‘அப்படியா நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு தலைமை வேட்பாளரை முன்னிறுத்தாவிட்டால் உங்கள் கூட்டணி வெல்ல வாய்ப்பே இல்லை. தப்பித்தவறி வென்றாலும் ஆறு மாதங்களுக்கு மேல் அரசு நிற்காது’ என்று சொன்னேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com