44. ஒரு சிறிய கொலை

துயரற்ற பேருலகம் என்பது ஒரு கனவு. எல்லோருக்கும் வருவது. ஆனால் கனவுதான். கடவுளைப் போலவே அதுவும் இல்லாத ஒன்று. அல்லது இருந்தும் பயனற்றது.

அவள் வீடு மிகவும் சிறியதாக, ஒரு குங்குமச் சிமிழின் மூடியைத் தனியே எடுத்துக் கவிழ்த்து வைத்தாற்போல் இருந்தது. ஓலை வீடுதான். ஆனால் உள்ளே ஒரு டிவி பெட்டி இருந்தது. டிவியின் மீது ஒரு ரவிக்கையும் உள்பாவாடையும் கிடந்தன. தரையிலேயே ஒரு ஓரமாகத் துணிகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. அரைத் தடுப்புச் சுவருக்கு அப்பால் சமையலறை. அலுமினியப் பாத்திரங்களும் ஓர் அடுப்பும் இருந்தன. அவள் அந்த வீட்டில் தனியாகத்தான் இருந்தாள் என்று நினைத்தேன். ஓர் ஆண் உடன் இருப்பதற்கான எந்த அடையாளமும் அங்கில்லை.

‘ஆமா, எனக்குக் கல்யாணமெல்லாம் ஆவலை’ என்று அவள் சொன்னாள்.

‘அப்ப அவன் யாரு? உன் காதலனா?’ என்று கேட்டேன்.

அவள் அதற்கு உடனே பதில் சொல்லவில்லை. அவளுக்கு இருந்ததெல்லாம் ஒரு பெரிய சந்தேகம் மட்டும்தான். நான் உண்மையிலேயே கண்ட கொலையைக் குறித்து போலிசாரிடம் சொல்லுவேனா மாட்டேனா என்பது. நான் உண்மையிலேயே கொலை நடந்ததை நேரில் பார்த்திருக்கவில்லை என்பதை எத்தனையோ விதமாக அவளிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்தேன். அவள்தான் கொன்றாள் என்பது தெரியும். குத்துப்பட்டவன் நிச்சயம் இந்நேரம் இறந்து போயிருப்பான். அதிலும் சந்தேகமில்லை. ஆனாலும் பார்த்தேன் என்று எப்படிச் சொல்வது. அந்தக் கொலைக்கும் எனக்கும் நடுவே இருட்டு நின்றுகொண்டிருந்தது.

‘நீங்களா வந்து கேக்கலைன்னா, அத செஞ்சது நீங்கதான்னு எனக்குத் தெரிஞ்சிருக்கவே தெரிஞ்சிருக்காது’ என்றும் சொன்னேன். அவள் சிறிது யோசித்தாள். ‘சரி போ. மாட்டிக்கணும்னு இருந்தா மாட்டிக்கிட்டுத்தான் ஆவணும். அதையெல்லாம் யோசிக்காம ஒண்ணும் செய்யல’ என்று சொன்னாள்.

‘அப்பறம் என்ன? விடுங்களேன். நான் கிளம்பறேன்.’

அவள் சட்டென்று என் கையைப் பிடித்தாள். ‘ஜெயிலுக்குப் போயிடுவேன் தம்பி. அதுல ஒண்ணுமில்ல. எம்பொண்ணு ரொம்ப கஷ்டப்படுவா’ என்று சொன்னாள்.

‘உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?’

‘இல்லை. அந்த நாயி தாலி கட்டலை.’

இப்போது எனக்குச் சற்றுப் புரிந்தது. காதல் தோல்விதான். ஆனால் சற்று ஆழம் கொண்டது. எல்லைகளைச் சற்று நகர்த்தி வைத்துக்கொண்டு காதலித்திருக்கிறாள். எப்படியோ சில உணர்ச்சிகள் மனிதர்களை இஷ்டத்துக்கு எடுத்து விழுங்கத் தொடங்கிவிடுகின்றன. அஜீரணம் குறித்த கவலை அதற்கு எழுவதில்லை. உலகைப் பற்றிய அச்சமோ, கலக்கமோ அக்கணத்தில் மறைந்துகொண்டுவிடுகின்றன. உணர்ச்சியின் பேயாட்டம் எத்தனைக் காலம் நீடிக்கிறது என்பதைப் பொறுத்து இழப்புகளின் சதவீதம் அமைகிறது. ஆனால், இழப்புத்தான். அதில் சந்தேகமில்லை. எந்த ஓர் உணர்ச்சியும் எதையும் இழக்காதிருக்கச் செய்யும் வரம் பெற்றிருப்பதில்லை.

நான் அவளுக்கு எந்த விதத்தில் ஆறுதல் சொல்லலாம் என்று யோசித்தேன். அது ஓர் அவசியம் என்று தோன்றவில்லை என்றாலும், என்னைக் குறித்த அச்சமின்றி அவள் அடுத்த தினங்களை வாழ்வதற்காகவாவது எதையாவது சொல்லிவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. நான் போலிசுக்கெல்லாம் போகப் போவதில்லை என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஏனோ அது அவளுக்குப் போதுமானதாக இல்லை. அவளது பேச்சில், அசைவுகளில் ஒரு பதற்றம் இருந்ததைக் கண்டேன். செய்த கொலை காரணத்தால் வந்த பதற்றமாகவோ, அதை ஒருவன் பார்த்திருக்கிறானே என்பதாலோ வந்ததாக இருக்கலாம்.

ஆனால் பெண்ணே, இது உன் வாழ்க்கை. ஒரு மனிதன் நீ விரும்பக்கூடியவனாக இருந்திருக்கிறான். அவனிடம் நீ உன்னைத் தந்திருக்கிறாய். சாட்சிக்கு ஒரு பெண் குழந்தை. பரவாயில்லை. ஒன்றும் பிழையில்லை. அதே மனிதனைக் கொல்லும் அளவுக்கு வாழ்வு உன் கழுத்தை நெரித்திருக்கிறது. துக்கங்களின்றி வாழ்வேது? துயரற்ற பேருலகம் என்பது ஒரு கனவு. எல்லோருக்கும் வருவது. ஆனால் கனவுதான். கடவுளைப் போலவே அதுவும் இல்லாத ஒன்று. அல்லது இருந்தும் பயனற்றது. வாழ்வென்பது துயரங்களின் சாரம். ஆனால் ஒரு கொலைக்கான வெறியும் வேகமும் எல்லோருக்கும் வருவதல்ல. இதனைக் காட்டிலும் உக்கிரமான தருணங்கள் எத்தனையோ பேருக்கு எத்தனையோ வடிவங்களில் வரத்தான் செய்கின்றன. என் தாயைத் தெரியுமா உனக்கு? நான்கு பிள்ளைகளைப் பெற்றவள். அதில் இரண்டு சொல்லாமல் ஓடிப்போய்விட்டன. ஒருவன் யோகியாக எங்கோ அலைந்துகொண்டிருக்கிறான். இன்னொருவன் என்னவானான் என்று தெரியவில்லை. நாளைக்கு நான் வீட்டுக்குப் போய்விடுவேன் என்றாலும், இந்தக் கணம் அவளுக்கு நானும் இல்லாமல் போனவன்தான். வாழ்வில் மூன்று முறை சுய கொலை செய்துகொள்ள என் அம்மாவுக்குச் சந்தர்ப்பங்கள் வந்து போயிருக்கின்றன. ஆனால் இன்றும் அவள் உயிருடன்தான் இருக்கிறாள். அது என்ன மனம்! அது என்ன வார்ப்பு! துக்கங்களை நகர்த்தி வைத்துவிட்டு தினமும் விடிந்ததும் அரிசி களைந்து போட்டு உலை வைத்துக்கொண்டிருக்கிறாள்.

ஒன்று புரிந்துகொள். அது வாழ்வின் மீதான பிரேமை அல்ல. மரணத்தை அஞ்சிய கோழைத்தனமும் அல்ல. இருக்கப் பணிக்கப்பட்டவர்களின் குறைந்தபட்சப் பொறுப்புணர்ச்சி.

அவளுக்கு என்ன புரிந்ததோ. சிறிது அழுதாள். பிறகு, ‘என்னை ஏமாத்திட்டு மட்டும் ஓடியிருந்தான்னா ஒண்ணுஞ்செஞ்சிருக்கப் போறதில்ல. எங்கம்மாவோடல்ல ஓடிப் போனான்?’ என்று சொன்னாள்.

நான் அவளை நிதானமாகத் தலைமுதல் கால் வரை பார்த்தேன். இருபத்து இரண்டு அல்லது இருபத்து மூன்று வயதிருக்கும் என்று தோன்றியது. கறுப்பாகத்தான் இருந்தாள். பெரிய அழகெல்லாம் இல்லை. முகத்தில் வசீகரமாக ஏதேனும் தெரிகிறதா என்று பார்த்தேன். அப்படியும் ஒன்றும் தோன்றவில்லை. ஒரு பெண். மிகவும் சராசரியாக யாரோ ஒரு அயோக்கியனிடம் ஏமாந்த மக்குப் பெண். இவளைப் பெற்ற மக்குப் பெண்மணி இப்போது எங்கு இருக்கிறாள் என்று கேட்டாள் நிச்சயம் அவள் சொல்லியிருப்பாள். எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. ஒருவேளை அவளையும் இவள் கொன்றிருக்கலாம். அல்லது கொலை செய்வதற்குத் திட்டம் தீட்டியிருக்கலாம். இல்லாமல் போகச் செய்வது ஒரு சாதனையா? நினைவுகளை என்ன செய்வாள்?

‘உங்க மகளுக்கு என்ன வயசு?’ என்று கேட்டேன்.

‘மூணு வயசு ஆகுது. என் சினேகிதி வீட்ல விட்டு வெச்சிருக்கேன்.’

‘ஏன்?’

‘இங்க நிலவரம் சரியில்லியே? எங்கம்மா இப்படிச் செய்வான்னு நான் நினைக்கலை.’

‘உங்கம்மாவுக்கு என்ன வயசு?’ என்று கேட்டேன். பிறகு ஏன் கேட்டேன் என்று எனக்கே வருத்தமாகப் போய்விட்டது. அவள் அதையெல்லாம் கவனிக்கவில்லை. கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொன்னாள், ‘நாப்பத்தி ஆறு.’

‘அப்ப அவனுக்கு?’

இப்போது அவள் என்னைப் பொருட்படுத்திப் பார்த்தாள். இவனுக்கு எதற்கு இதெல்லாம் என்று தோன்றியிருக்கலாம். நான் ஒரு சாட்சி. நான் இருப்பது நிச்சயமாக ஆபத்து. ஒரு கொலைதான் கஷ்டம். ஒன்று பழகிவிட்டால் இரண்டாவதில் ஒன்றுமில்லை. கூர் தீட்டிய கத்திக்கு இன்னொரு கழுத்து என்பது பெரிய சிரமமாயிராது. யாருமற்ற இந்த அடர் இரவு வேளையில் என் வாயில் ஒரு துணியை அடைத்துக் கொன்று வீசி விடுவது சுலபம். அதைத்தான் அவள் உத்தேசித்துக்கொண்டிருக்கிறாளா?

‘அவன் நல்லவன்னு நெனைச்சேன். கட்டிக்கறேன்னு சொன்னான். சரின்னு படுத்தேன். அப்ப எனக்குத் தெரியலை. அவன் என்னைக் கட்டிக்கறேன்னு சொன்னதே, எங்கம்மா மேல எனக்கு சந்தேகம் வந்துடக் கூடாதுன்னுதான்.’

‘ஐயோ.’

‘அம்மாவா இருந்துக்கிட்டு இப்படி ஒருத்தி இருப்பாளா சொல்லு. பெத்த பொண்ண அடகு வெக்கப் பாத்திருக்கா பழிகார முண்டை. எனக்கு ஒரு புள்ள பொறக்கற வரைக்கும்கூட மறைச்சிருக்கா.’

இது என்ன மாதிரி அம்மா! எனக்கு இப்படியான அம்மாக்களைத் தெரியாது. இது வேறு. முற்றிலும் நானறியாதது. ஆனாலும் அம்மாதான். குறைந்தது இருபது வருடங்கள் இவளை வளர்த்திருக்கிறாள். இவளுக்கொரு மகள் பிறக்கும்போது அருகே இருந்து கவனித்துக்கொண்டிருப்பாள். எல்லாமே தனது ரகசிய உறவின் மதில் சுவர்களாக இருக்கும் என்று நினைத்திருப்பாளா? அந்தக் குடிகாரன் அத்தனைப் பெரிய ஆளுமையா? மகளை பலி கொடுத்தாவது தனக்கு அவன் வேண்டும் என்று எண்ணுமளவு என்ன இருந்திருக்கும்?

நான் அவளிடம் ஒன்று மட்டும் சொன்னேன், ‘நியாயமா நீ உங்கம்மாவைத்தான் கொலை பண்ணியிருக்கணும். அவனைக் கொன்னது தப்பு.’

அவள் நெடுநேரம் அழுதாள். பிறகு முந்தானையில் கண்ணைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள்.

‘ஆமால்ல? ஆனா மனசு வரலியே?’ என்று சொன்னாள்.

அந்தக் கணம் தோன்றியது. கொலையுணர்வைவிடக் கொடிது இதுதான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com