39. அக்னி சந்தானம்

என் வாழ்வில் அதிர்ச்சிகளுக்கு இனி இடமே இருந்துவிடக் கூடாது என்று முடிவு செய்து அதற்கான பயிற்சிகளை ஒழுங்காக மேற்கொண்டேன். மரணங்களைக் கூர்ந்து கவனித்தேன்.

மரத்தில் இருந்து உரித்தெடுத்து உலர்த்திய பட்டையின் நிறத்தில் இருந்தது அந்த நாய். அடி வயிற்றில் எலும்புகள் தெரிந்தன. வலப்புறப் பின்னங்காலின் மேற்புறம், புட்டத்துக்குச் சற்றுத் தள்ளி அதற்கு ஏதோ காயம் பட்டிருந்தது. காயத்தை வட்டமிடும் ஈக்களை விரட்ட அது ஓயாமல் தன் வாலைச் சுழற்றிக்கொண்டே இருந்தது. நான் குற்றாலத்துக்கு வந்து இறங்கியது முதல் அந்த நாயைத் தொடர்ந்துகொண்டிருந்தபோது எனக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. எப்படியும் இலக்கின்றி அலையப்போகிறேன், அதை ஏன் இந்த நாயின் பாதையில் அலைந்து திரியக் கூடாது என்று எண்ணித்தான் அது போன வழியெல்லாம் போனேன். ஒரு கட்டத்தில், நாயைத் தொடர்வதை விட்டு என் இஷ்டத்துக்கு மலை மீது ஏறத் தொடங்கினேன். ஆனால் நான் சற்றும் எதிர்பாராவிதமாக இப்போது நாய் என்னைத் தேடி வந்திருக்கிறது. இதில் ஏதோ சூட்சுமம் இருக்கக்கூடும் என்று அப்போதுதான் தோன்றியது. அண்ணாவே அதை என்னிடம் அனுப்பி வைத்திருப்பானோ என்று நினைத்தேன். அல்லது அவனே நாய் வடிவம் எடுத்துவிட்டானா?

தோன்றத்தான் செய்தது. ஆனாலும் அப்படியெல்லாம் இருக்காது என்றும் உடனே சொல்லிக்கொண்டேன். அற்புதங்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் அவை கதைகளில் மட்டுமே நிகழக்கூடியவை என்று நினைத்தேன். துயரங்களின் அடியாழத்தில் அமர்ந்திருந்தும் அதன் ஈரம் படாமல் என்னைத் தற்காத்துக்கொள்ள முடிந்ததன் பலன் அது ஒன்றுதான். எதற்கும் உணர்ச்சி வயப்படுவதில்லை. எது குறித்தும் பரவசமாவதில்லை. கண்ணீர்? அறவே கிடையாது. புன்னகை ஒன்றைத்தான் என் போர்வையாக்கிக்கொண்டிருந்தேன். அது தேவைப்படுகிறது. எதையும் மறைப்பதற்கு. அல்லது எதையாவது அடைவதற்கு. சொல்கூட அப்போது எனக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது. புன்னகை போதுமென்று நினைத்தேன். என் புன்னகையை நீங்கள் அறியமாட்டீர்கள். அதில் தெய்வீகம் கிடையாது. மயக்கும் குண விசேடங்கள் ஏதுமில்லை. அது இயல்பானது. பாவனைகள் களைந்த ஒரு மாயப் பாவனை கொண்டது. கணப்பொழுதில் விரிந்து நிறைந்து மறைந்துவிடக் கூடியது. ஆனால் அதற்கொரு நாதமுண்டு. புன்னகையின் நாதம். புலரியின் வசீகரத்துக்கு ஒப்பானதொரு நாதம். அதையே ஆயுதமாகவும் கேடயமாகவும் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.

இந்த உலகில் புன்னகையைக் காட்டிலும் ஒரு பேரற்புதம் வேறில்லை என்று கருதியிருந்தேன். எந்த உணர்வையும் அதனுள் இட்டுப் புதைத்துவிட முடியும். எதையும் தாங்கும் புவிக்கு நிகரான வல்லமையை மனிதன் பெறக்கூடிய ஒரே வித்தை அதில்தான் ஒளிந்துள்ளது. அதைக் காட்டிலும் அற்புதம் ஒன்றுண்டா?

அண்ணாவை நான் சந்திக்க நேர்ந்தால் என் புன்னகையைத்தான் முதலில் எடுத்து விரிப்பேன். அதில் பரவசம் இருக்காது. உணர்ச்சிப் பெருக்கு இருக்காது. கண்ணீர் இருக்காது. கதறல் அறவே இராது. ஒரு புன்னகை. வெறும் புன்னகை. ஆனால் சகல உணர்ச்சிகளையும் அது உள்ளடக்கியிருக்கும். என் கண்ணை நீங்கள் உற்றுப் பார்த்தால் என் புன்னகையின் ஊற்று அங்கே புலப்படும். இதழ்களால் புன்னகை செய்வது இயற்கை விரோதம். கண் போதும். கணப்பொழுது போதவே போதும். அவனில்லாமல் வளர்ந்த வருடங்களில் நான் மனிதர்களைப் புரிந்துகொள்ளவும் மௌனத்தால் அவர்களை ஈர்த்து நிறுத்தவும் பழகிப் பயின்றிருந்தேன். வீட்டில்கூட வீணாகப் பேசுவதே கிடையாது. ஒரு சொல்லில் ஒரு பதில். அல்லது ஒரு பார்வையில் ஒரு வினா. சொற்களை இறைக்காதவரை ஆளுமை கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன்.

உண்மையில் நான் சொல்ல வேண்டிய உண்மையைச் சொல்லாதிருக்க வேண்டியே இவற்றைப் பழகினேன். தொடக்கத்தில் இது குறித்த குற்ற உணர்ச்சி எனக்கிருந்தது. போகப் போக அது பழகி, மங்கிவிட்டது. என்ன இப்போது? அண்ணா வீட்டை விட்டுப் போகவிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். அவன் சில யோக சாதனைகள் செய்து பழகியதைப் பார்த்திருக்கிறேன். உலகம் பயணப்படும் பாதை தனக்குச் சரிப்பட்டு வராது என்று அவன் நினைத்ததை நான் அறிவேன். அவனிடம் ஒரு சுவடி இருந்தது. இவ்வளவுதானே? இதை நான் முன்பே அறிவேன் என்பதைச் சொல்லாதிருந்துவிடுவதில் என்ன பிழை? சொன்னால் மட்டும் அவன் திரும்பி வந்துவிடுவானா? அல்லது தேடிப் போய் அழைத்து வந்துவிடத்தான் முடியுமா?

என்றைக்காவது அவன் வருவான் என்ற நம்பிக்கையை நான் அம்மாவுக்கு மிச்சம் வைத்தேன். என் மௌனமும் புன்னகையும் அதற்கு உதவின. என்ன பிழை? ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை. இது பாவம் என்றால் எந்த தெய்வம் என்னைத் தண்டித்துவிடும் பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். அப்படி ஒரு தருணம் வரவேயில்லை. தெய்வங்கள் என்னை மறந்துவிட்டிருந்தன. அல்லது நான் அவற்றைப் புறக்கணித்திருந்தேன். வினய் வீட்டை விட்டுப் போன பிறகு நான் முற்றிலும் வேறானவன் ஆகியிருந்தேன். என் வாழ்வில் அதிர்ச்சிகளுக்கு இனி இடமே இருந்துவிடக் கூடாது என்று முடிவு செய்து அதற்கான பயிற்சிகளை ஒழுங்காக மேற்கொண்டேன். மரணங்களைக் கூர்ந்து கவனித்தேன். திருமணக் கொண்டாட்டங்களின் தோலுரித்து எலும்புகளைத் தேடத் தொடங்கினேன். உறவுகளும் அதன் சிடுக்குகளும்.

ஒன்று நினைவுக்கு வருகிறது. பத்மா மாமியின் மகளை வினய் காதலித்தான் என்று நான் அவளிடம் சொன்னபோது அவள் பெரிதும் அதிர்ச்சியடைந்ததை நான் அறிவேன். தனக்கு அப்படியொரு அபிப்பிராயமே இருந்ததில்லை என்று அன்று அவள் என்னிடம் சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் அதற்குப் பிறகு காணாமல் போன வினய்யை அவள் விரும்ப ஆரம்பித்துவிட்டாள். இதையும் நான் கவனித்தேன். ரசித்தேன் என்று சொல்ல வேண்டும். பார்க்கிற போதெல்லாம் அவள் வினய்யைப் பற்றி என்னிடம் கேட்காதிருக்கவில்லை.

‘அவன் என்னைப் பத்தி உன்கிட்டே பேசியிருக்கானாடா?’

‘இல்லே.’

‘அப்பறம் எப்படி அவன் என்னை விரும்பினான்னு சொன்னே?’

‘அது எனக்குத் தெரியும்.’

‘பாவம் இல்லே? எங்க போனானே தெரியலியேடா விமல்? போலிஸ் கம்ப்ளைண்டெல்லாம் குடுத்தேளே? ஒண்ணுமே நடக்கலியா?’

‘ம்ஹும்.’

‘கிடைச்சிட்டான்னா நன்னாருக்கும்.’

‘அவனைக் கல்யாணம் பண்ணிண்டுடுவியா நீ?’ என்று கேட்டேன்.

அவள் சிரித்தாள். சற்று வெட்கமுற்றாள் என்று நினைக்கிறேன். ஆனால் மறுக்கவில்லை. ‘திரும்பி வந்துட்டான்னா நானே அவன்கிட்டே பேசிடுவேன்’ என்று சொன்னாள்.

எளிய தீர்வுகள் எல்லோரிடமும் இருக்கின்றன. மிக எளிதில் எல்லோராலும் ஒரு முடிவுக்கு வந்துவிட முடிகிறது. எளிதில் சமாதானம் கொள்ளும் மனத்தை இயற்கை வழங்கியிருக்கிறது. எல்லாம் எளிது. கண்ணீரைப் போலவே, அது உலர்ந்து போவதும்கூட.

அம்மாவுக்கும் அது உலர்ந்துதான் போயிருந்தது. இந்தச் சமயத்தில் அண்ணாவைத் தேடிப் போனேன், அதனால்தான் காணாமல் போனேன் என்று சொல்லிக் கிளறி வைப்பது வீண் வேலை என்று எனக்குத் தோன்றாமல் இல்லை. ஆனாலும் அதைச் செய்ய விரும்பினேன். இது பாசத்தால் நிகழ்ந்தது என்று எண்ணால் எண்ண முடியவில்லை. எனக்கு அவனைப் பார்க்க வேண்டும். சிறிது பேசவேண்டி இருந்தது. அவன் கூப்பிட்டுக் கூப்பிட்டு உட்காரவைத்துப் பேசிய நாள்களில் நான் அவனுடன் பேசவேயில்லை. அது ஒரு தவறுதான் என்று தோன்றியது. அன்றைய எனது பக்குவமும் தெளிவும் அவ்வளவுதான். இன்றைக்கு நான் அப்படியல்ல. நிச்சயமாக அல்ல. நான் வேறு. தெளிவு என்று நான் எண்ணிக்கொண்டிருப்பதன் சாறில் ஒரு துளியையேனும் அவன் மீது நான் தெளித்துவிட விரும்பினேன்.

என்ன பெரிய கடவுள்? என்ன பெரிய யோகம்? என்ன பெரிய கர்மா? யாவே த்வயக்ஷகம் ஜீவேத்ரணம் க்ருத்வா க்ருதநிவேத: பஸ்மி பூதஸ்ய தேஹ புனராஹமம் குத:? என்று கேட்ட சார்வாகன் எனக்குப் பிடித்துப்போயிருந்தான். ஆனால், நான் வெளிப்படையாக எங்கும் கடவுளை மறுக்கப்போவதில்லை என்று உறுதி பூண்டிருந்தேன். தெரியாத ஒன்றை மறுத்து ஆகப்போவது ஒன்றுமில்லை. எதற்கு அவனை நினைத்து நேர விரயம் செய்துகொண்டிருக்க வேண்டும்?

இந்த உலகம் அழகானது. வாழ்வு இனிதானது. மனிதர்கள் பெரும் சுரங்கம். தோண்டத் தோண்ட எத்தனையெத்தனை அற்புதங்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள்! மனிதர்களும் அவர்தம் தேவைகளும். அது முடிவற்றது. எல்லைகளில்லாதது. வேட்கையின் பிரவகிப்பில் வாழ்வையே ஒரு சருகாக்கி ஓடவிட்டு வேடிக்கை பார்க்கிற இனம். இதைப் பயில்வதல்லவா யோகம்? இதை ஆராய்வதல்லவா ஞானம்?

என்னை உறக்கத்தில் இருந்து எழுப்பிவிட்ட நாய் தன்னியல்பாக எங்கோ நடந்து போக ஆரம்பித்திருந்தது. ஒரு ஆர்வத்தில் நானும் அதன் பின்னால் போகத் தொடங்கியிருந்தேன். மலைக்காட்டின் குளிர் நான் சகிக்கக்கூடியதாக இல்லை. மழை இல்லை என்றாலும் காற்றின் ஈரம் தோலைக் குத்திக் குடைந்தது. பாதையற்ற பாதைகளில் அந்த நாய் எங்கெங்கோ போய்க்கொண்டே இருந்தது. இருளின் பூரணமான கருமையை விழுங்கியபடி முன்னால் விரைந்த அதன் பார்வையை எனதாக்கிக்கொண்டு என் எதிரே விரிந்த வனத்தை விழுங்கிக்கொண்டிருந்தேன்.

வெளிச்சம் சற்று புலப்படத் தொடங்கிய நேரம் எங்கெங்கோ சுற்றி மீண்டும் அந்தக் குடிசை இருந்த இடத்துக்கருகிலேயே நான் வந்துவிட்டிருந்ததை உணர்ந்தேன். சற்று வெட்கமாக இருந்தது. ஒரு காலை நடைப்பயிற்சி என்பது தவிர எந்த அற்புதத்தையும் அந்த நாய் தந்துவிடவில்லை. எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

‘என்ன தம்பி, வெள்ளன எந்திரிச்சிட்டிகளா?’ என்று கேட்டபடி அந்தக் காட்டிலாகா ஊழியர் குடிசையை விட்டு வெளியே வந்தார். நான் தலையசைத்தேன். ஒரு காப்பி சாப்பிட்டால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் கேட்கத் தயக்கமாக இருந்தது.

‘உங்க ஒய்ஃப் தூங்கறாங்களா?’ என்று கேட்டேன்.

‘எங்க தூங்குறது? அவ அப்பமே எந்திரிச்சிப் போயிட்டா.’

‘எங்க?’

‘இன்னிக்கி அவ தங்கச்சிய பொண்ணு பாக்க வராக. பாளையங்கோட்டைக்குப் போகணுன்னு பத்து நாளா சொல்லிக்கிட்டிருந்தா.’

‘ஓ. அப்ப உங்களுக்கு சாப்பாடு?’

‘பாத்துக்கிட வேண்டியதுதான்’ என்று சொல்லிவிட்டு, ஒரு வேப்பங்குச்சியுடன் பின்பக்கம் போனார்.

அன்றைய தினத்தை நான் எப்படிக் கழிக்கப்போகிறேன் என்று குழப்பமாக இருந்தது. காட்டிலாகா ஊழியர் எட்டு மணிக்கு டூட்டிக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுவார். அதோடு மாலை ஆறு மணிக்குத்தான் திரும்பி வருவார். அதற்குள் தங்கைக்கு நிச்சயம் செய்து முடித்துவிட்டு அவரது மனைவி வந்து சேர்ந்துவிடுவாரா என்று கேட்கத் தயக்கமாக இருந்தது.

ஒரு கணம் தலையைச் சிலுப்பிக்கொண்டேன். இதென்ன வினோதம்? இவர்களை எனக்கு முன்பின் தெரியாது. இவர்கள் அண்ணாவைப் பார்த்திருக்கிறார்கள். அது ஒன்றுதான் தொடர்பு. அழைத்துச் சென்று அவனைக் காண்பிக்கக்கூடியவர்களும் அல்லர். அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். தப்பித்தவறி அவன் இந்தப் பக்கம் மீண்டும் வந்தால் நானே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். அதற்கு இவர்கள் எதற்கு?

மீண்டும் மனித மனத்தின் விசித்திரக் கவலைகளைத்தான் எண்ணிக்கொண்டேன். ஒரு சராசரியாக இருந்துவிடுவது எப்போதும் சௌகரியம்தான். சிந்திக்காதிருந்துவிட முடியுமானால் இன்னுமே சௌகரியம்.

ஏழரை மணிக்கு அவர் வேலைக்குப் புறப்பட்டுப் போனார். நான் வீட்டுக்கு வெளியேதான் அப்போதும் அமர்ந்திருந்தேன். ‘இங்கனயே இரு தம்பி. உங்கண்ணாத்தை இன்னிக்கி ஒருவேளை வருவாரு. வந்தா கூப்ட்டு இருக்க வையி. நான் வந்துடுதேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

பதினொரு மணி சுமாருக்கு அந்தப் பக்கமாக நாலைந்து பேர் தடதடவென ஓடினார்கள். ஒருவனைப் பிடித்து நிறுத்தி என்ன விஷயமென்று கேட்டேன். ‘ஒருத்தன் கட்டைய கொளுத்திப் போட்டு அதுமேல படுத்துக் கெடக்கறானாம் தம்பி. ஒடம்புல ஒத்த காயம்கூட படவேயில்லியாட்டிருக்கு. சின்ன வயசு சித்தர்னு பேசிக்கிடறாங்க.’

நானும் எழுந்து ஓட ஆரம்பித்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com