35. விஸ்வரூப தரிசனம்

அந்த லிங்கம் கருங்கல்லால் ஆனது போலத்தான் இருந்தது. ஆனால் வழுவழுப்பாக இருந்தது. தூக்கிப் பார்த்தால் கால் கிலோ கனம் தெரிந்தது. தண்ணீரில் அடித்து வந்திருக்க முடியுமா?

திருப்போரூர் சாமியைத்தான் நான் நினைத்துக்கொண்டேன். அந்த மனிதரிடம் என்னவோ இருந்திருக்கிறது. போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போனாலும், அவரது சொல் எப்படியோ வரலாறாகிவிட்டது.

ஆற்றில் அந்தச் சிவ லிங்கம் கிடைத்ததை நான் அப்போது பெரிதாக நினைக்கவில்லை. யாராவது போட்டிருப்பார்கள் என்று வினோத்திடம் சொன்னேன்.

‘ஆனா இத்தனை நூறு பேர் குளிக்கறாளே. யாருக்கும் கிடைக்காம இது ஏண்டா எனக்குக் கிடைச்சிருக்கும்?’ என்று வினோத் கேட்டான்.

‘தெரியலே. ஆனா நன்னாருக்கு. சின்னதா, அழகா.’

அவன் என் கையில் இருந்து அந்த லிங்கத்தை வாங்கிப் பார்த்தான். எனக்கென்னவோ அவனது கை நடுங்குவதுபோலத் தோன்றியது.

‘விமல், இது ஸ்ரீரங்கம். வைஷ்ணவத் தலம். இங்க ஓடற ஆத்துத் தண்ணில சிவலிங்கத்த கொண்டு வந்து யார் போட்டிருக்க முடியும்?’ என்று வினோத் கேட்டான்.

‘இங்கதான் போடணுமான்ன? வேற எங்கயாவது யாராவது போட்டிருப்பா. ஓட்டத்துல அது அடிச்சிண்டு வந்திருக்கும்டா’ என்று சொன்னேன். ஆனால் சொல்லும்போதே எனக்கு யோசனையாக இருந்தது. அந்த லிங்கம் கருங்கல்லால் ஆனது போலத்தான் இருந்தது. ஆனால் வழுவழுப்பாக இருந்தது. தூக்கிப் பார்த்தால் கால் கிலோ கனம் தெரிந்தது. தண்ணீரில் அடித்து வந்திருக்க முடியுமா? போட்டால் மூழ்கித்தான் போகும் என்று தோன்றியது. ஏனென்றால், நாங்கள் நின்ற இடத்தில் காலுக்கடியில் நிறைய கூழாங்கற்கள் இருந்தன. உருளைக்கிழங்கு அளவுக்கான கற்கள். இந்த லிங்கமும் அநேகமாக அந்தக் கற்களைப் போன்ற கனபரிமாணம் கொண்டதுதான். எங்கிருந்து அடித்து வரப் பட்டிருக்கும்?

வினோத் சொன்னான், ‘எனக்கு வேற என்னமோ தோணறதுடா. திருப்போரூர் சாமி சொன்ன மாதிரி இது சிவன் எனக்குக் குடுத்த பிரத்தியட்சக் காட்சியா இருக்குமோ?’

அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொன்னேன். ‘பிரத்தியட்சம்னா நேர்ல வந்து நிக்கறது. இந்த மாதிரி பொம்மையா கிடைக்கறதில்லே.’

‘ஆனா கோவிந்த ஜீயருக்கு இந்த மாதிரிதான் ஒரு லிங்கம் கிடைச்சதா வினய் என்கிட்டே சொல்லியிருக்கான்.’

‘அது யாரு?’

‘ராமானுஜரோட தம்பியாம். ஐ திங்க் சித்தி பிள்ளை. அவருக்கு காசிலயோ எங்கயோ குளிக்கறப்போ இந்த மாதிரி ஒரு சிவலிங்கம் கிடைச்சிதாம். அத எடுத்துண்டுபோய் காளஹஸ்தியிலே பிரதிஷ்டை பண்ணி பூஜை பண்ண ஆரம்பிச்சிட்டாராம்.’

‘ஓஹோ. அப்பறம் எப்படி அவர் ஜீயர் ஆனார். ஸ்மார்த்தாள்ள ஜீயர் உண்டான்ன?’ என்று கேட்டேன்.

வினோத் அதற்கு பதில் சொல்லவில்லை. அவன் அந்த லிங்கத்தையே வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென்று என்ன நினைத்தானோ. ‘இங்க பக்கத்துலதான் திருவானைக்கா இருக்கில்லே?’ என்று கேட்டான். கரையேறியதும் அப்பாவிடமும் அதைத்தான் கேட்டான்.

‘ஆமா. ஸ்ரீரங்கத்துலேருந்து நடந்து போற தூரம்தான். ரயில்வே கேட்டுக்கு அந்தப் பக்கம் திருவானைக்கா. இந்தப் பக்கம் ஸ்ரீரங்கம்’ என்று அப்பா சொன்னார். அவன் அதற்குமேல் ஒன்றும் கேட்கவில்லை, யாருடனும் பேசவும் இல்லை. அமைதியாகவே சித்ரான்னங்களை உண்டான். ஆற்றில் கை கழுவ இறங்கியபோது, ‘நாளைக்குக் கார்த்தாலே திருவானைக்காவுக்குப் போகணும்னு தோணறதுடா. அப்பாட்ட சொல்லேன்’ என்று சொன்னான்.

அன்றிரவு நாங்கள் ஆண்டவன் ஆசிரமத்து மடத்தில் தங்கினோம். மாமாவுக்கு அங்கே ஒருவரைத் தெரிந்திருந்தது. விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து தயாராகிவிட்டால் விஸ்வரூப தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக அவர் சொல்லியிருந்தார். அப்பாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ‘நாலு மணிக்கே எழுந்துடணும்’ என்று அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இரவு பன்னிரண்டரைக்கு நான் பின்புறம் செல்லக் கண் விழித்தபோது, அப்பா விழித்துக்கொண்டு அமர்ந்திருக்கக் கண்டேன்.

‘தூங்கலியாப்பா?’ என்று கேட்டபோது, ‘கார்த்தால சேவிச்சுட்டு அப்பறமா தூங்கிக்கலாம்னு நினைச்சேன்’ என்று சொன்னார். நான் வினோத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவன் கேட்டது நினைவுக்கு வந்து அப்பாவிடம் அதைச் சொன்னேன், ‘விஸ்வரூப தரிசனம் முடிஞ்சதும் திருவானைக்காவுக்கு ஒரு நடை போயிட்டு வருவோமாப்பா?’

‘எதுக்கு?’ என்று அப்பா கேட்டார்.

‘இல்லே. அதுவும் பழைய கோயில். நாயன்மாரெல்லாம் பாடியிருக்கா. போனதே இல்லியேன்னுதான் கேட்டேன்.’

அப்பா பதில் சொல்லவில்லை.

‘வினோத்தும் ஆசைப்பட்டான்ப்பா’ என்று சொன்னேன்.

‘அப்படியா? உன்கிட்டே சொன்னானா?’

நான் தலையசைத்தேன். தண்ணீரில் கிடைத்த லிங்கத்தைப் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வினோத் என்னிடம் சொல்லியிருந்தான். அவன் அதைச் சொல்லியிருக்காவிட்டாலும் நானாக அதை அப்பாவிடம் சொல்லியிருப்பேனா என்பது சந்தேகம்தான். இது ஒன்றும் அமானுஷ்யமோ, அற்புதமோ இல்லையென்றாலும், அப்பாவும் அம்மாவும் நிச்சயமாகக் கலவரமடைந்துவிடுவார்கள் என்று தோன்றியது. ஆனால் அம்முறை ஏனோ எனக்குச் சற்றும் பதற்றமோ, கவலையோ இல்லை. மாறாக நானே நினைத்திராத ஒரு வியப்புணர்வே என்னை ஆட்கொண்டிருந்தது. எப்படி நிகழ்கிறது இதெல்லாம்! எனக்கென்னவோ, வினோத் நிச்சயமாக எங்களோடு ஊர் திரும்பப் போவதில்லை என்று தோன்றிவிட்டது.

இது ஒரு சூட்சுமம். எதிலும் பொருந்தாத ஏதோ ஒரு ரகசியம். சமிக்ஞை. திருப்போரூர் சாமிகூட இப்படியொரு சந்தர்ப்பத்தை ஞான திருஷ்டியில் கண்டு சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். ஆனாலும் அவர்மூலம் அது வெளிப்பட்டிருக்கிறது. ‘நீயும் போகத்தான் போற.’

எப்படி முடிந்தது? யார் நிகழ்த்துவது இதையெல்லாம்?

அண்ணா விட்டுச் சென்றபோதும், வினய் காணாமல் போனபோதும் எழாத ஒரு வியப்புணர்வு அது. இதுதான் நடக்கப்போகிறது என்று தெரிந்துவிட்ட பிறகு மனம் அதற்கு ஏதோ ஒரு கட்டத்தில் தயாராகிவிடுகிறது. இரண்டு பேர் இல்லாமல் போனபோது வீடு அடைந்த பரபரப்பை நான் அறிவேன். முட்டிக்கொண்டு அப்பாவும் அம்மாவும் அழுத சுவர்களை எத்தனையோ தினங்கள் தொட்டுத் தடவிப் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டுச் சுவர்களெல்லாம் கண்ணீரால் பூசப்பட்டவை. அது காய்ந்து காரையாகி ஆங்காங்கே பெயர்ந்து நிற்கும். வீட்டைச் செப்பனிட வேண்டும் என்று அப்பா நினைத்ததே இல்லை. பூச்சுவேலையின் அவசியம் உணரப்படும் போதெல்லாம், திரும்பத் திரும்பக் கண்ணீர் தானாகச் சென்று சுவரில் படியும். காலக்கிரமத்தில் காய்ந்து போகும்.

எனக்கென்னவோ மறுநாள் பொழுது விடியும்போதே வினோத் எங்களோடு இருக்கமாட்டான் என்றுதான் தோன்றியது. அதற்காக நான் தூங்காமல் விழித்துக்கொண்டே எல்லாம் இருக்கவில்லை. நன்றாகவே தூங்கினேன். ஆனால் காலை வினோத்தான் என்னை எழுப்பினான். ‘டேய், அப்பா ரெடியாயிட்டா. அம்மா குளிக்கப் போயிருக்கா. சீக்கிரம் எழுந்து பல்லைத் தேய். கோயிலுக்குப் போகணும்’ என்று சொன்னான்.

எனக்குக் கண்ணைத் திறக்கவே முடியாத அளவுக்கு எரிச்சலாக இருந்தது. முதல் நாள் முழுவதும் திருச்சி, பாலக்கரை என்று எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டுத்தான் நாங்கள் கொள்ளிடக் கரைக்குப் போய்ச் சேர்ந்தோம். ‘இன்னிக்கு கோயிலுக்கு வேண்டாம். கூட்டம் அதிகம் இருக்கும். நாளைக்குக் கார்த்தால போகலாம்’ என்று அப்பா சொல்லியிருந்தார். நாளெல்லாம் நாங்கள் ஒதுங்க ஒரு இடம் தேடாதிருப்பதற்காகவே, அவர் எங்களை தனது சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று காட்டினார். ‘ராத்திரி மடத்துக்குப் போயிடலாம் அத்திம்பேர்’ என்று கேசவன் மாமா சொல்லியிருந்ததால் ராத்தங்கல் பிரச்னை விட்டது என்று நினைத்திருப்பார். அப்பாவுக்குச் செலவு செய்ய மனம் வராது. சிறு வயதில் இருந்தே ஏழைமையில் உழன்று வந்த மனிதர் அவர். சிறிய வேலைகள், சிறிய சம்பளம் என்று வாழ்க்கை அவருக்குச் சிக்கனமாக வாழச் சொல்லிக் கொடுத்திருந்தது. நான்கு பிள்ளைகளை ஒருவேளைகூடப் பட்டினி போடாதிருப்பதே தன் சாதனை என்று மாமாவிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். இதைக் கேசவன் மாமா எனக்குச் சொல்லியிருக்கிறார்.

வினோத் என்னை மீண்டும் மீண்டும் எழுப்பிக்கொண்டிருந்தான். வேறு வழியின்றி நான் எழுந்து உட்கார்ந்தேன். அந்த அதிகாலை நேரத்திலேயே மடத்தில் நிறைய நடமாட்டம் இருந்தது. உடம்பெங்கும் திருமண் சாத்திக்கொண்டு யார் யாரோ வேகவேகமாக எங்கோ ஓடிக்கொண்டிருந்தார்கள். ஜீயர் கெளம்பறார் என்று யாரோ சொன்னார்கள். ‘சீக்கிரம் போய் பல்லைத் தேய்டா’ என்று வினோத் சொன்னான். நான் களைப்புடன் எழுந்து மடத்தின் பின் பக்கம் போனேன். பல்லைத் தேய்த்துவிட்டுக் கிணற்றடியில் குளித்து முடித்தபோது, அங்கிருந்த குளியலறைக்குள் இருந்து அம்மா குளித்து முடித்துவிட்டு மடிசாருடன் வெளியே வந்தாள். என்னைக் கண்டதும், ‘ரெடியாயிட்டியா? சமத்து’ என்று சொன்னாள்.

அப்பா எனக்கும் வினோத்துக்கும் திருமண் இட்டுவிட்டார். ஒரு மாறுதலுக்கு நாங்கள் இருவரும் அன்றைக்கு வேட்டி கட்டியிருந்தோம்.

‘மடத்துல தங்கினா வேஷ்டி கட்டிண்டுதான் ஆகணும். திருமண் இட்டுண்டுதான் தீரணும்’ என்று மாமா சொன்னார்.

நாங்கள் விஸ்வரூப தரிசனத்துக்குக் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தோம். நூற்றுக்கணக்கில் மக்கள் குவிந்திருந்தார்கள். இன்னும் உள்ளே திரை திறந்தபாடில்லை என்று தெரிந்தது. காப்பிகூடக் குடிக்காமல் கிளம்பி வந்தது எனக்கு என்னவோ போலிருந்தது. அடிக்கடி கொட்டாவி வந்தது. வினோத்தைத் தனியே கூப்பிட்டுச் சொன்னேன், ‘ராத்திரி அப்பாகிட்ட கேட்டேண்டா. ஆனா அவர் ஒண்ணும் பதில் சொல்லலே.’

‘எது?’

‘திருவானைக்கா போகணும்னு சொன்னியே, அது.’

‘பரவால்ல விடு’ என்று வினோத் சொன்னான். இதுவும் எனக்கு வியப்பாக இருந்தது. ஒரே இரவில் முந்தைய தினத்தின் உணர்ச்சிப் பெருக்குகள் வடிந்துவிடுமா? சிவ லிங்கத்தின் சக்தி அவ்வளவுதானா? ஒருவேளை நான்தான் தேவையில்லாமல் கற்பனை செய்துகொண்டுவிட்டேனோ என்று தோன்றியது.

உள்ளே மணியடிக்கும் சத்தம் பலமாகக் கேட்டது. கோயில் யானை முதல் சேவைக்காக முன் மண்டபத்தில் நுழைந்தது. கூடியிருந்த அத்தனை பேரும் ரங்கா ரங்கா என்று கோஷமெழுப்பினார்கள். நாங்கள் கூட்டத்தில் முந்தித் திணித்துக்கொண்டு உள்ளே போக ஆரம்பித்தோம். ‘சீக்கிரம் வாடா’ என்று வினோத் என் கையைப் பிடித்து இழுத்தான். அப்பாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கேசவன் மாமா அவனுக்கும் முன்னால் உள்ளே போய்க்கொண்டிருந்தார். அம்மா என் பக்கத்தில்தான் இருந்தாள். அத்தனை நெரிசலிலும் சற்றும் முகம் சுளிக்காமல் அவள் ஸ்ரீசூக்தம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன்.

என்னால் அந்த அழுத்தத்தையும் நெரிசலையும் தாங்க முடியவில்லை. மூச்சு முட்டிக்கொண்டிருந்தது. யாரோ என் காலைக் கட்டி பின்னால் இழுப்பதுபோல உணர்ந்தேன். நான்கு புறமும் ஜனக்கூட்டம் இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னால் போகப் பார்க்க, என்னையறியாமல் நான் என்னைத் தள்ளுகிறவர்களை விலக்கி ஒவ்வோர் அடியாகப் பின்னால் போய்க்கொண்டிருந்தேன். அம்மா என்னைக் கவனிக்கவில்லை. இப்போது எனக்கும் அவளுக்கும் நாலைந்தடி இடைவெளி ஏற்பட்டுவிட்டிருந்தது.

என்னமோ தோன்றியது. சரி போ, இந்தக் கூட்டம் முதலில் உள்ளே போய்வரட்டும்; முடிந்தால் பிறகு போய்க்கொள்ளலாம் என்று நினைத்து, வலுக்கட்டாயமாக நான் என்னைப் பின்னால் செலுத்திப் போய்க்கொண்டே இருந்தேன். அப்பா, மாமா, வினோத், அம்மா எல்லோரும் சன்னிதிக்குள் போய்விட்டார்கள். நான் வெளிப்பிராகார மண்டபத்தின் ஓரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். அப்போதுதான் மூச்சுவிட முடிந்தது. அதற்குள் எனக்கு வியர்த்துப்போயிருந்தது.

என்ன ஜனம் இது? சற்றும் ஒழுங்கற்ற வடிவில்தான் பக்திப் பெருக்கு இருக்குமானால் ஒழுங்கின் இன்றியமையாமையைப் பேச அவசியமென்ன? திருப்பதியில் இதைக் காட்டிலும் பெரிய கூட்டம்தான். ஆனால் அங்கே ஒழுங்கு செய்ய ஆட்கள் இருந்தார்கள். சத்தம் போட்டுக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தெரிந்து வைத்திருந்தார்கள். கணப் பொழுது தரிசனம் முடித்துவைத்து, அடுத்த சில விநாடிகளில் சன்னிதிக்கு வெளியே கொண்டு தள்ளிவிடுவார்கள். இங்கே அந்த நேர்த்தி இல்லை. நேர்த்தியற்ற வழிபாட்டில் எனக்கு ஆர்வமில்லை.

வெளியே வந்ததும் அப்பாவும் அம்மாவும் ‘எங்கடா போயிட்டே? நன்னா சேவிச்சியா?’ என்று கேட்பார்கள். வெறுமனே தலையசைத்துவிட்டால் போதும் என்று நினைத்துக்கொண்டேன். சிறிது நேரம் உட்காரலாம் என்று நகர்ந்து சென்று மண்டபத் தூண் ஓரம் ஏறி அமர்ந்தேன்.

யாரோ கூப்பிடுவது மாதிரி இருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com