32. விபூதி யோகம்

'உண்மைலயே உங்களுக்கு எதாவது பவர் இருக்கா? எங்கண்ணா ஏன் உங்ககிட்டெ வந்தான்?'

அவரைப் பார்க்க ஓர் அணைந்த தீப்பந்தம் போலிருந்தார். தலை முதல் கால் வரை ஒரே அளவு. தோள்களிலோ, வயிற்றிலோ, இடுப்பிலோ, முதுகிலோ சற்றும் சதைப்பிடிப்பில்லை. முதுமையின் தளர்ச்சி அவரது கரங்களில் ஓடிய நரம்புகளில் தெரிந்தது. பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை எச்சில் விழுங்கிப் பேசினார். அப்படி அவர் எச்சில் விழுங்கும்போதெல்லாம் தொண்டையில் ஓர் எலும்பு இறங்கி ஏறியதைக் காண முடிந்தது. முகம் அடர்ந்த தாடியும் முடிந்த சடை முடியும் அள்ளிப் பூசிய விபூதியும்  மார்பில் புரண்ட குண்டு குண்டு ருத்திராட்ச மாலைகளும் அவரது தோற்றத்துக்கு ஒட்டவைத்த மாதிரி இருந்தது. ஆள் கறுப்புத்தான். ஆனால் எளிய வேட்டி சட்டையில் தாடியும் சடையும் இல்லாதிருந்தால் நடிகர் சுருளி ராஜனைப் போல் இருப்பார் என்று நினைத்தேன்.

என் வியப்பெல்லாம் அதி பயங்கரமான ஒரு செய்தியை மிகச் சாதாரணமான தொனியில் எப்படி இவரால் பேச முடிகிறது என்பதுதான். வினோத் கடும் கோபத்துடன் அவரிடம் கேட்டான், 'ஒருத்தன் வீட்ட விட்டு ஓடிப் போகப்போறேன்னு சொன்னா, நல்லது போயிட்டு வான்னு சொல்லுவிங்களா நீங்க? உடனே அவனோட அப்பா அம்மா யாருன்னு விசாரிச்சி அவங்களுக்கு சொல்ல வேணாமா? இது மட்டும் இப்ப எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?'

அவர் அப்போதும் பதறவில்லை. 'தம்பி, உங்கண்ணன் ஓடிப் போவேன்னு என்கிட்ட சொல்லவேயில்லியே? அவன் போயிடுவான்னு எனக்குத் தெரியும்னுதான் சொன்னேன்.'

'அத நீங்க அவன்கிட்ட சொன்னது தப்பு. எங்கப்பாட்டதான் சொல்லியிருக்கணும்.'

'உங்கப்பா இங்க வரவேயில்லியேப்பா!' என்று அவர் சொன்னார். இதற்கு என்ன பதில் சொல்வதென்று வினோத்துக்குத் தெரியவில்லை. 

'உங்க ரெண்டு பேர்ல யாருகிட்டே அவன் சொல்லிட்டுப் போனான்?' என்று சாமி கேட்டது.

'சொல்லிட்டுப் போகலை. ஆனா அவன் என்னென்னவோ மாதிரி நடந்துண்டான். என்கிட்டே கொஞ்சம் பேசியிருக்கான்.' என்று நான் சொன்னேன்.

'என்ன மாதிரி நடந்துக்கிட்டான்?' அவருக்குக் கதை கேட்கும் ஆர்வம் வந்துவிட்டாற்போல் இருந்தது. எனக்கு அது பிடிக்கவில்லை. நான் கதை சொல்ல அங்கே போயிருக்கவில்லை என்பதே காரணம். 

'எங்கண்ணாவுக்கு அந்தச் சுவடிய குடுத்தது நீங்கதானா?' என்று கேட்டேன்.

அவர் சிறிது யோசித்தார். பிறகு, 'நான் குடுக்கலை. அவன் எடுத்துக்கிட்டுப் போனதைத் தடுக்கவும் இல்லை' என்று சொன்னார். 'ஒண்ணு தெரிஞ்சிக்கங்க பிள்ளைங்களா. உங்கண்ணன் சாதாரணப்பட்டவன் இல்லை. அவன் வேற.'

'அப்படின்னா?'

'உங்கண்ணனாத்தானே கெளம்பிப் போனான்? வேற ஒருத்தனா வருவான்.'

'எப்போ?' என்று வினோத் கேட்டான்.

'தெரியலப்பா. அநேகமா அன்னிக்கி நான் இருக்க மாட்டேன்' என்று அவர் சொன்னார்.

அவரிடம் பேசுவதில் பெரிய பயன் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. 'அந்தச் சுவடி மருத்துவச் சுவடியா?' என்று மட்டும் கேட்டேன்.

'இருக்கும் தம்பி. எனக்குச் சுவடியெல்லாம் படிக்கத் தெரியாது. இங்க அதைப் பார்த்தான். பார்த்ததுமே எடுத்து வெச்சிக்கிட்டான். ஒனக்கு எதுக்குடா அதுன்னு கேட்டதுக்கு, இது எங்க வம்ச சரித்திரம்னு அவந்தான் சொன்னான்.'

இந்தப் பதில் என்னை மேலும் குழப்பியது. சுவடி படிக்கத் தெரியாத சாமிக்குச் சுவடி எதற்கு? யாரோ ஒருவன் அது தனது வம்ச சரித்திரம் என்று சொன்னால் உடனே சரியென்று ஒப்புக்கொண்டு விடுவாரா! அப்புறம் இவரென்ன சாமி? அதையெல்லாம்விட, இவரிடமிருக்கும் சுவடியை உரிமையுடன் எடுத்துச் செல்லுமளவுக்கு அண்ணா எப்படி இவருக்கு நெருக்கமானான்? அப்படி எதைக் கண்டான் இவரிடம்?

எனக்கு அவர் பெரிய ஞானி என்றோ, எல்லாம் அறிந்தவர் என்றோ தோன்றவில்லை. ஒரு சித்தராக இருக்க வாய்ப்பே இல்லை என்று தீர்மானமாகத் தோன்றியது. வாழைப்பழத்தில் இருந்து பிள்ளையார் சிலை எடுத்த சித்தர் அளவுக்குக் கூட இவரால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தேன். ஆனால் அண்ணா வீட்டை விட்டுப் போவான் என்று சரியாகக் கணித்திருக்கிறார். அவனிடம் அதைத் தெரியப்படுத்தியிருக்கிறார். அதுதான் உறுத்திக்கொண்டே இருந்தது.

நான் ஒரு தீர்மானத்துக்கு வந்து, துணிச்சலாக அதைக் கேட்டேன், 'உண்மைலயே உங்களுக்கு எதாவது பவர் இருக்கா? எங்கண்ணா ஏன் உங்ககிட்டெ வந்தான்?'

அவர் திடுக்கிடவும் இல்லை, திகைக்கவும் இல்லை. உணர்ச்சியற்ற பார்வையில் என்னை வெகுநேரம் அமைதியாகப் பார்த்துக்கொண்டே இருந்தார். பிறகு, 'இப்ப நீ எதுக்கு வந்தே?' என்று கேட்டார். 

'அண்ணாவைப் பத்தித் தெரிஞ்சிக்க. அவன் எங்க போனான்னு உங்களுக்குத் தெரியுமா?'

'தெரியாது. அவனைப் பத்தியே எனக்கு ஒண்ணுந்தெரியாது தம்பி. அவன் போயிடுவான்னு மட்டும்தான் தெரியும்.'

'அதான் எப்படி?'

'எப்படின்னு கேட்டேன்னா என்ன சொல்லுவேன்? சரி போ. நீயும் போகத்தான் போறே. தோ, இவனும் போயிடுவான். இது நடந்தப்பறம் திரும்பி வந்து கேளு. கேக்க வேணாம், அப்ப ஒனக்கே புரிஞ்சிடும்' என்று அவர் சொன்னார். 

உண்மையிலேயே நாங்கள் இருவரும் திகைத்துப் போனோம். 'டேய், இவரு பெரிய பிள்ளை பிடிக்கிற கும்பலோட தலைவன் போல இருக்கார். வேணாம்டா. நாம போயிடலாம்' என்று வினோத் சொன்னான். அதை அவர் காது படவே அவன் சொன்னதுதான் விசேடம். அதற்கும் அவர் சிரிக்கவோ, கோபப்படவோ இல்லை.

கிளம்பும்போது வினோத் சொன்னான், 'சாமி நாளைக்கு எங்கப்பாட்ட சொல்லி அவர இங்க கூட்டிண்டு வருவேன்.'

'வாயேன்?'

அவர் சற்றும் அதிராமல் பேசியது எனக்கு மேலும் மேலும் வியப்பூட்டியது.

'எங்கப்பா பெரிய கோவக்காரர். உங்க மேல போலிஸ் கம்ப்ளைண்ட் குடுப்பார்.'

'சரி.'

'எங்கண்ணா எங்க போனான்னு சொல்லிடுங்கோ.'

'நாந்தான் தெரியாதுன்னு சொன்னனே தம்பி? அவன் ஒண்ணும் என்கிட்ட சொல்லிட்டுப் போகலை. அப்படிச் சொல்லிட்டுப் போக அவன் என்ன வேலை வெச்சிக்கிட்டு ஊருக்கா போனான்?'

'பின்னே?'

'போகணும்னு அவன் விதி. போனான். ஒனக்கும் அதே விதிதான். நீயும் போவ. உன் தம்பியும் போவான்.'

'இது உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்று நான் ஆங்காரமாகக் குரல் எழுப்பிக் கத்தினேன். உண்மையில் நாந்தான் மிகவும் பதற்றமாகியிருந்தேன்.

'தெரியல கண்ணு. எழுவத்தாறு வயசாகுது எனக்கு. இதுவரைக்கும் யாருகிட்டயும் இப்படியெல்லாம் நான் சொன்னதுமில்ல; யாரப் பத்தியும் இந்த மாதிரி நினைச்சதும் இல்ல. என்னமோ உங்களப் பாக்குறப்ப அப்படித் தோணுது.' என்று அவர் சொன்னார். 

எனக்குக் குழப்பமும் பதற்றமும் கணந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருந்தன. ஒருவேளை வினோத் சொன்னதுபோல அவர் ஒரு பிள்ளை பிடிக்கிற ஆளாக இருப்பாரோ என்றுகூட நினைத்தேன். ஆனால் எழுபத்து ஆறு வயது முதியவர். சிவனடியார். பார்த்தால் தப்புத்தண்டா செய்யக்கூடியவராகத் தெரியவில்லை. தவிரவும் தாடியில்லாமல் வெள்ளை உடை அணிந்தால் சுருளி ராஜனைப் போலிருக்கக்கூடியவர். கடைசியில் நான் கேட்டே விட்டேன்.

'தயவுசெஞ்சி உண்மையச் சொல்லுங்கோ. உங்களுக்கு எதாவது சக்தி இருக்கா?'

அவர் என்னை அருகே வரச் சொன்னார். தன்னெதிரே இருந்த விபூதிச் சம்புடத்தில் இருந்து இரு விரல்களுக்கிடையே ஒரு சிட்டிகை எடுத்து என் நெற்றியில் தேய்த்தார். வினோத்தையும் அருகே அழைத்தபோது, 'வேணாம். நாங்க விபூதி வெச்சுக்கறதில்லே' என்று அவன் சொன்னான்.

'பரவால்ல தம்பி. தப்பில்லே.'

'இல்லே. எனக்கு வேண்டாம்.'

இப்போது அவர் சிரித்தார். 'இப்ப ஒண்ணு சொல்லணுன்னு தோணுது. சொல்லவா?' என்று கேட்டார். 

'என்ன?'

'நீ சிவனைப் பார்த்துடுவ. ஸ்தூலமாவே பார்த்துடுவ.'

வினோத்துக்கு மிகுந்த கோபம் உண்டாகிவிட்டது. 'யோவ் போய்யா!' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடிப்படி இறங்கிப் போய்விட்டான். எனக்குத்தான் சங்கடமாகிப் போனது. 'சாரி. அவன் கொஞ்சம் கோவப்படுவான்' என்று மட்டும் சொல்லிவிட்டு நானும் அந்த அறையைவிட்டு வெளியேறினேன்.

வீடு திரும்பும் வழியில் வினோத் தீர்மானமாகச் சொன்னான், 'அந்தாள் ஒரு ஃப்ராடு விமல். சரியில்லே. அண்ணா எதுக்கோ இவர்கிட்டே வந்திருக்கான். நான் வீட்டைவிட்டுப் போயிடுவேன்னு சொல்லியிருப்பான் போலருக்கு. அதை வெச்சிண்டு இவரா கதை கட்டி விட்டுண்டிருக்கார்.'

எனக்கு அதெல்லாம் முக்கியமாகவே படவில்லை. நானும் வினோத்தும்கூட வீட்டை விட்டுப் போய்விடுவோம் என்று எப்படி இவர் சொல்லியிருப்பார்? எழுபத்து ஆறு வயது முதியவர். பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருக்கும் பையன்களிடம் இப்படிப் பேசலாமா என்று கணப்பொழுது நினைத்துப் பார்க்க மாட்டாரா! அப்படியொரு ஞானதிருஷ்டியில் எல்லாம் தெரிந்துவிடுகிறதென்றால் என் அப்பாவைக் கூப்பிட்டுப் பேசுவதுதானே முறை?

அந்த வயதில் எனக்கு அவரைப் புரியவில்லை. பிறகு ஒரு சமயம் அந்தப் புரிதல் நிகழ்ந்தது. ஆனால் சுவடியே படிக்கத் தெரியாத ஒருவரிடம் மருத்துவச் சுவடி எப்படி வந்தது என்பது மிகப்பெரும் புதிராக இருந்தது. அதை அண்ணா வம்ச சரித்திரம் என்று சொன்னதாகவும், எடுத்துக்கொண்டபோது தடுக்காதிருந்துவிட்டதாகவும் சொன்னது அதன்பின்பும் புரியவில்லை.

'கொள்ளி போட வருவேன் மாமா' என்று திருப்பதியில் அண்ணா கேசவன் மாமாவிடம் சொல்லிவிட்டுப் போனதைத்தான் நினைத்துக்கொண்டேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் மட்டும் அமைந்துவிட்டால் அவனிடம் முதல் வினாவாக அதைத்தான் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். 'மருத்துவச் சுவடியிலே என்ன பெரிய வம்ச சரித்திரத்தைக் கண்டாய்?'

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com