30. சிவன் கோயில் பிரசாதம்

எனக்கு அந்த உரையாடல் ஆர்வம் தரவில்லை. வைத்தியச் சுவடியா? வம்ச சரித்திரம் என்றல்லவா அண்ணா சொன்னான்? அண்ணா பொய் சொன்னானா?

வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போகலாம் என்று கேசவன் மாமா சொன்னார். ஓலைச்சுவடி படிக்கத் தெரிந்தவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். ஒருவர் சொல்வதை இன்னும் நான்கு பேரிடம் கேட்டு சரி பார்த்துக்கொள்ளவும் அதுதான் வசதி.

‘அதெல்லாம் அவசியமா?’ என்று அப்பா கேட்டார்.

‘இல்லியா பின்னே? தானா வந்து ஒரு சுவடி நம்மாத்துல உக்காந்திருக்குன்னா, அதுல என்னமோ இருக்கு அத்திம்பேர். என்னன்னு தெரிஞ்சிண்டே தீரணும்’ என்று தீர்மானமாகச் சொன்னார்.

‘தானா ஒண்ணு எப்படி வரும்? என்னால அதை நம்ப முடியலே’ என்று அம்மா சொன்னாள்.

‘எதைத்தான் நம்ப முடியறது இந்தாத்துல? நன்னாருந்த ரெண்டு பேர் சொல்லிக்காம ஓடிப்போனதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?’

‘கிடைச்சவனையும் கோட்டை விட்டுட்டு வந்தியே, அதையும் சேர்த்துச் சொல்லு’ என்றார் அப்பா. மாமாவுக்கு வாயடைத்துவிட்டது. திரும்பத் திரும்ப அவர் பலமுறை சொல்லிவிட்டார். திருப்பதியில் எப்படி அவர் விஜய்யை விட்டுவிட்டு வந்தார் என்று அவருக்கே புரியவில்லை. ‘வேணும்னு செய்வனாக்கா? என்னமோ ஒரு சக்தி என்னை இழுத்துண்டுபோன மாதிரி ஆயிடுத்துக்கா. திரும்ப சுயநினைவு வந்து மலைக்கு ஓடினா அவனைக் காணலே.’

‘விடு கேசவா. உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? இதெல்லாம் கர்மா. நாம படணும்னு இருக்கு. பட்டுண்டிருக்கோம்’ என்று அம்மா அவரைச் சமாதானப்படுத்துவாள். என்னால் அவளைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவளுக்குத் துக்கம் இருந்தது. அழுகை வந்தது. அங்கலாய்ப்பு இருந்தது. பத்மா மாமியிடம் தினத்துக்கு நூறு முறை போய்ப் போய்ப் புலம்பிக்கொண்டிருந்தாள். ‘என்ன குறை வெச்சேன் இதுகளுக்கு? கண்ணாட்டம்தானே பாத்துண்டிருந்தேன்? கடிஞ்சி ஒரு வார்த்தகூடப் பேசினதில்லே. ஆத்துல குரல் ஒசத்தி ஒரு சண்டை போட்டதில்லே. அசம்பாவிதமா ஒண்ணுமே நடக்கலே. ஆனாலும் போயிடுத்துகளே.’

‘வருத்தப்படாதடி. எனக்கென்ன தோணறது தெரியுமா? ரெண்டும் பெரும் பணக்காராளா ஆகி கோட்டும் சூட்டுமா திரும்பி வரும் பாரு. இந்த டொக்கு கிராமத்துலே மாட்டிண்டு என்ன பண்ண முடியும்? எங்கயாவது பம்பாய் கல்கத்தான்னு போய் சம்பாதிச்சிண்டு வரும் பாரு’ என்று மாமி சொல்லுவாள்.

‘யாரு கேட்டா மாமி இதுகள் சம்பாத்தியத்தை? அவர் உடம்புல தெம்பு இருக்கறவரைக்கும் உழைக்கப்போறார். நன்னா படிக்க வெச்சி ஒரு உத்தியோகத்த தேடிக் குடுக்கத்தான் போறார். பெத்த கடமைக்கு அதை நாங்க செய்ய மாட்டோமா? அந்த நம்பிக்கை இல்லாம போயிடுமா?’

‘பைத்தியமே. உத்தியோகம், மாச சம்பளமெல்லாம் சாத்துஞ்சாதத்துக்குப் போதும். அதைத்தானே தினம் பொங்கிப் போட்டுண்டிருந்தே? உம்பிள்ளைகள் ராயலா வாழ நினைச்சிருக்கா. அதுக்கு உத்தியோகம் பாக்கறவனா இருந்தா போதாது. பத்து பேருக்கு உத்தியோகம் குடுக்கறவனா மாறணும். அப்படி மாறி வருவான்கள் பாரு.’

‘தெரியலியே மாமி. அம்பானிகூட அப்படித்தான் கெளம்பி வெளிநாட்டுக்கு ஓடினார், திரும்பி வந்து ரிலையன்ஸ் ஆரம்பிச்சார்னு எங்காத்துக்காரர் சொன்னார். ஆனா அவர்கூட அவாத்துல சொல்லிட்டுத்தான் போனாராமே?’

‘கிழிச்சார். உம்பிள்ளை வெளிநாட்டுக்குப் போறேன்னு சொன்னா நீ போக விட்டுடுவியாக்கும். நாஞ்சொல்றத நம்புடி. விஜய் எங்கயோ போய் ஒரு வேல தேடிண்டுதான் அடுத்தவன கூப்ட்டிருக்கான். உன் குடித்தன கஷ்டத்த மொத்தமா தீக்கற அளவுக்கு சம்பாதிச்சிண்டு அம்பாசிடர்ல வந்து இறங்கப் போறான் பாரு.’

‘கேக்க நன்னாருக்கு மாமி. ஆனா ஒண்ர வருஷம் காஞ்சீபுரத்துல பாடசாலைல படிச்சிட்டு இவன் எங்க போய் என்னத்த பண்ணுவான்? ஸ்கூல் படிப்பும் அரைகுறை. இந்தப் படிப்பும் அரைகுறை.’

‘படிச்சவன் என்னிக்குப் பணக்காரனாயிருக்கான்? உம்பிள்ளேள் நாலுமே புத்தி சூரியன்கள். எனக்கென்ன தெரியாதுன்னு நெனச்சியா? நாலு பேர் ஜாதகத்தையும் நான் பாத்திருக்கேன்’ என்று பத்மா மாமி சொன்னாள்.

அம்மாவுக்கு அது உண்மையிலேயே பெரிய ஆறுதல்தான். பத்மா மாமிக்குக் கொஞ்சம் ஜாதகம் பார்க்கத் தெரியும். திருவிடந்தையில் அநேகமாக அத்தனை பேர் ஜாதகத்துக்கும் அவளிடம் ஒரு பிரதி இருக்கும். திருமணப் பொருத்தம் பார்ப்பது, பால் காய்ச்ச, கிரகப் பிரவேசம் செய்ய நாள் பார்த்துக் கொடுப்பது என்று முடிந்ததைச் செய்துகொண்டிருந்தாள். அண்ணாவின் ஜாதகத்தை முதல் முதலில் பார்த்தபோதே, ‘இவன் பெரிய தொழிலதிபரா வருவான்‘ என்று சொன்னாளாம். வினய் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, ‘எழுதி வெச்சிக்கோ. வினய் ஒரு ஸ்கூல் வாத்தியாராத்தான் போவான்’ என்று சொல்லியிருக்கிறாள். ஊரிலேயே நூறு வயது தாண்டி வாழப் போகிற முதல் நபர் வினோத் என்றும், நான் ஒரு சினிமாக் கலைஞனாவேன் என்றும் சொல்லியிருக்கிறாள்.

‘அம்பானி ஓடிப்போனதாலதான் பிசினஸ் பண்ணி பெரிய ஆளா ஆனார். நாந்தான் சொன்னேனே, விஜய் ஒரு தொழிலதிபராத்தான் ஆவான்னு? அதான் அவனும் ஓடிப்போனான்’ என்று பத்மா மாமி சொன்னாள்.

‘ஆனா கொள்ளி போட வருவேன்னு சொல்லிட்டானாம் மாமி’ அம்மாவால் அதைத்தான் தாங்கவே முடியவில்லை.

‘பைத்தியம். அவன் அந்த அர்த்தத்துல சொல்லியிருக்கமாட்டாண்டி. கடேசி காலம் வரைக்கும் உன்னோட கூடத்தான் இருப்பேன்னு சொல்லியிருக்கான். உன் தம்பி ஒரு தத்தி. ஒரு மண்ணும் சரியா புரியாது அவனுக்கு.’

அர்த்தமற்ற ஆறுதல் என்று எனக்கே புரிகிறபோது அம்மாவுக்கு அது புரியாமலா இருக்கும்? ஆனாலும் வேண்டித்தான் இருந்தது. பத்மா மாமியிடம் புலம்புவது தவிர கோயிலுக்குப் போய் தாயார் சன்னிதியில் உட்கார்ந்து சிறிது நேரம் புலம்பிவிட்டு வருவாள். மாமாவிடம் புலம்புவாள். அப்பாவிடம் புலம்புவாள். என்னையும் வினோத்தையும் அழைத்து உட்கார வைத்துப் புலம்புவாள். துயரத்தின் மூழ்கடிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் அவதிப்படுபவளைப் போலத்தான் காட்டிக்கொண்டாள். ஆனாலும் அம்மா ஒரு நிதானத்தின் வளையத்துக்குள்ளேயே இருப்பதாக எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அவளது அழுகைக்கும் புலம்பல்களுக்கும் அப்பால் எங்கோ ஓரிடத்தில் அவளது வேறொரு மனம் நிலைகொண்டிருப்பதாக நினைத்தேன். அந்த மனத்துக்குத் துயரம் இல்லை. கண்ணீர் இல்லை. கதறல்கள் இல்லை.

முடியுமா? வாய்ப்பில்லை என்றுதான் தோன்றியது. ஆனாலும் புலம்பாத நேரங்களில் அம்மாவின் மௌனம் எனக்கு அதைத்தான் திரும்பத் திரும்பச் சொன்னது. ஒரு கண் தெரிவிக்காததையா சொற்கள் சொல்லிவிடும்? அவள் பார்வையின் தெளிவும் தீட்சண்யமும் எனக்குச் சமயத்தில் அச்சமூட்டும் அளவுக்கு விரிவு கொள்ளும். அனைத்தையும் ஏற்கெனவே தரிசித்து ஜீரணித்துவிட்ட பாவனை. வாழவேண்டியிருப்பதால் சொற்களோடு புழங்க வேண்டியிருப்பதாக நினைக்கிறாளா?

அன்றைக்கு நாங்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்குக் கிளம்பினோம். முதலில் என்னையும் வினோத்தையும் பத்மா மாமி வீட்டில் விட்டுவிட்டுப் போவதாகத்தான் இருந்தது. கிளம்பும் நேரத்தில் அம்மா நாங்களும் வரட்டும் என்று சொல்லிவிட்டாள். ‘எதுக்கு?’ என்று அப்பா கேட்டதற்கு, ‘பரவால்ல அத்திம்பேர். இனிமே தனியா விட்டுட்டு எங்கயும் போகவேண்டாம்’ என்று கேசவன் மாமா பதில் சொன்னார்.

அதிகாலை கேளம்பாக்கத்தில் இருந்து பஸ் பிடித்து செங்கல்பட்டு போய் இறங்கி, அங்கிருந்து வேறொரு பஸ் ஏறி வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தபோது, மதியம் பன்னிரண்டு மணியாகிவிட்டது. ‘பசிக்கறது’ என்று வினோத் சொன்னான். கோயிலுக்குப் போய்விட்டு வந்து சாப்பிடலாம் என்று அம்மா அவனைச் சமாதானப்படுத்தினாள். ‘இல்லேன்னா நடை சாத்திடுவா.’

அவசர அவசரமாகக் கோயிலுக்குப் போய்விட்டு வெளியே வந்தோம். ‘பிரசாதம் எதாவது வேணுமா?’ என்று அப்பா தயக்கத்துடன் கேட்டார். அம்மா எங்கள் இருவரையும் பார்த்தாள். நாங்கள் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்ததால், ‘சரி போகலாம்’ என்று கிளம்பிவிட்டார். அப்பாவுக்கு சிவன் கோயில்களுக்குப் போவதில் பிரச்னை இல்லை. ஆனால் அங்கே பிரசாதம் வாங்கிச் சாப்பிட யோசிப்பார். யாராவது கொண்டுவந்து கொடுத்தாலும் ஒரு சிட்டிகை கிள்ளியெடுத்து வாயில் போட்டுக்கொண்டு போதும் என்று சொல்லிவிடுவார். சிறு வயதில் அவரது தாத்தா சொல்லிக்கொடுத்த வழக்கம் என்று சொல்லியிருக்கிறார். சிவன் கோயில்களில் பிரசாதம் வாங்கித் தின்னாதே.

‘ஏம்ப்பா?’ என்று நான் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன்.

‘என்னமோ காரணம் இருக்கும். இல்லாம இருக்காது’ என்று மட்டும் பதில் சொன்னார். எனக்கு அந்த பதில் போதுமானதாக இல்லை. அம்மாவிடம் மீண்டும் கேட்டேன். ‘சிவன் கோயில் பிரசாதமெல்லாம் பெருமாள் கோயில் பிரசாதத்தவிட டேஸ்டா இருக்கும். நம்மளவாளுக்கு அந்த டேஸ்ட கொண்டுவர முடியறதில்லியேன்னு காண்டு’ என்று சொன்னாள். நான் சிரித்துவிட்டேன்.

கோயிலை விட்டு வெளியே வந்ததும், நாங்கள் ஒரு ஓட்டலுக்குச் சென்றோம். சாப்பிட்டுவிட்டு பில்லுக்குப் பணம் கொடுக்க வந்தபோது, கேசவன் மாமா ஒரு துண்டுச் சீட்டை எடுத்து கல்லாவில் இருந்த நபரிடம் நீட்டி, ‘இந்த அட்ரசுக்கு எப்படிப் போகணும்?’ என்று விசாரித்தார்.

‘பத்து நிமிஷம் நடக்கணும். இல்லேன்னா ஜட்கா வெச்சிக்கிட்டு போயிடுங்க. வெய்யிலா இருக்கு பாருங்க’ என்று அவர் சொன்னார்.

அப்பா ஒரு ஜட்கா வண்டி பிடித்தார். உள்ளே புல் பரப்பி அதன் மீது கோணி விரித்திருந்தது. புல்லின் வாசனை நன்றாக இருந்தது. நாங்கள் ஏறி உட்கார்ந்ததும் வண்டிக்காரன் கம்பிக் கொக்கியை மாட்டிவிட்டு முன்னால் சென்று ஏறி உட்கார்ந்து, ‘ஹக் ஹக்’ என்று சத்தம் கொடுத்தான். வண்டி புறப்பட்டது. எனக்கு அந்த குதிரை வண்டிப் பயணம் மிகவும் பிடித்திருந்தது. அதற்கு முன் நான் அப்படியொரு வண்டியில் சென்றதில்லை. வழியெங்கும் கடைகள். சாலை நிறைத்த மனிதர்கள். வீதிக்கு நான்கு நாடி சோதிட நிலையங்கள்.

‘நாடி ஜோசியம்னா என்னம்மா?’ என்று வினோத் கேட்டான்.

‘நாடி படிச்சி சொல்லுவா.’

‘நாடின்னா என்ன?’

‘நாடின்னா... நாடிதான். நம்மள பத்தி ஓலைல எழுதி வெச்சிருப்பா.’

‘யாரு?’

‘ரிஷிகள், மகான்கள்.’

‘அப்ப இப்ப நம்மகிட்ட இருக்கறது நாடியா?’

‘தெரியலே. என்னமோ சுவடி. என்னமோ எழுதியிருக்கு. அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கறதுக்குத்தான் இப்ப போறோம்.’

நான் வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படி அவனால் இப்படி இருக்கமுடிகிறது என்று ஆச்சரியமாக இருந்தது. நான் அந்த நாடிச் சுவடியைப் பற்றி அவனிடம் சொல்லியிருக்கிறேன். அண்ணாவுக்கு அது வந்து சேர்ந்த கதையும்கூட. ஒன்றுமே தெரியாததுபோல காட்டிக்கொள்வது பெரும் வித்தை. அதை எப்படி இவன் அநாயாசமாகச் செய்கிறான்? ஒரு வார்த்தை. ஒரே ஒரு சொல். திருப்போரூர் சாமியிடம் போய்க் கேட்டால் தெரிந்துவிடும் என்று சொல்லியிருந்தால், வைத்தீஸ்வரன் கோயிலுக்கே வந்திருக்கப் போவதில்லை. நான் சொல்லாதிருந்தது பெரிதல்ல. அவன் அப்படிக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்ததுதான் எனக்கு வியப்பூட்டிக்கொண்டிருந்தது. எனக்காகவா? நான் வீட்டை விட்டுப் போய்விடக் கூடாதென்பதற்காகவா? நான் அத்தனை முக்கியமா அவனுக்கு?

ஆனால் நானொரு கோழை. பொய்யன். பெற்ற தாயாகவே இருந்தாலும் உண்மையை மறைப்பவன். அதற்குச் சில நியாயங்களை நெய்து வைத்திருப்பவன். யாருமே ஒப்புக்கொள்ள முடியாத நியாயங்கள். எனக்கு அதைக் குறித்துச் சற்றும் கவலை கிடையாது. யாருடைய கண்ணீருக்கும் நான் காரணமாயிருக்க விரும்பவில்லை என்பதுதான் என் சுயம்.

பல வீதிகளைக் கடந்து அந்த குதிரை வண்டி ஓடிக்கொண்டே இருந்தது. நடந்தாலே பத்து நிமிடங்களில் போய்விடலாம் என்று அந்த ஓட்டல்காரர் சொன்னாலும், குதிரை வண்டியில் நாங்கள் அந்த இடத்துக்குப் போய்ச் சேரவே பத்து நிமிடங்கள் பிடித்தன. இறங்கும்போது வண்டியில் இருந்து ஒரு பிடி புல்லை உருவி என் நிஜார் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். ‘எதுக்குடா?’ என்று வினோத் கேட்டான்.

‘சும்மாதான். வாசனை நன்னாருக்கு’ என்று பதில் சொன்னேன்.

கேசவன் மாமா எங்களை வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்த வீட்டுக்குள் போனார். இரண்டு நிமிடங்களில் திரும்பிவந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். ஸ்ரீ காகபுஜங்கர் நாடி ஜோதிட நிலையம் என்று உள்ளே ஒரு சிறிய பலகை இருந்தது. வெளியே வாசலில் வைக்க வேண்டியதை இங்கே எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று யோசித்தேன். எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் வந்து உட்கார்ந்ததும், அப்பாவும் அம்மாவும் அவரை விழுந்து சேவித்தார்கள்.

‘சொல்லுங்கோ. நாடி பாக்கணுமா?’

கேசவன் மாமா அந்தச் சுவடியை எடுத்து அமைதியாக அவரிடம் நீட்டினார்.

‘என்ன?’

‘இதுல என்ன எழுதியிருக்குன்னு தெரியணும். திடீர்னு நேத்து ஆத்துல இது இருந்தது. இதுக்கு முன்னாடி இருந்ததில்ல. எங்கேருந்து, எப்படி, யார் கொண்டுவந்து போட்டதுன்னே தெரியலே’ என்று அப்பா சொன்னார்.

என் ஆர்வம் என்னை நிலைகொள்ளாமல் அடித்துக்கொண்டிருந்தது. அவர் வாய் திறந்து என்ன சொல்லுவார் என்று தவித்துக்கொண்டிருந்தேன். பதற்றத்தோடு வினோத்தைத் தொட்டு அழைத்தேன். அவன் திரும்பி என்ன என்று கேட்டான். சொல்ல எனக்கு ஒன்றுமில்லைதான். ஆனால் எனக்கிருந்த தவிப்பும் பதற்றமும் அவனுக்கும் இருக்கிறதா என்று பார்க்க விரும்பினேன்.

அந்தப் பெரியவர் சுவடியை விளக்கு வெளிச்சத்தில் தூக்கிப் பிடித்துப் படித்துப் பார்த்தார். பிறகு அப்பாவிடம் அதைத் திருப்பிக் கொடுத்தார்.

‘தொடர்ந்து ரெண்டு அசம்பாவிதம் குடும்பத்துலே. எல்லாம் ஏன் நடக்கறதுன்னே புரியலே. தாங்கமாட்டாம தவிச்சிண்டிருக்கோம். பெரியவா நீங்க எதாவது நல்ல வார்த்தை சொன்னேள்னா கேட்டுப்போம்.’

அப்பாவுக்குப் பேசவே முடியாமல் துக்கம் அடைத்தது. அவர் தனக்காக வைத்திருந்த சொம்பை எடுத்து அவரிடம் நீட்டினார்.

‘என்னது?’

‘குடிங்க’ என்று சொன்னார். தண்ணீர்தான். அப்பா நான்கு வாய் அருந்திவிட்டுத் திருப்பிக் கொடுத்ததும் வாங்கி வைத்துவிட்டு, ‘இந்த சுவடியிலே ஒண்ணுமில்லே. இது எதோ வைத்திய சுவடிலேருந்து உருவினது’ என்று சொன்னார்.

‘ஆனா எப்படி எங்க வீட்டு அடுக்களைக்கு வந்ததுன்னு புரியலையே?’ என்று அம்மா கேட்டாள்.

அதற்குமேல் எனக்கு அந்த உரையாடல் ஆர்வம் தரவில்லை. வைத்தியச் சுவடியா? வம்ச சரித்திரம் என்றல்லவா அண்ணா சொன்னான்? அண்ணா பொய் சொன்னானா?

என்னால் அதை நம்ப முடியவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com