26. ஊருக்கு ஓர் அழகி

‘பெரிய வருமானம் இல்லேன்னாலும், என்னிக்கு இந்த வீட்ல சோறு பொங்காம இருந்திருக்கு? குழம்பிருந்தா ரசம் இல்லே, ரசமிருந்தா குழம்பில்லே. ஆனா சோறில்லாம விட்டிருக்கேனா?’

பலார்ஷா ஸ்டேஷனில் ரயில் நின்றபோது, வெளியே வியாபாரிகள் சப்பாத்திக் கல் விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். வட்ட வடிவில் வழுவழுப்பான கற்கள். ஒவ்வொரு கல்லும் குறைந்தது இரண்டு கிலோ எடை இருக்கும். தலைக்குப் பத்துக் கற்களை அடுக்கி வைத்துக்கொண்டு, ஜன்னல் ஜன்னலாக நகர்ந்து போய்க்கொண்டிருந்தார்கள். ரயில் பயணிகளில் யார் சப்பாத்தி இடும் கற்களை வாங்குவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ரயிலிலேயே சப்பாத்தி இட்டு, சுட்டு உண்ணக்கூடிய வசதி கிடையாது. வடஇந்தியர்கள் பொதுவாக, ரயிலில் விற்கும் சப்பாத்திகளைக்கூட வாங்குவதில்லை. அவரவர் வீட்டிலேயே சப்பாத்தி சுட்டு அடுக்குகளில் எடுத்துவந்துவிடுகிறார்கள். என் இருக்கைக்கு எதிரே அமர்ந்திருந்த குடும்பம், ரயில் ஏறியதில் இருந்து இருபத்தி ஐந்து சப்பாத்திகளைச் சாப்பிட்டு முடித்திருக்கிறார்கள். கணவன் மனைவியும் இரு பிள்ளைகளும். அந்தப் பெண்மணி எடுத்துவந்திருக்கும் அடுக்கில் இன்னும் குறைந்தது நாற்பது ஐம்பது சப்பாத்திகள் இருக்கும். இன்னொரு பெரிய தூக்குச் சட்டியில் பருப்புக் கூட்டு வைத்திருந்தாள். அந்தப் பெண்மணியின் கணவரைப் பார்த்தபோது, அவர் ஒரு நகை வியாபாரியாக இருப்பார் என்று தோன்றியது. ஆனால், அறிமுகத் தயக்கம் விலகி பேச்சு சகஜமாகி அவர் தன்னைப் பற்றிச் சொன்னபோது, அவர் ஒரு யுனானி மருத்துவர் என்று அறிந்தேன். மருத்துவரானாலும் வேளைக்குப் பன்னிரண்டு சப்பாத்திகள் சாப்பிடுவதெல்லாம் உடல் நலனுக்கு உகந்ததல்ல என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை.

அந்தக் குடும்பம் திரும்பத் திரும்ப என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தது. ‘நீங்கள் ஏன் எதுவுமே சாப்பிடாமல் இருக்கிறீர்கள்?’

‘இல்லை. நான் நாற்பத்து எட்டு மணி நேர விரதத்தில் இருக்கிறேன்.’

‘சென்னை போய்ச் சேருகிற வரை பசி தாங்குமா?’

நான் அவர்களிடம் இரண்டு சப்பாத்திகளையாவது வாங்கி உண்டால் அவர்கள் அமைதியாகிவிடுவார்கள் என்று தோன்றியது. ஆனால் பயணங்களில் நான் பொதுவாக எதுவும் உட்கொள்வதில்லை. கிளம்புவதற்கு முன்னால், ஒரு கிலோ தந்தூரி சிக்கன், நான்கு முட்டை, ஒரு தம்ளர் பால் அருந்திவிட்டு வண்டி ஏறினால் போதும் எனக்கு. அடுத்த நாற்பத்து எட்டு மணி நேரத்துக்கு எனக்கு வேறெதுவும் வேண்டியிருக்காது. அவ்வப்போது தண்ணீர் மட்டும் அருந்தினால் போதும்.

இது ஒரு வசதி. என் குருநாதர் எனக்குச் சொல்லிக்கொடுத்த வழி. வெளியூர்ப் பயணங்களின்போது எதையும் உண்ணாதிருப்பது. கிளம்புவதற்கு முன்னால் முழுக் கொழுப்புணவு ஒன்றை பசி தீரும்வரை சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுவிட்டால் போதுமானது. அடிக்கடி கழிப்பறைக்குப் போகிற வேலையும் இருக்காது. குறைந்தது ஒரு முழுநாள் உண்ணாதிருக்கும்போது, உடல் இயந்திரம் செரிமானம் தாண்டி வேறு சில காரியங்களைச் செவ்வனே செய்யும். அது, அடுத்த உணவுக்குப் பிறகு மேலும் புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.

இதை நான் சொன்னபோது, அந்த யுனானி மருத்துவருக்குப் பெரிய ஆச்சரியமாகிப் போய்விட்டது.

‘வெறும் கொழுப்பா? முழுக் கொழுப்பா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

‘ஆம். அதிலென்ன சந்தேகம்?’

‘சுவாமிஜி, எதற்கும் ஒரு மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டுவிடுங்கள்’ என்று சொன்னார். நான் உடனே சரி என்று சொல்லிவிட்டேன்.

அறிவுரை சொல்வதையே பிழைப்பாகக் கொண்டவனுக்கு, அறிவுரைகள் ஒவ்வாமை ஏற்படுத்துபவை. எப்படி ஒரு நல்ல சமையல்காரன் கல்யாண வீடுகளில் தான் சமைத்ததை உண்பதில்லையோ அப்படி.

பேச்சை மாற்ற விரும்பி, நான் அந்த யுனானி மருத்துவரின் மனைவியிடம் வெளியே விற்றுக்கொண்டிருந்த சப்பாத்திக் கற்களைக் காட்டி, ‘நீங்கள் ஒன்று வாங்கிக்கொள்ளலாம்’ என்று சொன்னேன்.

‘என் வீட்டில் இருக்கிறதே’ என்று அவள் சொன்னாள்.

‘இருக்கலாம். ஆனால் உங்கள் சப்பாத்திகள் மிகவும் கனமாகத் தெரிகின்றன. பலார்ஷா கற்களில் சப்பாத்தி மிக மெல்லிசாக வரும்.’

‘அப்படியா? இது எனக்குத் தெரியாதே’ என்றவள், சட்டென்று வெளியே விற்றுக்கொண்டிருந்த ஒரு பையனைக் கூப்பிட்டு, உடனடியாக ஒரு ஜன்னல் வியாபாரத்தை முடித்தாள்.

யுனானி மருத்துவர், அந்தக் கல்லை வாங்கித் தடவிப் பார்த்தார். என்னிடமும் கொடுத்தார். நானும் தடவிப் பார்த்தேன். மென்மையாக, நன்றாக இருந்தது. எங்கள் வீட்டில் அம்மா இதே போன்றதொரு கல்லை வைத்திருந்தாள். அது ஒரு அபூர்வம். பொதுவாகத் தமிழ்நாட்டில் சப்பாத்திக் கல் என்பது மரத்தாலான பொருளாகவே இருக்கும். இம்மாதிரி பாலீஷ் போடப்பட்ட கருங்கற்கள் பயன்பாட்டில் இருந்ததில்லை. வட்ட வடிவில் மரப்பலகை ஒன்றைச் செதுக்கி, அதன்மீது வழுவழுப்பான பிளாஸ்டிக் தாளை ஒட்டியிருப்பார்கள். வாரச் சந்தைகளில், திருவிழாக்காலங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அம்மாவுக்கு எங்கிருந்து அந்தக் கருங்கல் கிடைத்தது என்று தெரியவில்லை. இந்த பலார்ஷா கல்லைவிட அது கனமானது. தூக்கித் தலையில் அடித்தால் கண்டிப்பாக மண்டை உடைந்து ரத்தம் கொட்டும்.

இதை எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் என்றால், வினய் ஊரில் இருந்து புறப்பட்டுக் காஞ்சீபுரம் போய்ச் சேரவில்லை என்ற தகவல் வந்தபோது, அப்பா அந்தச் சப்பாத்திக் கல்லில்தான் முட்டிக்கொண்டு அழுதார். நான்கு முறை முட்டிக்கொண்ட உடனேயே, கேசவன் மாமா பாய்ந்து அவர் கையில் இருந்த கல்லைப் பிடுங்கி வீசியெறிந்துவிட்டார். ஆனால் அப்பாவின் நெற்றி புடைத்துக்கொண்டுவிட்டது. விநாடிப் பொழுதில் புசுபுசுவென்று ஊதி ஒரு குழிப் பணியாரம் போலாகிவிட்டது.

‘என்னடி பண்ணுவேன் நான்? இப்படி பண்ணிட்டானே இந்தப் பிள்ளை? அப்படி எங்க போய்த் தொலைஞ்சிருப்பான்? நன்னாத்தானே இருந்தான்? சரியாத்தானே இருந்தான்? எல்லாமே சரியாத்தானே இருந்தது? திடீர்னு என்ன கிராக்கு பிடிச்சிப்போச்சோ தெரியலியே?’

குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தார். அண்ணா காணாமல் போனபோதாவது, நாலு இடங்களில் தேடிப் பார்த்து அதன் பிறகே கிடைக்கவில்லை என்ற திருப்தியிருந்தது. வினய் காணாமல் போனதே நான்கு தினங்களுக்குப் பிறகுதான் தெரியவந்ததால், எங்கே போய்த் தேடுவது என்றுகூடப் புரியவில்லை.

வினோத்தான் சட்டென்று சொன்னான், ‘அப்பா அவன் ஒருவேளை திருப்பதிக்குப் போயிருக்கலாம்ப்பா.’

‘திருப்பதியா?’

‘ஆமாப்பா. திருப்பதிலதான் சாதம் ஃப்ரீ. அங்க போனா நிம்மதியா சாகறவரைக்கும் சாப்பாட்டு பிரச்னையில்லாம வாழலாம்னு அண்ணா அவன்கிட்டே சொன்னதா ஒருநாள் சொன்னான்.’

அம்மாவுக்கு இந்தத் தகவல் மிகுந்த அதிர்ச்சியளித்தது. ‘சாதம் என்னிக்குடா உங்களுக்குப் பிரச்னையா இருந்தது?’ என்று கேட்டாள்.

‘பெரிய வருமானம் இல்லேன்னாலும், என்னிக்கு இந்த வீட்ல சோறு பொங்காம இருந்திருக்கு? குழம்பிருந்தா ரசம் இல்லே, ரசமிருந்தா குழம்பில்லே. ஆனா சோறில்லாம விட்டிருக்கேனா?’ என்று கேட்டாள்.

‘அக்கா, நீ இரு. வினோத், யாரு சொன்னா? விஜய்யா?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘ஆமா மாமா. சின்ன வயசுல அப்பா எங்கள எல்லாம் ஒரு சமயம் திருப்பதிக்குக் கூட்டிண்டு போனாளே, அப்ப போயிட்டு வந்தப்போ சொன்னானாம்.’

‘இது உனக்கு எப்படித் தெரியும்?’

‘அண்ணா காணாம போனப்போ, அவன் திருப்பதிக்குப் போயிருக்கலாம்னு வினய் சொன்னான் மாமா.’

மாமா அரைக் கணம்கூட யோசிக்கவில்லை. ‘அத்திம்பேர், நான் கெளம்பறேன். ரெண்டு நாள்ல வரேன்’ என்று சொல்லிவிட்டு, ஒரே ஒரு மஞ்சள் பையில் ஒரு வேட்டி சட்டை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனார்.

அன்றைக்கே, என்னையும் வினோத்தையும் பத்மா மாமி வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, அப்பாவும் அம்மாவும் காஞ்சீபுரத்துக்குக் கிளம்பிப் போனார்கள்.

மாமி மிகுந்த அக்கறையும் கனிவுமாக எங்கள் இருவரையும் கவனித்துக்கொண்டாள். உட்காரவைத்து சாப்பாடு போடும்போது, ‘ஏந்தான் உங்காத்துக்கு இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு கஷ்டம் வந்து சேர்றதோ தெரியலே போ’ என்று சொன்னாள். ‘என்னவானாலும் மனசத் தளர விட்டுடாதீங்கோடா. உங்கப்பாம்மாக்கு நீங்க ரெண்டு பேரும்தான் தூணா நின்னு தாங்கணும்’ என்று சொல்லிவிட்டு, இரவுக்குச் சமைக்கக் காய்கறி வாங்கிவருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போனாள்.

காத்திருந்தாற்போல, பத்மா மாமியின் மகள் சித்ரா என்னருகே வந்து அமர்ந்து, ‘ஏண்டா வினய் காணாம போயிட்டான்?’ என்று கேட்டாள். ஒரு கணம் எனக்குத் தாங்கமுடியாத கோபம் வந்தது. ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி அவளை திடுக்கிடவைக்க மிகவும் விரும்பினேன். அது ஒரு அர்த்தமற்ற கோபம் என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியவில்லை. உண்மையில் யார் மீது அல்லது எதன் மீது கோபம் என்றும் இனம் காண முடியவில்லை. எனவே வெறி பிடித்தவன்போலச் சொன்னேன், ‘நீதான் காரணம். உன்னாலதான் அவன் காணாமப் போனான்!’

‘ஐயோ, நான் என்னடா செஞ்சேன்?’

‘நீ வினய்ய லவ் பண்ணியா?’

சித்ரா என்னைவிட இரண்டு வயது மூத்தவள். நான் பெண்களை நினைக்க ஆரம்பித்தபோது, ஒரு சில சமயம் அவளைப் பற்றியும் நினைத்துப் பார்த்திருக்கிறேன். அது ஒரு கொலைப் பாவம் என்று உடனே தோன்றிவிடும். என் மானசீகத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு சிந்தனையை மாற்றிக்கொண்டுவிடுவேன். ஓரிரு நாள் இடைவெளியில் மீண்டும் என்னையறியாமல் அவளை நினைப்பேன். திருவிடந்தையில் அந்நாள்களில் அவள் மட்டும்தான் பார்க்க லட்சணமாக இருந்த ஒரே பெண். என்னைவிட இரண்டு வயது மூத்தவள் என்ற ஒரே காரணத்தால், என்னால் அவளைத் தொடர்ந்து நினைக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் வினய் அவளைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறான் என்று தெரியவந்தபோது, ஏனோ சில காலம் எனக்கு அவனைப் பிடிக்காமல் போனது. பிறகு அதுவும் சரியானது. என்ன தவறு? அவன் சித்ராவைவிட இரண்டு வருடங்கள் மூத்தவன். திருவிடந்தையில் அவன் நினைத்து ரசிக்கவும் வேறு அழகிகள் கிடையாதுதான்.

எனக்கு மிக நன்றாகத் தெரியும். காஞ்சீபுரத்துக்குப் போவதற்கு முன்னால், வினய் பெரும்பாலான நேரங்களில் சித்ராவைத்தான் நினைத்துக்கொண்டிருந்தான். வாய் விட்டுச் சொன்னால்தானா என்ன? அவனுக்குள் இருந்த பல்வேறு குழப்பங்களுக்கு இவள் ஒரு காரணமாயிருப்பாளோ என்று எனக்கு அப்போது தோன்றியது. எல்லாக் குழப்பங்களையும் உதிர்த்துவிட்டுத்தான் அவன் பாடசாலைக்குப் போய்ச் சேர்ந்தான். அல்லது போனபின் அவை தன்னியல்பாக உதிர்ந்திருக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுக்காலம் முற்றிலும் வேறொரு சூழலில், பெருமாளும் பாராயணமும் புளியோதரையுமாக வாழ்ந்த ஒருவனுக்கு திடீரென்று மீண்டும் என்ன ஆயிருக்கும்? புரியவேயில்லை.

என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று முடிவு செய்துகொண்டுதான் நான் சித்ராவிடம் கேட்டேன், ‘நீ வினய்ய லவ் பண்ணியா?’

‘ஐயோ’ என்று வினோத் என்னை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

‘பரவால்லடா. இவ இவம்மாட்ட சொல்லி, மாமி நம்ப அப்பாட்ட சொல்லி, அப்பா என்னை பெல்ட்டால அடிச்சாலும் பரவால்ல வாங்கிக்கறேன். ஆனா எனக்கு இதுக்கு பதில் தெரியணும். நீ சொல்லு சித்ரா. வினய்ய நீ லவ் பண்ணியா?’ என்று மீண்டும் கேட்டேன்.

‘சீ, அதெல்லாம் இல்லை. யார் சொன்னா உனக்கு?’ என்று சித்ரா கேட்டாள்.

‘அவன் அடிக்கடி உன்னை நினைச்சிண்டிருந்தான்.’

‘அப்படியா?’ என்றாள். சிறிது ஆச்சரியப்பட்டது போலிருந்தது. ஆனால் உடனே அழ ஆரம்பித்தாள். ‘நீ இப்படியெல்லாம் பேசறது எனக்குப் பிடிக்கலே. எங்கம்மாக்கு தெரிஞ்சா கொலையே பண்ணிடுவா’.

‘சரி இனிமே பேசலை. ஆனா வினய் காணாமபோனதுக்கு நீயும் ஒரு காரணம்’ என்று சொன்னேன்.

அவளால் அந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. நான் அதை அன்று சொல்லியிருக்கக் கூடாது. அது என் அறிவின் முதிர்ச்சியின்மையை எனக்கே தெரியப்படுத்திய தருணம். பத்மா மாமியின் மகளைப் பற்றி வினய் என்னிடம் சொன்னபோதுகூட, அவள் மார்புத் திரட்சிக்கு உள்ளே இருக்கும் எலும்புகளையும் ரத்தத்தையும் பற்றித்தான் சொன்னான். அல்லிக் குளத்தில் தற்கொலைக் காட்சிக்குத் தயாரான கன்னட நடிகையைக் கண்டபோது அவனுக்கு எழுந்த அதே உணர்வு.

என்னால் அந்த வயதில் அதை வேறு மாதிரி புரிந்துகொள்ளவே முடியவில்லை. வினய் மனத்தில் சித்ரா இருந்திருக்கிறாள். அல்லது அப்படி அவள் அங்கே இடம்பிடிக்க ஏதுவாக அவள் ஏதாவது பேசியிருக்கலாம், சிரித்திருக்கலாம். அட, காதலித்திருக்கத்தான் கூடாதா?

ஆனால், அது ஏன் வினய்யின் ஒருதலைக் காதலாக இருந்திருக்கக் கூடாது என்று என்னால் யோசிக்க முடியவில்லை. தூண்டுதல் அவளிடத்திலிருந்தே வந்திருக்க வேண்டும் என்று தீர்மானமாகத் தோன்றியது.

அப்படியே இருந்திருந்தால்தான் என்ன? காஞ்சீபுரத்துக்குப் போனபிறகு அனைத்தையும் அவன் மறந்துதானே போனான்? பிரம்மோற்சவத்துக்கு வந்தபோதுகூட,

‘எம்மனா, என் குலதெய்வமே

என்னுடைய நாயகனே

நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை

இவ்வுலகினில் ஆர் பெறுவார்?

நம்மன் போலே வீழ்த்து அமுக்கும்

நாட்டில் உள்ள பாவம் எல்லாம்

சும்மெனாதே கைவிட்டு ஓடித்

தூறுகள் பாய்ந்தனவே’

என்று கண்மூடிக் கிரங்கி நின்று பாசுரம் சொன்னவனுக்கு, பத்மா மாமியின் மகளோ, அவளது மார்பகத்தினுள்ளே உள்ள எலும்பும் சதையுமோ நினைவில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

வேறு ஏதோ நடந்திருக்கிறது. மிக நிச்சயமாக சித்ரா அதற்குக் காரணமில்லை. அல்லது அவள் மட்டும் காரணமாயிருக்க முடியாது.

அன்றிரவு படுக்கப் போகும்முன் நான் சித்ராவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ‘நான் சொன்னத மறந்துடு. உங்கம்மாட்ட சொல்லிடாத’ என்று சொன்னேன்.

‘சொல்லமாட்டேன் விமல். எனக்கு ஒரு அண்ணா இருந்து அவன் ஓடிப்போயிருந்தா, நானும் இந்த மாதிரியெல்லாம்தான் யோசிச்சிப் பாத்திருப்பேன்.’

அப்போது எனக்கு அவளைப் பிடித்தது. வெகுநாள் கழித்து, அன்றிரவு மீண்டும் அவளை நினைத்துக்கொண்டு தூங்கிப்போனேன்.

மறுநாள் பத்மா மாமி வீட்டிலேயே குளித்து, சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போகும் வழியில், வினோத் என்னைத் திட்டினான். நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று சொன்னான். அது இரண்டு குடும்பங்களுக்கு இடையில் பெரிய பகையை உருவாக்கிவிடும் என்று அவன் அஞ்சினான்.

‘இல்லேடா. அவ அவம்மாட்ட சொல்லமாட்டேன்னு சொல்லிட்டா.’

‘அப்படித்தான் சொல்லுவா. ஆனா கண்டிப்பா இது பெரிய பிரச்னையாயிடும் பார். நம்பம்மாவுக்கு இருக்கற கஷ்டம் போதாதுனு இதுவேற ஒண்ணு.’

எனக்கு அழுகை வந்தது. அடக்கிக்கொண்டு, ‘அவதான் காரணம்னா என்னிக்காவது வினய் திரும்பி வந்துடுவாண்டா. அந்த மாதிரி எந்தக் காரணமும் இல்லேன்னாத்தான் அண்ணா போன மாதிரி ஆயிடுமோன்னு தோணித்து’ என்று சொன்னேன்.

வினோத்துக்கு நான் சொன்னது புரியவில்லை. சிறிது நேரம் அவன் யோசித்துக்கொண்டே இருந்தான். பிறகு கேட்டான், ‘அண்ணா போன மாதிரின்னா? அவன் வரவே மாட்டான்னு சொல்றியா?’

அந்தக் கணம் எனக்கு தோன்றியது. அப்பாவிடமோ அம்மாவிடமோ சொல்லாத நானறிந்த உண்மைகளை இவனிடம் சொல்லலாம். என்ன நடந்தாலும் சரி. செருப்படி பட்டாலும் சரி. இதற்குமேல் என்னால் தூக்கிச் சுமக்க முடியாது.

‘ஆமா. அவன் வரமாட்டான்.’

‘ஏண்டா?!’ என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

‘அவன் சன்னியாசி ஆயிட்டாண்டா. இமயமலைக்கோ எங்கியோ போயிட்டான்!’ என்று சொன்னேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com