31. சாமி

தாழ்வாரத்தில் இரண்டு காவி வேட்டிகள் உலர்ந்துகொண்டிருந்தன. நாலைந்து கௌபீனங்களும் ஒரு காசித் துண்டும் தரையில் விரித்துப் போடப்பட்டிருப்பதைக் கண்டேன்.

என் நம்பிக்கைகள் தகர்ந்துகொண்டிருந்தன. என் ஆதர்சம் நொறுங்கிக்கொண்டிருந்தது. பிரமிப்புகளின் திருதராஷ்டிர அரவணைப்பு நெகிழ்ந்து கொடுக்க ஆரம்பித்திருந்தது. என்னால் அண்ணாவை ஒரு பொய்யனாக எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அவனிடமிருந்து எனக்கு வந்து சேர்ந்த ஒவ்வொரு சொல்லும் சத்தியம் என்று கருதுவதை ஒரு கௌரவமாக நினைத்திருந்தேன். ஆனால் அவன் ஏன் அப்படிச் சொன்னான்? ஏதோ ஒரு மருத்துவச் சுவடியின் ஒரு பக்கம். அது கிடைப்பதற்குத் திருப்போரூர் சாமி தேவையில்லை. எனக்குத் தெரிந்தே நீலாங்கரையில் ஒரு நாட்டு மருத்துவர் அப்போது இருந்தார். ஊரார் அவரைப் பண்டார தேசிகர் என்று அழைப்பார்கள். அதுதான் அவரது இயற்பெயரா அல்லது ஏதோ ஒரு காரணம் பற்றி அப்படியொரு பெயர் அவருக்கு அமைந்ததா என்று எனக்குத் தெரியாது.

ஒரு சமயம் எங்கள் பள்ளிக்கூடத்தில் ஸ்கவுட்ஸ் கேம்ப்பாக எங்களை நீலாங்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். அதிகாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு, ஊர்வலம் போவதுபோலப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நாங்கள் நீலாங்கரைக்குப் போய்ச் சேர்ந்தபோது, கடலோரம் ஏழெட்டுத் தென்னை மரங்களுக்கு நடுவே அமைந்திருந்த பண்டார தேசிகரின் பந்தல் போட்ட ஓட்டு வீட்டில்தான் எங்களுக்குக் காலை ஆகாரம் கொடுத்தார்கள். எங்கள் ஸ்கவுட் மாஸ்டரின் பால்ய சிநேகிதர் அவர் என்பது அப்போது தெரிந்தது. ‘பசங்களா இவரு பெரிய பண்டிதரு. பெரிய பெரிய புஸ்தகமெல்லாம் படிச்சவரு. பாத்துக்கங்கடா’ என்று ஆசிரியர் சொன்னார். தேசிகரின் வீட்டில் ஏராளமான புராதனமான புத்தகங்களும் ஓலைச் சுவடிகளும் இருந்தன. வைத்திய வல்லாதி, கன்ம நூல், அகஸ்தியர் பரிபூரணம், முப்பூ சூஸ்திரம், போகர் முனிவரின் சரக்கு வைப்பு எண்ணூறு என்று அங்கே நான் கண்ட பல புத்தகங்களின் பெயர்கள் எனக்கு இன்னமும் நினைவிருக்கின்றன. ஒரு சுவடியை நான் தொடலாமா கூடாதா என்று தயங்கியபடியே ஓரத்தில் மெல்லத் தொட்டபோது, ‘எடுத்துப் பாரு தம்பி’ என்று தேசிகர் சொன்னார். அண்ணா வைத்திருந்த சுவடிப் பக்கம் போலத்தான் அதுவும் இருந்தது. புராதனமானது. பழுப்பேறியது. தெளிவற்ற எழுத்துகளில் எதையெதையோ பேசியது.

‘இது கடம்பாவனி பிரசவ சூத்திரம். எண்ணி ஏழு மூலிகெ. உடுகாட்டி, உரோசிதம், அமரகோளம், இல்லி, சயவரி, உடுநி, கட்டிணசஞ்சீவினி. முடிஞ்சிதா? இந்த ஏழ என்னமா சேர்த்து, எப்பிடிக் கட்டி ஒண்ணாக்குறதுன்றதுதான் சங்கதியே. இன்னிக்கி யாரு இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு பிரசவம் பாக்குறாங்க? பிரசவ மரணமே இல்லாம செய்யமுடியும் தம்பி. ஆனா பாரு, போற போக்குலே கத்தியில்லாமெ பிரசவமே இல்லைன்னு சொல்லிப்பிடுவான்கள்’ என்று அவர் சொன்னார். சிறுவர்களுக்கு இதெல்லாம் என்ன புரியும் என்று அவர் எண்ணிப் பார்க்கவேயில்லை. வந்திருந்த அத்தனை மாணவர்களையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு அருகே உட்கார வைத்துக்கொண்டு என்னென்னவோ சொன்னார். எங்களுக்கு அவர் சொன்ன எதுவும் புரியவில்லை. ஆனாலும் ஒரு நூறடி ஆழத்தில் புதைந்துபோன மனிதர் ஒருவரைத் தோண்டி எடுத்து மேலே கொண்டுவந்து வைத்த மாதிரி இருந்தார். அதை ரசித்தோம்.

அண்ணா ஒருவேளை நீலாங்கரை வைத்தியரிடம் எதற்காவது போயிருப்பானோ என்று தோன்றியது. அவரிடமிருந்து எடுத்துவந்த சுவடித் தாளை திருப்போரூர் சாமி கொடுத்ததாகச் சொல்லிவிட்டானோ? எனக்கு அதைத் தெரிந்துகொள்ளாவிட்டால் நிம்மதி இராது என்று தீர்மானமாகத் தோன்றியது. வினோத்திடம் விஷயத்தைச் சொல்லி, ‘நீயும் வருகிறாயா?’ என்று கேட்டேன்.

‘எங்க? நீலாங்கரைக்கா?’

‘இல்லே. திருப்போரூருக்கு. அந்த சாமிய நேர்ல பாத்து ஒரே ஒரு வார்த்தை கேக்கணும் எனக்கு.’

‘என்னது?’

‘அவருக்கு அண்ணாவைத் தெரியுமா? தெரியாதா?’

இடைப்பட்ட நாள்களில் நானும் வினோத்தும் வழக்கத்துக்கு விரோதமாகச் சற்று நெருங்கியிருந்தோம். வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல் நாங்கள் இருவரும் அண்ணாவைப் பற்றியும் வினய்யைப் பற்றியும் நிறையப் பேசினோம். அண்ணா காணாமல்போனதற்கு நான் எண்ணியிருந்த காரணத்தை முதலில் இருந்தே வினோத் நம்பவில்லை. ‘அவன் ஒண்ணும் ஞானியெல்லாம் இல்லே’ என்றுதான் சொன்னான்.

‘ஆனா அவன் தியானமெல்லாம் பண்ணுவாண்டா. தலைகீழாக்கூட நிப்பான். நானே பாத்திருக்கேன்.’

‘அது ப்ராக்டிஸ் பண்ணா வரும்’ என்று வினோத் சொன்னான்.

நான்கூட ஓரிரு முறை சுவரோரம் தலையணை ஒன்றை வைத்து, அதன்மீது தலையை நிறுத்தி, காலை மேலே உயர்த்திப் பார்த்திருக்கிறேன். என்னால் அது முடியவில்லை. மூச்சு வாங்கியது என்பதைவிட பயமாக இருந்தது. எந்தக் கணமும் தடாரென்று விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. இத்தனைக்கும் சுவரோரம்! ஆனால் அண்ணா வெட்ட வெளியில் மிக அநாயாசமாகத் தலை குப்புற நின்றான். அப்படி நின்றதோடு மட்டுமின்றி, கையை அசைப்பது போன்ற லாகவத்தில் ஒரு காலையும் திருப்பி அசைத்தான். பயிற்சிதான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் யாருக்கு இதையெல்லாம் பயிலத் தோன்றும்? எனக்குத் தோன்றவில்லையே? வீட்டில் வேறு யாருக்கும் இப்படியெல்லாம் எண்ணிக்கூடப் பார்க்க முடிந்ததில்லையே? இதை ஒரு சாதனையாக அவன் கருதியிருந்தால், அத்தனை பேரையும் கூப்பிட்டு வேடிக்கை பார்க்கச் சொல்லி, செய்து காட்டியிருப்பான். எங்கள் வீடென்ன, ஊரே அசந்துபோய்க் கைதட்டியிருக்கும். ஆனால் அவன் என்னை மட்டுமல்லவா சாட்சிக்கு வைத்தான்? நான் சொல்லுவதை யாரும் எக்காலத்திலும் பொருட்படுத்தப்போவதில்லை என்பதை எப்படியோ தெரிந்துகொண்டுதான் அவன் அப்படிச் செய்தானோ என்று தோன்றியது.

என்னவானாலும் அவனைப் பற்றி இன்னும் ஒரு வரியாவது தெரிந்துகொண்டுவிட வேண்டும் என்று தீவிரமாக நினைத்தேன். அந்த வாரம் வெள்ளிக்கிழமை, பள்ளிக்கூடம் விட்டு நேரே வீடு திரும்பாமல், திருப்போரூருக்குப் போய்விடுவது என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் மிகவும் தயங்கினாலும், நான் இடைவிடாமல் வற்புறுத்தியதால் வினோத்தும் என்னோடு வரச் சம்மதித்தான்.

பள்ளிக்கூடத்தின் வாசலிலேயே பேருந்து நிற்கும். காண்டீபன் பஸ் சர்வீஸ். சரியாகப் பள்ளி விட்டு ஐந்து நிமிடங்களில் ஒரு வண்டி வரும். நாங்கள் காத்திருந்து அதில் ஏறி திருப்போரூருக்குப் போய்ச் சேர்ந்தோம்.

‘முதல்ல கோயிலுக்குப் போகணுமா?’ என்று வினோத் கேட்டான்.

‘அதெல்லாம் வேணாம். சாமி எங்க இருக்கும்னு யாரையாவது கேக்கணும். சீக்கிரம் பார்த்துட்டு ஆத்துக்குப் போயிடணும். இல்லேன்னா அப்பா சந்தேகப்படுவார்.’

நாங்கள் கோயில் வாசலில் தேங்காய்க் கடை வைத்திருந்த பெண்மணியிடம் திருப்போரூர் சாமியைக் குறித்து விசாரித்தோம்.

‘எதுக்கு?’ என்று அந்தப் பெண்மணி கேட்டாள்.

நான் கூசாமல் பொய் சொன்னேன், ‘எங்கம்மா அவர பாக்கப் போயிருக்கா. அம்மாகிட்டதான் ஆத்து சாவி இருக்கு.’

அந்தப் பெண்மணி சொன்ன வழியில் நாங்கள் சாமி வீட்டை அடைந்தபோது வெளியே ஒரு ஜட்கா வண்டி நின்றுகொண்டிருந்தது. ‘டேய், அவர் எங்கயோ கிளம்பிண்டிருக்கார் போலருக்கே’ என்று வினோத் சொன்னான்.

‘பரவால்ல வா’ என்று அழைத்துக்கொண்டு நேரே உள்ளே போய்விட்டேன். வீடு மிகவும் இருட்டாக இருந்தது. தாழ்வாரத்தில் இரண்டு காவி வேட்டிகள் உலர்ந்துகொண்டிருந்தன. நாலைந்து கௌபீனங்களும் ஒரு காசித் துண்டும் தரையில் விரித்துப் போடப்பட்டிருப்பதைக் கண்டேன். ஒரு பெரிய பிரம்புக்கூடை நிறைய காய்ந்த மாலைகள் கிடந்தன. தாழ்வாரத்தை ஒட்டி மாடிக்குச் செல்லும் மரப்படிக்கட்டுகள் முழுதும் அரிசி மணிகள் சிந்தியிருந்தன. சாமி வீட்டு சமையல் கட்டு மாடியில்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

நாங்கள் கூடத்துக்கு வந்தபோது அங்கே ஒரு பெரியவர் தரையில் அமர்ந்து கணக்குப் பிள்ளை மேசை மீது ஒரு பேரேட்டை வைத்துக்கொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும், ‘யாரு?’ என்று கேட்டார்.

‘சாமிய பாக்கணும்’ என்று வினோத் சொன்னான்.

‘சாமி வெளிய கெளம்பிட்டிருக்காங்களே. காலமே வாங்க தம்பிகளா’

‘இல்லே. ரெண்டு நிமிஷம் பாக்கணும். இப்பவே’ என்று சொன்னேன்.

பின்புறம் யாரோ வந்து நிற்பது போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். சாமிதான் நின்றிருந்தார். சடைமுடியும் நெற்றி நிறைத்த விபூதியும் வெள்ளையும் கருப்புமாகப் படர்ந்திருந்த பெரும் தாடியும் இடுப்பு வேட்டியையே நெஞ்சு வரை இழுத்து கழுத்தைச் சுற்றிப் போர்த்தியிருந்த கோலமுமாக அவரை நான் முதல் முதலில் அப்போதுதான் அத்தனை நெருக்கத்தில் கண்டேன்.

எங்கள் பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்கு வந்திருக்கிறார். பித்தா பிறைசூடி என்று பாட்டுப் பாடி ஐந்து நிமிடங்கள் ஏதோ பேசிவிட்டுப் போனார். அப்போது பார்த்ததைவிட நேரில், நெருக்கத்தில் இன்னமும் சற்றுக் கருப்பாயிருந்ததுபோலத் தோன்றியது.

‘ஆரு தம்பி?’ என்று சாமி கேட்டது.

‘திருவிடந்தைலேருந்து வரோம். விஜய்யோட ப்ரதர்ஸ்’ என்று நான் சொன்னேன்.

அவர் முகத்தில் எதையும் புரிந்துகொண்ட பாவனை இல்லை. வெறுமனே எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

‘படிக்கிற பசங்களா?’ என்று கேட்டபடி, தன் கையில் வைத்திருந்த சுருக்குப் பையைத் திறந்து உள்ளே இருந்து விபூதி எடுத்து எங்கள் கையில் போட்டார். ‘தணிகா, பசங்களுக்குப் பிரசாதம் குடுத்துடு’ என்று சொன்னார். கணக்குப் பிள்ளை உடனே எழுந்து உள்ளே போனார்.

‘சாமி உங்ககிட்டே நாங்க பேசணும்.’

‘என்ன?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.

‘எங்கண்ணா உங்களைப் பத்தி சொல்லியிருக்கான். அவன் இப்ப எங்களோட இல்லை. ஓடிப்போயிட்டான்’ என்று வினோத் சொன்னான்.

யார் என்ன என்று கேட்டறிவதற்கு முன்னால், அவர் ‘என்ன வயசு?’ என்று கேட்டார்.

‘பதினேழுலே போனான். இப்போ அவனுக்கு பத்தொம்பது இருக்கும்’

‘ஓ...’ என்றது சாமி.

‘அவனை உங்களுக்குத் தெரியும்னு சொன்னான். நீங்க அவனுக்கு ஒரு ஓலைச்சுவடி குடுத்திருக்கிங்க.’

‘நானா?’

‘ஆமா. அப்படித்தான் சொன்னான். அதுலே அவன் ஓடிப்போவான்னு எழுதியிருக்காம். நாலு வரியிலே எங்க குடும்பத்தோட மொத்த கதையும் இருக்குன்னு சொன்னிங்களாம்.’

அவர் சில விநாடிகள் என்னை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘வா’ என்று சொல்லிவிட்டு மாடிப்படி ஏற ஆரம்பித்தார். நாங்கள் இருவரும் அவர் பின்னால் படியேறச் சென்றபோது கணக்குப் பிள்ளை இரண்டு சாத்துக்குடிப் பழங்களோடு வந்தார். ‘போறச்சே வாங்கிக்கறோம்’ என்று வினோத் சொன்னான்.

‘சாமி இப்ப வெளிய கெளம்பணும்’ என்று அவர் மீண்டும் சொன்னார். மேலே போய்க்கொண்டிருந்த சாமி நின்று, ஒருகணம் அவரைத் திரும்பிப் பார்த்தார். பிறகு, ‘இன்னிக்குப் போகலை. நாளைக்குப் பார்த்துக்குவம்‘ என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தார். ‘வா தம்பி’ என்று எங்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுத் தனது இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டார்.

அது அசப்பில் ஒரு சிம்மாசனம் போலத்தான் இருந்தது. ஆனால் கால்கள் இல்லை. தரையிலேயே முதுகு வைத்த மணைப் பலகை போலக் கிடந்தது. ஆனால் பெரிது. நெடு நேரம் உட்கார்ந்தால் புட்டம் வலிக்குமே என்று யாரோ யோசித்து மெத்தென்று வெல்வெட் துணி விரித்து வைத்திருந்தார்கள். ஆசனத்துக்கு எதிரே ஒரு சிறு மேசை இருந்தது. தரையில் இருந்து முக்கால் அடி உயரம். இரண்டரை அடி அகலம் இருக்கும். சாமி அந்த மேசையின் மீது எதிரே உட்காருகிறவர்கள் பார்க்கிறபடிக்கு ஒரு முருகன் சிலையை வைத்திருந்தது. சிலையின் பாதங்களில் நான்கைந்து ரோஜா இதழ்கள் சிதறிக் கிடந்தன. ஒரு பெரிய விபூதிச் சம்புடம். அருகே ஒரு குங்குமக் கிண்ணம். நீள் செவ்வக அறை முழுதும், அறுபடை வீட்டுக் காட்சிகள் சித்திரமாகத் தீட்டப்பட்டிருந்தன.

எங்களுக்கு அது வியப்பாக இருந்தது. சாமி இப்படித் தனது தனியறைக்கு எங்களை அழைத்துவந்து பேசுவார் என்றெல்லாம் நாங்கள் எண்ணியிருக்கவில்லை. தவிரவும், சாமி என்பவர் எப்போதும் பக்தர்களின் நடுவே பவனி வருகிறவராக இருப்பார் என்று நான் எண்ணியிருந்தேன். வரிசையில் நின்றுதான் அவரை தரிசிக்கவேண்டி இருக்கும் என்று வழியில் சொல்லிக்கொண்டே வந்தேன். ஆனால் சற்றும் எதிர்பாராவிதமாக அவர் மிகவும் எளிமையாகவும் தனித்தும் இருந்தார்.

வினோத்தான் ஆரம்பித்தான். ‘எங்கண்ணா உங்களைத் தெரியும்னு சொன்னான். நிஜமாவே தெரியுமா சாமி?’

‘பேரென்ன சொன்னே? விஜய்யா?’

‘ஆமா’

‘சுவடி வெச்சிருந்தானா? நான் குடுத்தேன்னு சொன்னானா?’

‘ஆமா சாமி.’

‘ஐயரூட்டுப் புள்ளதானே?’ என்று ஒருதரம் கேட்டுக்கொண்டார்.

‘ஆமா. நாங்க ஐயங்கார்.’

அவர் சிரித்தார். பிறகு, ‘அந்த சுவடிய எடுத்தாந்திங்களா?’ என்று கேட்டார்.

‘இல்லே. அதை அப்பா வெச்சிருக்கார். ஆனா அது நாடியெல்லாம் இல்லை; எதோ வைத்திய சுவடின்னு சொல்றா.’

‘யாரு சொன்னாங்க?’

‘வைத்தீஸ்வரன் கோயில்ல போய்க் கேட்டோம்.’

அவர் மீண்டும் சிரித்தார். ‘உங்கண்ணன் ஒரு நாள் காணாம போயிடுவான்னு எனக்குத் தெரியும். போவுறதுக்கு முன்ன, கூடப் பொறந்த ஒருத்தர்ட்டே சொல்லிட்டுப் போடான்னு சொன்னேன். சொன்னானா?’ என்று கேட்டார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com