34. லிங்கப் பிரதிஷ்டை

என் அப்பாவைப் பற்றிப் பிற்காலத்தில் நான் நினைவுகூர என்னவெல்லாம் இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். அவரது டிரங்குப் பெட்டி ஒன்றைத்தவிர வேறெதுவும் எனக்கு சட்டென்று அப்போது நினைவில் வரவில்லை.

கொள்ளிடத்தில் தண்ணீர் இருந்தது. அது வழக்கமாகச் சித்திரையில் இருக்கும் தண்ணீர் அளவைக் காட்டிலும் அதிகம் என்று அப்பா சொன்னார். கரையெங்கும் மக்கள் வீசப்பட்ட நாற்றுகளைப்போலச் சிதறிக் கிடந்தார்கள். எங்கும் பேச்சு. எல்லா முகங்களிலும் சந்தோஷம். குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். பெரிய பெரிய ஒயர் கூடைகளில் கட்டுச் சாதங்கள். நதிக்கரையில் துண்டு விரித்து அமர்ந்து சாப்பிடுவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள். இருட்ட வேண்டும். அதுதான் கணக்கு. நிலவு தெரியத் தொடங்கிவிட்டால் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும்.

‘முன்னல்லாம் சித்ரா பௌர்ணமிக்கு இங்கே சங்கீத வித்வான்கள் வருவா. ஒரு மைக் கிடையாது. மேடை கிடையாது. ஒண்ணுங்கிடையாது. உக்காந்து பாட ஆரம்பிச்சான்னா மணிக்கணக்கா கேட்டுண்டே இருக்கலாம்’ என்று அப்பா சொன்னார். அப்பாவுக்குப் பூர்வீகம் ஸ்ரீரங்கம். பத்துப் பன்னிரண்டு வயதில் குடும்பம் இடம் பெயர்ந்துவிட்டது. தாத்தா ஒரு பிரிட்டிஷ் அதிகாரிக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

‘கச்சேரிக்கெல்லாம் போவிங்களா?’ என்று வினோத் கேட்டான்.

‘அப்படின்னு இல்லே. அதெல்லாம் தஞ்சாவூர்லே நடக்கும். ஸ்ரீரங்கத்துல பெருமாள் சேவிக்கறது ஒண்ணுதான் ஜோலி. தினம் ஒரு உற்சவம். புறப்பாடு. சேவாகாலம். சித்ரா பௌர்ணமின்னா மட்டும் இங்க கொள்ளிடத்துக்கு வந்துடுவோம் அப்பல்லாம். நெஜத்த சொல்லணும்னா நான் பாட்டுக் கேட்டதே வருஷத்துல அந்த ஒரு நாள்தான்.’

அப்பா பாட்டு கேட்டோ, எதையாவது பாடி முணுமுணுத்தோ நான் என்றுமே கேட்டதில்லை. அவர் சினிமா பார்க்கமாட்டார். புத்தகங்கள் படிக்கும் வழக்கம் கிடையாது. அவருக்கு நண்பர்கள் இருந்ததில்லை. வேலைக்குப் போவதும் வீட்டுக்கு வருவதும் தவிர அவர் வேறெதையும் செய்து நான் கண்டதில்லை. கேசவன் மாமா தினமணி வாங்க வேண்டும் என்று அடம் பிடித்து வீட்டுக்குப் பேப்பர் போட வைத்தபோது ஓரிரு நாள் எடுத்துப் புரட்டியிருக்கிறார். அதன்பின் அதையும் தொடவில்லை. மாலை ஒருவேளை செய்தி கேட்பார். அதை ஒரு கடமை போலச் செய்வார். மற்றபடி உலகத்தோடு அவருக்கு வேறு தொடர்புகள் இருந்ததில்லை.

இத்தனைக் காலம் இல்லாமல் திடீரென்று இந்த வருடம் ஸ்ரீரங்கத்துக்குப் போகலாம் என்று அவர் சொன்னதே அம்மாவுக்குப் பெரிய வியப்பு. ஆற்றங்கரையில் வேட்டி விரித்து ஐந்து பேரும் மொத்தமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது அதைக் காட்டிலும் நம்ப இயலாத தருணம். எனக்குத்தான் சற்று பயமாக இருந்தது. ‘அதுகள் ரெண்டும் இருந்திருந்தா எவ்ளோ நன்னா இருந்திருக்கும்!’ என்று பெரியவர்கள் மூவரில் யாராவது ஒருவர் சொல்லிவிட்டால்கூட முடிந்தது கதை. அதன்பின் யாரும் சிரிக்க முடியாது. எதையும் பேசவும் முடியாது. இருளைப் போலக் கவியும் மௌனத்தின் வலைப்பின்னல்களுக்குள் ஒடுங்கிவிட வேண்டியதுதான். அதுகூடப் பரவாயில்லை. ஆற்றங்கரை வெட்ட வெளியில் செங்கல் வைத்து அடுப்பு மூட்டி அம்மா மூன்று மணியில் இருந்து நிறைய சமைத்திருக்கிறாள். இதற்காகவே, வரும்போது மளிகை சாமான், பாத்திரம் பண்டங்களெல்லாம் எடுத்துப்போயிருந்தோம். புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம். உருளைக்கிழங்கு பொரியல். அபூர்வமாக, அப்பா தானே கடைக்குப் போய் அரைக்கிலோ வாழைக்காய் சிப்ஸ் வாங்கி வந்திருந்தார். ‘ஒனக்குப் பிடிக்குமேன்னுதாண்டா’ என்று கேசவன் மாமா சொன்னார்.

எனக்கு அந்தச் சூழல் மிகவும் பரவசமளித்தது. நதியும் மக்களும். தனித்தனியே பொருள் தரும் பல நூறு சொற்கள் ஒரே சமயத்தில் பல நூறு பேரிடமிருந்து புறப்பட்டு வெளிப்படும்போது பொருள் உதிர்த்து சத்தமாகும் விந்தையைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். நதியைப் போலவே அதுவும் முடிவற்றதாயிருந்தது. சட்டென்று நதியெங்கும் சொல்லாகி ஓடினால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். என்னமோ தோன்றி, அம்மாவிடம் இதைச் சொன்னபோது, ‘இந்தா இப்போ இத சாப்டு’ என்று ஒரு வாழைப்பழத்தை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஒவ்வொரு சொல்லும் வாழைப்பழமாகிவிட்டால், அம்மா சிப்ஸ் பாக்கெட்டைப் பிரித்துவிடுவாள் என்று தோன்றியது. ஆனால் அதைச் சொல்லவில்லை.

அப்பா, ஸ்ரீரங்கத்தில் கழிந்த தன் இளமைக்காலத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘எங்கப்பா பெரிய இங்கிலீஸ் ஸ்காலர். பிரிட்டிஷ்காரனே பிரமிச்சுப் போற மாதிரி இங்கிலீஷ் பேசுவார்’ என்று சொன்னார்.

‘என்ன படிச்சவர்?’ என்று கேசவன் மாமா கேட்டார்.

‘படிப்பெல்லாம் ஒண்ணுமில்லே கேசவா. அப்பாக்கு வெள்ளத்தோல்காரான்னா ஒரு ப்ரீதி. திருச்சினாப்பள்ளில டெபுடி கலெக்டரா இருந்த ஒருத்தனுக்கு இவர் என்னமோ ஹெல்ப் பண்ணியிருக்கார். வாரும் ஓய், நம்மளோடவே இருந்துடும்னு சொல்லி மெட்ராசுக்குக் கூட்டிண்டு போயிட்டான் அவன்.’

‘அதுக்கு முன்னாடி?’

‘ஸ்கூல் வாத்யார். ஸ்கூல்னா என்னன்னு நெனச்சே? திண்ணைப் பள்ளிக்கூடம். உத்தர வீதியிலே ஒரு பட்டாச்சார் ஆத்து வாசல் திண்ணையிலே நடக்கும். கார்த்தால ரெண்டு மணி நேரம். சாயந்திரம் ரெண்டு மணி நேரம். அவ்ளோதான் ஸ்கூல்.’

‘சம்பளம்?’ என்று வினோத் கேட்டான்.

‘சம்பளமாவது ஒண்ணாவது? ஆத்து வாசல்லே வருஷத்துக்கு ரெண்டு தடவை வண்டியிலே அரிசி மூட்டை வந்து இறங்கும். உப்பு புளி பருப்பெல்லாம் ஒரு ரெட்டியார் கடையிலே கணக்கு வெச்சிண்டு வாங்கிக்க வேண்டியது. விஜயதசமி அன்னிக்கு அவர்ட்ட படிக்கிற பிள்ளைகளோட தகப்பனார் கடைக்குப் போய் கணக்கைக் கேட்டு செட்டில் பண்ணிட்டு வந்துடுவா.’

‘அதென்ன விஜயதசமி அன்னிக்கு மட்டும்?’

‘அதென்னமோ தெரியலே. ஆனா அப்பல்லாம் அப்படித்தான். பத்து பிள்ளைகள் படிச்சான்னா, பத்து பேர் ஆத்துலயும் பேசி வெச்சிண்டு, மொத்தமா கொண்டுபோய் கணக்குத் தீத்துடுவா.’

அப்பா இன்னும் நிறைய சொன்னார். பாலக்கரையில் ஒரு இங்கிலீஷ்கார சிப்பாயை குதிரையில் இருந்து இறங்கச் சொல்லி இவரை ஏற்றி உட்கார வைத்து ஓட்டிப் போகச் சொன்னாராம். ‘அந்தக் காலத்துலே வெள்ளைக்கார சிப்பாய் எதிர்லே நின்னு பேசக்கூட எல்லாரும் பயப்படுவா. எங்கப்பா அவாளையெல்லாம் விரல் சொடுக்கிக் கூப்டுவா.’

அம்மா புன்னகை மாறாமல் அவர் பேசுவதை மௌனமாகக் கவனித்துக்கொண்டே இருந்தாள். எத்தனையோ முறை அப்பா இந்தக் கதைகளை அவளுக்குச் சொல்லியிருக்கக்கூடும். பெரிய சுவாரசியங்களற்ற இளமைப்பருவம்தான் என்றாலும், அவரிடம் சொல்வதற்கு அது ஒன்றுதான் இருந்தது. தாத்தாவும் அவரது ஆங்கிலப் புலமையும். தாத்தாவும் பிரிட்டிஷ் அதிகாரிகளும். தாத்தாவும் அவரது ஆளுமையும்.

என் அப்பாவைப் பற்றிப் பிற்காலத்தில் நான் நினைவுகூர என்னவெல்லாம் இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். அவரது டிரங்குப் பெட்டி ஒன்றைத்தவிர வேறெதுவும் எனக்கு சட்டென்று அப்போது நினைவில் வரவில்லை. ஆனால் இரண்டு பிள்ளைகள் விட்டுவிட்டுப் போன பிறகும், ஒரு மனிதர் தன் பிள்ளைப் பிராயத்தை நினைவுகூர முடிவது பெரிய விஷயம் என்று நினைத்தேன். கேசவன் மாமாதான் அந்த ரகசியத்தைப் பிற்பாடு போட்டு உடைத்தார்.

‘புரியலியா உனக்கு? எத்தனை வயசானாலும் எத்தனை கஷ்டம் அனுபவிச்சாலும், கடைசிக்காலம் வரைக்கும் அவர் அவரோட தகப்பனாரோடதான் இருந்தார். அவர் சாகறவரைக்கும் இவர்தான் வெச்சிக் காப்பாத்தியிருக்கார். இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் அவரோட தகப்பனாரைப் பத்தி சொல்றார்னா, இந்த சுபாவம் உங்களுக்காவது நிலைக்கணும்னு நினைக்கறார்.’

நாங்கள் வெகு நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். நானும் வினோத்தும் படிப்பில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுவது பற்றி அப்பாவுக்கு மிகுந்த சந்தோஷம் என்பதை அன்று வெளிப்படையாகச் சொன்னார்.

‘நமக்கெல்லாம் இது ஒண்ணுதாண்டா போக்கிடம். படிப்பில்லேன்னா பிழைப்பில்லே.’

‘சாப்பிடலாமா?’ என்று அம்மா கேட்டாள்.

‘இன்னும் பத்தே பத்து நிமிஷம்மா’ என்று சொல்லிவிட்டு, ‘அப்பா நான் ஆத்துல குளிக்கணும்’ என்று வினோத் சொன்னான்.

‘இருட்டிடுத்தேடா. மொதல்லயே சொல்லியிருக்கக்கூடாதா?’

‘பரவால்லப்பா. பத்தே நிமிஷம். இவ்ளோ தண்ணிய பாத்துட்டு குளிக்காம போனா நன்னாருக்காது.’

அப்பா மறுக்கவில்லை. ‘நீயும் போறியாடா?’ என்று என்னைக் கேட்டார்.

‘வேண்டாம். அவனுக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கும்’ என்று அம்மா உடனே சொன்னாள்.

‘பரவால்லம்மா. அம்ருதாஞ்சன் தேய்ச்சிக்கறேன்’ என்று சொல்லிவிட்டு சட்டென்று சட்டையைக் கழட்டிவிட்டேன்.

‘நீயும் வேணா போயேண்டா கேசவா’ என்று அம்மா மாமாவிடம் சொன்னாள்.

‘இல்லேக்கா. இப்ப குளிக்கணும்னு தோணலை. சாயந்திரம் ஸ்டேஷன்லயேதான் குளிச்சாச்சே!’

நானும் வினோத்தும் ஆற்றில் இறங்கினோம். பெரிய ஆழம் இல்லை. ஆனால் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்ததால் ஒரு இழுப்பு இருந்தது. அது சுகமாகவும் இருந்தது. வெயில் தணிந்து குளிர்க்காற்று வீச ஆரம்பித்திருந்ததால் மிகவும் இதமாக இருந்தது. நாங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நீந்திக் குளித்தோம். அப்பாவும் அம்மாவும் கரையில் அமர்ந்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அண்ணாதான் எங்கள் மூவருக்குமே நீச்சல் கற்றுக் கொடுத்தவன். ‘கத்துக்கறதுக்கு அல்லிக்குளம் சரிப்படாது. நாம தையூர் தோப்புக்குப் போயிடுவோம்’ என்று சொல்லி நடத்தியே அழைத்துச் செல்வான். தையூர் பண்ணையின் மாந்தோப்புக்குள் ஒரு தரைக் கிணறு உண்டு. நல்ல விஸ்தாரமாகப் பதினைந்தடி விட்டத்துக்குப் பரந்து விரிந்த கிணறு. உள்ளே இறங்கிப் போவதற்குக் கருங்கல் வைத்த படிக்கட்டுகள் உண்டு. பகல் பதினொரு மணிக்கு மேல் பெண்கள் கூட அந்தப் படிக்கட்டுகளில் உட்கார்ந்து குளிப்பார்கள். பண்ணைக்குப் பெரிய மனசு. குளிக்க வரும் யாரையும் கூடாது என்று தடுக்க மாட்டார். ‘பசங்களா, மாங்கா அடிச்சா மட்டும் சும்மா விடமாட்டேன். சும்மா குளிச்சிட்டுப் போறதுனா போங்க’ என்று சொல்லுவார். நாங்கள் குளித்துவிட்டு ஏழெட்டு மாங்காய் அடித்துத் தின்றுகொண்டேதான் திருவிடந்தைக்குத் திரும்புவோம்.

தரைக் கிணறில் நீச்சல் பயின்ற பிறகு நான் தனியே சென்று அல்லிக் குளத்தில் நீந்த ஆரம்பித்தேன். அண்ணா சொன்னது சரிதான். நீச்சல் பயிலக் கிணறே சரி. ஆனால் வினய் எவ்வளவோ கேட்டும் அவன் கடலுக்கு அழைத்துச் செல்ல மட்டும் மறுத்துவிட்டான். ‘எனக்குக் கடல் நீச்சல் தெரியாது. எனக்குத் தெரியாத ஒண்ணை நான் உங்களுக்குச் சொல்லித்தர முடியாது’ என்று சொன்னான். கொள்ளிடத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது நான் அவனை மட்டுமேதான் நினைத்துக்கொண்டிருந்தேன். என் மனமெங்கும் நிறைந்திருந்த அவனது ஞாபகங்கள் பொங்கி வெளியேறி நீரோடு கலந்து நகர்வது போலச் சொற்களற்று உணர்ந்தேன். சின்னச் சின்ன விஷயங்கள்தாம். ஒரு ஞாயிற்றுக் கிழமை அவன் அப்பாவையும் மாமாவையும் எங்களோடு சேர்த்து அழைத்துக்கொண்டு அல்லிக் குளத்துக்கு வந்தான்.

‘எதுக்குடா?’ என்று அப்பா கேட்டார்.

‘எப்படி கத்துண்டிருக்கான்னு பார்க்கறதுக்கு’ என்று சொல்லிவிட்டு எங்களைத் தண்ணீரில் குதிக்கச் சொன்னான்.

அந்த வயதில் அப்பாவின் முன்னால் அது ஒரு பெரும் வீர சாகசமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றிவிட்டது. என்றுமில்லாத வழக்கமாக, இருபதடி தொலைவுக்கு நடந்து சென்று அங்கிருந்து ஓடி வந்து குளத்தில் பாய்ந்து குதித்தேன்.

‘டேய் பாத்து! பாத்து!’ என்று அப்பா கத்தினார். அது இருபதடி நீளக் குளம். நான் அப்பாவை மேலும் வியப்பூட்டும் விதமாக நீருக்கடியிலேயே நீந்திச் சென்று அவருக்கு எதிர்ப்புறம் கரையேறி நின்றேன். வினய்யும் வினோத்தும் தண்ணீரில் அன்றைக்குக் குட்டிக்கரணமெல்லாம் அடித்துக் காட்டினார்கள்.

‘பரவால்லேடா விஜய். உன் தம்பிகளுக்கு உருப்படியா ஒண்ண கத்துக்குடுத்துட்டே’ என்று அப்பா சொன்னார்.

சட்டென்று இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து வினோத்திடம் சொல்லலாம் என்று அவனைத் தேடினேன். எனக்குப் பக்கத்தில்தான் அவனும் குளித்துக்கொண்டிருந்தான். சட்டென்று எங்கே போனான்?

சுற்றுமுற்றும் பார்த்தேன். அவன் என் கண்ணில் படவில்லை. கரையேறி விட்டானா என்று பார்த்தேன். இல்லை. அம்மா, அப்பா, மாமா மூவர் மட்டும்தான் அங்கே அமர்ந்திருந்தார்கள். எங்கே போய்த் தொலைந்தான் இவன்?

நான் மேலும் சிறிது தூரம் நீந்திச் சென்று அவன் தென்படுகிறானா என்று பார்த்தேன். சட்டென்று யாரோ என் காலை இழுப்பது போலிருந்தது. சுதாரித்துக்கொண்டு திரும்பினேன். வினோத்தான்.

‘நாயே, பயந்தே போயிட்டேன்’ என்று சொன்னேன்.

கழுத்தளவு ஆழத்தில் அவன் என் கையைத் தேடித் துழாவி அதை இழுத்து எதையோ அதில் வைத்து அழுத்தினான்.

‘என்னடா?’

‘எடுத்துப் பாரு.’

நான் என் கையை நீரில் இருந்து வெளியே எடுத்து உயர்த்திப் பார்த்தேன். அது ஒரு சிவ லிங்கம். மிகவும் சிறியது. ஓர் உள்ளங்கைக்குள் அடங்கிவிடக் கூடியதுதான். வழுவழுப்பாக இருந்தது.

‘ஏதுடா இது?’ என்று கேட்டேன்.

‘தெரியலே விமல். தானா வந்து என் கையிலே உக்காந்தது!’ என்று சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com