33. காலச்சுருள்

பெரும்பாலானவர்கள் குடும்பத்தையே விரும்புகிறார்கள். அது ஒரு சௌகரியம். குறைந்தபட்சம் உணவளவில். அதிகபட்சம் உறவளவில்.

ரயில் ஆந்திர மாநிலத்தின் எல்லையைத் தொட்டுக் கடந்து ஏதோ ஒரு ஸ்டேஷனில் வந்து நின்றிருந்தது. சிறிய ஸ்டேஷன்தான். நான் ஸ்டேஷன் பெயரைக் கவனிக்கத் தவறியிருந்தேன். ஆனால் அந்த ஊரே மிக அழகானதொரு ஊராக இருக்க வேண்டும் என்று தோன்றியது. நான் அமர்ந்திருந்த பெட்டி, எஞ்சினில் இருந்து வெகு தொலைவு பின்னால் இருந்ததால், ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்கு அங்கே கூரை இல்லை. முன்பக்கம் மட்டும் ஆஸ்பெஸ்டாஸ் தகடு வேய்ந்திருந்தது. முன்புறம் மக்கள் இறங்கிச் செல்வதும் ஏறுவதும், வியாபாரிகள் தேநீர், குடிநீர், நொறுக்குத் தீனிகள் விற்பதும் நிகழும் போல. நான் இருந்த பகுதிக்கு யாருமே வரவில்லை. பிளாட்பாரத்தில் நான்கைந்து புங்கை மரங்கள் வளர்ந்திருந்தன. ஸ்டேஷனுக்கு அப்பால் ஒரு பெரிய ஏரி இருந்தது. ஏரிக்கரை முழுதும் மரங்கள். ரயில் பெட்டியில் இருந்து அந்தக் காட்சியைக் காண்பதே ஒரு அனுபவமாக இருந்தது.

நான் அமர்ந்திருந்த பெட்டிக்கு அருகே யாரும் எதையும் விற்றுக்கொண்டு வராததில் என் எதிரே அமர்ந்திருந்த யுனானி மருத்துவரின் குடும்பம் மிகவும் தவித்துப் னதைக் கண்டேன். டாக்டரின் மனைவி ஒரு டசன் பழம் வாங்க வேண்டும் என்று இரண்டு மூன்று மணி நேரங்களாகச் சொல்லிக்கொண்டே இருந்தார். இடையில் ஒரே ஒரு ஸ்டேஷனில்தான் வண்டி நின்றது. மருத்துவர் பர்ஸை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு இறங்கிப்போனார். ஒரு நிமிடத்தில் வண்டி புறப்பட்டுவிட்டது. பழம் வாங்கச்சென்ற கணவரைக் காணாமல் அந்தப் பெண்மணி தவித்துப்போய்விட்டார். ஜன்னலுக்கு வெளியே கையை ஆட்டி ஆட்டிக் கத்தினார். பதற்றத்தில் அவருக்கு வியர்த்தே விட்டது. அந்தக் கணம், அந்த யுனானி மருத்துவர் தன் குடும்பத்தைப் பிரிந்து எங்காவது சென்றுவிடுவது என்று முடிவெடுத்து இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் தோன்றியது. உடனே, இது என்ன அபத்தம் என்றும் நினைத்துக்கொண்டேன். நூறு கோடி இந்தியர்களில் நான்கில் இருந்து நாலாயிரம் பேர் வரை அப்படி நினைக்கலாம். நிகழ்த்தியும் காட்டியிருக்கலாம். பெரும்பாலானவர்கள் குடும்பத்தையே விரும்புகிறார்கள். அது ஒரு சௌகரியம். குறைந்தபட்சம் உணவளவில். அதிகபட்சம் உறவளவில்.

எனக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. என்னால் எப்படி அந்த யுனானி மருத்துவரை அப்படி எண்ணிப்பார்க்க முடிந்தது என்று புரியவேயில்லை. ரயிலில் ஏறியதில் இருந்து அவர் நொடிக்கொருதரம் சாரதா, சாரதா என்று தன் மனைவியை அழைத்துக்கொண்டே இருந்தார். பேச ஏதாவது சங்கதி இருந்துதான் தீர வேண்டுமென்பதில்லை. அந்தப் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பதே ஒரு யோகம் என்று கருதியிருப்பார் போல. அந்தப் பெண்மணியின் கையில் ஒரு நாவல் இருந்தது. மிகவும் கனமான புத்தகம். அதை எழுதிய ஆசிரியரின் பெயர் எனக்குப் பரிச்சயமாக இல்லை. அது ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரின் நாவலாக எனக்குத் தோன்றவில்லை. இருந்தாலும், அந்தப் பெண்மணி கவனம் நகர்த்தாமல் அந்தப் புத்தகத்திலேயே மூழ்கிக் கிடந்தார். கணவர் அழைக்கும்போதெல்லாம் புத்தகத்தில் இருந்து தலையை நிமிர்த்தாமலேயே பதில் சொல்லிக்கொண்டிருந்தார். தன்னைப் பார்த்து அவர் பதிலளிக்காததில் அந்த மருத்துவர் சற்றும் கோபமோ எரிச்சலோ கொள்ளவில்லை. அவருக்கு அது பழகியிருக்கக்கூடும். அவர் பற்றிக்கொள்ள மனைவியின் குரல் மட்டும் போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். அவரது பதில்கள் பொருத்தமானவையாக இல்லாமலே போனாலும், அதில் அவருக்குப் பிரச்னை இராது என்று தோன்றியது.

சட்டென்று எனக்குப் புலப்பட்டுவிட்டது, யுனானி மருத்துவர் இறங்கிய ஸ்டேஷனில் இருந்து அப்படியே குடும்பத்தை விட்டு நகர்ந்திருப்பாரோ என்று ஏன் எனக்குத் தோன்றியது என்பதற்கான காரணம். அந்த வருடம் சித்ரா பவுர்ணமிக்கு ஸ்ரீரங்கம் செல்லலாம் என்று கேசவன் மாமா சொன்னார். காவிரியில் குளித்து, பெருமாளை சேவித்துவிட்டுக் காவிரிக்கரையில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து சித்ரான்னங்கள் சாப்பிட்டு வரலாம் என்ற அவரது யோசனையை அப்பா உடனே ஏற்றுக்கொண்டார். அன்றைக்கு மாலையே அவர் யாரிடமோ சொல்லி அனுப்பி ஐந்து பேருக்கும் ரயிலில் போக வர டிக்கெட்டுக்கு ஏற்பாடும் செய்தார்.

அண்ணாவும் வினய்யும் வீட்டை விட்டுப் போன பிற்பாடு நாங்கள் எங்குமே செல்லவில்லை. பல மாதங்கள் அப்பாவும் அம்மாவும் வீட்டை விட்டேகூட அதிகம் வெளியெ வரவில்லை. அப்பா நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு சிறிது காலம் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார். மாமா மட்டும்தான் எல்லாம் சரியாகிவிடும், எப்படியும் வந்துவிடுவான்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். வெறுமனே சொல்லிக்கொண்டிராமல், தன்னால் முடிந்த விதங்களில் எல்லாம் அவர்கள் இருவரையும் தேடவும் செய்தார். இடையில் ஒரு பதினைந்து நாள் ஏதோ ஒரு வடஇந்திய யாத்திரைக் குழுவுடன் சேர்ந்துகொண்டு காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத் வரைகூடப் போய்விட்டு வந்தார். எனக்கு நன்றாகத் தெரியும். மாமா தீர்த்த யாத்திரை செல்லவில்லை. ஒருவேளை, அண்ணாவோ வினய்யோ அங்கே கண்ணில் பட்டுவிட மாட்டார்களா என்ற நப்பாசையே அவரது பயணத்துக்குக் காரணம். திருப்பதியில் அண்ணாவைப் பார்த்தது போல இன்னொரு தருணம் நிகழாதா என்று அவர் மிகவும் ஏங்கியிருந்தார். அப்படி ஒரு சந்தர்ப்பம் மட்டும் அமைந்துவிட்டால், என்ன ஆனாலும் கட்டி இழுத்துவந்து விடுவது என்ற வெறியுடன்தான் புறப்பட்டுச் சென்றார். துரதிருஷ்டவசமாக அவரது அந்தப் பயணம் நிறைவடையும் வரை அவரால் இருவரையுமே கண்டுபிடிக்க முடியாமல் போனது.

‘பத்ரிலே உள்ள ஒரு ஆசிரமம் விடாம விசாரிச்சிட்டேன் அத்திம்பேர். காசில அத்தனை படித்துறைக்கும் நேர்ந்துண்டா மாதிரி போய்ப் போய்ப் பாத்தேன். அங்க உள்ள மடங்கள்ள எல்லாம் விசாரிச்சேன். போற இடம், பாக்கற மனுஷா ஒருத்தரையும் விடலே. எல்லாமே பிரயோசனமில்லாம போயிடுத்து’ என்று மேல் துண்டால் கண்ணைத் துடைத்துக்கொண்டு சொன்னார்.

‘நீ ஒருத்தண்டா கேசவா. சாமியாராகல்லாம் ஒரு தராதரம் வேண்டாமோ? இவனுகளுக்கு அப்படியென்ன ஞான சகவாசம் கிடைச்சிதுன்னு கேக்கறேன்? புத்தர் மாதிரி உக்காந்து தவம் பண்ணி கிடைச்சிருக்குமானா அதுக்கும் இந்தக் காலத்துல எல்லாம் வாய்ப்பில்ல பாத்துக்கோ. என்னமோ நாம இப்படி கெடந்து புலம்பிண்டிருக்கணுன்னு எழுதிட்டான். விடு’ என்று சொல்லிவிட்டு அப்பா நகர்ந்து போனார். அம்மா ஒன்றுமே பேசவில்லை. அவள் பார்வையெல்லாம் என் மீதே இருந்தது. எனக்கு அது குறுகுறுவென்றிருந்தது. என்னதான் நினைக்கிறாள் இவள்? நானும் விட்டுப் போய்விடுவேன் என்றா? அப்படித்தான் அந்தக் கோவளத்துப் பக்கிரி சொன்னார். அதையேதான் திருப்போரூர் சாமியும் சொன்னார்.

வினோத் அந்த விவகாரத்தை வீட்டில் கண்டிப்பாகச் சொல்லுவான் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் நாங்கள் திருப்போரூர் போனதையே மறந்துவிட்டவன் போல ,மறுநாள் முதல் மிகத் தீவிரமாகப் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டான். அவன் அப்படி விழுந்து விழுந்து படித்து நான் பார்த்ததே இல்லை. மாலை நேர விளையாட்டுகளை நிறுத்திவிட்டான். பள்ளிக்கூடத்தில்கூட நண்பர்களோடு அவன் அதிகம் பேசுவதில்லை என்று அவன் வகுப்பில் படித்த பையன்கள் சொன்னார்கள். உணவு இடைவேளைகளிலும் அவன் படித்துக்கொண்டே இருந்தான். படித்தவற்றை உடனுக்குடன் எழுதிப் பார்த்தான்.

‘என்னடா ஆச்சு ஒனக்கு?’ என்று நானே ஒரு நாள் கேட்டதற்கு, ‘நன்னா படிச்சிடணும் விமல். நாமதான் நம்ம அப்பாம்மாவ கடேசி வரைக்கும் பத்திரமா வெச்சிண்டு பாத்துக்கணும். போன ரெண்டு பேர பத்தின துக்கம் நம்மள பாத்துத்தான் அவாளுக்குத் தீரணும்’ என்று சொன்னான்.

அப்பா விரக்தியில் பேசிக்கொண்டிருந்தபோது அம்மா என்னையே பார்த்தது எனக்கு மிகவும் உறுத்தியது. நான் சட்டென்று அவள் அருகே போனேன். ‘நான் அப்படியெல்லாம் போயிடமாட்டேம்மா. எனக்கு ஒன்னோட இருக்கறதுதான் பிடிக்கும். என்னிக்கும் நான் ஆத்துலதான் இருப்பேன்’ என்று சொன்னேன். அம்மா என்னை அரவணைத்து வருடிக் கொடுத்தாள். உடனே வினோத்தும் ஓடி வந்து அவளருகே நின்றுகொண்டான். ‘விஜய்யும் வினய்யும் கண்டிப்பா வந்துருவாம்மா. ரெண்டு பேரும் எங்கயோ வேலை தேடிண்டு போயிட்டான்னு நினைக்கறேன்’ என்று சொன்னான். நான் அவனைப் பார்த்தேன். விவகாரமாக எதுவும் பேசிவிடுவேனோ என்று பயந்திருப்பான் போல. ‘நீ வேணா பாருடா. கோட்டும் சூட்டுமா வந்து இறங்கத்தான் போறான் ரெண்டு பேரும்’ என்று மீண்டும் சொன்னான்.

அன்று ஒரு விஷயத்தை உறுதிப்படுத்திக்கொண்டேன். திருப்போரூர் சாமி சொன்னதையோ, கோவளத்துப் பக்கிரி சொன்னதையோ எந்நாளும் நான் வீட்டில் சொல்லுவதற்கில்லை. அண்ணா சாமியாராகியிருக்கமாட்டான் என்று அப்பா தீர்மானமாக நம்பியது அம்மாவுக்குப் பிடித்திருந்தாற்போலத் தோன்றியது. அந்த நினைவை மென்று காலம் கழிக்க அவள் விரும்பியிருக்கலாம். அதை ஏன் கெடுக்க வேண்டும்?

இடைப்பட்ட காலத்தில் அப்பா ஒரு வேலை மாறினார். கோவளம் தாஜ் கொரமண்டல் ஓட்டலில் அவருக்குப் புதிய வேலை கிடைத்தது. முன்னைக் காட்டிலும் ஐந்நூறு ரூபாய் சம்பளம் அதிகம் என்று சொன்னார். கேசவன் மாமா கோயிலின் தலைமைப் பரிசாரகராகப் பதவி உயர்வு பெற்றார். அம்மாவுக்குத் தலை நரைக்கத் தொடங்கியது. அப்பாவுக்கு சர்க்கரை வியாதி வந்தது. நான் பத்தாம் வகுப்பில் நாநூற்றுப் பதினான்கு மதிப்பெண்கள் பெற்றுத் தேறினேன். வினோத் மேல்நிலைப் பள்ளிக்குப் போகாமல் பத்தாம் வகுப்பை முடித்த பின்னர் நேரடியாக தரமணியில் இருந்த பாலிடெக்னிக்குக்குப் போய்ச் சேர்ந்தான். வீட்டில் ஒரு இஞ்சினியராவது இருக்க வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டதை அவன் தீர்த்துவைக்க முடிவு செய்திருந்தான்.

ஒவ்வொரு வருடமும் அண்ணாவின் பிறந்த நாள், வினய்யின் பிறந்த நாள் வரும்போதெல்லாம் அம்மா மௌனமாகிவிடுவாள். அன்று முழுதும் அவள் சாப்பிடுவதே இல்லை. அப்பாவுக்கும் துக்கம் இல்லாதிருக்காது. ஆனால் தன் துக்கத்தின் சாறை இன்னொருவர் மீது தெளிக்கக் கூடாது என்று அவர் கருதத் தொடங்கியிருந்தார். முன்னைப்போல் அவருக்குக் கோபம் வருவதில்லை. தாஜ் கொரமண்டலுக்குப் போக ஆரம்பித்ததில் இருந்தே அவர் மிகவும் சாதுவாகிப்போனார். அம்மாவோ, மாமாவோ யார் என்ன சொன்னாலும் யோசிக்காமல் உடனே சரி என்று சொல்ல ஆரம்பித்திருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த மரியாதையை அவர் வினோத்துக்கும் தரத் தொடங்கியிருந்ததுதான். அவன் என்ன சொன்னாலும் சரி. அவன் என்ன செய்தாலும் சரி. அம்மா எதற்காவது கருத்துக் கேட்டால்கூட, ‘வினோத்த கேட்டுண்டு பண்ணு’ என்பார். காலை ஆறரைக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டுக் கல்லூரிக்குச் சென்று மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பும் வினோத், அதன்பின் ஒரு மணி நேரம் வீட்டு வேலைகள் என்னவாவது இருந்தால் அதைச் செய்து முடித்துவிட்டு எட்டரைக்குப் படிக்க உட்காருவான். பதினொரு மணி வரை படித்துவிட்டே படுப்பான்.

நம்பிக்கையை உருவாக்குவதல்ல. அதை வழங்குவது ஒரு கலை. வினோத் அக்கலையில் மிகவும் தேர்ச்சியுற்றிருந்தான். என்னைப் பார், என்னைப்போல் நீயும் இரு என்று அடிக்கடி எனக்குச் சொல்லவும் செய்தான். திடீரென்று வீட்டின் மீது அவனுக்கு உண்டான பிணைப்பு, எடுத்துக்கொண்ட பொறுப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. இன்னொரு அசம்பாவிதம் வீட்டில் இனி நிகழாது என்று நானே நம்ப ஆரம்பித்திருந்தேன். அப்போதுதான் அந்த சித்ரா பவுர்ணமி வந்தது. மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் டிக்கெட் ரிசர்வ் செய்து நாங்கள் குடும்பத்தோடு ஸ்ரீரங்கத்துக்குக் கிளம்பினோம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com