36. காற்றில் கரைதல்

கடந்த தினங்களின் நினைவுகள் யாவும் அழிந்து நானொரு வெள்ளைத் தாள் ஆகியிருந்தேன். புள்ளிகள், கோடுகள், கிறுக்கல்கள் ஏதுமற்ற வெறும் தாள். ஒரு வெள்ளைத் தாளை யாரும் விமரிசித்துவிட முடியுமா?

என் கனவுக்குள் நான் தூங்கிக்கொண்டிருந்தேன். வாழ்வில் என்றுமே அப்படியொரு நிச்சலனமான உறக்கம் எனக்கு வாய்த்ததில்லை. வெளியெங்கும் பஞ்சு மெத்தைபோல நீலம் சுருண்டு சுருண்டு மேகமாக உருக்கொண்டு வந்து கவிந்து நின்றது. அது குளிர்ச்சியாக இருந்தது. அதுவரை நான் நீல நிற மேகத்தைக் கண்டதில்லை. மேகம் சாம்பல் பூசித்தான் இருக்கும். இந்த நீலம் வான்வெளிக்குரியது. ஆனால் அதை மேகம் பூசியிருந்தது. மெல்ல மெல்ல அது இறங்கி வந்து என் பக்கங்களை நிரப்பியது. சுற்றிலும் நீலம். அடகுக்கடை சேட்டுகளின் திண்டுத் தலையணைகளைப் போல. ஆனால் கனமற்றது. ஓரிடம் நிற்காமல் மிதந்துகொண்டே இருந்தது. அம்மேகச் சுருள்களுள் ஒன்று, நான் புரண்டு படுத்தபோது எனக்குக் கீழே சென்று என்னை ஏந்திக்கொண்டது. அதுவும் சுகமாக இருந்தது. அப்போதுதான் முதல் முதலில் மேகத்தின் மென்மையை உணர்ந்தேன். சிறகினும் மெல்லிய புதரொன்று உண்டா உலகில்? அது புதர்தான். நீர்த்துளிகள் மறைத்த மேகப்புதர். அப்படியே என்னை அள்ளி ஏந்தி அந்தரத்தில் அது கொண்டு சென்றது. மூடிய கண்களுக்குள் நீலம் மட்டுமே நிறைந்திருந்தது. என்னை யாரோ ஒரு தேவதை தூக்கிச் செல்வதாக முதலில் நினைத்தேன். ஆனால் என்னால் புரண்டு படுக்க முடிந்தது. உருள முடிந்தது. எழுந்து உட்கார முடிந்தது. நடக்கவும் ஓடவும்கூட முடிந்தது. இத்தனையும் சாத்தியமானாலும், நான் இன்னொன்றின் கரத்தில் இருப்பதை உணர்ந்தேன். நீல நிற மேகம்.

அந்த அனுபவம் நான் அதற்குமுன் அடையாதது. ஒரு சிறுவனின் பரவசத்துடன் அதை எதிர்கொண்டேன். முடிவற்ற வெளியில் மேகப் பந்துகள் என்னைச் சுமந்துகொண்டு எங்கெங்கோ போய்க்கொண்டிருந்தன. சிறிது நேரம் தரையில் இறங்கி நின்றால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. குதிக்கலாம் என்று பார்த்தால், நான் நிற்பதே தரையில்தான் என்று தெரிந்தது. ஆனால் தரை தெரியவில்லை. நிலமும் வானும் மறைந்து முழுதும் நீலமயமாகியிருந்தது. சரி இப்படியே இருந்துவிட்டுப் போய்விடுவோம் என்று நினைத்து மீண்டும் அதன் மடிகளில் படுத்துக்கொண்டேன்.

ஒரு நாள். இரண்டு நாள். ஒரு மாதம். ஒரு வருடம். பத்து வருடங்கள். எனக்குக் காலம் மறந்தே போனது. கடந்த தினங்களின் நினைவுகள் யாவும் அழிந்து நானொரு வெள்ளைத் தாள் ஆகியிருந்தேன். புள்ளிகள், கோடுகள், கிறுக்கல்கள் ஏதுமற்ற வெறும் தாள். ஒரு வெள்ளைத் தாளை யாரும் விமரிசித்துவிட முடியுமா? சிறப்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எத்தனை யுகங்களை அது கழித்திருக்கும்! நானொரு வெள்ளைத் தாள். நன்றாகத்தான் இருந்தது. அதைவிட என் வெண்மையையும் மாசற்ற பூரணத்துவத்தையும் நானே பார்க்கவும் உணரவும்கூட முடிந்தது. சதையோ எலும்புகளோ ரத்தமோ நரம்புகளோ இல்லாமல் போய் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்குப் போகிற இரட்டைப் பின்னலணிந்த பெண்ணின் சைக்கிள் ஹேண்ட் பாரில் சொருகிய வெள்ளைத் தாளைப் போலவே இருந்தேன்.

சுமார் தொண்ணூறு வருடங்கள் நான் அப்படியே மேகப் பொதிகளால் தூக்கிச் செல்லப்பட்டு உலகெங்கும் சுற்றி, தரைக்கு வந்து சேர்ந்தபோது, திருவானைக்கா ரயில்வே லெவல் கிராசிங்கை ஒட்டியிருந்த ஒரு குடிசைக்குள் கண் விழித்தேன்.

‘எந்திரிச்சிட்டியா தம்பி?’ என்று என்னெதிரே வந்து அந்தக் கிழவன் சிரித்தான். ‘இந்தா, இதைக் குடி’ என்று ஒரு குவளையில் எதையோ தந்தான். நான் ஒன்றும் கேட்காமல் அதை வாங்கிக் குடித்தேன். காரமாக இருந்தது.

‘காப்பித்தண்ணில இஞ்சி இடிச்சிப் போட்டது. காரம் உறைக்குதா?’ என்று கேட்டான்.

‘ஆமா.’

‘அப்ப சரியா இருக்கும். குடி.’

‘இது எதுக்கு?’

‘சாப்ட்ட இல்லே சக்கர பொங்கல்? அது செரிக்கறதுக்கு.’

நான் சிரித்தேன். அந்த இஞ்சிக் காப்பியைக் குடித்து முடித்துக் குவளையைக் கீழே வைத்தேன். என் வாழ்வில் அவனொரு தீராத வியப்பாகப்போகிறான் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அதுதான் என்னை அவன்பால் ஈர்த்துச் சென்றது. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். நான் ஸ்ரீரங்கத்துக்குச் சென்றிருக்கிறேன். எனக்கு அது அந்த ஊருக்கு முதல் பயணம். அப்பா உள்பட எங்களைத் தெரிந்தவர்கள் அங்கே யாரும் கிடையாது. கூட்டத்தில் உதிர்ந்த முகங்களாக இரண்டு நாள்களாக அம்மண்ணைத் துழாவிக்கொண்டிருக்கிறோம். சித்ரா பவுர்ணமி. விஸ்வரூப சேவை. ஆண்டவன் ஆசிரமத்துச் சாப்பாடு. இதோ சன்னிதிக்குள் போயிருக்கும் அப்பாவும் அம்மாவும் வெளியே வந்துவிட்டால், புறப்பட்டு ஊருக்குப் போகவேண்டியதுதான்.

முன் மண்டபத்தில் நான் அவர்களுக்காகக் காத்திருந்தபோதுதான் அவன் என்னை நெருங்கித் தொட்டான். ஈஈ என்று கேவலமாகச் சிரித்தான். முதலில் அவனை ஒரு பிச்சைக்காரன் என்று நினைத்தேன். உடனே அவன் ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அழுக்கேறிக் கசங்கிக் கிழிந்திருந்த ஒரு நாலு முழ வேட்டியும், யாருக்கோ தைத்த அளவில் தொளதொளத்த சட்டையும் அணிந்திருந்தான். தாடி மீசை மண்டியிருந்தது. பராமரிக்கப்படாத தாடி மீசை. ஆனால் எண்ணெய் தடவி தலைமுடியை மட்டும் படிய வாரியிருந்தான். வெட்டப்படாத அவனது விரல் நகங்களில் அழுக்கேறிக் கறுத்துக் கிடந்தது. ஒடுங்கிய, எலும்பு தெரியும் தாடையும் முகவாயும் கழுத்து நரம்புகள் புடைத்த தேகக்கட்டும், வயசுக் காலத்தில் அவன் நிறைய ஓடி உழைத்திருப்பான் என்று நினைக்க வைத்தன.

ஆனால், குளிக்காமல் ஒருவன் கோயிலுக்கு வருவானா! அவனைக் கண்டதும் எனக்கு எரிச்சல் வந்தது. சட்டென்று எழுந்து சற்றுத் தள்ளிப்போய் உட்கார்ந்துகொண்டேன். அவன் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். என்னிடம் அப்போது சில்லறை ஏதுமில்லை. ‘இல்லப்பா’ என்று சொல்லச் சங்கடமாக இருந்தது. அதனால்தான் தள்ளிப்போய் அமர்ந்தேன். ஆனால் அவன் விடாமல் என் அருகே மீண்டும் வந்து நின்றான். சிரித்தான்.

‘என்ன?’ என்று கேட்டேன்.

‘இந்தா’ என்று தன் கையில் இருந்த தொன்னையை நீட்டினான். அதில் சர்க்கரைப் பொங்கல் இருந்தது.

‘இல்ல வேணாம்.’

‘பரவால்ல சாப்டு’ என்று சொன்னான்.

‘வேணான்னு சொல்றனே.’

‘நீ சாப்ட்டுத்தான் ஆகணும்’ என்ற அவனது பதில் எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. எனக்கு இவன் யார் கட்டளையிடுவதற்கு? நான் முறைத்தேன்.

‘விமல், அப்பா சொன்னா கேக்கணும்!’ என்று அவன் சொன்னான்.

திக்கென்று ஒரு கணம் திகைத்துப் போனேன். அப்பா என்று அவன் தன்னைக் குறிப்பிட்டுக்கொண்டது எனக்குப் பிரச்னையாக இல்லை. ஆனால் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது எப்படி?

‘உங்கண்ணன் சொல்லியிருக்கான். நீ இங்க வருவேன்னு. வரும்போது உனக்கு சர்க்கரைப் பொங்கல் தரச் சொன்னான்’ என்று சொன்னான்.

சில விநாகள் எனக்கு எதுவுமே புரியவில்லை. இவன் யார்? இவனுக்கு என் அண்ணாவை எப்படித் தெரியும்? சரி எப்படியோ சந்தித்திருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், அண்ணா என்னைப் பற்றி இவனிடம் என்ன சொல்லியிருக்கக்கூடும்? என் பெயரைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அது நாந்தான் என்று எப்படி இவன் அறிவான்? இன்றைக்கு நான் இங்கே வருவேன் என்பது எப்படித் தெரிந்திருக்கும்? இத்தனைப் பெரிய கூட்டத்தில் என்னை எப்படி இவன் அடையாளம் கண்டிருப்பான்?

‘இந்தா, சாப்டு’ என்று மீண்டும் அந்தத் தொன்னையை நீட்டினான். நான் தயக்கத்துடன் அதை வாங்கிக்கொண்டு, ‘யார் நீங்க?’ என்று கேட்டேன். அவன் சொன்ன பதில்தான் என்னைத் தூக்கிவாரிப் போடச் செய்தது.

‘அட சாப்டுப்பா. நீ ஒண்ணும் குழந்தையுமில்லே, உனக்கு பிரசாதத்துல மயக்க மருந்து கலந்து குடுத்து ஒன்ன தூக்கிட்டுப் போக நான் கிரிமினலும் இல்லே.’

அதற்குமேல் நான் ஒன்றும் பேசவில்லை. அந்த சர்க்கரைப் பொங்கலை வாங்கிச் சாப்பிட்டு முடித்தேன். இப்போது அவன் புன்னகை செய்தான். என் அருகே அமர்ந்து, ‘உங்கண்ணன் சொல்லிட்டுப் போனான். அவன் கெளம்பிப் போயி நாலா வருசம் ஒன்ன வந்து பாப்பானாம். அப்ப, அந்த வம்ச சுவடி எப்படி மருந்து சுவடியா மாறிச்சின்னு சொல்லுவானாம்.’

உண்மையில் நான் அதிர்ந்துவிட்டேன். சட்டென்று அந்தக் கிழவனின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டு, பேச்சற்றுப் போய் நின்றேன். என் உடல் என்னையறியாமல் நடுங்கிக்கொண்டிருந்தது. தொண்டை வறண்டுவிட்டது. கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிய ஆரம்பித்தது. பொருளற்ற பல நூறு உணர்ச்சிகளின் பெருவெள்ளத்தின் மையத்தில் நான் சிக்கியிருந்தேன். அது ஒரு சமுத்திரம்தான். சந்தேகமில்லை. ஆழம் காணவியலாத நீர்ப்பரப்பின் அடியோட்டமாக ஒரு மின்சக்தி இருப்பதை உணர்ந்தேன். அது என்னைத் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. மெல்ல மெல்ல நான் என் உணர்வை இழக்கத் தொடங்கினேன். என் கண்கள் சொருக ஆரம்பித்தன. கால்கள் தள்ளாடத் தொடங்கின. விழுந்துவிடுவேனோ என்ற அச்சம் எழுந்த நேரத்தில் மிதக்கத் தொடங்கினேன். அப்போதுதான் என்னைச் சுற்றி நீல நிற மேகம் ஒன்று மெதுவாக நகர்ந்து வர ஆரம்பித்தது. ஒன்றன்பின் ஒன்றாகப் பல நூறு மேகப் பொதிகள் என்னை ஏந்தி எடுத்துச்செல்லத் தொடங்கியதும் அதன்பிறகுதான்.

ஆனால், எப்போது நான் அந்தக் கிழவனின் குடிசைக்கு வந்து சேர்ந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் கோயிலில் அமர்ந்திருந்ததையும் அப்பா, அம்மா, கேசவன் மாமா, வினோத் எல்லோரும் சன்னிதிக்குச் சென்றிருந்ததையும் எண்ணிப் பார்த்தேன். இந்நேரம் அவர்கள் சன்னிதியை விட்டு வெளியே வந்திருப்பார்கள். என்னைத்தான் தேடிக்கொண்டிருப்பார்கள். அடக்கடவுளே. அனைத்தையும் மறந்து எப்படி நான் இங்கே வந்து சேர்ந்தேன்?

நான் அவசரமாக எழுந்தபோது கிழவன் சிரித்தான். ‘எங்க போற?’

‘கோயில்லே எங்கப்பாம்மா என்னைத் தேடிண்டிருப்பா.’

‘எவ்ளோ நாளா?’ என்று அவன் கேட்டான்.

முதலில் எனக்கு அவன் சொன்னது புரியவில்லை. சட்டென்று ஏதோ தோன்ற, ‘நான் எப்ப இங்க வந்தேன்?’ என்று கேட்டேன்.

‘அது ஆச்சு ரெண்டு நாள்’

‘ஐயோ! ரெண்டு நாளா? ரெண்டு நாளாவா தூங்கிண்டிருந்தேன்?’

‘நீ எங்க தூங்கின? உலகத்தையில்ல சுத்தி வந்த? ஒன்ன சுத்தி நீல நீலமா இருந்திச்சா இல்லியா?’ என்று அவன் கேட்டான்.

‘ஐயோ ஆமா. அது எப்படி உங்களுக்குத் தெரியும்?’

அவன் மீண்டும் சிரித்தான். ‘உக்காரு. ஒனக்கு இப்ப பசிக்கும். முதல்ல சாப்டு. எல்லாம் அப்பறம் சொல்றேன்’ என்று சொன்னான்.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் பயமாக இல்லை. அவன் பைத்தியம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. அவன் என் அண்ணாவைச் சந்தித்திருக்கிறான். அண்ணா என்னைப் பற்றியும் இன்னும் பலவும் அவனோடு பேசியிருக்கிறான். மிக முக்கியமாக அந்தச் சுவடி. அண்ணாவை ஒரு பொய்யன் என்று நினைத்துவிட்டேனே? அந்த மருத்துவச் சுவடி ஒரு மாயமாக இருக்கக்கூடும் என்று ஏன் எண்ணாமல் போனேன்? அவனைக் குறித்து நான் அறிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று முதல் முதலில் அப்போது தோன்றியது. என்ன ஆனாலும் இந்தக் கிழவன் மூலம் அவனைச் சந்தித்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டேன்.

அவனது குடிசைக்குப் பின்புறம் பத்தடி இடம் இருந்தது. சிறியதாக ஒரு கிணறும் அதனருகே ஒரு செம்பருத்தி புதரும் இருந்தது. ஏழெட்டுப் பூக்கள் பூத்திருந்தன. நான் பல் துலக்கிவிட்டு, கிணற்றில் இருந்து நீர் இறைத்துக் குளித்தேன். துடைத்துக்கொள்ள அவன் ஒரு அழுக்கு வேட்டியைக் கொடுத்தான். மறுக்காமல் வாங்கித் துடைத்துக்கொண்டேன். அதையே கட்டிக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தேன். அவன் எனக்கு நான்கு இட்லிகளைச் சாப்பிடக் கொடுத்தான். ஒன்றும் பேசாமல் அதைச் சாப்பிட்டு முடித்தேன். மீண்டும் ஒரு கருங்காப்பி போட்டுத் தந்தான். அதையும் வாங்கிக் குடித்தேன்.

‘அண்ணா இப்போ எங்க இருக்கான்?’ என்று கேட்டேன்.

அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு, ‘இடம் தெரியும். ஆனா இப்பப் போயி நீ அவன பாக்க முடியாது.’

‘ஏன்?’ என்று கேட்டேன்.

‘அவன் விரும்ப மாட்டான்.’

‘என்னைப் பாக்கவா?’

‘யாரையுமே.’

அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. எனவே திரும்பத் திரும்ப அண்ணாவின் இருப்பிடத்தைக் குறித்துக் கேட்டுக்கொண்டே இருந்தேன்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அவன் சொன்னான், ‘தம்பி, ஒனக்கு நம்பிக்கை இல்லேன்னா போய் வேணா முயற்சி பண்ணிப் பாரு. அவன் குற்றாலத்துலே இருக்கான். ஆனா ஒன்னால அவன கண்டுபிடிக்க முடியாது.’

‘அதான் ஏன்னு கேக்கறேன்.’ எனக்குப் பொறுமை போய்விட்டது.

அவன் என் தலையைப் பாசமாக வருடிக் கொடுத்தான். ‘அவஞ்சொன்னது சரிதான். நீ சின்னப்பய. ஆளுதான் வளந்துட்டே. சரி சொல்றேன் புரிஞ்சிக்க. அவனா விரும்பினாலொழிய நீ அவன பாக்க முடியாது. அவன் காத்துக்குள்ள கரைஞ்சி உக்காந்திருக்கான்’ என்று சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com