40. சொல்லாலானவன்

என் அண்ணா ஒரு யோகி. வாழ்வில் அவன் எதைத் தேடப் போய் எங்கே நிற்கிறான் என்று அறிய முயல்வதே என் சாதகம். நான் அதை விடப் போவதில்லை.

காட்டுப் பாதையில் என்னால் அவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட முடியவில்லை. மேடு ஏறுவதில் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் சரிவுகளில் இறங்கும்போது கால் தடுக்கியது. ஆனால் அவர்கள் அநாயாசமாக இயற்கையின் நெளிவுசுளிவுகளைத் தாண்டிக் கடந்து போய்க்கொண்டே இருந்தார்கள். இருபது நிமிடங்களுக்குமேல் நான் ஓடியிருப்பேன். மூச்சிறைத்து ஓரிடத்தில் நின்றுவிட்டேன். என்னோடு ஓடிய கிராமத்து மக்கள் நிற்காமல் முன்னேறிச் சென்றுகொண்டே இருந்தார்கள். மனத்தில் அப்போது எனக்குத் தீர்மானமாகத் தோன்றியது. அது என் அண்ணாதான். அவனைத் தவிர வேறு யார் அம்மாதிரி விஷப் பரீட்சைகள் செய்ய முடியும்? இம்முறை அவனைத் தவறவிட்டுவிடக் கூடாது என்று மீண்டும் எழுந்து வெறிகொண்டு ஓடினேன்.

அவர்கள் சென்று சேர்ந்த இடத்தை நான் அடைந்தபோது, கூட்டமாக இருபது பேர் வரை அங்கே குழுமியிருந்தார்கள். ஒரு பக்கம் ஓடையின் சலசலப்பு. கரையெங்கும் அடர்ந்து வளர்ந்திருந்த மரங்களின் பசுமை. கண்ணில் பட்ட எல்லைவரை எங்கும் மனிதர்கள் வாழ்வதற்கான அறிகுறியே தெரியாத அடர்வனமாக இருந்தது அது. என்னோடு ஓடி வந்தவர்கள் ஏழெட்டுப் பேர்தான். மற்றவர்கள் எங்கிருந்து எப்போது வந்து சேர்ந்திருந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் விஷயம் எப்படியோ வெளியே போயிருக்கிறது. யாரோ ஒருவர் பார்த்துவிட்டு எப்படியோ மற்றவர்களுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்.

ஓடையை ஒட்டிய ஒரு பெரும் பாறையின் எதிரே பத்திருபது கட்டைகள் எரிந்து கிடந்தன. சாம்பல் மூடிய அவற்றின் உள்ளே இன்னமும் கங்கு இருந்தது. புகைந்தது.

‘இதுமேலதாங்க படுத்துக் கெடந்தாரு. என்னமோ மெத்தையில படுத்திருக்கறதாட்டம்’ என்று ஒருவன் சொன்னான்.

நான் நெருங்கிச் சென்று அந்த எரிந்த கட்டைகளில் ஒன்றைத் தொட்டேன். விரல் சுட்டது. இன்று முழுவதுமே அந்தச் சூடு அங்கு இருக்கும் என்று தோன்றியது.

‘நீ பாத்தியா சேகரா? நெசமாத்தானா?’ என்று யாரோ கேட்டார்கள்.

‘குத்தாலநாதர் சத்தியமாண்ணே. அந்தக் காலத்துல உடன்கட்டை ஏறுவாங்களாமே, அப்பிடி எதாச்சும் பைத்தாரத்தனம் பண்ணுதானோன்னு பயந்து போய் ஓடியாந்தேன். நெருங்கிப் பாத்தப்பத்தான் தெரிஞ்சிது, அவுக தவம் பண்ணிட்டிருக்காகன்றது.’

என்னால் நம்பவே முடியவில்லை. அதிர்ச்சியும் வியப்பும் ஒருங்கே தாக்க, அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு வாய் பிளந்து நின்றேன்.

ஓர் இளைஞன். எப்படியும் இருபது இருபத்து இரண்டு வயதுதான் இருக்கும். முகமெங்கும் தாடி. தோள் வரை நீண்டு வளர்ந்திருந்த தலைமுடி. மேலுக்குச் சட்டை அணிந்திருக்கவில்லை. இடுப்பில் ஒரு வேட்டி மட்டும் கட்டியிருந்தான். அதுவும் முழங்கால் உயரத்துக்குத் தூக்கிக் கட்டியிருந்தான். யாருமற்ற வனாந்திரத்தின் பேரெழிலைப் பருகியபடியே நடந்துகொண்டிருந்தவன், ஓடைக்கரையை நெருங்கியதும் சற்றுத் தாமதித்தான். அங்கிருந்த பாறையின் மீது வெகுநேரம் அமர்ந்திருந்தான். மரம் வெட்டச் சென்ற சேகரன், போகிறபோது அந்த இளைஞனைப் பார்த்துக்கொண்டேதான் போயிருக்கிறான். ஆனால் அப்போது வித்தியாசமாக அவனுக்கு ஏதும் தோன்றவில்லை. யாரோ சுற்றுப் பயணி என்று நினைத்திருக்கிறான். அல்லது பைத்தாரக் கிறுக்கன்.

அவன் திரும்பும்போதுதான் அந்த யோகி கட்டைகளைக் கொளுத்திவிட்டு அதன் மீது ஏறிப் படுத்ததைக் கண்டிருக்கிறான். ஐயோ என்று அலறிக்கொண்டு அவன் அருகே ஓடி வந்து சேர்வதற்குள் கட்டைகள் திகுதிகுவென்று எரியத் தொடங்கியிருந்தன. ஒரு பாயைப் போல் அதைப் பாவித்து மேலே படுத்திருந்த யோகி, தலைக்குமேலே கையை உயர்த்திக் கூப்பிய வண்ணம் கண்மூடிக் கிடந்தார்.

அழைப்பதா, கீழே தள்ளிவிடுவதா, கத்திக் கூப்பாடு போட்டு யாரையாவது கூப்பிடுவதா, விழுந்து கும்பிடுவதா என்று புரியாத குழப்பத்தில் அவன் சில நிமிடங்கள் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்றான். எரிந்துகொண்டிருந்த கட்டைகள் மெல்ல மெல்லத் தணிய ஆரம்பித்து நெருப்பு அடங்கி, கங்கு தெரிய ஆரம்பித்தது. யோகி நிதானமாகத் தன் கண்களைத் திறந்து பார்த்தார். அதில் இருந்து எழுந்து வெளியே வந்து ஓடையில் இறங்கி உடம்பைத் தேய்த்துக் குளித்தார்.

இப்போது சுய உணர்வு பெற்ற சேகரன் வேகமாக அவர் அருகே ஓடி, ‘சாமி...’ என்று அழைத்தான்.

‘என்ன?’ என்று அவர் திரும்பியதும் கையெடுத்துக் கும்பிட்டான். தனது இடது கையை உயர்த்தி ஆசி வழங்குவது போலச் செய்துவிட்டு திரும்பிப் பாராமல் அவர் கிளம்பிச் சென்றார்.

அவன் சொல்லி முடித்த கதையைக் கூட்டத்தில் பலர் நம்பவில்லை என்பது எனக்குப் புரிந்தது. ‘கிறுக்குப் பய சும்மா எதோ சொல்லுதான்யா’ என்று ஒருவர் சொன்னார்.

‘இல்லண்ணே, சாமி சத்தியம். நான் பாத்தேண்ணே.’

‘எள வயசு சாமியா?’

‘ஆமாண்ணே. நெடுநெடுன்னு ஈச்ச மரமாட்டம் வளத்தி. மீச மாதிரி புருவம். ரெண்டு புருவம் சேர்ற இடத்துல பொட்டு வெச்ச மாதிரி ஒரு மச்சம் இருந்ததுண்ணே.’

‘ஏண்டா அப்பிடி ஒருத்தன் இங்க இருந்தான்னா பிடிச்சி வெக்கவேண்டியதுதானே? ஊருக்குள்ள கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?’

‘அவரு நிக்கவேயில்லண்ணே. கைய ஒசத்தி ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போயிட்டே இருந்துட்டாரே.’

நான் அவர்கள் சம்பாஷணையில் குறுக்கிடவேயில்லை. ஆனால் அவர்கள் பேசிய ஒவ்வொரு சொல்லையும் உள்ளுக்குள் ஏந்தி இருத்திக்கொண்டேன். அது அண்ணாதான். எனக்கு சந்தேகமேயில்லை. ஆனால் தணலின் மீது கிடக்குமளவுக்கு இந்நாள்களில் அவன் தன் சாதனைகளில் முன்னேறியிருப்பான் என்று என்னால் நம்ப முடியவில்லை. சட்டென்று அந்தத் திருவானைக்கா கிழவன் ஞாபகம் வந்துவிட்டது. எத்தனைக் கெட்ட கிழவன்! ‘அவன் அங்கதான் இருக்கான். ஆனா நீ பாக்கமாட்டே’ என்று அடித்துச் சொன்னான். ஒரு கணம் அந்தக் கிழவனின் மீது கோபம் வந்தது. உடனே அந்தக் கோபம் உதிர்ந்து ஓர் அதிசய உணர்வு எழுந்தது. இதுவும் கண்ணுக்குத் தெரியாத பல கண்ணிகளின் அந்தரங்கப் பிணைப்புத்தான். எங்கிருந்து அண்ணா அந்தக் கிழவனைப் பிடித்தான்? என்ன பேசினான்? என்னவெல்லாம் சொல்லியிருப்பான்? எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் குற்றாலத்தில் அண்ணா இருப்பதை அறிந்த கிழவன், நான் குற்றாலத்துக்கே சென்றாலும் அவனைச் சந்திக்க முடியாது என்று எப்படி அப்படியொரு தீர்மானத்துடன் சொல்ல முடியும்? மானசீகத்தில் பேசிக்கொள்கிறவர்களா? முடியுமா? அதெல்லாம் சாத்தியம்தானா?

குழப்பமாக இருந்தது. புதிர்களின் அழகை யோசிக்க ஆரம்பித்தேன். இது ஒரு அனுபவம். மகத்தான பேரனுபவம். என் அண்ணா ஒரு யோகி. வாழ்வில் அவன் எதைத் தேடப் போய் எங்கே நிற்கிறான் என்று அறிய முயல்வதே என் சாதகம். நான் அதை விடப் போவதில்லை. அவன் என் கண்ணில் படுகிறானா இல்லையா என்பதே முக்கியமில்லை என்று தோன்றிவிட்டது. ஆனால் என்னால் அவனை நினைக்காதிருக்க முடியாது. தேடாதிருக்க முடியாது. தேடிப் போகிற இடங்களில் இறுதிவரை இப்படிப் பிறர் சொற்களாகவே அவன் எனக்குக் காட்சியளிக்க முடிவெடுத்துவிட்டானா?

சொல்லாலானவன். எனக்கென்னவோ அவன் திட்டமிட்டு என்னைத் தவிர்க்க விரும்புவான் என்று தோன்றவில்லை. என்றைக்காவது சந்திக்கும் நேரம் ஒன்று வராமல் போகாது என்று நினைக்கவே விரும்பினேன்.

கூட்டத்தில் ஒருத்தன் அண்ணாவைப் பார்த்தவனிடம் கேட்டான், ‘எல்லாஞ்சரிடா தம்பி. நெருப்புல படுத்துக் கெடந்து எந்திரிச்சிப் போனாகன்னு சொன்னியே, ஒடம்புல தீத்தழும்பு பட்டிருக்கும்ல?’

‘நீ நம்பமாட்டண்ணே. அதனாலதான் நாஞ்சொல்லலை. அவுக கட்டியிருந்த வேட்டி மட்டுந்தான் லேசா பொசுங்கியிருந்தது. சூத்தாமட்டை தெரிஞ்சிதண்ணே. ஆனா நெருப்புப்பட்ட சுவடே இல்லே.’

அதற்குமேல் எனக்குக் குற்றாலத்தில் இருப்புக் கொள்ளவில்லை. மீண்டுமொரு முறை அருவிக்குச் சென்று ஆசை தீரக் குளித்தேன். குளிக்கும்போது அந்தக் காட்டிலாகா ஊழியர் சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ஆத்துல மீன புடிச்சி பச்சையாவே கடிச்சித் திங்குதான்.’

அண்ணாவா? நான் சிரித்தே விட்டேன். இதைக் கண்டிப்பாகக் கேசவன் மாமாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஐயோ ஐயோ என்று அவர் தலையில் அடித்துக்கொள்வார்.

‘அவன் மீன் சாப்பிடறதை விடுங்கோ. நான் அபின் சாப்ட்டேன். தெரியுமா?’ என்று கேட்டால் மீண்டும் ஐயோ ஐயோ.

‘ரொம்ப நன்னா இருந்தது மாமா. அப்படியே காதெல்லாம் பஞ்சடைச்சுப் போயி, கண்ணெல்லாம் நீலமாகி, காத்துல மிதந்துண்டே இருந்தேன். ரெண்டு நாள் மிதந்திருக்கேன்னா பாத்துக்கோங்கோ.’

ஐயோ ஐயோ.

அன்றைக்கு மாலை நான் திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்துவிட்டேன். கையில் மிச்சம் இருந்த பணம் சென்னை வரை செல்வதற்குப் போதுமா என்று சந்தேகமாக இருந்தது. ஒரு கண்டக்டரிடம் சென்னைக்குச் செல்ல டிக்கெட் தொகை எவ்வளவு என்று கேட்டேன். அவர் சொன்னதைக் காட்டிலும் என்னிடம் ஒன்பது ரூபாய் குறைவாக இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

சட்டென்று ஏதோ தோன்றி திருச்சி வண்டியில் ஏறி அமர்ந்தேன். திருவானைக்காவுக்குப் போய் அந்தக் கிழவனை இன்னொரு முறை பார்த்துவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. என் அனுபவத்தைச் சொல்வதல்ல முக்கியம். நான் ஊர் திரும்பவும் அவரிடம்தான் பணம் கேட்க வேண்டும். இந்த உலகில் எனக்கு உதவுவதற்கு இருந்த ஒரே அந்நிய மனிதன் அவன்தான் என்று நினைத்துக்கொண்டேன்.

என்னைக் கண்டதும் கிழவன் சிரிப்பான். ‘என்ன தம்பி அண்ணன பாத்தியா?’ என்று நக்கலாகக் கேட்பான்.

ஆமாம் பார்த்தேன் என்று சொல்லிவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். வண்டி கிளம்ப ஆரம்பித்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com