50. நதியில் ஒரு பரிசல்

வரதராஜரைக் காட்டிலும் ரங்கநாதர் தனது சேவாகால கோஷ்டியினரை சௌக்கியமாக வைத்துக்கொள்கிறார். வேளைக்குச் சாப்பாடும் செலவுக்குப் பணமும் பெரிய விஷயமல்ல. அது எங்கும் கிடைக்கும், எப்படியாவது கிடைத்துவிடும்.

எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது. அன்றைக்கு வினய்க்குப் பிறந்த நாள். நாற்பத்து நான்கு முடிந்து நாற்பத்து ஐந்தாவது வயதில் அவன் அடியெடுத்து வைத்திருந்தான். ஊரில் இருந்திருந்தால் அம்மா ஒரு பருப்பும் பாயசமும் கூடுதலாகச் சமைத்திருப்பாள். கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ. யாருக்குப் பிறந்த நாள் வந்தாலும் அப்பா எப்படியாவது ஒரு சட்டைக்கு ஏற்பாடு செய்துவிடுவார். எளிய தருணங்கள். எளிய சந்தோஷங்கள். ஆனால் அந்த வாழ்க்கை இப்போதில்லை. இனி என்றைக்குமே இல்லை என்று சொல்லிக்கொண்டேன். எனக்கு அதில் வருத்தமெல்லாம் கிடையாது. ஆனால் இம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை.

அந்த ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதியின் வீட்டு வரவேற்பறையில் வினய்யைப் பார்த்தபோது எனக்கு வேறொன்றும் முதலில் செய்யத் தோன்றவில்லை. சட்டென்று எழுந்து சென்று அவன் கையைப் பிடித்துக் குலுக்கி, ‘பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று சொன்னேன். அவன் என்னை அடையாளம் கண்டுகொள்ளச் சில விநாடிகள் தேவைப்பட்டன. என் கண்களை வெகுநேரம் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு என் வலது தோள்பட்டையை அழுத்திப் பிடித்தான். அந்த அழுத்தம் லேசாக வலிக்கும் அளவுக்கு இருந்தது. நான் பொறுத்துக்கொண்டேன். புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

காலம் அவன் முகத்தை ஒடுங்கவைத்திருந்தது. கன்னங்கள் இரண்டும் டொக்காகியிருந்தன. பிதுங்கி விழுந்துவிடுவதுபோலக் கண்கள் திரண்டு வெளியே தெரிய, முகம் அடர்ந்த தாடியில் பாதி அதற்குள்ளாகவே வெளுத்திருந்தது. அவன் தலை வாருவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். நாலைந்து சடைகள் உருவாகியிருந்தன. தோளுக்குக் கீழே முடி புரண்டுகொண்டிருந்தது. எலும்பு புடைத்த வெற்று மார்பும் அரையில் சிறியதொரு அழுக்கேறிய காவித் துணியும் அணிந்திருந்தான்.

‘எப்படி இருக்கே?’ என்று கேட்டேன்.

என்ன நினைத்தானோ, சட்டென்று என் உச்சந்தலையில் கை வைத்தான். மிருதுளாவின் தந்தைக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. எழுந்து என்னருகே வந்து, ‘சுவாமி இவரை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.

நான் சிரித்துவிட்டு, ‘இவரைத் தெரியாது. ஆனால் இவனைத் தெரியும்’ என்று சொன்னேன். நாங்கள் ஒரே குருகுலத்தில் படித்திருப்போம் என்று நினைத்திருப்பார்போல. தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி நகர்ந்து சென்று அமர்ந்துவிட்டார்.

‘உள்ளே பெரியவர் அழைத்தால் நீங்கள் போய்ப் பேசிக்கொண்டிருங்கள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவன் கையைப் பிடித்து, ‘வா’ என்று அழைத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினேன்.

அரை மணி நேரம் நடந்து திரிவேணி சங்கமத்தை நாங்கள் அடைந்தோம். காவிரியில் பரிசல்கள் நிறையப் போய்க்கொண்டிருந்தன. சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாகப் பரிசல்களில் ஏறிச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். நான் வினய்யைப் பார்த்துக் கேட்டேன், ‘கரையில் அமர்ந்து பேசலாமா? பரிசலில் போய்ப் பேசலாமா?’

அவன் சில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு, ‘என்ன பேச வேண்டும்?’ என்று கேட்டான்.

நியாயமான கேள்விதான். என்ன இருக்கிறது பேசுவதற்கு? இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் எனக்கு அண்ணனாக இருந்தான். அதற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பு உலகில் என்னைக் காட்டிலும் ஒரு பாசம் மிகுந்த தம்பி யாரும் இருந்திருக்கமாட்டார்கள். நான்கு சகோதரர்கள். ஒரு தாய் தந்தை. ஒரு தாய் மாமன். ஒரு வீடு. எண்ணிப் புல்லரித்துப்போக வண்ணமயமான நினைவுகள் அந்த வீடு சார்ந்து எனக்கு இல்லை என்பது உண்மையே. ஆனால் எண்ணாதிருந்ததில்லை. எனக்கு ஒரு தீர்மானம் இருந்தது. வினய்யோ, அண்ணாவோ, வினோத்தோ. வாழ்க்கை எங்கே தள்ளிக்கொண்டுபோய், என்னவாக ஆக்கிவிட்டிருந்தாலும் திருவிடந்தை வீட்டில் இருந்த நாள்களை எண்ணிப் பாராதிருக்க முடியாது. நதிகளுக்குப் புறப்பட்ட இடம் தெரியாதிருக்கலாம். மனிதர்களுக்கல்ல. அவர்கள் ஞானிகளேயானாலும் சரி.

‘நீ வீட்டைவிட்டுப் போய்டுவேன்னு எனக்குத் தெரியும்டா. ஆனா இப்படி ஆவேன்னு நினைக்கலை. உன்னை ஒரு மடாதிபதியா கற்பனை பண்ணி வெச்சிருந்தேன். கெடுத்துட்டே’ என்று சொல்லிச் சிரித்தேன்.

அவன் அமைதியாக இருந்தான்.

‘'பேசலாம், தப்பில்லை’ என்று சொன்னேன். ஆனால் அவன் அப்போது பேசவில்லை. திரும்பத் திரும்ப நான் அவன் எங்கே போனான், எப்படி மாறினான் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். பல்வேறு விதங்களில் அவன் வாயைப் பிடுங்க முயற்சி செய்தேன் என்று சொல்வதே சரி. என்னுடைய எந்தக் கேள்விக்கும் அவன் பதிலே சொல்லாதிருந்ததில் சற்று சலிப்புற்று, ‘அம்மா இருக்காளா போயிட்டாளான்னாவது தெரியுமா? ஏன்னா எனக்கு அதுவும் தெரியாது’ என்று சொன்னேன்.

‘எனக்கும் தெரியாது’ என்று அப்போதுதான் அவன் வாய் திறந்தான். இது உண்மையிலேயே எனக்கு அச்சமூட்டக்கூடியதாக இருந்தது.

‘ஏண்டா?’

‘ஏன்னா?’

‘ஊருக்கு நீ அப்பறம் போகவேயில்லியா?’

‘நீ மட்டும் போனியா?’

‘ஆமா. நானும் போகலை. என்னவோ போகத் தோணலை. ஆனா நடுல கேசவன் மாமாவ ரெண்டொருதரம் பாத்திருக்கேன். நான் இருக்கற மடிகேரிக்கு அவர் வந்திருக்கார்.’

அவன் என்னை ஏற இறங்கப் பார்த்தான். ‘நீ மடிகேரில இருக்கியா?’

‘ஆமா. சின்னதா ஒரு ஆசிரமம். பதினஞ்சு பேர் ஸ்டூடன்ஸ் இருக்கா. வந்து போறவா அம்பது நூறு பேர் இருப்பா. வாழ்க்கை வேறயாயிடுத்து.’

இப்போது அவன் சிரித்தான். ‘ஆனா அதே பாப்பார பாஷை’ என்று சொன்னான்.

‘ஆமாமா. அது போகலை. ஆனா தேவைப்பட்டா மாத்திப்பேன்.’

அவன் சட்டென்று சொன்னான், ‘மொழிதான் உன் ஆயுதம்னு அண்ணா சொன்னான்.’

அதிர்ந்து போனேன். ‘அண்ணா சொன்னானா? எப்போ?’

‘ஸ்ரீரங்கத்துக்குப் போயிட்டு அங்கேருந்து நீ அவனைத் தேடி குற்றாலத்துக்குப் போனியாமே? பாக்க முடியாம திரும்பினவன், வீட்டுக்குப் போகாம அப்படியே திரியப் போயிட்டியாமே?’

எனக்கு தூக்கிவாரிப் போட்டுவிட்டது. சட்டென்று அவனை இழுத்துக்கொண்டுபோய் ஒரு பரிசலில் ஏற்றினேன். நானும் ஏறிக்கொண்டு பரிசல்காரனை எடுக்கச் சொன்னேன்.

‘எதுக்கு இதெல்லாம்?’ என்று அவன் கேட்டான்.

‘இருக்கட்டும். எனக்குப் பேசணும். நீ பாதில போயிடக் கூடாது பாரு. அதுக்குன்னு நினைச்சிக்கோ. சொல்லு. அண்ணாவ எங்க பாத்தே? எப்ப பாத்தே?’

‘ரெண்டு தடவை பாத்தேன் விமல். முதல் தடவை பாத்தப்போதான், நான் போயிடுறதுன்னு முடிவு பண்ணி காஞ்சீபுரம் போகாம வாலாஜாபாத்ல இறங்கி குண்டூருக்குப் போனேன்.’

‘ஓ...! அவனை அப்பவே பாத்துட்டியா நீ?’

‘ஆமா. வாலாஜாபாத் பஸ் ஸ்டாண்ட்ல இருந்தான். அன்னிக்கு என்னைப் பார்த்து அவன் சிரிச்சான் பாரு ஒரு சிரிப்பு.. சாகற வரைக்கும் மறக்காது.’

என் ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. வினய்யின் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன். ‘தயவுசெஞ்சி சொல்லு. அவனை எப்படிப் பார்த்தே? என்ன சொன்னான்?’

அண்ணாவைப் பார்த்த கதையை வினய் எனக்குச் சொல்ல ஆரம்பித்தான்.

அன்றைக்கு அவன் பாடசாலைக்குப் போகிற முடிவோடுதான் பஸ் ஏறியிருந்தான். எங்களுக்கெல்லாம் தெரியாமல் பஸ் ஸ்டாண்டில் அவன் பத்மா மாமியின் மகள் சித்ராவை வேறு பார்த்திருக்கிறான். பஸ் ஏற்றிவிடப்போன அப்பாவும் மாமாவும் அருகே இல்லாதிருந்தால், கண்டிப்பாக அவளிடம் அவன் மனம் விட்டுப் பேசியிருப்பான்.

‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கறேன். முடிஞ்சா ஆத்துல, அம்மாகிட்டே சொல்லி வை. அடுத்த தடவை நான் ஊருக்கு வரும்போது ஒரு உத்தியோகத்த தேடிண்டுதான் வருவேன். வந்ததும் மொத காரியம் உங்காத்துக்கு வந்து பொண்ணு கேக்கறதுதான்.’

மனத்துக்குள் சொல்லிப் பார்த்த வரிகளை நேரில் அவனால் சொல்ல முடியாது போய்விட்டது. அதனாலென்ன? அவனது பார்வை சித்ராவுக்குப் புரிந்தது. அவள் சற்று வெட்கப்பட்டாள். அதே சமயம் வேத வித்தாக ஊருக்குத் திரும்பி வந்தவன், இப்படி சொற்ப தினங்களில் திரும்பிப் போகிறானே என்று கவலைப்படவும் செய்தாள். பிரியத்தின் கனத்துக்குச் சிறிது துக்கத்தின் பூச்சு அவசியம் என்று அவனுக்குத் தோன்றியது. வலிக்கத்தான் செய்யும். ஆனாலும் நன்றாக இருக்கும்.

வழியெல்லாம் அவன் சித்ராவைப் பற்றியே நினைத்துக்கொண்டு போனான். எப்படியாவது ஸ்ரீரங்கம் கோஷ்டியில் இடம் பிடித்துவிட வேண்டும் என்பது அவனது அப்போதைய கனவாக இருந்தது. வரதராஜரைக் காட்டிலும் ரங்கநாதர் தனது சேவாகால கோஷ்டியினரை சௌக்கியமாக வைத்துக்கொள்கிறார். வேளைக்குச் சாப்பாடும் செலவுக்குப் பணமும் பெரிய விஷயமல்ல. அது எங்கும் கிடைக்கும், எப்படியாவது கிடைத்துவிடும். ஆனால் ஸ்ரீரங்கத்தில் வாழ்க்கையை ஆரம்பிப்பதே எதிர்காலத்துக்கு உகந்தது என்று வினய் நினைத்தான்.

பஸ் வாலாஜாபாத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. காஞ்சீபுரம் போய் இறங்கியதும் சித்ரா வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்தால் என்ன? இது என்னவாவது விபரீதத்தில் கொண்டு விடுமா என்று ஒரு கணம் யோசித்தான். என்ன பெரிய விபரீதம்? மிஞ்சிப் போனால் பத்மா மாமி இங்கே எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் விவரத்தைச் சொல்லுவாள். ‘உங்க பிள்ளை என்னத்துக்கு எம்பொண்ணுக்கு போன் பண்ணிப் பேசணும்னு கேக்கறேன்? உங்காத்துக்கு எதாவது தகவல் சொல்லிவிடணும்னா உங்களுக்கே பேச வேண்டியதுதானே? இல்லேன்னா கோயிலுக்குப் பண்ணி கேசவன்ட்ட பேசிட்டுப் போறது. இதெல்லாம் நன்னால்ல பாத்துக்கோங்கோ.’

அந்தவிதமாகவேனும் அம்மாவுக்கு அரசல் புரசலாக விஷயத்தைத் தெரியப்படுத்திவிட்டால் நல்லது என்று அவன் நினைத்தான். கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் என்ன பெரிய கொலைபாதகம்? இந்த வயதில் வராத இச்சை வேறெப்போது வரும்? அறியாத வயதில் அவன் பீடி குடித்திருக்கிறான். ‘விமல், உனக்குத் தெரியாது. நான் ஒரு சில சமயம் கடா மார்க் சாராயம்கூடக் குடித்துப் பார்த்திருக்கிறேன்!’ என்று சொன்னான்.

‘அப்படியா?’

‘கஞ்சா குடித்திருக்கிறேன். அபின் உண்டிருக்கிறேன். வேலி முட்டி தெரியுமா வேலி முட்டி?’

‘இல்லை. தெரியாது.’

‘இந்த உலகில் நான் இறங்கிப் பார்க்காத பாதாளம் என்று எதுவுமில்லை. ஆறு முறை விலைப் பெண்களைக்கூடத் தொட்டுப் பார்த்திருக்கிறேன். கொலை மட்டும் செய்யவில்லை.’

என்னால் அவன் சொன்னவற்றையெல்லாம் நம்பவே முடியவில்லை. வாழ்க்கை எத்தனை அழகாகத் திட்டமிடுகிறது. மனிதர்களின் திட்டங்களை எவ்வளவு அனாயாசமாக மாற்றிவிடுகிறது. வாழ்வென்பது வகுப்பெடுக்கும் ஆசிரியரல்ல. தேர்வுத் தாள் திருத்தும் ஆசிரியர். காஞ்சீபுரத்து அண்ணங்கராசாரியார் மடத்துக்குப் போய்ச் சேர்ந்த பின்பு அந்த வினய் அப்படியே அடியோடு மாறிவிட்டிருக்கிறான். புதிய சூழல். புதிய நட்புகள். புதிய பரிபாஷைகள். திருமண் ஸ்ரீசூர்ணம். கோயில், பெருமாள், பிரசாதம், பாராயணம். வேறொரு வாழ்க்கை. வேறொரு சூழல். அவனுக்கு அதுவும் பிடித்துப்போனது. அதில்தான் இனி தனது பயணம் என்று எண்ணியிருந்தான். ஒரு உத்தியோகம் சம்பாதித்துக்கொண்டு ஊருக்கு வந்து சித்ராவைக் கலியாணம் செய்துகொண்டு, ஒரு பெண், ஒரு பிள்ளை பெற்றுக்கொள்வது வரை கனவு கண்டு சேமித்து வைத்திருந்தான்.

துரதிருஷம் என்று சொல்வதா? ஆனால் நிச்சயமாக அது அதிர்ஷ்டமாக இருக்க முடியாது. அன்றைக்கு அவன் போய்க்கொண்டிருந்த பேருந்து வாலாஜாபாத் பஸ் ஸ்டாண்டில் நின்றபோது, அங்கே அண்ணா குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டிருக்கக் கண்டான். முதலில் அது அண்ணாதானா என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. ஜன்னல் வழியே தலையை முழுதும் வெளியே நீட்டி, ‘விஜய்...’ என்று கத்தியிருக்கிறான்.

ஒரு பிச்சைக்காரனின் தோற்றத்தில் பரட்டைத் தலையும் அழுக்கு வேட்டியும் குச்சிக் குச்சியாக தாடியும் ஒரு பைத்தியக்காரனின் சிரிப்புமாக அவன் அமர்ந்திருந்தான். வினய்யைப் பார்த்து சிரித்தானே தவிர அவன் எழுந்திருக்கவில்லை. அருகே ஓடி வரவில்லை. ஒருவேளை அவன் பார்க்கவேயில்லையோ என்ற சந்தேகத்தில் வினய் மீண்டும் ஜன்னல் வழியே தலையை நீட்டி விஜய் விஜய் என்று கத்தியிருக்கிறான். அப்போதும் அவன் அசையாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்ததால்தான் வினய் பேருந்தைவிட்டு இறங்க வேண்டியதானது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com