49. மருந்தாகுதல்

மனித குலத்துக்கு எந்நாளும் செய்துகொண்டே இருப்பதற்கு நூறாயிரம் வைத்தியங்களின் தேவை இருந்தபடியே இருக்கிறது. தத்துவங்களும் தருக்கங்களும் தீர்க்காத சந்தேகங்களை ஒரு எளிய ஜலதோஷ நிவாரணி தீர்த்து வைத்துவிடும்

மூடிய கண்களின் மீது இரண்டு வெள்ளரித் துண்டுகளை நறுக்கி வைத்திருந்தேன். மானசீகத்தில் எனக்கு அந்தத் துண்டுகள் சஹஸ்ரஹார சக்கரமாக உருமாறி, மெல்லக் கீழிறங்கி வந்து சுழலுவதுபோல் இருந்தது. அதன் குளிர்ச்சி மெல்ல மெல்ல என் விழிகளுக்குள் இறங்கி தலைக்குள் செல்வதுபோல எண்ணிக்கொண்டேன். எண்ணிக்கொள்வதுதான். உண்மையில் எந்த உணர்ச்சியையும் உறுப்புகளுக்கு நம்மால் கடத்த முடிவதில்லை. அது அங்கங்கே தன்னியல்பாக உற்பத்தியாவது. கணப்பொழுது மூளையுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துவிட்டுத் தன் தேவைகளை உறுப்புகள் நிறைவேற்றிக்கொண்டுவிடுகின்றன. உணர்ச்சிகளை மூளையின் கட்டளையாக என்னால் எண்ணிப் பார்க்க முடிந்ததில்லை. உணர்வின் மிகத் தெளிவான எதிர்நிலையில் என் மனத்தையும் மூளையையும் நிறுத்தப் பழக்கிக்கொண்டிருந்தேன். துக்கத்தில் புன்னகை செய்வதற்கும் மகிழ்ச்சிக்குரிய தருணங்களில் அதில் மறைந்திருக்கும் பிசிறுகளை ஆராயவும் எனக்குப் பிடித்தது. எந்தத் தருணத்திலும் நான் என் உணர்வின் வசத்தில் விழமாட்டேன் என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன். அந்நினைவு ஒரு போர்வை. கதகதப்பானது. சுகமளிப்பது. அது எனக்கு அவசியம் என்று நினைத்தேன்.

நான் மைசூரில் இருந்தேன். மிருதுளாவின் தந்தைதான் என்னை அங்கே அழைத்து வந்திருந்தார். ‘நீங்கள் ஒருவரைச் சந்திக்க வேண்டும். மிகப்பெரிய மனிதர். ஆனால் வெளியே சொல்ல முடியாத ஒரு பெருங்கஷ்டத்தில் இருக்கிறார். அவரது துக்கம் உங்களால் தீருமானால் நான் சந்தோஷப்படுவேன்’ என்று சொன்னார்.

நகரத்தின் ஆகப்பெரிய நட்சத்திர விடுதியில் அறையெடுத்து என்னைத் தங்கவைத்திருந்தார். பளபளப்பான பித்தளைப் பூண் போட்ட தேக்கு மரக் கதவுகளும் பச்சைத் தரை விரிப்புகளும் படுத்தால் ஓரடி ஆழத்துக்குப் புதைத்துக்கொள்ளும் படுக்கையும் இதர வசதிகளுமாக அந்த விடுதி அமர்க்களமாக இருந்தது. ஜன்னல் திரைச் சீலைகளை விலக்கி வெளியே பார்த்தபோது, நீல நிறத்தில் ஒரு துணியை விரித்து உலர்த்தியதுபோல நீச்சல் குளம் தென்பட்டது. ஆண்களும் பெண்களும் நீந்திக் களித்துக்கொண்டிருந்தார்கள். குளக்கரையில் சாய்வு நாற்காலிகள் காலியாக இருந்தன. எனக்கு அங்கே போய் அமர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது. அறையைப் பூட்டிக்கொண்டு குளக்கரைக்குச் சென்றேன். சிறிது நேரம் குளத்தைப் பார்த்தபடி படுத்திருந்துவிட்டு, சிப்பந்தியிடம் சொல்லி இரண்டு துண்டு வெள்ளரி எடுத்துவரச் சொல்லி கண் மீது வைத்துக்கொண்டு மீண்டும் சாய்ந்து படுத்தேன்.

மிருதுளாவின் தந்தைக்கு நான் சூரிய நமஸ்காரம் செய்யக் கற்றுக்கொடுத்திருந்தேன். தவிரவும் பிராணாயாமம். மிக எளிய இந்த இரு பயிற்சிகளால் அவருக்கு இருந்த சைனஸ் தொந்தரவும் முதுகு வலியும் அவரைவிட்டு நீங்கியிருந்தன. அது ஒரு சுவாரசியமான சம்பவம். ஒருநாள் தொடர்ந்து ஏழெட்டு வியாதிகளைப் பற்றியும் அவற்றால் தான் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் சொல்லி மிகவும் வருந்திக்கொண்டிருந்தார்.

‘எங்கே உங்கள் கையை நீட்டுங்கள்?’ என்று சொல்லி நாடி பிடித்துச் சில விநாடிகள் பார்த்தேன். இந்த நாடி பார்ப்பது ஒரு கலை. நாடி ஜோதிடம் போன்றதல்ல. இது வேறு. இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையைப் பொறுத்து ஒருவனின் நாடி நடை அமையும். இதயத்தின் துடிப்பும் நாடியின் துடிப்பும் பெரும்பாலும் ஒத்திருக்கும். இதில் என்னவாவது சிக்கல் இருக்குமானால் நாடி வழியே இதயம் அதை வெளிப்படுத்தும். நாடியை மணிக்கட்டில் பார்க்கலாம். கண்டத்தில் பார்க்கலாம். காலின் பெருவிரல், கணுக்காலில்கூடப் பார்க்கலாம். என் குருநாதர் கணுக்காலில்தான் எப்போதும் நாடி பிடித்துப் பார்ப்பார். அது அத்தனை உத்தமம் இல்லை என்றாலும் அவருக்கு அதுதான் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்லுவார்.

‘விமல், நல்ல வைத்தியன் என்றால் நாடி ஒன்று போதும். சரீரத்தில் சிலேட்சுமம் ஒரு பங்கு, பித்தம் இரண்டு பங்கு, வாதம் நாலு பங்கு இருந்தால் ரோக சாத்தியம் குறைவு. இதில் மாற்றம் காணும்போது சிகிச்சை அவசியமாகிவிடும்’ என்று என்பார்.

எனக்கு அவரிடம் வைத்திய சாஸ்திரம் பயிலப் பெரிய விருப்பம் இல்லை. ஆனால் அவசரத்துக்கு உதவும் என்று ஒரு சிலவற்றை மட்டும் கற்றிருந்தேன். அங்காகர்ஷண நாசகாரி. ஆம்ல நாசகாரி. உதரவாத ஹரகாரி. கபஹரகாரி. ஸ்மிருதிரோதகாரி. சுரஹரகாரி. பூதி நாசகாரி. மூத்திர வர்த்தனகாரி. விஷநாசகாரி. எளிய வியாதிகளுக்கான எளிய தீர்வுகள். அவர் எனக்கு மருந்துகளை அறிமுகப்படுத்தியதேயில்லை. எல்லா வியாதிகளுக்கும் மூச்சில் உள்ளது தீர்வு என்று சொல்வார். ஆசிரமத்தில் யாருக்கு என்ன ரோகமென்றாலும் கூப்பிட்டு உட்காரவைத்துக் கணுக்காலில் நாடி பார்த்துவிட்டு மூச்சுப் பயிற்சியைத்தான் ஆரம்பிக்க வைப்பார். வியாதிக்கேற்ற பயிற்சி. ஒழுங்காகச் செய்யும்வரை விடவே மாட்டார். ஆனால் சொல்லிவைத்தாற்போல் மூன்று நான்கு தினங்களில் எப்பேர்ப்பட்ட நோயும் குணம் கண்டுவிடும்.

‘குருஜி, ஞானமார்க்கத்தில் மருத்துவத்துக்கு இருக்கிற இடம் ஏன் மற்றக் கலைகளுக்கு இருப்பதில்லை?’

‘ஞானம் என்பது பிரம்மத்தை அறிவது என்றா நினைக்கிறாய்? என்னைப் பொறுத்தவரை அது உடலை அறிவது. உடல் அழியும்போது பிரம்மம் அழிகிறது.’

‘ஆ, அகம் பிரம்மம்!’

‘அதுவல்ல. நீயே பிரம்மம், உனக்குள் பிரம்மம் என்பதெல்லாம் தத்துவம். நான் சொல்வது பிரம்மம் என்பது உன் புனைபெயர்.’

நான் அவரை இறுக்கிப் பிடித்துக்கொண்டதற்கு இதுதான் காரணம். தத்துவங்களுக்கு எதிர்நிலையில் ஒரு ஞான மையத்தை நிறுவும் முயற்சியில் அவர் இருந்தார். அதுதான் என்னை ஈர்த்தது. அவரது நூற்றுக்கணக்கான கடவுள்களை ஒருநாள் எனக்குக் காட்டித் தந்தபோது, அவர் மீதான பிரமிப்பும் மரியாதையும் மிகுந்தது. மனிதர்களின் விதவிதமான ரேகைகளைப் போலவே ஒவ்வொருவரின் சுவாச ஓட்டமும் வேறு வேறாக இருக்கும் என்று அவர் சொன்னார். மூச்சுக்காற்றின் போக்குவரத்தை அவர் கடவுளாகக் கருதினார். அதன் வேகம், அதன் இயல்பு, அதன் மணம், ருசி மாறுகிறபோது அவற்றை எண்களில் குறித்து வேறு வேறு கடவுள்களாகச் சொன்னார். எப்பேர்ப்பட்ட மனிதர்!

‘நீ இன்னும் சற்று உள்ளே வரலாம். உனக்கு வைத்திய சாஸ்திரம் எளிதாக அப்பியாசமாகும்’ என்று ஒருநாள் என்னிடம் சொன்னார்.

‘எனக்கு டாக்டராகும் விருப்பமில்லை குருஜி. பத்து ரூபாய் செலவிட்டால் ஒரு நல்ல டாக்டரும் சிறந்த மருந்துகளும் கிடைத்துவிடும் என்றால் அது என்ன பெரிய கலை?’

‘அப்படியா நினைக்கிறாய்?’ என்று புன்னகை செய்தவர், அப்போதுதான் எனக்கு இயேசுநாதரின் கதையைச் சொன்னார். ‘நீ பைபிள் படிக்க வேண்டும் விமல். மனித குலத்துக்கு எந்நாளும் செய்துகொண்டே இருப்பதற்கு நூறாயிரம் வைத்தியங்களின் தேவை இருந்தபடியே இருக்கிறது. தத்துவங்களும் தருக்கங்களும் தீர்க்காத சந்தேகங்களை ஒரு எளிய ஜலதோஷ நிவாரணி தீர்த்து வைத்துவிடும்.’

‘உண்மையாகவா?’

‘ஆம். உன் வாய்ச்சாலம் உனக்குக் கூட்டத்தைக் கட்டிப்போட்டு உட்காரவைக்கும். அதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் ஒரு கூட்டம் உன்னை நெருங்கிவர உன்னிடம் ஒரு மிட்டாயாவது இருக்க வேண்டியது அவசியம்.’

‘இயேசுநாதரின் மிட்டாய்!’ என்றேன் சிரித்தபடி.

அரைக் கணம் யோசித்துவிட்டு அவர் சொன்னார். ‘ஆம். அவர் ஒரு நல்ல மிட்டாய் வியாபாரி.’

நான் ஒரு சில மிட்டாய்களை எடுத்துக்கொண்டுதான் மைசூருக்கு வந்திருந்தேன். மிருதுளாவின் தந்தை குறிப்பிட்ட பிரமுகர், மரணத்தின் வெளி வாசலில் நின்றுகொண்டிருப்பதாகச் செய்தித் தாள்களில்கூட வர ஆரம்பித்திருந்தது. பழம்பெரும் அரசியல்வாதி. பழம்பெரும் திரைப்பட நடிகர். மூன்றோ அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ திருமணங்கள் புரிந்துகொண்டு குடும்பத்தைப் பல்கலைக் கழகமாக்கியிருந்தவர். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தது எனக்குத் தெரியும். முன்பொரு காலத்தில், அவர் திருவிடந்தைக்குப் படப்பிடிப்புக்கு வந்தபோது நானேகூட அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கியிருக்கிறேன். ஆனால் அவர் அரசியலுக்குப் போனதெல்லாம் எனக்குத் தெரியாது.

மிருதுளாவின் தந்தை சொன்னார், ‘அவர் எங்களுக்கு முக்கியம். அவர் முக்கியம் என்றால் அவர் உயிருடன் இருப்பது. குறைந்தது இன்னும் சில ஆண்டுகளுக்கு.’

நான் யோசித்தேன். தவறான எந்த நம்பிக்கையையும் இந்த மனிதருக்குத் தந்துவிடக் கூடாது என்று தோன்றியது. ‘ஐயா, நான் வைத்தியன் அல்ல. எனக்குத் தெரிந்தவையெல்லாம் பிராண சக்தியைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சில முறைகள் மட்டுமே. நான் முற்றிலும் பயின்றவனல்ல. அது என் துறையுமல்ல.’

‘அதனாலென்ன? அவரை கவனித்துக்கொள்ளப் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்வதை அவர்கள் செய்யட்டும். நீங்கள் செய்வதை நீங்கள் செய்யுங்கள்’ என்று சொன்னார். ஒரு முதுகுவலிப் பிரச்னை தீர்ந்ததுதான் இந்த மனிதரை என்பால் எத்தனைத் தீவிர நம்பிக்கை கொள்ள வைத்துவிட்டது! ஆனால் எனக்கென்னவோ, அவர் வியாதி சொஸ்தத்துக்காக மட்டும் என்னை அந்தப் பழம்பெரும் அரசியல்வாதியிடம் அழைத்துப் போக நினைப்பதாகத் தோன்றவில்லை. வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

பிற்பகல் மூன்று மணிக்கு எங்களுக்குக் கார் வந்தது. நாங்கள் அதில் ஏறிப் புறப்பட்டோம். மைசூரைத் தாண்டி கார் தெற்கே பெங்களூர் செல்லும் சாலையில் போய்க்கொண்டிருந்தது.

‘எங்கே இருக்கிறார் அவர்?’ என்று கேட்டேன்.

‘வீடு மைசூரில்தான் உள்ளது. ஆனால் இப்போது சிலகாலமாக ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வசிக்கிறார். அங்கே அவருக்கு இன்னொரு வீடு உண்டு.’

‘தீவிர அரசியலில் இப்போது அவர் இல்லை அல்லவா?’

‘ஆம். ஆனால் இன்னமும் அவர் ஒரு தீர்மானிக்கும் சக்தியாகத்தான் இருக்கிறார். எந்த ஆட்சி இங்கே வந்தாலும் அவரைக் கேட்காமல் ஒன்றும் நடக்காது.’

‘அப்படியா?’

அவர் இன்னும் என்னென்னவோ சொன்னார். அந்த மனிதரின் அந்தரங்கக் கதைகள். அவருக்கு இருக்கும் வங்கிக் கணக்குகள். அயல் தேசத்துத் தொடர்புகள். இந்தியாவில் அவரை மட்டுமே அறிந்த சில வெளிநாட்டு ஆயுதக் குழுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டபோது எனக்கு வியப்பாக இருந்தது.

‘அதெல்லாமும் உண்டா?’ என்று கேட்டேன்.

‘நீங்கள் நேரில் பார்த்துப் பேசுங்கள். உங்களுக்கே அனைத்தும் புரியும்’ என்று சொன்னார்.

நாங்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது வெளிச்சம் சாயத் தொடங்கிவிட்டிருந்தது. அவரது பங்களா ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய மாந்தோப்புக்குள் இருந்தது. காம்பவுண்டு சுவருக்கு வெளியே நின்று பார்த்தால் உள்ளே ஒரு பங்களா இருப்பதே தெரியாது. தோப்புக்குள் சுமார் எழுநூறு மீட்டர் தூரம் பயணம் செய்த பிறகுதான் வீடு கண்ணில் படும்.

புராதனமான பங்களா. முன்புறம் கார்கள் நிறுத்துவதற்குப் புதிதாகப் பெரிய போர்டிகோ அமைத்திருந்தார்கள். நான் வண்டியைவிட்டு இறங்கியபோது அங்கு ஏழெட்டு கார்கள் நின்றுகொண்டிருந்தன. கட்டிப்போடப்பட்ட நான்கு பெரிய நாய்கள் இருந்தன. ஏராளமான வேலைக்காரர்கள் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். எங்களை உள்ளே அழைத்துச் சென்று வரவேற்பரையில் அமரவைத்தவர், ஐந்து நிமிடங்கள் காத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு உள்ளே போனார். அங்கிருந்த பத்திரிகை ஒன்றை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன்.

யாரோ வெளியே வரும் சத்தம் கேட்டது. நான் பத்திரிகையில் இருந்து கண்ணை விலக்கிப் பார்த்தபோது முதலில் என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் சில விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டேன்.

வினய்யைப் பார்த்து எத்தனை வருடங்களாகிவிட்டன!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com