55. வேறிடம்

வினய்க்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இரவு படுத்த இடம் ஒன்றாகவும் காலை விழித்த இடம் வேறாகவும் இருந்த குழப்பத்தில், சில விநாடிகள் பிரமை கொண்டு அமர்ந்திருந்தான். அண்ணா அவனை நீருக்குள் இறங்கச் சொல்லி அழைத்தபோது சற்று பயந்தான். எதற்கு இந்த விபரீதங்கள் என்று அவனுக்குத் தோன்றியது. கபிலர் இருந்தால் என்ன? இல்லாது போனாலென்ன? அவனுக்கு அவனது நம்பிக்கை. அதைக் கேள்விகளால் காயப்படுத்தி என்ன ஆகப்போகிறது? ஆனால் சந்தேகமில்லாமல் அண்ணா வேறு யாரோவாகியிருக்கிறான். சராசரிகளால் புரிந்துகொள்ள முடியாத சில சக்திகள் அவனுக்கு வந்திருக்கின்றன. அவன் அதைப் பயின்று பெற்றானா, தன்னியல்பாக வந்ததா என்பதல்ல முக்கியம். இனி எந்நாளும் அவன் வீடு திரும்பப் போவதில்லை என்பதுதான் அவனது நடவடிக்கைகள் சொல்லும் செய்தியாக இருந்தது.

அண்ணா அவனை மீண்டும் அழைத்தான். ‘பயப்படாமல் இறங்கு. நான் இருக்கிறேன்.’

‘எதற்கு?’ என்று வினய் கேட்டான்.

‘சொன்னேனே? உனக்கு அனுமதி தரப்பட்டிருக்கிறது.’

வினய் சிறிது யோசித்தான். ‘விஜய், நான் உன்னை மதிக்கிறேன். உன்னை நம்புகிறேன். ஆனால் எனக்கு இதெல்லாம் வேண்டாம்.’

அண்ணா புன்னகை செய்தான். இரண்டு தாவில் நீந்தி, படியருகே வந்தான். தண்ணீர் சொட்டச் சொட்ட வினய் அருகே நடந்துவந்து அவன் தலையில் கைவைத்தான்.

‘என்ன செய்கிறாய்? இதோ பார் மந்திர மாயங்களெல்லாம் எனக்கு வேண்டாம்.’

‘ஒன்றுமில்லை வினய். சிறிது அமைதியாக இரு’ என்றவன், அவன் தலை மீது வைத்த உள்ளங்கையை மெல்ல மெல்ல அழுத்த ஆரம்பித்தான்.

‘என்ன செய்கிறாய்? எனக்கு இதெல்லாம் வேண்டாம்’ என்று வினய் மீண்டும் சொன்னான். அவன் கையைத் தட்டிவிட்டு எழுந்து செல்ல முயன்றபோது, அண்ணா அவனை அப்படியே தூக்கிக் குளத்துக்குள் போட்டான்.

வினய்க்கு மூச்சடைத்துவிட்டது. அவனுக்கு நீச்சல் தெரியாது. இறந்துவிடப்போகிறோம் என்ற பதற்றத்தில், ஆவேசமாக அண்ணாவை உதைத்துத் தள்ளி வெளியே வரப் பார்த்தான். சில விநாடிகள்தாம். தான் இறக்கவில்லை என்பது புரிந்துவிட்டது. தவிர நீருக்குள் அதுவரை அவன் போனதில்லை என்பதால், அந்த அனுபவம் புதிதாக இருந்தது. உடலின் எடை முற்றிலுமாக இல்லாமலாகிவிட்டதாக உணர்ந்தான். ஒரு மீனைப்போல் போய்க்கொண்டே இருந்தான். திடீரென்று அவனுக்குக் குழப்பமாகிவிட்டது. குளம்தானே இது? ஆனால் எப்படி இத்தனை நீண்ட பயணத்தை அதன் ஆழத்தில் செய்கிறோம்? அத்தி வரதரேகூட இருபதடி ஆழத்தில்தான் இருப்பதாகச் சொல்லுவார்கள். ஆனால் இதென்ன அதையும் தாண்டிப் போய்க்கொண்டே இருக்கிறோம்?

தன்னோடு வந்துகொண்டிருந்த அண்ணாவிடம் வினய் இதைக் கேட்டான். அப்போது அவனுக்கு மீண்டும் வியப்பாக இருந்தது. தண்ணீருக்குள் எப்படித் தன்னால் பேச முடிகிறது? தன்னால் பேச முடிவது மட்டுமல்ல. பேசுவது அவனுக்குக் கேட்கவும் செய்கிறது. இதென்ன ஆச்சரியம்!

அண்ணா சொன்னான், ‘அத்தி வரதர் என்பவரை ஒரு சிலையாகவா கருதுகிறாய்?’

‘இல்லையா பின்னே? நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை குளத்து நீரை இரைத்து வெளியே கொட்டி அவர் சன்னிதிக்குப் போக வழி செய்வார்கள் என்று சொன்னார்களே.’

‘ஆம். அது உண்மைதான். ஆனால் கடவுள் என்பது சிலையல்ல.’

‘அதுசரி. கடவுள் என்பவர் சிலையல்லதான். ஆனால் அத்தி வரதர் சிலைதானே?’

‘இல்லை வினய். அவர் ஒரு ஆள். ஆசாமி. அவரது நிஜப்பெயர் கபிலர்.’

‘நீ பொய் சொல்கிறாய். இதையெல்லாம் நம்ப நான் குழந்தையில்லை’ என்று வினய் சொன்னான்.

அண்ணா சிரித்தான். ‘நீருக்குள் நீ நீந்தி வருகிறாய். நீருக்குள் உன்னால் பேச முடிகிறது. என்னோடு விவாதம் செய்ய முடிகிறது. இதையெல்லாம் மட்டும் எப்படி நம்புகிறாய்?’

வினய்க்குக் குழப்பமானது. ஆம். எப்படி இதெல்லாம் முடிகிறது?

‘வினய், அறிதலின் எல்லை என்று ஒன்று உள்ளது. அதேபோல, அறிவின் எல்லையும் ஒன்று உண்டு. அதற்கும் அப்பால் உலவும் சக்தியை அறிவதே ஆன்மிகம். வேறு வழியில்லை. இதையும் அறியத்தான் வேண்டும். ஆனால் மூளையைப் பயன்படுத்தி அறிய முடியாது. மனத்தால் நிகழ வேண்டியது இது’ என்று அண்ணா சொன்னான்.

வினய்க்கு அது புரியவில்லை. தனக்கு எதற்கு இது என்ற வினா மட்டும் அவன் மனத்தில் இருந்தது. ஆனால் அதை அவனிடம் கேட்கவில்லை. இருபது முப்பது நிமிடங்கள் நீருக்கடியில் போய்க்கொண்டிருந்த பின்பு அண்ணா அவன் கையை எட்டிப் பிடித்தான்.

‘என்ன?’

‘நாம் வந்தடைந்துவிட்டோம்.’

‘எங்கே?’

‘கபிலரின் இருப்பிடத்துக்கு. அங்கே பார்’ என்று அவன் சுட்டிக்காட்டிய திசையில் நீர்த்தாவரம் ஒன்று புதராகப் பெருகி வளர்ந்து மிதந்துகொண்டிருந்தது. அண்ணா அந்த இடத்துக்கு வினய்யை அழைத்துச் சென்றான். நீந்தியபடியே புதரை விலக்கி அவன் முன்னால் செல்ல, வினய் அவன் கால்களைப் பிடித்துக்கொண்டு பின்னால் மிதந்து சென்றான். முதலில் அது ஒரு புதரைப் போலத்தான் தெரிந்தது. ஆனால் போகப் போக அது ஒரு பெரும் கானகத்தின் நுழைவாயில் என்று புரிந்தது. அண்ணா அங்கே அடிக்கடி வருபவனைப் போல வெகு இயல்பாகப் போய்க்கொண்டே இருந்தான். நீருக்கடியில் இத்தனை பெரிய கானகம் எப்படி சாத்தியம் என்று வினய்க்குப் புரியவேயில்லை. வியப்பும் பிரமிப்புமாக அவன் நாலாபுறமும் பார்த்துக்கொண்டே போனான். சட்டென்று ஓரிடத்தில் நீரற்றுப் போனது. அந்தக் கணம் இருவருமே பொத்தென்று கீழே விழுந்தார்கள். பெரிய உயரமில்லை. ஒரு நாலடி உயரம்தான் இருக்கும். குளத்துக்குள் குதித்தது போலவே, குளத்தில் இருந்து குதித்தாற்போன்ற அனுபவம்.

‘டேய், நாம் குளத்துக்குள் அல்லவா இறங்கி வந்தோம்? திடீரென்று எப்படித் தரை தெரிகிறது? தவிர, இங்கு தண்ணீரின் சுவடே இல்லையே?’ என்று வினய் கேட்டான்.

‘தண்ணீர் இல்லாமல் எப்படி இத்தனைத் தாவரங்கள் இருக்கும்? அந்த மரத்தைப் பார். அப்படியொரு மரத்தை நீ எங்குமே கண்டிருக்க முடியாது’ என்று அண்ணா ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டினான்.

விழுந்த இடத்தில் எழுந்து நின்று திரும்பிப் பார்த்த வினய் பிரமிப்பில் மூச்சடைத்துப் போனான். ஆறடி உயரம்தான் அந்த மரம். நூறு கிளைகளும் கிளை மறைத்த வட்ட வடிவ இலைகளும் ஒவ்வொரு இலைக்கு நடுவிலும் ஒரு தாமரைப் பூவுமாக மிகவும் நூதனமாக இருந்தது அது. தாமரை எப்படி மரத்தில் பூக்கும்? அல்லது இது தாமரை போன்ற தோற்றமுடைய வேறு ஏதேனும் மலரா?

வினய் நம்ப முடியாத அதிசயத்தைக் கண்டவன்போல் அந்த மரத்தருகே சென்று ஒரு பூவைத் தொட்டுப் பார்த்தான். செந்நிறத்தில் பூத்துப் பொலிந்திருந்த அந்த மலர் அவன் விரல் பட்டதும் நீலமானது. அவன் பயந்துவிட்டான். அண்ணா புன்னகையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘இதைத் தொடக்கூடாதா?’ என்று வினய் கேட்டான்.

‘அப்படியெல்லாம் இல்லை. இன்னொன்றைத் தொடு’ என்று அண்ணா சொன்னான்.

வினய் தயக்கமுடன் இன்னொரு பூவைத் தொட்டான். உடனே அதுவும் நீலமானது.

‘இது என்ன அதிசயம்? இது எப்படி நிகழ்கிறது!’ என்று வினய் கேட்டான்.

‘நீ அதை வலக்கையால் தொட்டாய் அல்லவா? இம்முறை இடக்கையால் இன்னொரு பூவைத் தொடு’ என்று அண்ணா சொன்னான்.

வினய் இடது கரத்தால் இன்னொரு பூவைத் தொட்டதும், அது ஒரு கனியாக மாறி அவன் கரத்தில் விழுந்தது.

‘டேய் என்னடா இதெல்லாம்!’

‘சாப்பிடு’ என்று அண்ணா சொன்னான். வினய், வியப்பு நீங்காமல் அதை வாயில் வைத்து ஒரு துளி கடித்தான். அது இனிப்பாக இல்லை. கசப்போ துவர்ப்போ புளிப்போ காரமோ உப்போ இல்லை. சுவையற்றதாகவும் இல்லை. ஆனால் என்ன சுவையென்று அவனால் கண்டறிய முடியவில்லை. என்ன என்ன என்று அண்ணாவிடம் திரும்பத் திரும்பக் கேட்டான்.

‘நீ உனக்குத் தெரிந்த ஆறு சுவைகளில் இது எது என்று யோசிக்கிறாய். இதைத்தான் சொன்னேன். நீ அறிந்தவற்றுக்கு அப்பால் உள்ளவற்றை அறிந்ததைக் கொண்டு அளக்க முடியாது.’

‘அப்படியா? ஏழாவதாக ஒரு சுவை உண்டா?’

‘ஏழாயிரம் சுவைகள்கூட இருக்கலாம் அல்லவா?’

வினய்க்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. இன்றெல்லாம் இடைவிடாமல் அவன் தன்னை பிரமிப்பில் வீழ்த்திக்கொண்டே இருக்க முடிவு செய்திருப்பதாக நினைத்தான். ஒரு மாறுதலுக்கு அவனைச் சற்று அதிர்ச்சியடைய வைத்துப் பார்த்தால் என்ன?

சட்டென்று அவன் தன் கையில் இருந்த கனியை எறிந்துவிட்டு, அம்மரத்தின் இலைகளைப் பறித்து உண்ண ஆரம்பித்தான். கணப்பொழுதில் அவன் உடல் பச்சைப் பசேலென்று நிறம் மாறிப்போனது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com