54. கபிலர்

ஆவிகள் இல்லை. ஆத்மாக்கள் உண்டு. இறப்புக்கும் இல்லாமல் போவதற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் அவை ஊசலாடிக்கொண்டிருக்கும். நாங்கள் அவற்றை ஒரு போலிஸ் நாயைப்போல் பழக்கி வைத்திருப்போம்.

வாழ்வில் எதற்குமே அதிர்ச்சியடைவதோ, உணர்ச்சிவசப்படுவதோ கூடாது என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன். எனக்குப் பசி தெரியும். பசி மறக்கவும் பசியை அடக்கவும் தெரியும். மறுபுறம் குபேர விருந்துகளை நானறிவேன். மேசையெங்கும் நிறைந்துகிடக்கும் விதவிதமான உணவுப் பண்டங்களின் நடுவே நீந்தி நீந்தி இஷ்டத்துக்கு எடுத்து உண்டிருக்கிறேன். பணக்காரர்கள், ஏழைகள், பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்கள், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நூறாயிரம் பேரைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு முழு வாழ்க்கை. ஒவ்வொரு வாழ்விலும் எத்தனை அனுபவங்கள். அதிர்ச்சியடைய வைக்கவும், வியப்பூட்டவும் ஒவ்வொருவரிடத்திலும் குறைந்தது ஒரு விஷயமாவது நிச்சயம் உண்டு. நாளெல்லாம் வாழ்வெல்லாம் மனிதர்களைச் சந்தித்துக்கொண்டே இருப்பவன், கணந்தோறும் அதிரவும் வியக்கவும் செய்வது சிரமம். வெறும் மௌனத்தில், சிறு புன்னகையில் எதையும் கடந்துவிடப் பழகியிருந்தேன்.

ஆனால், வினய் சொன்ன தகவல் உண்மையில் என்னை அதிரவைத்தது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு கணம் அவனுக்காகப் பரிதாபப்பட்டேன். என்னையறியாமல் கண் கலங்கினேனா என்ன? தெரியவில்லை. இருக்கலாம். வெளியெங்கும் விரிந்திருந்த நதியின் மேல் தோல் சற்றே மங்கித் தெரிந்தது. நெடுநேரம் பேச்சற்றுப் போய் அமர்ந்திருந்தேன். பிறகு சொன்னேன், ‘நீ சொன்னது சரி. நீ அந்த சொரிமுத்துக் கிழவனிடமே இருந்திருக்கலாம். அல்லது செத்துப் போயிருக்கலாம்.’

அவன் என்னை திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தான்.

‘நான் யோசிக்காமல் பேசவில்லை வினய். உண்மையிலேயே நீ இறந்திருக்கலாம். அண்ணா நிச்சயமாக உன்னை இப்படியொரு பாதைக்குத் திருப்ப எண்ணியிருக்கமாட்டான்.’

‘நான் அவனைப் பொருட்படுத்தவில்லை. என் வரையில் எனக்குச் சரியென்று பட்டதைத்தான் நான் செய்தேன்’ என்று சொன்னான்.

‘அதிருக்கட்டும். உண்மையிலேயே ஆவிகள் இருக்கின்றனவா?’ என்று கேட்டேன்.

‘ஆவிகள் இல்லை. ஆத்மாக்கள் உண்டு. இறப்புக்கும் இல்லாமல் போவதற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் அவை ஊசலாடிக்கொண்டிருக்கும். நாங்கள் அவற்றை ஒரு போலிஸ் நாயைப்போல் பழக்கி வைத்திருப்போம்.’

‘எதற்கு? பிஸ்கட் பொட்டலம் எடுத்து வரவா?’

‘நீ கிண்டல் செய்கிறாய். உண்மையில் இது சித்துக்குச் சற்றும் சளைக்காத பணி.’

‘முட்டாள்!’ என்று கத்தினேன்.

‘இல்லை. உண்மையிலேயே அதுதான். இல்லாத ஒன்றை யாரும் உற்பத்தி செய்ய முடியாது விமல். எல்லாமே இருப்பதுதான். சிறு தெய்வங்களைக் கொண்டு செயல்படுகிறோமா, ஆத்மாக்களைக் கொண்டு செயல்படுகிறோமா என்பதுதான் வித்தியாசம்.’

அவனுக்குத் தீவிரமாக என்னவோ ஆகியிருக்கிறது என்று நினைத்தேன். அடி மனத்தில் அவனே வெறுக்கிற ஒரு செயலை மேல் மனத்தின் துணையுடன் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறானோ என்று சந்தேகமாக இருந்தது. இப்படியே விட்டால் வெகு விரைவில் வினய் தற்கொலை செய்துகொண்டுவிடுவான் என்று பட்டது. ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசியல்வாதி இன்னும் சில நாள்களுக்காவது சௌக்கியமாக இருப்பார். நான் வினய்யை முதலில் கவனித்தாக வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். மிகவும் வற்புறுத்தி என்ன நடந்தது என்று முழுதாகச் சொல்ல வைத்தேன்.

அவன் சொன்ன கதை உண்மையிலேயே மிகவும் பரிதாபகரமானது. அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வாலாஜாபாத்தில் அண்ணாவைச் சந்தித்த பிறகு வினய்க்கு காஞ்சீபுரம் செல்லத் தோன்றவில்லை. ‘இன்னிக்கு நான் உன்னோடவே இருந்துடறேனே’ என்று அண்ணாவிடம் அவன் கேட்டிருக்கிறான். அவன் பதில் சொல்லவில்லை என்றாலும் மறுக்கவும் இல்லை. அன்றிரவு அண்ணா அவனுக்கு இரண்டு பொறைகள் வாங்கிக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லியிருக்கிறான். ‘உனக்கு?’ என்று வினய் கேட்டதற்கு, ‘நான் இப்ப சாப்பிடறதில்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறான்.

‘பசிக்காதா?’

‘இல்லை. பசிக்காது. நீ சாப்டு’

வினய் அதற்குமேல் அவனை வற்புறுத்தவில்லை. பொறைகளைச் சாப்பிட்டுவிட்டு அந்த டீக்கடையிலேயே தண்ணீர் வாங்கிக் குடித்தான். ‘நீ எங்க தங்கியிருக்கே?’ என்று கேட்டான். அண்ணா சிரித்தான்.

‘எதுக்கு சிரிக்கறே? இந்த ஊர்லதானே இருக்கே?’ என்று வினய் மீண்டும் கேட்டான்.

‘இங்கேயும் இருப்பேன். அதைவிடு. உனக்குப் படுக்கணும். அதானே? என்னோட வா’ என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தான். இருவரும் பத்து நிமிடங்கள் நடந்து ஒரு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த வீட்டில் ஒரு கிழவி தனியாக இருந்தாள். அண்ணா அவளிடம், ‘இன்னிக்கு இவன் இங்க படுத்துக்கட்டும்’ என்று சொன்னான். யார் என்ன என்றுகூட விசாரிக்காமல் அவள் சரியென்று சொல்லிவிட்டு, ஒரு பாயை எடுத்து வந்து விரித்தாள். வினய் படுத்துக்கொண்டு, ‘நீயும் படுக்கறதுதானே?’ என்று அண்ணாவைப் பார்த்துச் சொன்னான். அவன் சிரித்தபடி, ‘சரி’ என்று சொல்லிவிட்டு அவனருகே படுத்தான்.

‘ரொம்ப வருஷமாச்சில்லே?’

‘என்னது?’

‘நம்மாத்துல நாம நாலு பேரும் இப்படித்தான் ஒருத்தர் பக்கத்துல ஒருத்தர் வரிசையா படுப்போம். ஒரு கோடில அப்பா. இன்னொரு கோடில அம்மா.’

‘ஆமா.’

‘நீ அதையெல்லாம் நினைச்சிப்பியாடா?’ என்று வினய் கேட்டான்.

‘இல்லே. நினைக்கறதில்லே’ என்று அண்ணா பதில் சொன்னான்.

‘எப்படிடா இப்படி எல்லாத்தையும் சட்டுனு உதறமுடிஞ்சிது உன்னால?’

‘தெரியல.’

‘இதெல்லாம் ஒரு பக்குவம் இல்லே? எனக்குத்தான் இதெல்லாம் புரியமாட்டேங்கறது. ஆனா நீ ஊரைவிட்டுப் போனப்பவே விமல் சொன்னாண்டா. நீ சாதாரண ஆள் இல்லை, குளத்துக்கு அடில பத்து நிமிஷம் மூச்சடக்கி தியானம் பண்ணுவே அப்படி இப்படின்னு என்னவோ...’

‘ஆமா.’

‘அந்த குளத்துல ரிஷிகள்ளாம் இருக்கான்னு சொல்லுவியாமே? சினிமாக்காராதான் அங்க பர்மனண்ட்டா இருப்பா.’

‘இல்லை வினய். அங்க ரிஷிகள் இருக்கா. அது பொய்யில்லே.’

‘நீ பாத்திருக்கியா?’

‘ஆமா.’

‘தப்பா நினைச்சிக்காத விஜய். என்னால நம்ப முடியலை’ என்று வினய் சொன்னான்.

‘அதனால ஒண்ணும் பிரச்னை இல்லை. நீ நம்பணும்னு நான் சொல்லலியே?’

‘இல்லே.. நிஜமாவே ரிஷிகள் இருந்தான்னா.. சரி, அப்படியே இருந்தாலும் நம்ம கண்ணுக்கெல்லாம் தெரியற மாதிரியாவா இருப்பா?’

‘என் கண்ணுக்குத் தெரிஞ்சா.’

‘நிஜமாவா?’

‘நான் பொய் சொல்லக் கூடாது வினய். எனக்கு அதுக்கு அனுமதி இல்லை.’

‘யாரோட அனுமதி?’

‘என் குரு.’

‘அது யாரு?’

‘உனக்குத் தெரியாது. கபிலர்.’

வினய்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. கபிலர்! எளிய சில சொற்களில் எத்தனை அநாயாசமாக இவன் காலங்களைக் கடந்துவிடுகிறான்! நீ நம்புவது நம்பாதது என் பிரச்னையில்லை என்று எத்தனை சுத்தமாக நகர்த்தி வைத்துவிடுகிறான்! எப்படி முடிகிறது இதெல்லாம்!

‘கபிலரா! அவரை நீ பாத்திருக்கியா?’

‘அவர்தான் என் குரு.’

‘சரி. எங்க இருக்கார் அவர்?’

அவன் சற்றும் தயங்காமல் பதில் சொன்னான். ‘முன்னாடி, நம்ம ஊர் அல்லிக் குளத்துக்கு அடியிலே இருந்தார். இப்போ அங்கே இல்லை.’

‘பின்னே?’

‘உங்க காஞ்சீபுரம் வரதர் கோயில் குளத்துக்கடியிலே இருக்கார்.’

வினய் சிரித்துவிட்டான். ‘அத்தி வரதருக்குத் துணையாவா?’

‘இல்லை. அத்தி வரதரே அவர்தான்.’

அதற்குமேல் என்ன பேசுவதென்று வினய்க்குத் தெரியவில்லை. ஒரு சன்னியாசிக்குரிய சகல லட்சணங்களும் அண்ணாவுக்குச் சேர்ந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அதற்குமேல் அவனை வற்புறுத்தி வீட்டுக்கு அழைப்பதெல்லாம் முடியாத காரியம் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. இந்த சித்து ஆட்டங்கள், மாய தந்திர விளையாட்டுகளை எங்கே கற்றுக்கொண்டான் என்பது மட்டும் தெரிந்துவிட்டால் போதும்.

‘விளையாட்டா? நான் எங்கே விளையாடினேன்?’ என்று அண்ணா கேட்டான்.

‘இல்லே.. என் பக்கத்துல நின்னுண்டு டெலிபோனுக்குள்ளேருந்து பேசினியே.. அதச் சொன்னேன்.’

‘அது விளையாட்டில்லை வினய். அது ஒரு அறிவியல்’ என்று அண்ணா சொன்னான்.

‘அதையும் கபிலர்தான் கத்துக் குடுத்தாரா?’

‘ஆமா.’

‘உனக்கு மட்டும்தான் கத்துக் குடுப்பாரா? இல்லே யார் கேட்டாலும் கத்துக் குடுப்பாரா?’

‘யார் கேட்டாலும் கத்துக் குடுப்பார். ஆனா, யார் கண்ணுல அவர் தென்படறார்னு ஒண்ணு இருக்கில்லியா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

வினய் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. உறங்கத் தொடங்கும் முன் ஒன்று மட்டும் சொன்னான், ‘உன்கிட்டே எதோ சில சக்தி இருக்குன்னு புரியறது விஜய். ஆனா நீ சொல்ற கபிலர் கதையெல்லாம் நம்பும்படியா இல்லை. தப்பா நினைச்சிக்காதே.’

‘அப்படியா?’

‘ஆமா. அப்படித்தான்.’

‘சரி தூங்கு. நான் அவர்கிட்டே கேக்கறேன்.’

‘என்னன்னு?’

‘என் தம்பிய நம்ப வெக்கறேளான்னு.’

‘சரின்னு சொல்லுவாரா?’

‘சொல்லிட்டார்னா நாளைக்குக் கார்த்தால ஒன்ன அவர்ட்ட கூட்டிண்டு போறேன்.’

‘எங்கே? காஞ்சீபுரம் வரதர் சன்னிதிக்கா?’

‘சன்னிதில எனக்கென்ன வேலை? குளக்கரைக்குப் போனா போதும். அவர் உள்ளதான் இருப்பார்.’

வினய் சரி என்று சொன்னான். சிரித்துக்கொண்டே உறங்கிப் போனான்.

மறுநாள் விடிந்தபோது, அவன் வரதர் கோயில் புஷ்கரணிக் கரையில் இருந்தான். அவன் பார்த்துக்கொண்டிருந்தபோதே அண்ணா குளத்துக்குள் இருந்து எழுந்து வெளியே வந்தான்.

‘வா. ஒன்ன கூட்டிண்டு வரச் சொல்லிட்டார்’ என்று சொன்னான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com