59. காற்றின் இருப்பிடம்

என் சின்ன வயசுல மாடமாளிகையெல்லாம் கட்டியிருக்கேன். மண்ணுல கட்டாத கொழந்தை ஏது? போற இடத்துமேல பொறந்ததுலேருந்து பாசம் இருக்கத்தாஞ் செய்யும்.

பொட்டல் வெளியான தனுஷ்கோடியில் மூலிகை கிடைக்கும் என்று வினய் நினைக்கவில்லை. ஆனால் அதற்காகத்தான் அங்கே வந்திருப்பதாக சொரிமுத்து சொன்னான்.

‘இங்கே சவுக்கு தவிர வேற மரம்கூட இல்லையே’ என்று வினய் கேட்டான்.

‘ஆமால்ல?’ என்று மட்டும் சொல்லிவிட்டு சொரிமுத்து சிரித்தான். பகல் பன்னிரண்டு மணி வரை கடலோரத்தில் அமர்ந்திருந்துவிட்டு அதன்பின் ‘போலாம் வா’ என்று சொரிமுத்து எழுந்து நடக்க ஆரம்பித்தான். வினய்யால் அவன் வேகத்துக்கு நடக்க முடியவில்லை. ஒரு ராட்சசனைப் போல் மணலில் பாதங்களைப் புதைத்துப் புதைத்து அவன் விரைந்துகொண்டிருந்தான். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் கைப்பிடி அளவு மணல் மேலே துள்ளியெழுந்து கால்களை மூடின.

அவர்கள் சவுக்குக் காட்டுக்கு வந்து சேர்ந்தபோது நான்கைந்து மட்டக் குதிரைகள் அங்கே மேய்ந்துகொண்டிருந்ததை வினய் கண்டான். கிட்டே போய்த் தொட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. ஆனால் வேண்டாம் என்று சொரிமுத்து சொன்னான். ‘எதையும் யாரையும் தொந்தரவே பண்ணக் கூடாது, தெரிஞ்சிக்கிட்டியா? நாம எதுக்கு வந்தோமோ அத மட்டும்தான் பாக்கணும்.’

‘நாம எதுக்கு வந்தோம்?’

‘இதத்தான் நானும் உங்கண்ணனும் எங்கள மாதிரி இன்னும் சில பேரும் ரொம்ப வருசமா கேட்டுக்கிட்டிருக்கோம்’ என்று சொல்லிவிட்டு கெக்கெக்கே என்று சிரித்தான்.

‘இல்லை. நிஜமாவே எனக்கு இது தெரியணும். நான் காஞ்சீபுரத்துல பாடசாலைல படிச்சிண்டிருந்தேன். பிரபந்தத்துல ரெண்டாயிரம் எனக்கு அத்துப்படி. கோயில், உற்சவம், கோஷ்டி, சேவைன்னு வாழ்க்கை வேற விதமாத்தான் இருந்திருக்கணும். எல்லாத்தையும் விட்டுட்டு ஏன் உங்ககிட்ட வந்தேன்னே புரியலை.’

சொரிமுத்து அவனைச் சிறிது உற்றுப் பார்த்தான். பிறகு தோளில் கை போட்டு நடக்க ஆரம்பித்தான்.

‘பாடசாலைக்கு முன்னாடி என்ன செஞ்சிட்டிருந்தே?’

‘ஸ்கூல்ல படிச்சிண்டிருந்தேன்.‘

‘அப்போ அந்தப் பொண்ணு சித்ரா?’

தூக்கிவாரிப் போட்டது வினய்க்கு. அண்ணாவுக்குத் தெரிந்திருக்குமா? அவந்தான் சித்ராவைக் குறித்து இவனிடம் சொல்லியிருக்க வேண்டும். ஒரு காதலாகக் கூட மலராத வெறும் நினைவைக் குறிப்பிட்டு விசாரிக்க என்ன அவசியம் இருக்கும் என்று அவனுக்குப் புரியவில்லை.

‘டேய், நடிக்காத. காதலெல்லாம் இல்லை. நீ அவளைத் தொட நினைச்சியா இல்லியா? அதச் சொல்லு. மார புடிச்சி கசக்கிப் பாக்க ஆசைப்பட்டல்ல?’ என்று சொரிமுத்து கேட்டான்.

வினய்க்கு பயமாகிவிட்டது. மனத்துக்குள் ஓடுவதை இவன் எப்படிப் படிக்கிறான். நினைக்கும் விஷயத்தில் இருந்து கேள்விகளை உருவாக்கத் தெரிந்தவனாக இருக்கிறான். நல்லது. இது சித்துதான். இவனிடம் எதையும் ஒளித்துப் பயனில்லை என்று அவனுக்குத் தோன்றியது.

‘இப்ப நினைச்ச பாத்தியா? அதாங்கரீட்டு. எதையும் மறைக்காத. அப்படியே சொல்லு.’

‘எதுக்கு சொல்லணும்? உங்களுக்கேதான் எல்லாம் தெரிஞ்சிருக்கே?’

‘பரவால்ல, நீ சொல்லு’ என்று அவன் மீண்டும் தூண்டினான்.

வினய் சிறிது நேரம் யோசித்தான். இனி மறைக்க ஒன்றுமில்லை. இவனிடம் ஏன் வந்தோம் என்பது தெரிய வேண்டுமானால் இவனுக்கு நேர்மையாக இருந்தே தீர வேண்டும் என்று தோன்றியது. எனவே சொல்ல ஆரம்பித்தான்.

‘ஆமா. எனக்கு அவளத் தொடணும்னு தோணித்து. படுக்கவெச்சி நாக்கால உடம்பு பூரா நக்கிப் பாக்கணும்னு அடிக்கடி தோணும்.’

‘உம். அப்பறம்?’

‘எங்க ஊருக்கு நிறைய சினிமாக்காரா வருவா. அங்க டெய்லி ஷூட்டிங் நடக்கும்.’

‘சரி.’

‘எல்லா நடிகையையும் கிட்டப் போய் மோந்து பாக்கணும்னு தோணும்.’

‘போடு. மேல சொல்லு.’

‘எந்த பொம்மனாட்டிய பாத்தாலும் அவா புடவைய அவுத்துட்டு குளிக்க ரெடியாற மாதிரி மனசுக்குள்ள நினைச்சிப்பேன்.’

‘உங்கம்மாவையுமா?’ என்று சொரிமுத்து கேட்டான்.

‘ஐயோ’ என்று வினய் அலறிவிட்டான்.

‘இல்லேன்னா இல்லேன்னு சொல்லு. அவ்ளதான். மேல போ.’

வினய்க்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘இதெல்லாம் எல்லாருக்கும் தோணறதுதான். நான் மட்டும் ஒண்ணும் தப்பா நினைக்கலை. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும்கூட இப்படித்தான் நினைப்பாங்க.’

‘ஆங். அதச் சொல்லு. எல்லாரும் இப்படித்தான் நினைப்பானுக. ஆனா யாரும் மார பாத்துட்டு, மாருக்குள்ள எலும்பும் நரம்பும் ஓடுறத நினைக்கறதா சொல்ல மாட்டாங்க இல்லே?’

சட்டென்று வினய் அவன் காலில் விழுந்தான். நெடுநேரம் அவனது கால்களைப் பிடித்தபடி குமுறிக் குமுறி அழுதுகொண்டே இருந்தான். அவன் தடுக்கவில்லை. கால்களை நகர்த்தவும் இல்லை. பேச்சற்றுக் கடந்த கணங்களை சவுக்குக் காட்டின் காற்று விழுங்கிக்கொண்டிருந்தது. அவன் சமநிலைக்கு வந்து எழுந்தபோது, சொரிமுத்து அன்போடு அவன் தலையை இரு கரங்களாலும் ஏந்திப் பிடித்து, ‘இந்தப் பொய் இருக்கே, அதுதான் ஆலகால வெசம். நீ உன் தம்பிகிட்ட மட்டும்தான் அதச் சொன்னே. ஆனா அப்படிச் சொன்னதைத்தான் இப்பம் வரைக்கும் நினைச்சிக்கிட்டிருக்க. ஆமாவா இல்லியா?’

‘ஆமா’

‘இப்பம் புரியிதா ஒனக்கு? பொய்தான் உன்னோட கேன்சர். ஒன்ன அதுதான் தின்னுக்கிட்டிருக்கு.’

‘நான் சரியானவன் இல்லை. அது எனக்குத் தெரியும். ஆனா பொம்மனாட்டிய நினைக்காத ஆம்பளைகள் இல்லை. அப்படி நினைக்கறது தப்புன்னா வம்ச விருத்தியே இல்லியே?’

‘தப்புன்னு நாஞ்சொல்லலியே?’

‘பின்னே?’

‘கசக்கணும்னு சொன்னே. நக்கிப் பாக்கணும்னு சொன்னே. அதைச் சொல்ல வேண்டியதுதானே உன் தம்பிகிட்ட? அதை விட்டுட்டு, மாருக்குள்ள எலும்ப பாக்கறேன், ரத்தத்த பாக்கறேன்னு எதுக்கு சொன்னே?’

‘அவன் சின்னப் பையன். அவன் என்னைத் தப்பா நினைச்சிட்டான்னா அதை என்னால தாங்க முடியாது.’

கிழவன் சிரித்தான். ‘சரி வா’ என்று அவனை இன்னும் சிறிது தூரம் அழைத்துச் சென்றான். சவுக்குக் காடு அங்கே இன்னும் அடர்ந்து நிறைந்திருந்தது. வெளிச்சம் மிகக் குறைவாகவே இருந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனித நடமாட்டமே இல்லாதிருந்தது.

‘நாம இங்க எதுக்கு வந்திருக்கோம்?’ என்று வினய் மீண்டும் கேட்டான்.

‘சொல்றேன். முதல்ல இந்த இடத்தைக் கொஞ்சம் தோண்டு’ என்று சொரிமுத்து ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினான். சற்றே இறுகியிருந்த மணல்தான். அங்கு தோண்டுவதற்கு கடப்பாறையெல்லாம் வேண்டாம் என்று வினய்க்குத் தோன்றியது. குனிந்து உட்கார்ந்து கைகளால் விறுவிறுவென்று தோண்டத் தொடங்கினான். சட்டென்று கிழவனைப் பார்த்து, ‘திருவிடந்தை பீச்சுல சின்ன வயசுல இப்படித் தோண்டித் தோண்டி கோபுரம் கட்டுவோம்’ என்று சொன்னான்.

‘நான் என் சின்ன வயசுல மாடமாளிகையெல்லாம் கட்டியிருக்கேன். மண்ணுல கட்டாத கொழந்தை ஏது? போற இடத்துமேல பொறந்ததுலேருந்து பாசம் இருக்கத்தாஞ் செய்யும்’ என்று சொரிமுத்து சொன்னான்.

வினய் அரை மணி நேரம் அங்கே தோண்டிக்கொண்டே இருந்தான். மூச்சு வாங்கியது. மூக்கில் வியர்த்து ஒரு சொட்டு கீழே உதிர்ந்தது. இப்போது அவன் தோண்டிய இடத்தில் சிறியதாக ஒரு புடைவை நுனி தென்பட்டது. அவன் அதிர்ச்சியுடன் சொரிமுத்துவை நிமிர்ந்து பார்த்தான்.

‘நீ தோண்டினது போதும். நகந்துக்க’ என்று சொல்லிவிட்டு அவன் அந்தக் குழிக்கு அருகே வந்து அமர்ந்துகொண்டான். கண்ணை மூடி ஏதோ சொன்னான். பிறகு குனிந்து அந்தப் புடைவை நுனியைத் தொட்டான். ஒரு கொத்துத் தாள்களில் இருந்து ஒன்றை மட்டும் தொட்டு உருவுவதுபோல அவன் அந்தப் புடைவை நுனியைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தான். வினய்யால் தான் கண்டதை நம்ப முடியவில்லை. அவன் தோண்டிய குழி அகண்டுகொண்டே சென்று அதில் ஒரு பெண் புதைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். ஐயோ என்று அலறினான்.

‘கத்தாதே. சைலண்டா இரு’ என்று சொரிமுத்து சொன்னான்.

‘என்ன பண்றிங்க? யாரு இது? இங்க எப்படி.. எனக்கு ஒண்ணும் புரியலை’ என்று வினய் படபடத்தான்.

‘அட இருடான்றன்ல?’

மிகச் சில விநாடிகளில் அந்த உருவம் முழுதும் வெளிப்பட்டிருந்தது. ஒரு பெண்ணின் பிணம். புதைத்துப் பல நாள்கள் ஆகியிருக்க வேண்டும். நிச்சயமாக அது இயல்பான மரணமாக இருக்க முடியாது என்று வினய்க்குத் தோன்றியது. இல்லாவிட்டால், இப்படி சவுக்குக் காட்டில் கொண்டு வந்து ஏன் புதைத்திருக்க வேண்டும்?

சொரிமுத்து அந்தப் பிணத்தின் மீது படிந்திருந்த மண்ணைக் கையால் தட்டி அகற்றினான். முகம் அழுகிவிட்டிருந்தது. வினய்யால் அதைப் பார்க்க முடியவில்லை. ஐயோ ஐயோ என்று அரற்றிக்கொண்டே இருந்தான்.

இப்போது சொரிமுத்து அந்தப் பிணத்தின் மீதிருந்த புடைவையை அகற்றினான். ஜாக்கெட்டின் ஊக்குகளை விடுவித்தான். பாதி அழுகிய மார்பகங்கள் தெரிந்தன. வினய்யைப் பார்த்து ஈஈஈ என்று சிரித்தான்.

‘வேண்டாமே? எனக்கு பயம்மா இருக்கு.’

‘பயம் போகணும்னா இதப் பாரு’ என்று சொல்லிவிட்டு ஒரு குச்சியை எடுத்து பாதி அழுகியிருந்த அந்த மார்பின் மீது வைத்துக் கிளறினான். உள்ளிருந்து வெள்ளையாக சீழ் போலொரு திரவம் வெளிப்பட்டது. சதை அழுகிக் கரைந்து எலும்பு தெரிந்தது. ரத்தமும் சீழும் எலும்போடு கலந்து முழுமையாக வெளிப்பட்டபோது, வினய் இமைக்க மறந்து அதனைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தான் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஒரு பெண். பிணமாகிவிட்ட பெண். புதைக்கப்பட்டவள். அழுகிக்கொண்டிருக்கும் உடல். சதை. எலும்பு. ரத்தம். சீழ். துர்நாற்றம்.

‘பாத்தியா?’ என்று சொரிமுத்து கேட்டான். வினய் தலையசைத்தான்.

‘சரி, இனிமே மூடிடு’ என்று சொல்லிவிட்டு அவன் எழுந்துகொள்ள, காத்திருந்தாற்போல வினய் ஆவேசமாக அள்ளிக் கொட்டிய மண்ணை மீண்டும் அதன் மீது கொட்டி மூட ஆரம்பித்தான். இருபது நிமிடங்களில் மொத்தமாக மூடி சமப்படுத்திவிட்டு பொத்தென்று கீழே விழுந்தான். சொரிமுத்து சிரித்தான்.

‘என்ன பாத்தே?’

வினய்க்குப் புரியவில்லை. அவன் மீண்டும் அதையே கேட்டான்.

‘பொணம். பொண்ணோட பொணம்.’

‘பொண்ணா? பொணமா? கரீட்டா சொல்லு.’

‘பொணம்தான்.’

‘ஏன் அவ பொண்ணில்லியா?’

‘பொண்ணும்தான். ஆனா பொணம்.’

‘ஆக காத்துதான் எல்லாம்னு புரியுதா? வெளிய கெடக்குற காத்து உள்ள கெடந்தா பொண்ணு. உள்ள கெடக்குற காத்து வெளிய போயிட்டா பொணம்.’

அதற்குப் பின் வினய் பேசவில்லை. இனி எந்நாளும் சொரிமுத்துவைவிட்டுத் தான் வேறெங்கும் போகப் போவதில்லை என்று நிச்சயம் செய்துகொண்டான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com