61. சர்க்கரைப் பொங்கல்

காத்துதான் எல்லாம். அத கண்ட்ரோல் பண்ணத் தெரிஞ்சிட்டா முடிஞ்சிது கதை. அஞ்சு பூதமும் அப்பம் சமமாயிரும். நெருப்பு சுடும்னும் தெரியாது, தண்ணி உள்ளார இழுக்கும்னும் கிடையாது.

வினய், சொரிமுத்துச் சித்தனோடு ஆறேழு வருடங்கள் சுற்றியிருக்கிறான் என்று அறிந்தபோது எனக்குச் சற்று வியப்பாக இருந்தது. அவன் நிறைய மூலிகைகளைப் பற்றி வினய்க்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். இங்கு கிடைக்காத மூலிகைகள். எங்குமே இன்று கிடைக்காத மூலிகைகள். ஆனால் மூலிகைகள் இன்றி சித்து இல்லை. அப்படிச் செய்யப்படுபவை எதுவும் சித்தில் சேர்த்தி இல்லை.

‘வேறென்ன?’ என்று வினய் கேட்டதற்கு, ‘துஷ்ட சகவாசம்’ என்று சொரிமுத்து பதில் சொன்னான். ஆவிகள். பேய்கள். அமைதியுறாத ஆத்மாக்கள்.

‘ஒண்ணு தெரிஞ்சிக்கடா. இந்த உலகத்துலே மொத சித்தன் பரமசிவன். அவன் சுடுகாட்டு வாசி. விட்டுட்டு மலைக்கு ஓடிட்டான். கடேசி சித்தன் உங்கண்ணன். அவனும் சுடுகாட்ட விட்டுட்டு மலைக்குத்தான் ஓடினான்’ என்று சொரிமுத்து சொன்னபோது வினய்க்கு வியப்பாகிவிட்டது. அண்ணா சுடுகாட்டில் இருந்தானா?

‘பின்னே? திருச்சினாப்பள்ளி கண்டோன்மெண்டு சுடுகாட்லதாங் கெடப்பான். அப்பறம் கொஞ்சநாளு பெரம்பலூர்ல இருந்தான். குடிகாரப் பசங்க தொல்ல தாங்கலன்னு சொல்லிட்டு என்னாண்ட வந்து புலம்பினான். நாந்தான் அவனை விஜயவாடாவுக்கு அனுப்பிவெச்சேன். அங்க ஒரு வெட்டியான் நம்ம சினேகிதன்’ என்று சொன்னான்.

வினய்க்கு மிகவும் குழப்பமாக இருந்தது. அண்ணாவுக்கு சித்து தெரியும் என்று நம்புவதில் அவனுக்குப் பிரச்னை இருக்கவில்லை. ஆனால் அவனை எப்படி இவன் கடைசிச் சித்தன் என்று சொல்கிறான் என்பது புரியவில்லை.

‘அது அப்பிடித்தான். ஒனக்கு புரியாது. ஒரு சித்தன் எப்பம் பூரணமடையிறான் தெரியுமா? அவன் சித்து வேல செய்யிறத நிறுத்திட்டு அடுத்த லெவலுக்குப் போவுறப்ப.’

‘அடுத்த லெவல்னா?’

‘சொன்னனே, காத்த கட்டுப்படுத்தறது.’

‘பிராணாயாமம் மாதிரியா?’

சொரிமுத்து சிரித்தான். ‘எலேய் உங்கண்ணன் ஒண்ற அவருக்கு நான் ஸ்டாப்பா வலது நாசியால காத்த இழுத்து இடது நாசியால வெளிய விடுவான். தெரியுமா ஒனக்கு?’

‘அப்படியா?’

‘இதையே இருவத்தி நாலு மணி நேரமும் செய்யறவங்க இருக்காங்க. காத்துக்கு பர்மனெண்டா ஒன்வே ரோடு.’

‘எதுக்கு?’

‘சொன்னனேடா சோம்பேறி. காத்துதான் எல்லாம். அத கண்ட்ரோல் பண்ணத் தெரிஞ்சிட்டா முடிஞ்சிது கதை. அஞ்சு பூதமும் அப்பம் சமமாயிரும். நெருப்பு சுடும்னும் தெரியாது, தண்ணி உள்ளார இழுக்கும்னும் கிடையாது.’

ஹட யோகம். வினய்க்கு அந்தச் சொல் அப்போதுதான் அறிமுகமாகியிருக்கிறது. உன் அண்ணா ஒரு ஹடயோகி என்று சொரிமுத்து சொன்னபோது, அவனுக்கு உடலுக்குள் லேசாக நடுக்கம் கண்டது.

‘இப்பஞ்சொல்லு. காத்த கண்ட்ரோல் பண்ணுறது பெரிசா? இல்ல, காத்துக்குள்ள மறைஞ்சிக்கிட்டு சொல்றத செய்யிற ஆத்மாக்கள கண்ட்ரோல் பண்ணுறது பெரிசா?’

அண்ணாவுக்குச் சட்டை முனி என்ற சித்தரின் தொடர்பு பதினைந்து வருடங்களுக்கு முன்பு கிடைத்ததாக வினய்யிடம் சொரிமுத்து சொல்லியிருக்கிறான். கணக்கற்ற நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் அவர். பாம்பாட்டிச் சித்தருக்கு ஞானம் உதிக்கக் காரணமாயிருந்தவர். மருதமலைக் காட்டில் ஒரு பிடாரனைப் பாம்பாட்டிச் சித்தராக்கிய சட்டை முனி, அண்ணாவைத் தொடர்புகொண்டிருக்கிறார் என்பது வினய்க்கு வியப்புக்குரிய தகவலாக இருந்தது. ‘இது நிஜமா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறான்.

‘ஆமா. உங்கண்ணனும் கொஞ்ச காலம் பாம்பு புடிச்சிக்கிட்டிருந்தான். பாம்பு வெசத்த சாப்பாடா தின்றவன பத்தி கேள்விப்பட்டிருக்கியா? உங்கண்ணன் திம்பான்.’

‘ஐயோ.’

‘என்ன ஐயோ? வெசம்னு நெனச்சா வெசம். மருந்துன்னு நினைச்சா மருந்து. அதை அவன் சாப்பாடுன்னு நினைச்சிருக்கான். அவ்ளதான் மேட்டரு. இதுல உள்ள மேட்டரு புரியிதா ஒனக்கு?’

‘ம்ம். நினைப்புதான் எல்லாம்.’

‘அவ்ளதான். வெளிய உள்ளதுல காத்துதான் எல்லாம். உள்ளார இருக்கறதுல நெனப்புதான் எல்லாம். இந்த காத்து - நெனப்பு ரெண்டும் வசமாயிட்டா அவன் யோகி.’

‘எனக்கு அந்த சட்டை முனிய பத்தி சொல்லுங்க. அண்ணாவுக்கு அவர்தான் ஞானம் குடுத்தாரா?’ என்று வினய் கேட்டான்.

‘ஆமாமா. சும்மா வெசத்த திங்காதடா, இந்தா இந்த பாம்பத் தின்னுன்னு ஒரு மலப்பாம்ப எடுத்து நீட்னாராம். சரி குடுங்கன்னு வாங்கி ஸ்டிரெய்ட்டா அது தலைய வாய்க்குள்ளார வெச்சி கடிச்சிருக்கான். இவன் கடிச்சா பாம்பு சும்மாருக்குமா? அது பதிலுக்கு இவன கடிச்சிருக்கு. பயபுள்ள செத்துட்டான்.’

‘ஐயோ.’

‘அதெல்லாம் அப்பிடித்தாண்டா. இவன சாவடிக்கறதுக்கா ரெண்டாயிரம் வருசத்து சித்தர் வருவாரு? அது ஒரு தீட்சை. கர்மத்த கழிக்கிறது.’

‘அப்படின்னா?’

‘ஒனக்கு புரியாது. எனக்கு தீட்சை குடுத்தவரு என் கர்மத்த கழிக்க என்னைய இருவது நாள் நிறுத்தாம செருப்பால அடிச்சிக்கிட்டே இருந்தாரு. அதுவும் வெறும் செருப்பில்லே. ஒரு கூடை நிறைய சாணிய எடுத்தாந்து வச்சிக்கிட்டு அதுல தோய்ச்சி தோய்ச்சி அட்ச்சாரு. இந்த ஒலகத்துல உள்ள ஒரே வாடை, சாணி வாடைதான்னு நான் நம்புற அளவுக்கு அடிச்சிட்டு, போய் குளிச்சிட்டு வந்துருன்னாரு. அதோட செரி.’

வினய் திகைத்திருந்தான். அது அவனறியாத உலகம். அண்ணா அந்த உலகில் எப்படியோ தன்னைப் பொருத்திக்கொண்டு உள்ளே நெடுந்தூரம் போய்விட்டான். இனி அவன் திரும்பப்போவதில்லை. என்றென்றைக்குமாக அவன் அந்த உறவின் உரிமைக்கு அப்பாற்பட்டவன் ஆகிவிட்டான். எவ்வளவு நெஞ்சுரம் இருந்திருக்க வேண்டும் அவனுக்கு! சிறு வயதில் அவனை இப்படியாக யாரும் எண்ணிக்கூடப் பார்த்ததில்லை. அதற்கு அவன் இடம் கொடுத்ததில்லை என்பதுதான் முக்கியம்.

‘ஆனா எனக்குத் தெரியும் வினய்’ என்று நான் சிரித்தபடி சொன்னேன். ‘நான் உன்கிட்டேகூட அதைப்பத்தி ஒரு மாதிரி சொல்லியிருக்கேன். நீ அப்ப நம்பலை.’

‘ஆமா. நம்பத்தான் முடியலை’ என்று வினய் சொன்னான். ‘ஆனா மொதமொத நான் ஒரு சித்து பண்ணிப் பாக்கறப்ப நம்பினேன் விமல்! அன்னிக்கெல்லாம் அண்ணாவையேதான் நினைச்சிண்டிருந்தேன்’ என்று உணர்ச்சி வயப்பட்டவனாகச் சொன்னான்.

அது, சொரிமுத்துவிடம் வினய் பயிற்சியில் இருந்த காலம். திடீரென்று ஒருநாள் காலை சொரிமுத்து, உறக்கத்தில் இருந்த வினய்யை எழுப்பி, ‘எனக்கு பசிக்குது. சக்கர பொங்கல் வேணும்’ என்று சொல்லியிருக்கிறான். சமைக்கலாம் என்று அடுப்படிக்கு வந்து பாத்திரங்களை எடுத்துப் பார்த்த வினய், ஒரு அரிசிமணியும் இல்லாததைக் கண்டு, பிட்சை எடுத்து வரலாம் என்று கிளம்பியிருக்கிறான்.

சொரிமுத்து ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறான். எந்நாளும் அவன் தனது சித்துகளைத் தன் தேவைக்குப் பயன்படுத்தி வினய் பார்க்கவில்லை. ‘என்னிக்கி அது நடக்குதோ, அன்னிக்கி நான் செத்துருவேன்’ என்று சொரிமுத்து அவனிடம் சொல்லியிருக்கிறான். பிட்சை எடுத்துத்தான் உணவு. வினய்யையும் அவன் அப்படித்தான் பழக்கியிருந்தான்.

எனவே பிட்சைக்குக் கிளம்பிய வினய், திடீரென்று சந்தேகம் வந்து சொரிமுத்துவிடம் கேட்டிருக்கிறான். ‘அரிசி கிடைக்கும். வெல்லத்துக்கு எங்கே போக?’

‘நெய்க்கு மட்டும் எங்க போவ? முந்திரி பருப்பு? ஏலக்கா? தபாரு, எனக்கு சக்கர பொங்கல் இலக்கண சுத்தமா இருக்கணும் சொல்லிட்டேன்.’

வினய் ஒரு கணம் கண்மூடி யோசித்தான். இது ஒரு தேர்வு. எழுதிப் பார்த்தால்தான் என்ன? கிளம்பியவன், சட்டையைக் கழட்டிவிட்டுக் கிணற்றடிக்குப் போய்க் குளித்தான். ஈரம் சொட்டச் சொட்ட மீண்டும் அடுக்களைக்கு வந்து ஒரு அலுமினியத் தட்டை எடுத்து வைத்துக்கொண்டு வடக்குப் பார்த்து அமர்ந்தான். கண்ணை மூடிக்கொண்டு சொரிமுத்து சொல்லிக் கொடுத்த ஒரு வழியைப் பரிசோதிக்கப் பார்த்தான்.

கணப் பொழுதில் அது நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு ஆறு நிமிடங்கள் பிடித்தன. திருவானைக்கா கோயில் பிரசாதம். சுடச் சுட சர்க்கரைப் பொங்கல். தட்டில் அது வந்து விழுந்ததும் எடுத்துக்கொண்டு வந்து சொரிமுத்துவிடம் நீட்டினான்.

‘என்னதிது?’

‘சர்க்கரைப் பொங்கல். ஆனா நீங்க இதைச் சாப்பிட வேண்டாம். என்னால முடியிதான்னு பாத்தேன்.’

சொரிமுத்து நெடுநேரம் அவனை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். பிறகு புன்னகை செய்தான். பிறகு சொன்னான், ‘முடிஞ்சிதில்லே?’

‘ஆமா.’

‘இன்னொருக்கா டிரை பண்ணேன்னா வராது.’

‘ஐயோ ஏன்?’

‘டேய் பேட்ரி மாதிரிடா இதெல்லாம். ஒருக்கா யூஸ் பண்ணா சார்ஜு போயிரும். திரும்ப சார்ஜு ஏத்திக்கிட்டுத்தான் செய்யணும்.’

அடுத்த இருபத்தியொரு தினங்களுக்கு முழு உபவாசம் இருந்து கோடி முறை ஜபித்து, இழந்ததை அவன் திரும்பப் பெற்றிருக்கிறான். ‘வந்திரிச்சா? சரி, இன்னொரு பிளேட்டு சக்கர பொங்கல் எடுத்தா. திருவானைக்கா கோயில் பொங்கல் வேணா. வெல்லஞ்சரியில்லே. வரவர புது வெல்லத்தப் போட்டு சக்கர பொங்கல் டேஸ்டையே கெடுத்துடறானுக. திருப்பதிலேருந்து கொண்டா’ என்று சொரிமுத்து சொன்னான்.

திருப்பதி கோயில் சர்க்கரைப் பொங்கலைக் கொண்டுவந்ததற்கு அவன் நாற்பத்தி எட்டு தினங்கள் விரதம் இருக்க வேண்டியதானது. அதன்பின் சொரிமுத்து முன்பொரு முறை கட்டடத் தொழிலாளி ஒருவனிடம் இருந்து எடுத்த கேன்சரை ஒரு எள்ளுருண்டையில் அடைத்து வினய்யிடம் கொடுத்து, ‘இதக் கொண்டுபோயி நாஞ்சொல்ற ஆளுகிட்ட குடுத்து சாப்ட சொல்லு’ என்று சொன்னான்.

அந்தப் பயணத்தின்போதுதான், வினய் நிரந்தரமாக சொரிமுத்துவை விட்டு நகர்ந்துவிடும்படியானது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com