64. சிவம்

கிளாசுல எடுத்துக் குடிக்கற தண்ணிக்கு தாகம் தீக்கற பவர் மட்டும்தான் இருக்கும். ஆக்ரோசமா அது அருவியா விழசொல்லத்தான் கரண்டு வரும்.

இரை கண்ட முதலையின் ஆக்ரோஷம் போன்றதொரு சினம் மனத்துக்குள் ஒரு புள்ளியாகக் குவிந்தது. இன்றைக்கு அந்த முகமது குட்டியைக் கொல்லாமல் விடப்போவதில்லை என்று முடிவு செய்துகொண்டு, வினய் அவன் போன பாதையில் துரத்திக்கொண்டு ஓட ஆரம்பித்தான். தான் தோற்றிருக்கிறோம் என்று எண்ணவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அது தோல்விதானா. துலுக்கன் சக்கையாக ஏமாற்றிவிட்டான். அயோக்கியன். அவனை சும்மா விடுவதற்கில்லை. வெட்டிக் கூறுபோடாமல் இந்த ஆத்திரம் தணியாது என்று அவனுக்குத் தோன்றியது. நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறம் பிரிந்த ஒரு பாதையில் இறங்கித்தான் முகமது குட்டி சென்றான். வினய் அதே வழியில் அவனைத் தேடிக்கொண்டு போனான். எவ்வளவு நேரம் ஓடியிருப்பானோ, எங்கெல்லாம் தேடியிருப்பானோ கணக்கே இல்லை. பார்வையில் கருமை படர்ந்து கால்கள் நடுங்க ஆரம்பித்தபோது, இதற்கு மேல் முடியாது என்று தோன்றிவிட்டது. அழுகை வந்தது. ஆள்களற்ற ஒரு பேருந்து நிழற்குடையின் அடியில் இருந்த சிமெண்டு பெஞ்சில் போய் விழுந்தான். தனது இயலாமையும் கையாலாகாத்தனமும் அவனைக் குத்திக் கிழித்துக்கொண்டிருந்தன. எத்தனை திறமையான மோசடி!

அவன் அயோக்கியன்தான். சந்தேகமில்லை. ஆனால் ஒரு அயோக்கியனுக்கு இத்தகைய சக்திகள் எப்படிக் கைகூடும்? அதுதான் புரியவில்லை. சிவனை நினையாதவனுக்கு சித்து வராது என்று சொரிமுத்து சொன்னது உண்மைதான் என்று அவன் நம்பத் தொடங்கியிருந்தான். அவன் சிறு வயது முதல் ராமனையும் திருப்பதி வேங்கடாசலபதியையும் திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாளையும் மட்டுமே வணங்கி வந்திருந்தான். கடவுளே என்று மனத்துக்குள் நினைத்தால் உடனே அவனுக்கு ஆதி வராக மூர்த்திதான் கடவுளாக உருத் திரள்வார். சொரிமுத்துவிடம் சேர்ந்த பின்பு சிவனை நினைப்பதற்கும் சிவபூஜை செய்வதற்கும் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள ஆரம்பித்து, மனம் கூடாமல் மிகுந்த சிரமப்பட்டான்.

சொரிமுத்து ஒருநாள் சொன்னான். ‘நீ ஒரு வேல செய்யிறியா? நேரா உங்கூருக்கே போ. அங்க கோவளத்துல தர்கா வாசல்ல ஒரு பக்கிரி இருப்பான்.’

‘தெரியும்.’

‘அவனைப் போய்ப் பாரு. உம்பிரச்னைய அவன்கிட்டெ சொல்லு. பெயிண்டு கலர மாத்தி அடிக்கிறதுல அவன் எக்ஸ்பர்ட்டு.’

வினய்க்கு இது ஆச்சரியமாக இருந்தது. கோவளம் பக்கிரியைப் பற்றி இவனுக்கு எப்படித் தெரியும்? அம்மா எப்போதாவது அந்தப் பக்கிரியிடம் சென்று மந்திரித்த திருநீறு வாங்கி வருவதுண்டு. சில சிறிய வியாதிகளுக்கு அவனது வைத்தியம் பயன்பட்டிருக்கிறது. அவன் சித்தரா?

‘டவுட்டா ஒனக்கு? சித்தந்தான். நீ போய் நான் சொன்னேன்னு அவன்கிட்டே சொல்லு. உம்மனசுல இருக்கற மத்த சாமிங்கள பெருக்கித் தள்ளிட்டு சிவனை உக்கார வச்சி, ஆணியடிச்சி அனுப்பிடுவான்.’

‘என்னால நம்ப முடியலை’ என்று வினய் சொன்னான்.

‘டேய், ஒன்னால எதைத்தான் நம்ப முடியுது? சொன்னதச் செய்டா. நேரா போய் அவனை மட்டும் பாத்துட்டு திரும்பி வந்துடு.’

‘ஏன், அதை நீங்க செய்ய முடியாதா?’

‘முடியாது. அந்த பவர் எனக்கில்லை’ என்று சொரிமுத்து சொன்னான். இதுவும் வினய்க்குக் குழப்பமாக இருந்தது.

‘ஒண்ணே ஒண்ணு மட்டும் கேக்கறேன். இதுக்கு மட்டும் நேரா பதில் சொல்லிடுங்கோ. அந்த பக்கிரி சிவபக்தரா?’

சொரிமுத்து ஹோவென்று குரல் உயர்த்திச் சிரிக்க ஆரம்பித்தான். நெடுநேரம் சிரித்துக்கொண்டே இருந்தான். கண் முழியெல்லாம் கலங்கிப்போகிற அளவுக்கு அப்படியொரு சிரிப்பு.

‘என்ன சிரிப்பு?’

‘என்ன கேட்டே நீ?’

‘அந்தப் பக்கிரி சிவபக்தரான்னு கேட்டேன்.’

‘லூசு. அவன் சிவனேதாண்டா’ என்று சொரிமுத்து சொன்னான். ‘புத்திய குவிச்சி நாஞ்சொல்றத உறிஞ்சிக்க. சிவன்னு சொல்றேன் இல்ல? அது ஒரு ஆள் இல்ல. அது ஒரு பவர். கரண்டு மாதிரி ஒரு பவர். காத்துல கரண்டு இருக்கும். தண்ணில கரண்டு இருக்கும். நெலத்துக்குள்ளார கரண்டு இருக்கும். நெருப்பு சுடுது பாத்தியா? அதுவும் கரண்டுதான்.’

‘சரி.’

‘மின்சார வாரியம் என்னா செய்யிது? அனாமத்தா கெடக்குற கரண்ட உருட்டி, திரட்டி எடுத்து சேமிச்சி வெக்குது. லைட்டு எரிய, ஃபேன் எரிய, டிவி பொட்டி படம் காட்ட, கம்பி வழியா வீடுங்களுக்கு அனுப்புது. கரீட்டா?’

‘ஆமா.’

‘அதேதான் நாஞ்சொல்றதும். சிவன்றது ஒரு பவர். ஒரு கரண்டு. அத வெச்சி நிறைய காரியம் பண்ண முடியும்.’

‘ஆனா, சிவன் ஹிந்துக் கடவுள் இல்லியோ?’

‘கடவுள்னு நினைச்சிக்கறது வசதியா இருந்திச்சின்னா நெனச்சிக்க. ஒனக்கு பன்னின்னு நினைச்சிக்கணுன்னு தோணிச்சின்னாலும் நெனச்சிக்க. கருவாடுன்னு வேணாக்கூட நினைச்சிக்க. ஆனா, நீ நினைக்கறது சிவமாத்தான் இருக்கணும். இந்துவா, இன்னொருத்தனான்னு பாக்காத. நெனப்புக்கு மதமில்லே.’

‘வராகப் பெருமாள் பன்னியாத்தான் வந்தார். எங்கூர்ல அவர்தான் பெருமாள். அவரை நினைச்சிண்டா?’

‘சிவம்தான் வராகமாச்சின்னு நெனச்சிக்கிட்டன்னா செரி. ஆனா நீ அப்பிடி நினைக்கமாட்டியே? மகாவிஷ்ணுவல்ல நினைப்ப?’

‘அது தப்பா?’

‘தப்புன்னு நாஞ்சொன்னனா? விஷ்ணுவ நினைச்சி சித்து படிக்க முடியாது. அந்த வடிவத்துக்கு அந்த பவர் கெடியாது.’

‘அதான் ஏன்?’

ஐயோ ஐயோ என்று சொரிமுத்து தலையில் அடித்துக்கொண்டான். ‘எப்பிட்றா உங்காத்தா உங்கண்ணன பெத்தப்பறம் ஒன்னைய பெத்தா? லூசு.’

வினய்க்கு அழுகை வந்தது. ‘தெரிஞ்சிக்கத்தானே கேக்கறேன்? இப்படித் திட்டினா என்ன அர்த்தம்?’

‘தபாரு, தண்ணில கரெண்டு இருக்குது. ரைட்டா?’

‘ஆமா.’

‘குடிக்கறதுக்கு உங்க வீட்ல குடத்துல புடிச்சி வெக்குற தண்ணில கரண்டு இருக்குதா? கிளாசுல எடுத்து குடிக்கறப்ப ஷாக்கடிக்குதா?’

‘இல்லே.’

‘அதான். கிளாசுல எடுத்துக் குடிக்கற தண்ணிக்கு தாகம் தீக்கற பவர் மட்டும்தான் இருக்கும். ஆக்ரோசமா அது அருவியா விழசொல்லத்தான் கரண்டு வரும்.’

சட்டென்று ஏதோ பிடிபட்டாற்போல் இருந்தது.

‘தண்ணி ஒண்ணுதான். பவர் ஒண்ணுதான். நீ கிளாசுல எடுக்கிறியா, கம்பில தேக்குறியான்றதுதான் மேட்டரு.’

வினய் சட்டென்று சொரிமுத்துவின் காலைக் குனிந்து தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டான்.

‘புரிஞ்சிடுத்து. ஆனா இன்னும் ஒண்ணே ஒண்ணு.’

‘கேளு.’

‘அந்த கோவளத்து பக்கிரி சித்து எதுவும் செஞ்சதா நான் கேள்விப்பட்டதில்லே. மந்திரிச்சி விபூதி தருவார். எங்கப்பாவுக்குக்கூட ஒரு சமயம் வயித்து வலி வந்தப்ப அவர் மந்திரிச்சிக் குடுத்த விபூதி ஹெல்ப் பண்ணியிருக்கு.’

‘உங்கண்ணுக்குத் தெரியறாப்ல சித்து வேல பண்ண அவன் என்ன கேனயனா? அந்தப் பக்கிரி ஒரு பூரண புருசன். என்னிக்கானா உங்கண்ணன பாத்தன்னா அவனப் பத்திக் கேளு.’

‘அண்ணாவுக்கு அவரைத் தெரியுமா?’

‘திருப்போரூர் சாமி மடத்துல உங்க வம்சத்து சுவடி இருக்குதுன்றத உங்கண்ணனாண்ட சொன்னதே அவந்தான்.’

‘நிஜமாவா!’

‘அந்த சாமி ஒரு அப்புராணி. அதுக்கு சுவடியெல்லாம் படிக்கத் தெரியாது. சொம்மா பளக்க தோசத்துல நமசிவாயம் வாழ்கன்னு சொல்லிக்கிட்டிருக்கும். என்னிக்கோ யாரோ கொண்டாந்து வெச்ச சுவடிங்க அந்த மடத்துல ஏகமா கெடக்குது. அதுல ஒண்ண உருவிட்டு வந்தான் உங்கண்ணன்.’

வினய் நெடுநேரம் அதன்பிறகு பேசவேயில்லை. தனியே சென்று அமர்ந்து யோசித்துக்கொண்டே இருந்தான். கோவளத்துப் பக்கிரி. எத்தனையோ நூறு மைல்கள் தொலைவில் தர்கா வாசலில் கிடக்கிறவன். ஒரு பிச்சைக்காரனாக ஊருக்கு அவனைத் தெரியும். போடுகிற ஐந்து, பத்து காசுகளுக்கு இடது கையை உயர்த்தி ஆசி வழங்குகிற மனிதன். ஒரு மருத்துவனாக அவனை அம்மா வீட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறாள். மந்திரிக்கத் தெரிந்த பக்கிரி. ஆனால் அவன் அதெல்லாம் இல்லை. அவை அனைத்துக்கும் மேலே என்று சொரிமுத்து சொன்னான்.

முகமது குட்டியைப் பற்றி நினைக்கும்போது உடனே வினய்க்கு அந்தக் கோவளத்துப் பக்கிரியின் நினைவுதான் வந்தது. பூரண புருஷன். என்ன ஒரு சொல். அந்த ஒற்றைச் சொல்லில் சொரிமுத்து அந்தப் பக்கிரியின் மீதான மதிப்பையும் பக்தியையும் வினய் மனத்தில் கண்காணா உயரத்துக்கு ஏற்றி வைத்துவிட்டான். முகமது குட்டியும் துலுக்கன் தான். இவனுக்கும் ஏதோ சில சக்திகள் இருக்கின்றன. சித்தோ, சித்தைப் போன்ற வேறெதுவோ அறிந்திருக்கிறான். இன்னொருத்தன் இடுப்பு முடிப்பில் இருந்து ஒரு பொருளைத் திருடும் வல்லமை அவனுக்கு இருக்கிறது. அவன் அருகில் வரும்போது சொரிமுத்துவுடன் தொடர்புகொள்ளக்கூட முடியாமல் போய்விடுகிறது. காற்று சரியில்லை என்று சொரிமுத்து சொல்கிறான். சிவமற்றுப்போகிற ஒரு சூழலை ஒருவனால் உருவாக்க முடியுமா. அதில் அற்புதங்களையும் நிகழ்த்த முடியுமா.

நடந்தது அற்புதமல்ல. அபத்தம்தான். அயோக்கியத்தனமும்கூட. அதனால்தான் வினய் கொந்தளித்துப்போனான். ஏதாவது செய்து முகமது குட்டியைப் பழிவாங்கிவிட வேண்டும் என்று மிகவும் விரும்பினான். ஆனால் இதை அவன் சொரிமுத்துவிடம் சொல்ல விரும்பவில்லை. எள்ளுருண்டை போனால் போகிறது; நீ திரும்பி வந்துவிடு என்று அவன் சொல்லிவிடுவான். எள்ளுருண்டை அல்ல பிரச்னை. ஏமாற்றப்பட்டதுதான் பெரும் பிரச்னை.

வினய் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணிநேரம் அமர்ந்திருந்தான். கண்ணை மூடி, முகமது குட்டி எங்கே சென்றிருப்பான் என்று தியானம் செய்ய ஆரம்பித்தான். சொற்ப அளவில் தான் சேகரித்து வைத்திருந்த சக்தி முழுவதையும் செலவிட்டாவது அதைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று நினைத்தான். பத்து நிமிடங்கள் போராடிய பிறகு, அவனுக்குப் பச்சை நிறச் சுண்ணாம்பு அடித்த ஒரு வீட்டின் தோற்றம் தரிசனமானது. மிகச் சிறிய வீடு. முன்புறம் ஓட்டுச் சரிவு போடப்பட்டு வாசலில் ஒரு கயிற்றுக் கட்டில் இருந்தது. வீட்டுக் கதவுக்கு நீல நிறத்தில் பெயிண்ட் அடித்திருந்தது. திறந்து உள்ளே போனால் சிறியதாக ஒரு கூடம், அதனை ஒட்டிய ஓர் அறை தென்பட்டது. அறைக்குள் பாய் விரித்திருந்தது. அறையின் சுவரெல்லாம் காரை பெயர்ந்து உதிர்ந்து கிடந்தது. உதிர்ந்த துகள்களை அப்புறப்படுத்தக்கூடச் செய்யாமல் அப்படியே தூசு படிய விட்டிருந்தது. வினய் பார்த்துக்கொண்டே இருந்தபோது, அந்த அறைக்குள் முகமது குட்டி நுழைந்தான். ஜிப்பாவைக் கழட்டிக் கடாசிவிட்டு ஒரு துண்டை எடுத்து அக்குள்களில் துடைத்துக்கொண்டான். கீழே கிடந்த பாயின் மீதிருந்த அழுக்குத் துணிகளைத் திரட்டி, சுருட்டித் தலையணை போல வைத்துக்கொண்டு படுத்தான். உறங்க ஆரம்பித்தான்.

மூடிய விழிகளுக்குள் இதைப் பார்த்துக்கொண்டிருந்த வினய், அப்படியே மெல்ல மெல்லப் பின்வாங்கி வீட்டுக்கு வெளியே வந்தான். அந்த வீதியைக் கவனித்தான். ஒரு பெயர்ப் பலகை. ஒரு பின்கோடு கண்ணில் பட்டுவிட்டால் போதும். இடம் தெரிந்துவிடும். ஆனால் அவன் பார்த்தவரையில், அந்த வீதியில் கடைகளே தென்படவில்லை. வீதி முனையில் பெயர்ப்பலகையும் இல்லை. என்ன செய்வதென்று புரியாமல், தனது நோக்கு தீட்சண்யத்தை மேலும் நீட்டி விஸ்தரித்து அடுத்த வீதி வரை செலுத்திப் பார்த்தான்.

சட்டென்று காட்சி கலைந்துவிட்டது. சோர்வுடன் கண்ணைத் திறந்தான். அவன் எதிரே ஒரு நாய் நின்றிருந்தது. சொறி பிடித்த கறுப்பு நிற நாய். அவன் பார்க்கும்வரை அசையாது நின்றிருந்த அந்த நாய், அவன் பார்வை தன் மீது பட்டதும் திரும்பி நடக்க ஆரம்பித்தது. அது தன்னை எங்கோ அழைத்துப் போக வந்திருப்பதாக வினய்க்குத் தோன்றியது. சட்டென்று எழுந்து அதன் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com