72. ப்ரோக்கர்

ஈர்ப்பு என்பது எப்போதுமே ஒற்றைப் புள்ளி சார்ந்ததாக இருக்கக் கூடாது. உலகில் படைக்கப்பட்ட அனைத்தும் நம்மை ஈர்க்க நாம் அனுமதிக்க வேண்டும். 

‘என்னால் உங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை குருஜி’ என்று மிருதுளா சொன்னாள். நான் புன்னகை செய்தேன். ‘ஆனால் உங்களைப் புரிந்துகொள்ள முடியாதிருப்பதுதான் திரும்பத் திரும்ப உங்களிடம் என்னை ஈர்க்கிறது.’

‘தவறு பெண்ணே. ஈர்ப்பு என்பது எப்போதுமே ஒற்றைப் புள்ளி சார்ந்ததாக இருக்கக் கூடாது. உலகில் படைக்கப்பட்ட அனைத்தும் நம்மை ஈர்க்க நாம் அனுமதிக்க வேண்டும். நாலா புறங்களில் இருந்தும் நம்மை யாரேனும் ஈர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். போய் ஒட்டிக்கொள்ளும் இடம் ஒன்றாக இருந்துவிட அனுமதித்துவிடாதே. உலகம் முழுதும் உன் இடமாக இருக்க வேண்டும். அல்லது உலகமே நீயாகிவிட வேண்டும்’ என்று நான் மிருதுளாவிடம் சொன்னேன். அவளுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தது புரிந்தது.

எனது மெக்ஸிகோ பயணத்தின் நோக்கம் ஒரு வியாபார ஒப்பந்தம் மட்டுமே என்பதை அவளால் நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் நான் ஒரு ஆயுத வியாபாரியின் தொழிலில் முதலீடு செய்ய வந்திருப்பதை அவளிடம் சொல்லியிருக்கவில்லை. வெறும் வியாபாரப் பேச்சு என்று மட்டுமே சொன்னேன். அதையே அவளால் தாங்க முடியவில்லை.

‘குருஜி, நீங்கள் இதனைச் செய்ய வேண்டுமா?’ என்று அவள் கேட்டாள்.

‘நான் ஏன் செய்யக் கூடாது என்று நீ நினைக்கிறாய்? இதில் எனக்கு லாபமோ நட்டமோ இல்லை. விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. ஆர்வமோ ஆர்வமின்மையோ சற்றும் இல்லை. ஒரு துறவி ஸ்திதப்ரக்ஞனாக இருப்பது முக்கியம்’ என்று சொன்னேன்.

‘ஆனால் உங்கள் பணி வேறல்லவா? உங்கள் அறம் வேறல்லவா?’

‘எது என் அறம்? உனக்கு நான் மகிழ்ச்சியளிக்கிறேனல்லவா? அதுதான் என் அறம். உன்னைப் போல் யாருக்கு மகிழ்ச்சி தேவைப்பட்டாலும் நான் உதவுவேன். உதவி மட்டும்தான். பிரதிபலன் இதில் கிடையாது. உதவுதலே என் தவம்’ என்று சொன்னேன்.

அவளால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னால் அவளைப் புரிந்துகொள்ள முடிந்தது. வியாபாரம் தவறு என்று அவளால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. அவளது தந்தை மிகப்பெரிய வியாபாரி. பணத்தின் செழுமை, வாழ்வின் செழுமை அந்த வியாபாரத்தில் இருந்து வருவதுதான் என்பதை அவள் அறிவாள். ஆனால் ஒரு துறவி எப்படி அதில் ஈடுபடலாம்?

‘அதுதானே?’ என்று நான் புன்னகையுடன் கேட்டேன்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

நான் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, ‘பாரதத்தில் கிருஷ்ணன் என்ன செய்தான்?’ என்று கேட்டேன்.

‘என்ன செய்தான்? தருமம் காக்கப் பாண்டவர்களின் பக்கம் நின்றான்.’

‘இல்லை பெண்ணே. கிருஷ்ணன் செய்தது பேரம். இரு தரப்புக்கும் இடையே ஒரு புரோக்கராக நின்று செயல்பட்டான். இவர்கள் தரப்பை அவர்களுக்கும் அவர்கள் தரப்பை இவர்களுக்கும் எடுத்துச் சொன்னான். இரு தரப்புக்குமே எது சரி, எது தவறு என்பதை இறுதிவரை உணர்த்திக்கொண்டே இருந்தான். ஆனால் கௌரவர்களின் தோல்வியோ, பாண்டவர்களின் வெற்றியோ அவனை பாதிக்கவேயில்லை. அவன் தன் கடமை என்று நினைத்ததைச் செய்தான். அவ்வளவுதான்.’

‘ஆனால் நீங்கள் அவனை ப்ரோக்கர் என்கிறீர்கள்!’ அவளால் அந்தச் சொல்லைத் தாங்கவே முடியவில்லை என்பது புரிந்தது. அதை எதிர்பார்த்து, மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்துத்தான் நான் அச்சொல்லைப் பயன்படுத்தினேன்.

‘ஆம். ப்ரோக்கர்தான். பேரம் பேசிப் பார்த்த ப்ரோக்கர். கமிஷன் கேட்காத ப்ரோக்கர். ஆனால் இறுதியில் தருமத்தை மன்னர் குலம் காக்கவில்லை. ப்ரோக்கர்தான் காத்தான்.’

‘ஆனால் அவனும் ஒரு மன்னனே அல்லவா?’

‘இல்லை. அவன் துறந்தவன். முற்றிலும் துறந்தவன். என்னைப் போல’ என்று சொல்லிப் புன்னகை செய்தேன்.

இந்தியாவுக்குத் திரும்பும் வழி முழுதும் அவள் இடைவிடாது பேசிக்கொண்டேதான் வந்தாள். அவள் வயதுக்கான சந்தேகங்கள். அவள் வயதுக்கான குழப்பங்கள். நாகரிக நாட்டத்துக்கும் ஆன்மிக முன்னேற்றத்துக்கும் இடைப்பட்ட தூரம். ‘குருஜி, நான் ஒருவனைக் காதலிக்கிறேன். அவனோடு இரண்டு முறை உறவு கொண்டிருக்கிறேன். அதே சமயம் என் பக்தியிலோ, தியானம் செய்வதிலோ, நீங்கள் கற்றுத் தந்த மூச்சுப் பயிற்சிகளைச் செய்வதிலோ குறை வைப்பதில்லை’ என்று சொன்னாள்.

‘இரண்டுக்கும் என்ன சம்மந்தம்?’

‘இல்லை. காதல் தவறென்று தோன்றவில்லை. ஆனால்...’

‘படுத்ததைப் பிழையாகக் கருதுகிறாய். சரியா?’

அவள் மௌனமாகத் தலைகுனிந்தாள்.

‘இதுவே திருமணமாகிவிட்டால் உனக்கு இந்த மனச்சிக்கல் இராது. சரியா?’

‘அப்படித்தான் நினைக்கிறேன்.’

‘இது சராசரி இந்திய மனநிலை. இதில் பிழையில்லை. ஆனால் குற்ற உணர்ச்சி கொள்ளவும் இதில் ஒன்றுமில்லை’ என்று சொன்னேன்.

‘என் அப்பாவுக்குத் தெரிந்தால் இடிந்து போய்விடுவார். தற்கொலை செய்துகொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.’

‘தெரிய வேண்டும் என்று நினைக்கிறாயா?’

‘தெரிந்துவிட்டால்?’

‘மிருதுளா, காமம் தவறே இல்லை. தியானத்தைப் போல அதுவும் புனிதமானது. உன் குற்ற உணர்வால் அதன் புனிதத்தன்மையைக் கெடுக்காதே.’

‘ஆனால் தியானத்தில் குற்ற உணர்வு ஏற்படுவதில்லை. காமத்தில்தான்.’

‘என்றால் உன் உறவில் குற்றம் உள்ளது என்று பொருள். காமத்தில் அல்ல. அது ஒரு வெளிப்பாடு. அன்பைப் போல. காதலைப் போல. கோபம், மகிழ்ச்சி, துயரம் அனைத்தையும் போல வெறும் வெளிப்பாடு. வெளிப்படுத்த வேண்டியதை அடைத்து வைப்பது வன்முறை. வன்முறையில் ரகசியம் கலப்பது வியாதிக்கு வழி வகுக்கும். அதுதான் உன் குற்ற உணர்வு’ என்று சொன்னேன்.

அவள் நெடு நேரம் அழுதுகொண்டிருந்தாள். பிறகு, ‘என் குற்ற உணர்வை விலக்க நான் என்ன செய்யலாம் குருஜி?’ என்று கேட்டாள். நான் சிரித்தேன். ‘ஊருக்குப் போனதும் சொல்லித் தருகிறேன்’ என்று சொன்னேன்.

மடிகேரிக்குப் போய்ச் சேர்ந்தபோது என்னால் மிருதுளாவுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை. இருபது நாள்களுக்கு மேலாக என்னைக் காணாதிருந்த சீடர்களும் பக்தர்களும் வந்து மொய்த்துக்கொண்டு விட்டார்கள். கேசவன் மாமாவுக்கு அந்த அனுபவம் புதிது. முந்தைய முறை அவர் என்னைக் காண வந்திருந்தபோது நான் தனி மனிதனாக இருந்தேன். ஓரிரு சீடர்கள் அப்போதும் இருந்தார்கள் என்றாலும் எனக்கென்று அப்போது ஒரு ஆசிரமம் இருக்கவில்லை. நான் இருந்த சிறு வீடே என் ஆசிரமமாக இருந்தது. எப்போதாவது வருகிற ஒரு சிலரைத் தவிர எப்போதும் நான் தனியாகவே இருந்த காலம் அது. ஆனால் இம்முறை மாமா உண்மையிலேயே மிரண்டு போனார்.

‘உன்னை நீ வா போன்னு மரியாதை இல்லாம கூப்பிடலாமா கூடாதான்னு சந்தேகமா இருக்கு விமல்’ என்று சொன்னார்.

நான் சிரித்தேன். ஆனால் பதில் சொல்லவில்லை.

‘என்னமோ இருக்கில்லே? எதோ ஒரு சக்தி இருக்கத்தான் செய்யறது. பாரேன், பைத்தியமாட்டம் நீ என்னிக்காவது ஒரு நாள் ஆத்துக்கு வந்துடுவேன்னு நேத்து வரைக்கும் உங்கம்மாட்ட சொல்லிண்டேதான் இருந்தேன். சும்மா வாய் வார்த்தைக்கு இல்லே. நிஜமாவே அப்படித்தான் நம்பிண்டிருந்தேன்’ என்று சொன்னார்.

நான் அதற்கும் பதில் சொல்லவில்லை.

‘எப்படியோ நன்னாருந்தேன்னா சரி. பெரிய மனுஷாள்ளாம் நிறையப் பேர் வரா போலருக்கே?’ என்று கேட்டார்.

‘உம். அரசியல்வாதிகள் வருவா. சினிமாக்காரா வருவா. அப்பறம் பெரிய பெரிய பிசினஸ் மேக்னட்ஸ். ரெண்டு மாசம் முன்னாடி குமாரமங்கலம் பிர்லா வந்திருந்தார் ஆசிரமத்துக்கு.’

‘அடேங்கப்பா.’

‘எல்லாருக்கும் ஏதோ ஒண்ணு வேண்டியிருக்கே மாமா?’

‘உங்கம்மா பாவம்டா’ என்று சட்டென்று சொன்னார். நான் அமைதியானேன். ‘நாலு பேரும் இப்படி பண்ணுவேள்னு இப்ப வரைக்கும் அவளுக்கு நம்பவே முடியலை. எதனால, எதனாலன்னு திடீர் திடீர்னு ராத்திரில முழிச்சிண்டு என்னை எழுப்பிக் கேப்பா. நான் என்னத்தச் சொல்லுவேன்?’

‘கர்மான்னு சொல்லுங்கோ’.

முந்தைய முறை கேசவன் மாமா வந்திருந்தபோது வார்த்தைக்கு வார்த்தை என்னைத் திட்டிக்கொண்டே இருந்தார். படு பயங்கரமான சாபங்கள் அளித்தார். பெற்ற தாயைவிடத் துறவு உள்பட, கடவுள் உள்பட எதுவும் முக்கியமே இல்லை என்று சொன்னார். நான் மௌனமாக அவர் சொன்ன அனைத்தையும் ஆமோதித்து, இறுதிவரை பதிலேதும் சொல்லாமல் அவரை வழியனுப்பி வைத்தேன். ஆனால் இம்முறை அவர் சற்றுத் தளர்ந்திருந்தார். பழைய கோபம் அவருக்கு இல்லை. ஆனால் பழைய துயரத்தின் ஒரு சில சொட்டுகளை அப்போதும் அவர் தேக்கி வைத்திருந்தார். ஒரு கனவு. மிக எளிய, சற்றும் ஆடம்பரமற்ற, ஜோடனைகளற்ற சராசரிக் கனவு. வீடு. குடும்பம். பிள்ளைக் குட்டிகள். வாரிசு. வம்சம்.

‘நீங்கள்ளாம் சராசரி இல்லியோ என்னமோ. உங்கம்மா அதான். நான் அதான். உசிரோட இருந்த வரைக்கும் உங்கப்பாவும் அப்படித்தான் இருந்தார். நாலு பேர்ல ஒருத்தனாவது எங்க கனாவை நிறைவேத்தியிருக்கலாம்’ என்று சொன்னார்.

நான் புன்னகை செய்தேன். ‘நீங்க மனசு வெச்சிருந்தேள்னா வினோத்தை மடக்கிப் போட்டிருக்கலாம். கோட்டை விட்டுட்டேள்!’ என்று சொன்னேன்.

கேசவன் மாமா கேவிக் கேவி அழுதார். உண்மையில் அவரது நோக்கமும் லட்சியமும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது. முதல் முதலில் நான் மடிகேரியில் இருப்பதை அறிந்து அவர் என்னை வந்து சந்தித்து, திட்டி, சாபமிட்டுவிட்டுப் போன பிறகு அந்தப் பக்கமே வரவில்லை. மீண்டும் என்னைக் காண அவருக்கு இருபது வருடங்கள் பிடித்திருக்கிறது. இடைப்பட்ட வருடங்களில் என் வாழ்வு என் எண்ணத்தைக் காட்டிலும் ஓங்கி வளர்ந்திருந்தது. நான் விரும்பியவற்றைவிட மிக அதிகம் பெற்றிருந்தேன். வட கர்நாடகத்தின் ஒரு மலை உச்சியில் அமர்ந்துகொண்டு வட இந்தியா முழுவதையும் என் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ளப் பழகியிருந்தேன். மிகக் கவனமாகத் தமிழ் நாட்டைத் தவிர்த்தேன். அங்கிருந்து வரும் சொற்பொழிவு அழைப்புகளை ஏதேனும் காரணம் சொல்லி நிராகரித்துக்கொண்டிருந்தேன். மாமாவைச் சமாளித்து அனுப்புவது போல அம்மாவைச் செய்துவிட முடியாது என்று எனக்கு எப்போதும் தோன்றும். ஏனெனில் உண்மையில் நான் எதையுமே துறந்திருக்கவில்லை. வீட்டுக்குப் போகவேயில்லை என்றாலும் வீட்டை ஒரு நாளும் நினைக்காதிருந்ததில்லை. குறிப்பாக, வினோத்தைக் குறித்து.

அண்ணா விட்டுச் சென்று, நான் விட்டுச் சென்று, வினய்யும் விட்டுச் சென்ற பின்பு அவன் மட்டும்தான் வீட்டுப் பிள்ளையாக இருந்தான். வெகு நாள் அவன் அப்படி இருக்கமாட்டான் என்பது எனக்குத் தெரியும். அந்த ஶ்ரீரங்கம் பயணத்தின்போதே அது நிகழ்ந்திருக்க வேண்டியது. காவிரியில் அவன் கண்டெடுத்த லிங்கம் மிக நிச்சயமாக அவனை வேறொரு எல்லைக்கு இட்டுச் செல்லப் போகிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் அது மிகத் தாமதமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது. தொடர்பற்று இருந்ததால் எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

‘ஆனாலும் அவன் பண்ணது மன்னிக்கவே முடியாததுடா!’ என்று கேசவன் மாமா சொன்னார்.

‘அப்போ எங்க மூணு பேரையும் மன்னிச்சிடுவேளா?’

அவர் சிறிது யோசித்துவிட்டுச் சொன்னார், ‘ஒழியறது போன்னு எப்பவாவது தோணும். அவன் விஷயத்துல அது கிடையாது.’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com