77. கொலைக்களம்

தினம் தினம் மனத்துக்குள் எப்போதும் நான் அவனைக் கொன்றுகொண்டே இருக்கிறேன். நிஜத்தில் அவன் இன்னும் சாகாதிருக்கிறான் என்பதுதான் என் பெருவலியாக உள்ளது.

திருவல்லம் பரசுராமர் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கால்வாய்க் கரையோரம் அமைந்திருந்த ஒரு குடிசை வீட்டில் அப்போது வினய் தங்கியிருந்தான். வந்து ஒரு நாள் ஆகியிருந்தது. அந்த வீட்டைச் சுற்றிலும் நிறையத் தென்னை மரங்கள் இருந்தன. எப்போதும் ஈரக் காற்று அடித்துக்கொண்டே இருந்த இடம். வீட்டை விட்டு வெளியே வந்து எட்டடி நடந்து மேடேறினால் மண் சாலை. சாலைக்கு அந்தப் பக்கம் புழை. அதிகம் நீர் இல்லை என்றாலும் நீரோட்டம் இருந்துகொண்டே இருந்தது. சிறுவர்கள் தோளில் ஒரு வேட்டியைப் போட்டுக்கொண்டு நீரில் இறங்கி வேட்டியை விரித்துப் பிடித்து மீன் அள்ளிக்கொண்டு போனார்கள். வினய்க்கு அந்த இடம் பிடித்தது. இந்த இடத்தில் தனக்கொரு குடிசை கிடைத்தால் நிரந்தரமாகத் தங்கிவிடலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் வாமா நாயர் ஒரு சோதிடன். யார் யாரிடமோ விசாரித்து, முகம்மது குட்டி திருவனந்தபுரத்தில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டு, வினய் திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்து, ஒரு வாரம் அவனைத் தேடிக் கிடைக்காமல் போனபோது வாமா நாயர் அகப்பட்டான். சாலைத் தெருவில் ஒரு உணவகத்தில் அவன் வினய்க்கு எதிரே அமர்ந்து புட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக அந்த நேரத்தில் வாமா நாயரை அவனது மகள் பார்க்கவி தேவி நினைத்துக்கொள்ள, அவனுக்குப் புரை ஏறி பலமாக இருமினான். வாயில் இருந்த புட்டு மொத்தமும் வினய் மீது தெரித்துவிட்டது. வாமா நாயர் பதறிவிட்டான். மன்னித்துக் கொள்ளுங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பல முறை கும்பிட்டுக் கேட்டுக்கொண்டு தன் மேல் துண்டால் வினய்யின் முகத்தைத் துடைத்து சுத்தம் செய்யவும் ஆரம்பித்துவிட்டான்.

வினய் அந்தச் சம்பவத்தைப் பொருட்படுத்தவேயில்லை. பரவாயில்லை என்று ஒரு சொல்லில் முடித்துவிட்டுத் தன் தட்டில் இருந்த இட்லியைச் சாப்பிட ஆரம்பித்தான். இது வாமா நாயருக்கு மிகுந்த வியப்புக்குரிய சம்பவமாக இருந்தது. சற்றும் நாகரிகமில்லாமல் முகத்தில் அவன் துப்பியிருக்கிறான். ஒரு சிறு முகச் சுளிப்பும் இல்லாமல் ஒருவன் அதைக் கடக்க முடியும் என்றால் எம்மாதிரியான மனநிலை அவனுக்கு வாய்த்திருக்கும்?

‘நீங்கள் யார்?’ என்று நாயர் கேட்டான்.

‘என் பெயர் வினய். தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன்’ என்று வினய் சொன்னான்.

‘எங்கே தங்கியிருக்கிறீர்கள்?’

‘இன்னும் எங்கும் தங்கவில்லை. தங்கும் உத்தேசமும் இல்லை. நான் ஒரு நபரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவன் இந்த ஊரில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.’

‘ஓ. அவர் என்ன தொழில் செய்கிறார்?’

என்ன சொல்வதென்று வினய் யோசித்தான். சட்டென்று, ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டான்.

‘நான் ஒரு சோதிடன். சோழி போட்டுப் பார்த்து ஆரூடம் சொல்வேன்.’

அதனால்தான் வினய் வாமா நாயருடன் அவனது வீட்டுக்குப் போனான். ஒரு முயற்சி. ஒருவேளை இது நடந்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா? வாழ்க்கை எதிர்பாராத அனுபவங்களால் நெய்யப்படுவது. வாமா நாயர் எதிர்பாராதவிதமாக எதிர்ப்பட்டவன். யார் கண்டது? ஒருவேளை முகமது குட்டியை அவனது சோழிகள் காட்டிக் கொடுக்கலாம்.

ஆனால் வீட்டுக்கு அழைத்துச் சென்று உட்காரவைத்து, சோழி போட்டுப் பார்த்த வாமா நாயர், முகமது குட்டி என்ற நபரை வினய் இனி எந்நாளும் சந்திக்கவே முடியாது என்று சொன்னான்.

‘ஐயோ என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?’

‘சோழி அப்படித்தான் தம்பி சொல்கிறது’ என்று நாயர் சொன்னான். வினய்க்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. ஒரு அபத்தத்தை அதன் எல்லை வரை துரத்திச் சென்று தோற்றுத் திரும்புவதை அவன் மனம் விரும்பவில்லை. என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கியபோதுதான் நாயரின் மகள் பார்க்கவி ஒரு யோசனை சொன்னாள். ‘நீங்கள் சூரிய நாராயண போத்தியைப் போய்ப் பாருங்கள். அவரால் ஒருவேளை உதவ முடியும்.’

வாமா நாயருக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. போத்தி ஒரு அயோக்கியன் என்று அவன் சொன்னான்.

‘அவர் என்னவாயிருந்தால் என்ன? ஒரு ஆள் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவுதானே?’ என்று பார்க்கவி கேட்டாள்.

‘ஆம். அவன் என்னை ஏமாற்றிவிட்டான். அவனால் என் வாழ்க்கையே தடம் மாறிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. எப்படியாவது நான் அவனைச் சந்தித்தே தீரவேண்டும்’ என்று வினய் சொன்னான்.

‘தம்பி, அடாத செயல் புரிகிறவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. அவனால் உனக்கு ஏற்பட்ட இழப்பு என்னவாக இருந்தாலும், அதோடு முடிந்தது என்று நினைத்து விட்டுவிடு. மீண்டும் ஒருமுறை எதையும் இழக்க வேண்டாமே?’ என்று வாமா நாயர் கேட்டான்.

நியாயம் என்றுதான் வினய் நினைத்தான். ஆனால் ஏதோ ஒன்று திரும்பத் திரும்ப அவனை முகம்மது குட்டியை நோக்கி இழுத்துக்கொண்டே இருந்தது. அவனை நினைக்காதிருக்கவே முடியவில்லை. ஒரு எள்ளுருண்டை போனதல்ல பெரிது. எத்தனை அலட்சியமாகத் தன்னை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டான்! ஒரு வித்தை. தன்னிடம் இருப்பதை என்னவென்று அறிந்து, அதை எடுத்துக்கொண்டும் போக முடிகிற வித்தை. மிக நிச்சயமாக அவன் ஒரு சாத்தானைத் துணைக்கு வைத்திருக்கிறான். அதில் சந்தேகமில்லை. ஏவல் சாத்தான். என்ன சொன்னாலும் செய்கிற உடலற்ற அடிமை. அதே சாத்தானைக் கொண்டு அவனைப் பழிவாங்க வேண்டும் என்று வினய்க்குத் தோன்றியது.

வாமா நாயர் சொல்லச் சொல்லக் கேட்காமல் பார்க்கவி தேவி அவனை சூரிப் போத்தியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். போத்தியின் மகள் பகவதியும் பார்க்கவியும் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படிக்கிறவர்கள் என்பது வினய்க்கு அப்போதுதான் தெரிந்தது.

வினய் போத்தி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது அவன் வீட்டுக்கு வெளியே ஒரு பெரிய பாறைக் கல்லின் மீது அமர்ந்து கள் குடித்துக்கொண்டிருந்தான். பார்க்கவியைக் கண்டதும் ‘வரு’ என்று சொல்லிவிட்டு உள்ளே பார்த்துத் தன் மகளுக்குக் குரல் கொடுத்தான்.

‘இல்லை. நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். இவருக்கு உங்களால் ஒரு காரியம் ஆக வேண்டும்’ என்று பார்க்கவி வினய்யைக் காட்டிச் சொன்னாள். போத்தி, வினய்யை ஏற இறங்கப் பார்த்தான். பிறகு உள்ளே அழைத்துச் சென்று உட்காரச் சொன்னான்.

‘சொல். என்ன வேண்டும்?’

வினய்க்கு அந்த வீட்டில் இரண்டு சிறுமிகள் இருந்தது பேசுவதற்குத் தயக்கமாக இருந்தது. பார்க்கவிக்கும் பகவதிக்கும் மிஞ்சினால் பதினைந்து வயதுதான் இருக்கும். அவர்களை எதிரே வைத்துக்கொண்டு முகம்மது குட்டியைப் பற்றி எப்படிப் பேச்செடுக்க முடியும்?

போத்திக்கு அவன் தயக்கம் புரிந்தது. ‘சரி மேலே வா’ என்று அவனை அழைத்துக்கொண்டு மாடிக்குப் போனான். அங்கே ஒரு சிறிய அறை இருந்தது. ஜன்னல்கள் இல்லாத இருட்டு அறை. போத்தி ஒரு விளக்கைப் போட்டான். ஒரு பாயை எடுத்து விரித்து அமர்ந்துகொண்டு அவனையும் உட்காரச் சொன்னான்.

‘சொல். என்ன விஷயம்?’

‘ஒருவனைக் கொல்ல வேண்டும். அவன் என்னை ஏமாற்றியவன்.’

‘கொலையா?’

‘அது என் பிரச்னை. அவன் இருக்கும் இடம் எனக்குத் தெரிய வேண்டும். அதற்கு உங்களால் உதவ முடியும் என்று பார்க்கவி சொன்னாள்.’

அவன் சிறிது நேரம் யோசித்தான். பிறகு, பெயரென்ன என்று கேட்டான்.

‘முகம்மது குட்டி’ என்று வினய் சொன்னதுமே போத்தி சடாரென்று எழுந்து நின்றான்.

‘முகம்மது குட்டியா? அவனை உனக்குத் தெரியுமா?’

‘எனக்குத் தெரிந்த முகம்மது குட்டி ஒரு அயோக்கியன். சில்லறை சாத்தான்களை வைத்துக்கொண்டு திருட்டுத் தொழில் செய்பவன்.’

‘நான் நினைத்தது சரி.’

‘நீங்கள் என்ன நினைத்தீர்கள்?’

‘நான் நினைக்கும் முகம்மது குட்டியைத்தான் நீ தேடி வந்திருக்கிறாய் என்று எண்ணுகிறேன். பார்க்க ஆள் கட்டைக் குட்டையாக, தொப்பையுடன் இருந்தானா?’

‘ஆம்.’

‘முழங்கால் வரை லுங்கியை சுருட்டிச் சொருகியிருந்தானா?’

‘ஆம்.’

‘கண்கள் இடுங்கி இங்குமங்கும் அலைபாய்ந்துகொண்டே இருந்தனவா?’

‘ஆம்.’

‘சந்தேகமில்லை. அவன் அயோக்கியன் தான். எத்தனை ரூபாய் இழந்தாய்?’

‘பணமல்ல. ஒரு பொருள்.’

‘தங்கமா?’

‘இல்லை. இது வேறு. அதை நான் சொல்வதற்கில்லை. உங்களால் அவன் இருப்பிடத்தைக் காட்டித்தர முடியுமா என்று சொல்லுங்கள். நீங்கள் கேட்கும் பணத்தைத் தர என்னிடம் இப்போது வசதியில்லை. ஆனால் நான் ஏமாற்ற மாட்டேன். நீங்கள் சொல்லும் தொகையை எப்படியாவது சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுத்துவிடுவேன்.’

போத்தி நெருங்கி வந்து அவன் தோள்களைப் பற்றினான். கண்ணுக்குக் கண் உற்றுப் பார்த்து, ‘அவன் என் தந்தையை ஏமாற்றியவன். அவரது தென்னந்தோப்பை அபகரித்துக்கொண்டு விரட்டி அடித்துவிட்டான். பயந்த சுபாவம் கொண்டவரான என் தந்தை அந்த விவரத்தை எங்களிடம் சொல்லக்கூடச் செய்யாமல் மனம் வருந்தியே மாரடைப்பு வந்து இறந்துவிட்டார்.’

‘ஐயோ. பிறகு எப்படித் தெரிந்தது?’

‘அந்தத் துலுக்கனே இதை எனக்குத் தெரிந்த ஒருவரிடம் சொல்லிப் பெருமை பீற்றிக்கொண்டிருக்கிறான். ஒன்று சொல்கிறேன். அவனைப் பழி வாங்க நினைத்துத்தான் நான் அதர்வ வேதம் கற்கச் சென்றேன்’ என்று சொன்னான்.

போத்தி யார் என்பது வினய்க்கு அப்போதுதான் தெரிந்தது. பார்க்கவி சொன்ன விதத்தில் அவன் ஒரு சிறிய மந்திரவாதி என்று தோன்றியது.வெற்றிலையில் மை போட்டுப் பார்த்து இருப்பிடம் சொல்லத் தெரிந்தவனாக இருப்பான் என்று நினைத்தான். ஆனால் சூரிப் போத்திக்கு அதைக் காட்டிலும் அதிகம் தெரிந்திருந்தது. அவன் வசியக்கலை பயின்றிருந்தான். அவனது கட்டுப்பாட்டில் ஜென்சி என்ற கிறிஸ்தவப் பெண்ணின் ஆவி ஒன்று இருந்தது. பத்தொன்பது வயதில் காதல் தோல்வியில் இறந்த பெண். மரணத் தருவாயில் போத்தி அவளைக் காப்பாற்றப் பெரும் முயற்சிகள் செய்திருக்கிறான். தற்செயலாக அன்றைக்கு ஒரு வேலை நிமித்தம் எர்ணாகுளம் சென்றிருந்த போத்தி, ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தவளைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடியிருக்கிறான். எர்ணாகுளம் அரசுப் பொது மருத்துவமனையில் அவளைக் கொண்டு சேர்த்து சிகிச்சை அளிக்கப் பார்த்து, அது பயனின்றி அவள் இறந்து போனாள். பெற்றோராலும் மற்றவர்களாலும் கைவிடப்பட்ட அந்தப் பெண், இறந்த பின்பு யாரென்றே தெரியாத ஒரு வழிப் போக்கன் தன்னைக் காப்பாற்ற மேற்கொண்ட உதவியை எண்ணி நெகிழ்ந்திருக்கிறாள். வசியம் பயின்ற போத்திக்கு அது வசதியாகிவிட்டது. ஜென்சியைத் தன் வசப்படுத்தி அவளைக் கொண்டு பலபேர் வாழ்வின் காதல் பிரச்னைகளைத் தீர்த்து வைத்துக்கொண்டிருந்தான்.

‘எனக்கு முகம்மது குட்டியின் இருப்பிடம் மட்டும் தெரிந்தால் போதும். மற்றதை நான் பார்த்துக்கொள்வேன்’ என்று வினய் அவனிடம் சொன்னான்.

‘அவன் ஓரிடத்தில் இருப்பதில்லை. அவனுக்கென்று ஒரு இருப்பிடம் கிடையாது. ஆனால் ஒவ்வொரு மாதமும் அவன் நட்சத்திரத்துக்கான சந்திராஷ்டம தினத்தன்று அவன் என் அப்பாவின் தோப்புக்கு வருவான் என்பது தெரியும்.’

‘ஓ. அங்கு அவன் என்ன செய்வான்?’

‘அது எனக்குத் தெரியாது. நான் அங்கு சென்றதில்லை. என்னால் அங்கு போக முடியவில்லை.’

‘ஏன்?’

‘அவன் அனுமதிப்பதில்லை. என்னை மட்டுமல்ல. வேறு யாரையும்.’

‘அந்தத் தோப்பு எங்கு இருக்கிறது?’

‘திருவனந்தபுரத்தில் இருந்து தும்பா போகிற வழியில் மூன்றாவது மைல்.’

ஆறு நாள் வினய் திருவல்லத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தான். இரவு படுப்பதற்கு மட்டும் போத்தி வீட்டுக்குப் போய்விடுவான். அந்த மாடி அறையில் அவன் படுத்துக்கொள்ள போத்தி அனுமதித்தான். அந்த ஆறு நாள்களும் போத்தியின் பணி என்னவாக இருக்கிறது என்பதை வினய் கவனித்தான். அவனைச் சந்திக்க வருகிற ஆள்கள். அவர்களது பிரச்னைகள். இந்தப் பெண்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் சிக்கலளிப்பவர்களாகவே இருக்கிறார்கள். ‘இன்பம் மிகுந்த இடங்களில்தான் வலியும் மிகுந்திருக்கும்’ என்று போத்தி சொன்னான். ‘நான் வலிகளில் இருந்து நிவாரணம் தருகிறேன்.’

கேட்கலாமா என்று யோசித்துவிட்டு வினய் தயக்கமுடன் கேட்டான், ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்கள் மகளுக்குத் தெரியுமா? தாயில்லாப் பெண் என்று தெரிகிறது. சிறுமியாகவும் இருக்கிறாள். அதனால் கேட்டேன்.’

‘தெரியாது’ என்று போத்தி சொன்னான்.

‘வேறு என்ன சொல்லி வைத்திருக்கிறீர்கள்?’

‘நிமித்தம் பார்ப்பவன். ஆரூடம் சொல்பவன்.’

‘என்றைக்காவது தெரியவந்தால் என்ன செய்வீர்கள்?’

‘அவளது பதினெட்டாவது பிறந்த நாளன்று நானே சொல்லிவிடலாம் என்றிருக்கிறேன்’ என்று போத்தி சொன்னான்.

மிதுன ராசியில் பிறந்தவனான முகம்மது குட்டியின் அம்மாத சந்திராஷ்டம தினம் புதன் கிழமை வந்தது. அன்று காலை போத்தி வினய்யை அழைத்துச் சொன்னான், ‘அந்தத் துலுக்கனை உண்மையிலேயே நீ கொன்றால் நீ நினைத்துப் பார்க்காத பரிசொன்றை உனக்கு நான் தருவேன்.’

வினய் யோசிக்காமல் சொன்னான், ‘அவனை நான் கொன்றுவிட்டால் அதைக் காட்டிலும் பெரிய பரிசு எனக்கு வேறில்லை. ஏனென்றால், தினம் தினம் மனத்துக்குள் எப்போதும் நான் அவனைக் கொன்றுகொண்டே இருக்கிறேன். நிஜத்தில் அவன் இன்னும் சாகாதிருக்கிறான் என்பதுதான் என் பெருவலியாக உள்ளது.’

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com