82. மோகினி

வெள்ளை அணிந்திருந்தால் நானொரு அரசியல்வாதி. வண்ணமயமாக என்னை அலங்கரித்துக்கொள்ள முடிவு செய்திருந்தால் நானொரு திரைக் கலைஞன். நான் காவியில் என்னைப் பொருத்திக்கொண்டேன். சன்னியாசி என்று சொல்லப்பட்டேன்.

வரணாவதி. அதைச் சொல்ல ஆரம்பித்துத்தான் வினய், போத்தியின் வாரணாசி அனுபவத்துக்குப் போய்விட்டான். ஒரு விஷயம் மட்டும் எனக்கு நினைத்து நினைத்துச் சிரிப்பு மூட்டிக்கொண்டிருந்தது. எனக்கு யாரென்றே தெரியாத ஒரு குட்டி மந்திரவாதிகூட அண்ணாவைச் சந்தித்திருக்கிறான். ஒருமுறையல்ல; இருமுறை. ஆனால் இன்றுவரை ஒரு நாள் தவறாமல் அவனை நினைத்துக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தேடிக்கொண்டும் இருக்கும் என் கண்ணில் மட்டும் அவன் சிக்கவேயில்லை. அதுவும் அந்தப் போத்தியை இரண்டாம் முறை இழுத்துவைத்து அவனே பேசி அனுப்பினான் என்று வினய் சொன்னபோது வாய்விட்டே சிரித்துவிட்டேன்.

‘உன்னை அவன் சந்திக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நினைக்காமல் இருந்திருக்க மாட்டான்’ என்று வினய் சொன்னான்.

என்னை அவன் எதற்கு நினைக்க வேண்டும்? உடையளவில் சன்னியாசியாக இருப்பவன் நான். ஒழுக்கங்களுக்கும் எனக்கும் உள்ள இடைவெளி, எனக்கும் என் வீட்டுக்கும் இருந்த இடைவெளியினும் பெரிது. வெள்ளை அணிந்திருந்தால் நானொரு அரசியல்வாதி. வண்ணமயமாக என்னை அலங்கரித்துக்கொள்ள முடிவு செய்திருந்தால் நானொரு திரைக் கலைஞன். நான் காவியில் என்னைப் பொருத்திக்கொண்டேன். சன்னியாசி என்று சொல்லப்பட்டேன். அண்ணாவுக்கு நிச்சயமாக என் மீது வருத்தம் இருக்கும். எங்கள் மூன்று பேரில் என்ன காரணத்தாலோ அவன் என்னை நம்பியிருக்கிறான். சிறு வயதில் தன்னைப் பற்றிய சில விவரங்களைத் தெரிவிக்க என்னைத்தான் அவன் தேர்ந்தெடுத்தான். அது தவறு என்று பின்னாளில் நினைத்திருப்பான் என்று தோன்றியது.

காலத்தின் இலையுதிர்ப்பில் எனக்கு பெற்றோரைப் போலவே சகோதரர்களின் மீதிருந்த பாசமும் மெல்ல மெல்ல உலரத் தொடங்கியபின் மனச்சங்கடம் என்ற ஒன்றே எனக்கு இல்லாது போய்விட்டது. ஆனாலும் நான் நினைப்பேன். அவனை மட்டுமல்ல. அத்தனை பேரையுமே. வெறுமனே நினைத்துப் பார்ப்பது. நடந்த சம்பவங்களை மீண்டும் மனத்துக்குள் ஓடவிட்டு கவனிப்பது. உபயோகம் ஒன்றுமில்லை என்றாலும் எனக்கு அது ஒரு பொழுதுபோக்கு. இயல்பில் நான் மிகவும் விரும்பிய பெருங்கூட்டத் தனிமை என்னளவில் பூரணமாக வாய்த்தது ஓர் அதிர்ஷ்டம்தான்.  அம்மாவின் சாக்கில் அண்ணாவை ஊரில் சந்திக்க நேருமானால் எனக்கு அவனைப் பார்த்து ஒரு புன்னகை செய்வதைத் தவிர, அவனோடு பேசவும் அறியவும் வியக்கவும் ஒன்றும் இருக்காது என்றே தோன்றியது. அவன் வழி வேறு. அவனது தவமும் யோகமும் மற்றதும் என்னைப் பொறுத்தவரை நகைப்புக்குரியவை அல்லவே தவிர, வணங்கக்கூடியதும் அல்ல. இந்த உலகில் வணங்கத்தக்க விதத்தில் ஒரு கடவுள்கூடச் சிக்காத துரதிருஷ்டசாலி நான்.

எனக்கு மிகப்பெரிய வியப்பளித்த விஷயம், சன்னியாச தீட்சைக்காக வினய் நாயாக அலைந்திருக்கிறான் என்பது. சூரிப்போத்தியுடன் இருந்த காலத்தில் அவனால் வரணாவதியைப் பற்றித்தான் அறிய முடியவில்லையே தவிர, ஒன்றிரண்டு சாத்தான்களை வசப்படுத்தி, சில்லறை ஜாலங்கள் செய்யக் கற்றிருக்கிறான்.

‘ஒரு குட்டிச்சாத்தானால் கூடவா அந்த மூலிகையைக் கொண்டு வர முடியவில்லை?’ என்று நான் சிரித்தபடி கேட்டேன்.

‘போத்தியே எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறான். நானும் என்னாலான விதங்களில் எல்லாம் பாடுபட்டுப் பார்த்துவிட்டேன். அது மட்டும் முடியவில்லை’.

‘அப்படி என்ன மூலிகை அது?’

‘அது ஒரு விஷ முறிவு மூலிகை. எத்தகைய விஷத்தையும் கொல்லும்’.

‘யார் சொன்னது?’

‘எல்லா சித்தர்களும் சொல்லியிருக்கிறார்கள். வேதத்தில் இருக்கிறது’.

‘எந்த வேதம்?’

‘அதர்வ வேதம்’.

‘அடேங்கப்பா’.

‘இது உண்மை. பசித்த ஒருவன் இனம் காணாமல் விஷத்தை உணவென்று எடுத்து உண்டாலும் வரணாவதியை எள்ளோடு சேர்த்து அரைத்து நீருடன் குடிக்கக் கொடுத்தால் அது ஆலகால விஷமே ஆனாலும் செயலற்றுப் போகும்’.

‘விஷத்துக்கெல்லாம்தான் நவீன மருத்துவம் வந்துவிட்டதே. அந்த மூலிகையைத் தேடி எதற்கு அலைய வேண்டும்?’

‘விமல்! உன்னோடு நான் வாதம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அந்த மூலிகையைத் தேடி நான் பத்து வருடங்கள் அலைந்தேன்’.

அவன் அலைந்துகொண்டிருந்த காலங்களில் அவன் வளர்த்த சாத்தான்கள் அவனுக்கு சோறு போட்டிருக்கின்றன. சூனியம் வைப்பது. வைத்ததை எடுப்பது. திருட்டுப் பொருள்களை மீட்பது. பங்காளிச் சண்டைகள். தீ வைப்புச் சம்பவங்கள். ஒரு பொதுத் தேர்தல் சமயம் ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஐந்நூறு குடிசைகளுக்குத் தீ வைக்கும் பொறுப்பை ஏற்று நிறைவேற்றியதாக வினய் சொன்னான். சொல்லிவிட்டு அழவும் செய்தான். ‘வெறும் பிழைப்புவாதியாகிப் போனேன் விமல்! வெறும் பிழைப்புவாதியாக!’

‘அதிலொன்றும் தவறில்லை விடு. நீ உன் குருநாதரைப் போலக் காதல் பிரச்னைகளைத் தீர்க்க முனையவில்லையா?’ என்று கேட்டேன்.

‘ஆரம்பத்தில் செய்தேன். பிறகு விட்டுவிட்டேன்’.

‘ஏன்?’

‘என்னால் எந்தப் பெண்ணையும் வசியம் செய்து என் வழிக்குக் கொண்டுவர முடிந்தது. ஆனால் என்னிடம் அந்தப் பணியை அளித்தவனுக்கு என்னால் நேர்மையாக இருக்க முடியவில்லை’ என்று சொல்லிவிட்டு, மீண்டும் தலையில் அடித்துக்கொண்டு அழுதான். எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. காதலைப் போலவே துறவின் மீது நாட்டம் கொண்ட மனமும் சின்னாபின்னப்பட்டு நிற்கவேண்டியதுதான் போலிருக்கிறது. இது சிக்கல். பெரும் சிக்கல். உள்ளக் கட்டமைப்பை பின்னப்படுத்திவிடத்தக்க சிக்கல். என் வாழ்வில் நான் இத்தகைய பலபேரைச் சந்தித்திருக்கிறேன். தத்துவங்களின் சிகரங்களில் உலவிக்கொண்டிருப்பவர்கள். தவத்தின் உக்கிர எல்லைகளைத் தொட்டுப் பார்த்தவர்கள். அனைத்து விதமான லாகிரிகளின் மீட்டல்களையும் கடந்து மீண்டவர்கள். எந்தக் கல் தடுக்கிப் பெண்ணில் விழுகிறோம் என்பது மட்டும் இறுதி வரை அவர்களுக்குப் புரியாமலேயே போய்விடுகிறது.

‘தனுஷ்கோடியில் நீ ஒரு பெண்ணின் பிரேதத்தை அழுகிய நிலையில் கண்டதாகச் சொன்னாயே, அதன் பிறகும்கூடவா உன்னால் முடியவில்லை?’ என்று நான் வினய்யிடம் கேட்டேன்.

அவன் சிறிது நேரம் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்தான். ரயிலின் சீரான தடதடப்பு மட்டுமே எனக்கும் அவனுக்கும் நடுவே நிகழ்ந்துகொண்டிருந்தது. பெட்டியில் அனைவருமே தூங்கிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் உறக்கம் வந்தது என்றாலும் அவனோடு பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தை நான் தவற விட விரும்பவில்லை.

வினய் சொன்னான், ‘ஆம். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் வரை நான் பெண்களைப் பொருட்படுத்தவேயில்லை’.

‘எந்தப் பெண் வந்து உன் விரதத்தைக் கலைத்தாள்?’

‘மோகினி’ என்று வினய் சொன்னான்.

மோகினியை அவன் கல்கத்தாவில் சந்தித்திருக்கிறான். அவளது தந்தை ஒரு கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். வரணாவதியைத் தேடி அருணாசல பிரதேசம் வரை சென்று சுற்றிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த வினய், ஒருநாள் ஹௌரா பாலத்துக்கு அருகே அவளைப் பார்த்திருக்கிறான்.

‘ஒரு அம்பின் நுனியைப் போன்ற கூர்மை கொண்ட அப்படியொரு கண்ணை நான் அதற்குமுன் கண்டதே இல்லை’ என்று சொன்னான்.

மோகினி பெரிய அழகியில்லை. நிறமும் சற்று மட்டுத்தான். அவள் வங்காளிப் பெண்ணாக இருக்கமாட்டாள் என்று ஏனோ அவனுக்குத் தோன்றியது. வங்காளத்தில் யாரும் மோகினி என்று பெயர் வைப்பதில்லை என்று அவனுக்கு யாரோ சொல்லியிருக்கிறார்கள்.

‘அதெல்லாம் இல்லை. எனக்கே மோகினி கங்கோபாத்யாய் என்றொரு புள்ளியியல் அதிகாரியைத் தெரியும்’ என்று நான் சொன்னேன்.

‘ஆம். நான் விசாரித்த நபர் வங்காளி இல்லை. அதனால் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று வினய் சொன்னான். அந்தப் பெண்ணின் கண்ணில் இருந்த வசீகரம் அவனை அன்றிரவு முழுதும் தூங்கவிடவில்லை. அன்றே அவன் கல்கத்தாவில் இருந்து கிளம்பி கேங்டாக் போவதற்கு இருந்திருக்கிறான். ஆனால் பயணத்தை ஒத்திப் போட்டுவிட்டு, தன் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சாத்தானை அழைத்து மோகினி எங்கே இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்று அறிந்துவரச் சொல்லியிருக்கிறான்.

மறுநாள் மதியம் திரும்பி வந்த சாத்தான், அவள் ஒரு கல்லூரி மாணவி என்றும் மிகவும் நவநாகரிகமான ஆண்களை மட்டுமே ஏறெடுத்துப் பார்ப்பாள் என்றும் சொன்னது. உடனே வினய் ஒரு சலூனுக்குப் போய் திருத்தமாக முடி வெட்டி முகச் சவரம் செய்துகொண்டான். அவன் கையில் அப்போது இருந்த பணம் அதற்கே சரியாகப் போய்விட்டது. எனவே தனது கொள்கையைச் சற்று விலக்கி வைத்துவிட்டுத் தனது ஏவலாளியின்மூலம் ஒரு பெரிய துணிக்கடையில் இருந்து ஒரு கோட் சூட்டை எடுத்து வரச் செய்து அதனை அணிந்துகொண்டான். எஸ்பிளனேட்டில் இருந்த ஒரு பாட்டா ஷோ ரூமில் இருந்து ஒரு ஜோடி ஷூக்களையும் எடுத்து வந்து அணிந்துகொண்டான். போகிற காரியம் நல்லபடியாக முடிந்தபின்பு சம்பந்தப்பட்ட துணிக்கடை மற்றும் செருப்புக் கடைகளுக்குத் தீர்க்க வேண்டிய தொகையைப் பைசல் செய்துவிட வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டான்.

அன்று மாலை அவன் மோகினி படித்துக்கொண்டிருந்த கல்லூரி வாசலுக்குப் போய் நின்றபோது மணி நான்காகியிருந்தது. வினய்யின் ஏவல் சாத்தான் அவள் சரியாக நான்கு பத்துக்குக் கல்லூரியில் இருந்து வெளியே வருவாள் என்று சொல்லியிருந்தது. சொன்னது போலவே அவள் சரியான நேரத்துக்கு வந்தாள். அவளோடு இன்னும் இரண்டு தோழிகள் உடன் வந்துகொண்டிருந்தார்கள். வினய்க்கு அந்தக் கணம் அந்த மூன்று பெண்களையுமே மிகவும் பிடித்துப் போனது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com