முதல்வரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிக்பாஸ் வாய்ப்பு கதவைத் தட்டியது!

மாநில முதல்வரையே பொதுவெளியில் வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு துணிந்து விட்டவரான ஆசிரியையின் திறனை எண்ணி வியந்து பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை நடத்தும் சேனல் தரப்பிலிருந்து
முதல்வரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியைக்கு பிக்பாஸ் வாய்ப்பு கதவைத் தட்டியது!

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத் கடந்த வாரத்தில் அம்மாநிலத்தின் வனப்பகுதி சிற்றூர் ஒன்றில் பணிபுரியும் ஆசிரியை உத்தர பஹுகுனா என்பவரை உடனடியாக பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யுமாறு உத்தரவிட்டார். காரணம், ஆசிரியை உத்தர பஹுகுனா, முதல்வர் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியான ‘ஜனதா தர்பார்’ நிகழ்வில் திடீரென நுழைந்து அந்த நிகழ்ச்சிக்குச் சற்றும் தொடர்பின்றி தனது பணியிட மாறுதல் தொடர்பாக முதல்வரிடம் கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த முதல்வர் பணியிட மாற்றம் குறித்துப் பேச இது இடமல்ல, அதைப் பற்றித் தீர்மானிக்க பள்ளிக்கல்வித் துறை செயலகம் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இருக்கிறார். இங்கே வந்து இப்படி சம்மந்தமில்லாமல் குழப்பமுண்டாக்க நினைக்கும் இந்தப் பெண்மணியை உடனடியாக பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதோடு அவரைச் சிறையிலும் தள்ளுங்கள் என உத்தரவிட்டார். முதல்வரின் இத்தகைய உத்தரவைக் கேட்ட மாத்திரத்தில் மேலும் கொந்தளித்துப் போனவரான ஆசிரியை உத்தரா... ஏமாற்றுக்காரர்கள், திருடர்கள் என முதல்வரை நோக்கி கடுமையாகப் பேசியவாறு அந்த இடத்தை விட்டு நகர, அவரை காவலர்கள் அவ்விடத்தை விட்டு கைது செய்து அழைத்துச் சென்றனர். தற்போது பெயிலில் வெளியில் வந்த பின்னும் ஆசிரியையின் கோபம் இன்னும் தணியவில்லை.

இந்நிலையில், மாநில முதல்வரையே பொதுவெளியில் வைத்து கேள்வி கேட்கும் அளவுக்கு துணிந்து விட்டவரான ஆசிரியையின் திறனை எண்ணி வியந்து பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை நடத்தும் சேனல் தரப்பிலிருந்து தங்களது போட்டியில் கலந்து கொள்ளச் சொல்லி ஆசிரியைக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகங்களில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. இது குறித்துப் பேசுகையில் ஆசிரியை உத்தரா,  ‘தனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொல்லி அழைப்பு வந்ததாகவும், ஆனால், தனக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை எனக்கூறி தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், ‘ என் வாழ்க்கையை நான் அமைதியான முறையில் சிரமமின்றி நடத்திச் செல்ல ஆசைப்படுகிறேனே தவிர, பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமாகி பணம் சம்பாதிக்கும் எண்ணமெல்லாம் தனக்கு இல்லையென்றும், தன்னுடைய ஆசிரியப் பணி மூலம் கிடைக்கும் பணத்தில் தனது குடும்ப காரியங்களை நடத்திச் செல்லவே தான் விரும்புவதால் அதற்கு அரசு தரப்பிலிருந்து தன்னுடைய பணியிட மாறுதலுக்கு உத்தரவிட்டால் அது மட்டுமே தனக்கு திருப்தி கிடைக்கச் செய்யும் மாற்றமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் கோபம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்தின் அன்றைய கோபத்துக்கு சமாதானம் செய்யும் விதமாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தன்னிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார். அவர் ஏன் என்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும். என்னை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது மாநில முதல்வர். அவரல்லவா தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்? ஜனதா தர்பாரில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பது எனது நோக்கமில்லை. நான் எனது உரிமையைத்தான் கேட்டேன். அதற்கு முதல்வர் பொறுமையாகப் பதிலளிக்காமல், ஆரம்பத்திலேயே கோபத்துடன் பதில் அளிக்கத் தொடங்கியதாலும், நானும் பதிலுக்கு கோபப்பட வேண்டியதாயிற்று. இது நியாயமான உணர்வு தானே? இதற்காக நான் ஏன் அஞ்ச வேண்டும்? அதற்கெல்லாம் அஞ்சக் கூடிய ஆள் நானில்லை. என் வரையில் நான் செய்தது நியாயமே. சுமார் 25 வருடங்களாக எனக்கு வந்த பணியிட மாறுதல்கள் அனைத்துமே வனப்பகுதி சிற்றூர்களாகத்தான் அமைந்தன. நான் என் வாழ்நாள் முழுவதையும் வனங்களில் கழிக்க வேண்டும் என என்னை யாரும் சபிக்கவில்லை. எனவே என் கணவரின் மரணத்தின் பின் என் குழந்தைகளை அனாதைகளாக விட மனமின்றி டேராடூனுக்கு பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்திருக்கிறேன். இதோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கூடிய விரைவில் எனது விண்ணப்பத்திற்கு ஆவண செய்வதாக வாக்களித்திருக்கிறார். பார்க்கலாம்... என்ன நடக்கப்போகிறது என! என்கிறார் செம தில்லாக.

இந்த தைரியத்துக்காகவும், தன்னம்பிக்கைக்காகவும், முன் வைத்த காலை பின் வைக்காத நேர்மைக்காகவும் தான் ஆசிரியை உத்தர பஹுகுனாவை பிக்பாஸ் குழு தங்களது போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பியதோ என்னவோ?! நல்ல வேளை கடவுளின் நற்கருணையால் ஆசிரியை அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் என்பதாகத் தகவல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com