பணிமாறுதல் கோரிய ஆசிரியை, சிறையில் அடைக்கச் சொன்ன முதல்வர்!

டேராடூனில் வசிக்கும் என் குழந்தைகளை அனாதைகளாக விட்டு விட்டு இனியும் என்னால் அத்தனை தொலைவில் சென்று பணிபுரிய இயலாது.
பணிமாறுதல் கோரிய ஆசிரியை, சிறையில் அடைக்கச் சொன்ன முதல்வர்!
Published on
Updated on
2 min read

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்த்ர ராவத் பங்கேற்ற ஜனதா தர்பார் நிகழ்வில் 57 வயது ஆசிரியை ஒருவர் தனது பணிமாற்றம் குறித்து ஏற்படுத்திய சர்ச்சையால் முதல்வர் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

உத்தர பஹுகுனா எனும் அந்த ஆசிரியை, தொடர்ந்து பல்லாண்டுகளாக தனது குடும்பத்தினரை விட்டு வெகு தொலைவில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருவதாகவும், இனியாவது தனது குழந்தைகளுடனும், குடும்பத்தினருடனும் சேர்ந்து வசிக்க விரும்புவதால் தனக்கு, தன் வசிப்பிடத்துக்கு அருகில் பணிமாறுதல் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி முதல்வர் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் கோரிக்கை வைத்தார்.

டேராடூனில் வசிக்கும் என் குழந்தைகளை அனாதைகளாக விட்டு விட்டு இனியும் என்னால் அத்தனை தொலைவில் சென்று பணிபுரிய இயலாது. 2015 ஆம் ஆண்டில் நன் என் கணவரை இழந்து விட்டேன். அதன்பின் எனது பணிமாறுதலுக்காக, எனது நிலையை விளக்கி பலமுறை முதல்வரிடம் விண்ணப்பித்து விட்டேன். ஆனால் அவர் இதுவரையிலும் எதுவும் செய்யவில்லை. அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டால், அவர் திடீரெனக் கையை நீட்டி, நீங்கள் ஒரு ஆசிரியை, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளப் பாருங்கள் என்று என் மீது குற்றம் சாட்டுகிறார்.

பொதுவெளியில் நிகழ்ந்த இந்த சர்ச்சை காணொளியாக்கப்பட்டு இணையத்தில் வலம் வருகிறது. அந்த காணொளியில் காணக் கிடைப்பவை, ‘ ஆசிரியை பஹுகுனா, முதல்வரிடம், என்னால் எனது வேலையையும் விட முடியாது, என் குழந்தைகளையும் தனிமையில் விட முடியாது. எனவே எனக்கு பணிமாறுதலுக்கு உத்தரவிடுங்கள் என கோரிக்கை வைக்கிறார்.

அதற்கு முதல்வர் ராவத், நீங்கள் பணியில் சேரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது உங்களுக்கு ஏதாவது கியாரண்டி அளிக்கப்பட்டிருந்ததா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆசிரியை பஹுகுனா, ‘ என் வாழ்க்கையை நான் காட்டில் தான் வாழ்ந்தாக வேண்டுமென்று நானொன்றும் சபிக்கப்படவில்லை’ என்று பதிலுரைத்தார்.

ஜனதா தர்பாரில் இவ்விதம் நிகழ்ந்ததால், முதல்வர் கோபமுற்று, உடனடியாக அந்த ஆசிரியையை வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டதோடு அவரைக் கைது செய்யவும் உத்தரவிட்டார்.

முதல்வரின் இந்த உத்தரவை அடுத்து, பஹுகுனா, முதல்வரைப் பார்த்து, ‘திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள்’ என்று கோபத்துடன் கத்துவதும் அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியை பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதைப் பற்றி உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்த்ர ராவத் அளித்த விளக்கம், பணிமாறுதல் கோருபவர்கள் இப்படி பொது மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் வந்து சர்ச்சையைக் கிளப்பும் விதத்தில் கேள்வியெழுப்பக் கூடாது என்றார். உத்தரகாண்ட் பள்ளிக்கல்வித்துறை செயலரான புபிந்தர் கெளர் அலாக் இதுகுறித்துப் பேசுகையில், பணிமாறுதல் என்பது அவரவர் விரும்பிய நேரங்களில், விரும்பிய இடங்களில் கிடைக்கக் கூடியதல்ல, அது சீனியாரிட்டி அடிப்படையில், யார் முதலில் விண்ணப்பித்திருக்கிறார்களொ அவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் நிகழ்வது, இவர் மட்டுமல்ல , இவரைப் போல 58 ஆசிரியர்கள் உத்தரகாண்டில் தூரமான காட்டுப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார்கள். இவரை விடவும் அதிக வருடங்கள் பணியிலிருப்பவர்கள் இருக்கிறார்கள். பணிமாறுதலுக்காக விண்ணப்பித்தவர்கள் லிஸ்டில் ஆசிரியை பஹுகுனா 59 வது இடத்தில் இருக்கிறார். அவருக்கான நேரம் வரும் போது அவர் கேட்ட பணிமாறுதல் கோரிக்கை பரிசீலிக்கப்படும். அதற்குள் அவசரப் பட்டால் எப்படி? இங்கே எல்லாம் முறைப்படி தானே நடத்தப் பட முடியும்.’ என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com