Enable Javscript for better performance
Bhaiyyu |- Dinamani

சுடச்சுட

  

  தொழில்முறை மாடலாக இருந்து மதகுருவாக மாறிய பய்யூ மகராஜ் தற்கொலை!

  By RKV  |   Published on : 13th June 2018 11:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bhaiyyu_maharaj

   

  பய்யூ மஹாராஜ் இந்தியாவின் டாப் அரசியல் தலைகள் மற்றும் பிரபலத் தொழிலதிபர்களின் மதகுருவாகத் திகழ்ந்தவர் நேற்று மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் தனது ஆசிரமத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்தூரில் இருக்கும் அவரது ஆசிரமத்தில் செவ்வாயன்று தனக்குத்தானே தலையில் சுட்டுக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்தூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பய்யூ மஹராஜ் இறந்து விட்டார் என மும்பை மருத்துவமனை உறுதி செய்தது.

  1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள்... மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஷுஜல்பூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான பய்யூ மஹராஜ்/ ஆரம்பத்தில் தொழில்முறை மாடலாக தன் வாழ்வைத் துவக்கினார். பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமொன்றின் ஆஸ்தான மாடலாகச் சில காலம் திகழ்ந்தார்.. பய்யூவுக்கு பென்ஸ் கார் மற்றும் ரோலக்ஸ் வாட்ச்கள் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. ஒரு சாதுவாக இருந்த போதும் தனது ஆர்வம் காரணமாக அவர் சேகரித்து வைத்திருக்கும் விதம் விதமான ஃபேன்ஸி கார்கள் மற்றும் எழுதிக் குவித்த கவிதைத் தொகுப்புகள் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் ஃபேன்ஸி & ஃபேண்டஸி சாதுவாக அனைவராலும் அறியப்பட்டவராக இருந்தார். எப்போதும் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் உலா வரக்கூடியவரான பய்யூ மஹராஜுக்கு இந்தூரில் சொந்தமாக மிகப்பெரிய பங்களா ஒன்றுண்டு. 

  உதய் சிங் தேஷ்முக் எனும் இயற்பெயரையுடைய பய்யு மகராஜ் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசியல் வட்டாரத்தில் நன்கு பிரபலமானவர். குடும்பப் பிரச்னைகள் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், கலாச்சாரம், அறிவு, தன்னலமற்ற சேவை புரியக் கூடிய பெருந்தன்மையான மனம் கொண்டவரான ஒரு ஆன்மீக குருவை இந்த நாடு இழந்து விட்டதாக வருத்தம் தெரிவித்து தனது இரங்கலை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த வருட துவக்கத்தில் மத்தியப் பிரதேச அமைச்சரவையில் சிவராஜ் சிங் நான்கு துறவிகளுக்குத் தனது அமைச்சரவையில் இடமளிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார், அமைச்சர்களாக அறிவிக்கப்பட்ட அந்த நான்கு துறவிகளில் பய்யூ மஹராஜும் ஒருவர். இந்த அறிவிப்பை ஒட்டி மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தார் சிவராஜ் சிங் செளஹான். 

  ஆனால், பய்யூ மஹராஜ் அரசு தனக்களித்த அந்த கெளரவ பதவியை ஏற்க மறுத்ததோடு, ஒரு சாதுவுக்கு பதவி முக்கியமில்லை என்றும் அறிவித்தார். ஆனாலும் மாநில அரசு தனது அறிவிப்புக்கும், முடிவுக்கும் நியாயம் செய்யும் வகையில், நர்மதா நதி பாதுகாப்புக் குழு பணிகளை திறம்படச் செய்து முடிப்பதற்காகவே 4 சாதுக்களுக்கும் அமைச்சர் பதவி தர ஆளும் தரப்பு முடிவு செய்ததாக கூறி பிரச்னையை அப்போதைக்கு சமாளித்தது.

  மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, பய்யூ மஹராஜ் தனக்குத் தானே உருவான ஒரு சுயம்பு மதகுருவாகத் திகழ்ந்தார். குறுகிய காலத்தில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமானதற்குக் காரணம் அரசியல் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினருடன் அவருக்கிருந்த தொடர்புகளே. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் முதல் பாடகி லதா மங்கேஷ்கர் வரை அவருக்குப் பல்வேறு பிரபலங்களும் சிஷ்யர்களாக இருந்தனர்.

  2011 ஆம் ஆண்டில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை அறிவித்த போது, அவரது உண்ணாவிரதத்தை முடித்து வைக்க அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சி மேலிடம் அணுகியது பய்யூ மஹராஜைத் தான். அன்னா ஹசாரேவுக்கு ஒரு டம்ளர் பால் கொடுத்து உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தவர் பய்யூ மஹராஜ் தான்.

  மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது,  மத நல்லிணக்கம், சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி சாத்பாவனா உண்ணா நோன்பை அறிவித்திருந்தார். மூன்று நாட்கள் நீடித்த அந்த நோன்பில் மோடியுடன் அமர வெகு மரியாதையுடன் அழைக்கப்பட்டவர் இந்த பய்யூ மஹராஜ்.

  இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல் மனைவி இறந்த நிலையில் தனது 49 வயதில் பய்யூ,  மருத்துவர் ஆயுஷி ஷர்மாவை மணக்கும் போது அந்த திருமணத்தை எதிர்த்தும் பய்யூ தன்னை ஏமாற்றி விட்டார் என்றும் வட இந்திய நடிகை ஒருவர் திருமண மண்டபத்துக்கே வந்து தர்ணா செய்தது பய்யூவின் வாழ்வில் விமர்சனத்துக்குரிய விஷயங்களில் ஒன்றாகப் பதிவாகியிருக்கிறது.

  அதுமட்டுமல்ல, இரு ஆண்டுகளுக்கு முன் தன் மகளைப் பார்த்து வர பய்யூ சென்றிருந்த போது அவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளாக்கும் முயற்சியும் நடத்தப்பட்டிருக்கிறது.

  இவற்றுக்கெல்லாம் உச்சகட்டமாக 2016 ஆம் ஆண்டில் தான் பொது வாழ்க்கையில் இருந்து விலக இருப்பதாக அறிவித்திருந்தார் பய்யூ மஹராஜ். அதற்குப் பின் அவரது ஆதரவாளர்கள் அவரைக் காண்பது அவரது தற்கொலையின் பின் மருத்துவமனையில் தான். இரண்டாண்டுகளுக்கு முன்பு பய்யூ மஹராஜின் முதல் மனைவி இறந்த நிலையில் கடந்தாண்டு ஆயுஷி ஷர்மா எனும் மருத்துவரைத் திருமணம் செய்து கொண்டார்.

  இந்நிலையில் தனது ஆதரவாளர்களையும், இரண்டாவது மனைவியையும் அம்போவென விட்டு விட்டு பய்யூ மஹராஜ் குடும்பப் பிரச்னை காரணமாக அதிக பட்ச மன உளைச்சலில் தன்னைக் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அவரது ஆதரவாளர்களிடையே கடுமையான அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.

  பய்யூ மஹராஜ் தற்கொலை மரணம் குறித்து நாங்கள் மிகவும் கவலையில் இருக்கிறோம். அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்ன நடந்ததெனத் தெரியவில்லை. நடந்ததை அறிய ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட வேண்டும் என கம்ப்யூட்டர் பாபா எனும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு மதகுரு கேள்வியெழுப்பியுள்ளார். இவரும்... ஆளும்கட்சியால், பய்யூ மஹராஜுடன் இணைந்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட ‘சாதுக்கள்’ அமைச்சர் குழுவில் ஒருவரே!

  மேற்கண்ட காரணங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது பய்யூவின் மரணத்துக்கு குடும்பப் பிரச்னைகளே காரணம். உளவியல் சிக்கல் காரணமாக பய்யூ தற்கொலை செய்து கொண்டார் என்ற முடிவு ஏற்றக்கூடியதல்ல, கடந்த சில ஆண்டுகளாக ஆளும் பாஜகவினருக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுக்கும் படி பய்யூ தொடர்ந்து வற்புறுத்தப்பட்டார். அந்த நிர்பந்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என காங்கிரஸ் பிரமுகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

  ஒரு மாடலாகத் தனது பொது வாழ்வைத் துவக்கிய பய்யூ... ஒரு காலகட்டத்தில் வட இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், கலைஞர்கள், அதிகாரிகள் என அனைவரது நன்மதிப்பையும், அறிமுகத்தையும் பெற்று மதகுருவாக உலா வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. இதற்கென தனி விசாரணைக் கமிஷன் அமைத்து தற்கொலைக்கான காரணத்தை ஆராயுமா தற்போதைய மத்தியப் பிரதேச ஆளும் தரப்பு?! பொறுத்திருந்து காணலாம்.

  Image courtesy: Google

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai