Enable Javscript for better performance
Teacher Arrested Over Transfer; W|முதல்வரின் நியாய முகத்திரையைக் கிழித்த தகவல் அறியும் உரிமைச் சட்டம- Dinamani

சுடச்சுட

  

  முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலரின் நியாய முகத்திரையைக் கிழித்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்!

  By RKV  |   Published on : 30th June 2018 04:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  uttara_bahugunaa

   

  உத்தரகாண்ட் முதல்வர் த்ரிவேந்த்ர ராவத், பொதுமக்களைச் சந்திக்கும் ஜனதா தர்பார் நிகழ்ச்சியில், திடீரெனத் தோன்றிய ஆசிரியை உத்தர பஹுகுனா, தனது பணியிட மாறுதல் குறித்துக் கேள்வி எழுப்பியதில் வெகுண்ட முதல்வர். அதெல்லாம் பேச இது இடமில்லை. அதற்கென பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் இருக்கிறது. அதற்கென ஒரு செயலர் இருக்கிறார். நீங்கள் ஒரு ஆசிரியையாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் பிஹேவ் செய்யாதீர்கள் என்று எச்சரித்தார். அதற்கு பதிலுரைக்கும் விதமாக ஆசிரியை, நானொன்றும் இந்த வேலைக்காக என் வாழ்நாள் முழுவதையும் வனவாசத்தில் கழிக்கிறேன் என்று சபிக்கப்படவில்லை. என் கணவரும் இறந்து விட்ட நிலையில் டேராடூனில் வசிக்கும் என் பிள்ளைகளை விட்டு விட்டு மீண்டும் அந்த வனப்பகுதி பள்ளிக்கு என்னால் பணிக்குச் செல்ல முடியாது. பல்லாண்டுகளாக நான் பணியிட மாறுதலுக்காக அலைந்து கொண்டிருக்கிறேன், நீங்கள் இதுவரை எதுவும் செய்யவில்லை. எனக்கூறினார். இதைக் கண்டு வெகுண்ட முதல்வர் உடனடியாக காவல்துறை அதிகாரிகளை நோக்கி, முக்கியமான நிகழ்வான முதல்வரின் மக்கள் சந்திப்பில் தடங்கல் ஏற்படுத்திய குற்றத்துக்காக உடனடியாக  இவரைக் கைது செய்து சிறையிலடையுங்கள், இவரது வேலையை சஸ்பெண்ட் செய்யுங்கள் என்று கோபத்துடன் உத்தரவிட்டார். தனது நியாயமான கோரிக்கைக்கு முதல்வர் செவி சாய்க்காததோடு, மேலும் தன்னைக் குற்றவாளியாக்கி சிறையிலடைக்கவும் உத்தரவிட்டதில் ஆத்திரமுற்ற ஆசிரியை உத்தர பஹுகுனா, அங்கிருந்து வெளியேறுகையில், முதல்வரை நோக்கி, ‘திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள்’ என்று கூறிக் கொண்டே வெளியேறினார்.

  ஆசிரியை விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலர் இருவரும், பள்ளிகளில் பணியிட மாறுதல் என்பது உடனே அவரவர் விருப்பப்படி நடந்து விடக்கூடியதில்லை. அதற்கு பணிமூப்பு அடிப்படை இருக்கிறது. பொதுமக்கள் சந்திப்பில் விவாதிக்கக் கூடிய விஷயமல்ல அது. ஆசிரியை உத்தர பஹுகுனாவுக்கு முன்னால் 58 ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்காக காத்திருக்கிறார்கள். இவரது எண் 59. எல்லாம் இங்கே வரிசைப்படி தான் நடக்கும். என்று பதிலளித்திருந்தார்.

  கைது செய்யப்பட்ட ஆசிரியை தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஆசிரியையும் முதல்வர் ராவத்தின் மனைவுயுமான சுனிதா ராவத்தின் பணியிட மாறுதல்கள் குறித்து தகவல்களைப் பெற விண்ணப்பிக்கவே முதல்வர் வீட்டுக் குட்டு உடைந்திருக்கிறது. அப்பாவி ஆசிரியை விஷயத்தில் ரூல்ஸ் பேசிய முதல்வர் ட்ரிவேந்த்ர ராவத், தனது மனைவிக்கு மட்டும் அவர் பணியில் சேர்ந்த நான்கே ஆண்டுகளில் பணியிட மாறுதல் பெற்றிருக்கிறார். 1992 ஆம் ஆண்டில் பாடி கட்வல் எனும் கிராமத்தில் ஒரு தொடக்கப்பள்ளியில் தனது ஆசிரியை பணியைத் துவக்கிய சுனிதா, அடுத்து நான்கே ஆண்டுகளில் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் சுனிதா ராவத்துக்கு பதவி உயர்வு கிடைத்த போதும் அதை மறுத்து விட்டு தொடர்ந்து 24 ஆண்டுகளாக அவர் டேராடூனில் ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் தகவல் தெரிய வந்திருக்கிறது.

  மக்களாட்சியில் தன் மனைவிக்கு மட்டும் ஒரு முதல்வரால் வெகு எளிதாகப் பணியிட மாறுதல் பெற முடிவதோடு சாமானியர்களின் குடும்பச் சூழ்நிலையை உணராமல் பணியிட மாறுதலுக்காக விண்ணப்பித்த ஆசிரியையின் நோக்கத்தை குற்றம் சாட்டி அவரைச் சிறையிலும் தள்ள முடிகிறது. இது தான் மக்களாட்சியா? 

  அதிலும் கடந்த பல ஆண்டுகளாகத் தனது கணவரை இழந்த சூழலிலும் நேர்மையாகப் பணிபுரிந்து நியாயமாக நடந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியை இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். நியாயம் பேசினால் அதன் பலன் இது தானா?

  ஆசிரியை உத்தர பஹுகுனா, தனது குடும்பச் சூழல் காரணமாகத் தன்னால் வேலையையும் விட முடியாது, தந்தையற்ற குடும்பத்தில் குழந்தைகளைத் தனியே அனாதைகளாக அல்லாட விடவும் முடியாது. இப்படியான சூழலில் தன்னைப் பணியிட மாறுதல் செய்யுங்கள் என்று கேட்டு விண்ணப்பித்ததை எவ்விதத்தில் குறை கூற முடியும்? ஒருவேளை முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலரின் விளக்கத்தை ஒட்டி இங்கு அனைத்துமே ரூல்ஸ்படி பணியிட மாறுதலுக்கு முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை எனும்  அடிப்படையில் தான் நிகழ்கிறது எனில் முதல்வரின் மனைவிக்கு மட்டும் பணியில் சேர்ந்த நான்கே ஆண்டுகளில் பணியிட மாறுதல் பெற முடிந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது? என்றெல்லாம் உத்தரகாண்ட் பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai