புளிச்சகீரை... உடல் எடையைக் குறைப்பதோடு சம்போகத்திற்கும் நல்லதென்கிறது சித்த மருத்துவம்!

இன்றும் ஆந்திர உணவகங்களில் ‘கிங் ஆஃப் ஆல் ஆந்திரா ஃபுட்ஸ்’ என்று இதைச் சிறப்பித்துக் கூறுவதை கேள்விப்பட்டிருக்கக் கூடும். அந்த அளவுக்கு ஆந்திராவில் இது பாப்புலர்.
புளிச்சகீரை... உடல் எடையைக் குறைப்பதோடு சம்போகத்திற்கும் நல்லதென்கிறது சித்த மருத்துவம்!

கோங்குரா என்ற புளிச்சகீரை நமக்கு சரளமாகக் கிடைக்கக் கூடிய கீரை வகைகளில் ஒன்று. இதை கீரைக் கடைசல், ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா சட்னி அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். பொதுவாக இதைக் கடைந்தோ அல்லது சட்னியாக்கும் போதோ புளி சேர்க்கத் தேவையில்லை. இந்தக் கீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. அதனால் தான் நம் முன்னோர்கள் இந்தக் கீரையை வாரம் இருமுறையாவது சமைத்து பிராயத்தில் உடல் வலிமை குன்றிய குழந்தைகளுக்கு சாப்பிடத் தருவதை வழக்கமாக வைத்திருந்தனர். மேலும் இந்தக்கீரை உடல் சூட்டைக் குறைத்து உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. அது மட்டுமல்லாமல் தோல் தொடர்பான ஒவ்வாமை நோய்களுக்கும் சிறந்த நிவாரணமாக புளிச்ச கீரை விளங்குகிறது. மேற்கண்ட காரணங்கள் மட்டுமல்லாது உடல் வெப்பத்தை சமநிலையிலும் ஒரே சீராகவும் வைத்துக் கொள்ள உதவும் காரணத்தால் இந்தக் கீரையை தொடர்ந்து  குறிப்பிட்ட இடைவெளிகளில் சமைத்து உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால் புதிதாகத் திருமணமான தம்பதிகளின் சம்போகம் ஆரோக்யமாக இருக்கும் என சித்த மருத்துவம் கூறுகிறது.

இதன் காரணமாகத் தான் ஆந்திரர்கள் பல காலமாக தங்களது தினப்படி உணவில் இக்கீரையைச் சேர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் இதை ‘ஆந்திர மாதா’ என்றே பெயரிட்டுச் சிறப்பித்தார்கள். இன்றும் ஆந்திர உணவகங்களில் ‘கிங் ஆஃப் ஆல் ஆந்திரா ஃபுட்ஸ்’ என்று இதைச் சிறப்பித்துக் கூறுவதை கேள்விப்பட்டிருக்கக் கூடும். அந்த அளவுக்கு ஆந்திராவில் இது பாப்புலர்.

இந்த கோங்குரா கீரை ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கே பொதுவாக இந்தக்கீரையைக் கொண்டு கோங்குரா பச்சடி, கோங்குரா ஊறுகாய், சட்னி, கோங்குரா மட்டன், கோங்குரா சிக்கன் என்று விதம் விதமாகச் செய்து செய்து சாப்பிடுவார்கள். எனவே ஆந்திராவின் எந்தப் பகுதியில் நீங்கள் பயணித்தாலும் கண்டிப்பாக அனைத்து உணவகங்களிலும் நீங்கள் கோங்குரா தரிசனம் பெறலாம். அங்கே மக்கள் இதை சமைத்து உண்ணாத நாட்களே இல்லை. இந்தியாவில் கோங்குரா பச்சைத்தண்டுடன் கூடிய இலைக்கீரையாகவும், சிவப்புத் தண்டுடன் கூடிய இலைக்கீரையாகவும் இரண்டு வெரைட்டிகளில் கிடைக்கிறது. இதில் சிவப்புத்தண்டுடன் கூடிய கோங்குராவில் புளிப்புச் சுவை அதிகமாக இருக்கும். இளம் தளிராக இருக்கும் போது ஓரிலையாகக் காட்சி தரும் கோங்குரா நாள்பட, நாள்பட ஓரிலையிலிருந்து நான்கைந்து இலைகள் கொண்டது போல பிரிவடைகிறது. இப்படிப் பிரிந்த இலைகள் முற்றியவை எனக் கண்டு கொள்ளலாம். ஆந்திரா, தெலுங்கானா மட்டுமன்றி கர்நாடகா, திரிபுரா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கோங்குரா வெவ்வேறு பெயர்களில் தினப்படிச் சமையலில் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

புளிச்ச கீரை அல்லது கோங்குரா தனது மரபியல் கூறுகளின் அடிப்படையில் குடம்புளி வகையைச் சேர்ந்தது என்பதால் இந்தக்கீரை உடல் எடையைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறதாம். கோங்குராவின் ஒரே ஒரு மைனஸ் அது பித்த உடம்புக்காரர்களுக்கு உகந்ததல்ல என்பது மட்டுமே!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com