குருவாய் வருவாய் குகனே!

நம்ம வாழ்க்கை முறையை (Life style) வைத்துதான் நம் பழக்கவழக்கங்களும் அமைந்திருக்கின்றன. இதை உளவியல் ரீதியாக அறிந்து கொள்ள வேண்டும்
குருவாய் வருவாய் குகனே!

உன்னோடு போட்டிபோடு! - 38

"கடைசியில் அந்த இளவரசி ஒரு புதிய போட்டியை அறிவிக்கிறாள். அதில் விக்ரமாதித்தன் வெற்றி பெற்றானா?''  எனக் கேட்டு நான் நிறுத்தினேன்.

"அடக்கடவுளே டிவிகள்தான்  "பிரேக்கிங் நியூஸ்'  போட்டு நம்ம BP -யை ஏத்துறான்னு இங்க வந்தா இங்கயும் பிரேக்கா?'' என்று ஓர்  இளைஞர் ஆயாசத்தோடு கேட்டார்.

"நீ கவலைப்படாத மச்சான், அவர் சொல்லாட்டியும் எனக்குத் தெரியும். அவன் ஜெயிச்சிருப்பான். ஏன்னா நம்ம நாட்டில ஹீரோ தோத்ததா வரலாறும் இல்லை, பூகோளமும் இல்லை. இது போன மாசம் செத்துப் போன எங்க  "அப்பத்தா'  மேல சத்தியம்... சத்தியம்...சத்தியம்...'' என்று சொல்லிக் கடல் மணலை எடுத்து  நெற்றியில் பூசி, தெலுங்குப்பட ச.வு.சு.பாலகிருஷ்ணா போல குமுறினான்.

நான் அந்த இளைஞர்களைச் சமாதானப்படுத்தியபடி, "நீங்கள் சொல்ற மாதிரியே ஹீரோ விக்கிரமாதித்தன்தான் ஜெயித்தான். ஆனால் எப்படிச் ஜெயித்தான் தெரியுமா?'' என்று கேட்டேன்.

"ஐயா, முதலில் அந்த இளவரசி என்ன போட்டி வச்சான்னே நீங்க சொல்லலையே?''... என்று மீசைக்காரர் படபடக்க, "இந்தப் பசங்க தான் ஒண்ணையும் சொல்லவிடாமக் "குறுக்குச்சால்' ஓட்டிக்கிட்டே இருக்கானுகளே'' என்று ஒரு பெரியவர் இழுத்தார். 

"சரியாச் சொன்னீங்க, முதல்ல இளவரசி வைத்த போட்டியைச் சொல்கிறேன். "இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் மன்னனே உனது வீர, தீர சாகசங்களால் நான் வைத்த அனைத்துப் போட்டிகளிலும் நீ வெற்றி பெற்றுள்ளாய். இப்போது அறிவுக்கான போட்டி. நான் உன் உருவத்தை, முகத்தை அறிவேன். ஆனால் நீ இதுவரை என்னைப் பார்த்ததில்லை. இப்போது நான் என் தோழிமார்கள் ஆயிரம் பேர் புடைசூழ வருவேன். என்னை உன் மதிநுட்பத்தால் கண்டுபிடித்துவிட்டால் நான் உனக்கு மாலையிடுவேன். இது உறுதி' என்றாள். அதற்கு விக்கிரமாதித்தனும் சம்மதித்தான்.

அன்று இரவு அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் ஒரே மாதிரியான உடையணிந்த ஆயிரம் தோழிமாரோடு கைகளில் விளக்கினை ஏந்தியபடி அந்த இளவரசி புறப்பட்டு வந்தாளாம். உண்மையில் அறிவாற்றல் மிக்க விக்கிரமாதித்தனே சற்றே திகைத்துப் போனானாம்'', என்று சொல்லி நான் நிறுத்தினேன்.

"ஒரே மாதிரி உடை, ஒரே மாதிரி நடை, அதே மாதிரி ஜடை... அதிலும் கையில் விளக்கேந்திய ஆயிரம் காரிகைகள்... ஆஹா பாகுபலி 3-ஆம் பாகம் பார்ப்பது போல் இருக்கிறது. விக்கிரமாதித்தன் அம்பேல்!'' என்று மகிழ்ந்து குதித்த கோமாளி மறக்காமல் அந்தக் கடல் மண்ணில் கையைத் தரையில் ஊன்றாமல் ஒரு "பல்டி' யும் அடித்துச் சிரித்தான். நான் தொடர்ந்தேன்... உடனே விக்ரமாதித்தன் தன்னோடு எப்போதும் இருக்கும் வேதாளத்தை அழைத்தான்'' என்று நான் சொன்னவுடன்,  "கிரான்ட்மா, ஹு  இஸ் வேதாளம்?'' என்று பேத்தி தன் ஹெட்போன் பாட்டியிடம் கேட்டது. 

"த  கிங் அண்ட் த பேன்ட்டம் (The King and the phantom) ஹி இஸ் எ குட் ஸ்பிரிட், லைக் எ சூப்பர் மேன்'' என்று பாட்டியும் பேத்தி காதில் கிசுகிசுத்தது. 

விக்ரமாதித்தன் அழைத்தவுடன் வந்த வேதாளம், "மன்னா என்ன உதவி வேண்டும்?'' எனக் கேட்டது. இங்கு வரும் ஆயிரம் பேரில் அந்த இளவரசியை எப்படிக் கண்டுபிடிப்பது? என விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் கேட்டான். சற்று நேரம் அந்தப் பெண்கள் நடந்துவரும் அழகையும், அவர்கள் கையிலிருக்கும் விளக்கையும் பார்த்த வேதாளம் ஒரு யோசனை சொன்னது.

"மன்னா கவலைப்பட வேண்டாம். நான் பெரும் காற்றாக மாறி அவர்கள் அத்தனை பேரின் கையிலுள்ள விளக்கினையும் அணைத்துவிடுகிறேன். அவர்கள் குழம்பிப்போய்  விளக்கேற்ற முயற்சிப்பார்கள். அப்போது நீ அந்த இளவரசியைக் கண்டுபிடித்துவிடலாம்'' எனச் சொல்லிவிட்டுக் குபீரெனச் சுழல்காற்றாக மாறி அந்த விளக்குகளை எல்லாம் ஊதி அணைத்தது. எங்கும் இருள் சூழ, இளவரசியோடு வந்த பெண்கள் பதற்றம் அடைந்து அவரவர் விளக்கினை வேகமாக ஏற்றத் தொடங்கினார்கள். அப்படி அவர்கள் விளக்கேற்றும் வரை பொறுத்திருந்த விக்கிரமாதித்தன் தான் இருந்த மாடத்திலிருந்து விரைந்து சென்று, ஏழாவது வரிசையில் நின்ற எட்டாவது பெண்ணின் கையைப் பிடித்து, "நீங்கள் தான் இளவரசி? நான் வெற்றி பெற்று விட்டேனா?'' எனக் கேட்டவுடன் அந்த இளவரசியானவள்  விக்கித்துத், திகைத்துப் போய் நாணத்துடன் தலை குனிந்து, தன் கால் பெருவிரலால் தரையில் கோலமிட்டபடி, "மன்னா நீங்கள் மகா அறிவாளி, இந்தப் போட்டியில் மட்டுமில்லை... என்னையும் வென்று விட்டீர்கள்'' எனச் சொல்ல, விக்ரமாதித்தன் அவள் கழுத்தில் மாலையிட்டு அவளை மணந்தானாம்'' எனச் சொல்லிக் கதையை முடித்தேன் நான்.

அதுவரை கதையை அமைதியாகக் கேட்ட அத்தனை பேரும் ஆளாளுக்குப் பேசத் தொடங்கினார்கள். "எல்லாம் சரிதான், விக்கிரமாதித்தன் எப்படி அந்த இளவரசியைக் கண்டுபிடித்தான்? அதை நீங்கள் சொல்லவேயில்லையே?'' என்று ஏமாற்றத்தோடு கேட்டார் நம் மீசைக்காரர்.

"அதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும், கதை சொல்லும் போது கேட்பவர்களை யோசிக்கச் செய்ய ஒரு முடிச்சையும் போட்டு வைப்பார்கள் அக்கால ஆசிரியர்கள். அதை நாம்தான் அவிழ்க்க வேண்டும்'' என்றார் தமிழையா சற்றே மகிழ்ச்சியோடு. உடனே தமிழ்மணி, "ஐயா, அவர்கள் விளக்கோடு வந்தார்கள். வேதாளம் விளக்கை அணைத்தது. இருள் சூழ்ந்தது. பெண்கள் விளக்கை ஏற்றினார்கள். விக்கிரமாதித்தன் அந்த இளவரசியை கண்டுபிடித்தான் எப்படி?'' என்று  "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'  விஜய் சேதுபதி போல யோசனையோடு கேட்டார்.

"சரியாகச் சொன்னீர்கள் தமிழ்மணி, நீங்கள் விடைக்கு மிக அருகில் வந்து விட்டீர்கள், அத்தனை பெண்களும் அணைந்த விளக்கை ஏற்றும் போதுதான் விக்கிரமாதித்தன்  அந்த இளவரசியைக் கண்டுபிடிக்கிறான். கைப்பற்றுகிறான், மாலை சூடுகிறாள் அவள்'' என்றேன் நான் புன்னகையோடு.

"விளக்கை ஏற்றும் போது எப்படிக் கண்டுபிடித்தான்?.. எப்படி?... எப்படி?' என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது  ஹெட்போன் பாட்டி, "ஐயா.. ஐ நோ...'' என்று தொடங்க,

"தாயே, தெய்வமே... தமிழிலேயே சொல்லி எங்களுக்கும் புரிய வையுங்கள், தெரிஞ்ச செய்தியைக் கூட இங்கிலீஷ் மீடியத்தில் படித்த நம் பிள்ளைகள் மனப்பாடம் பண்ணி, புரியாமல், மறந்து போனார்கள். தமிழ்த்தாயே தமிழில் செப்புக... செப்புக செந்தமிழ்'' என்று கோமாளி கேட்க அனைவரும் கை தட்டினார்கள். 

ஹெட்போன் பாட்டியும் சிரித்தபடி, "சரி சொல்றேன், கேளுங்க, அக்காலப் பெண்கள் அணைந்த விளக்கையோ, அல்லது புதிய விளக்கையோ ஏற்றும்போது, விளக்கில் இருக்கும் திரியின் நுனியைச் சற்றே தங்கள் விரல்களால் தூண்டிவிட்டுப் பின் விளக்கேற்றுவார்கள். அப்போது அவர்கள் விரல்களில் விளக்கின் எண்ணெய் கறை போல ஒட்டிக்கொள்ளும், இயல்பாக பெண்கள் அதை தலையில் தடவிக் கொள்வார்கள் அல்லது தங்களது சாதாரண உடையில் துடைத்துக் கொள்வார்கள். அந்த இளவரசி அரசகுமாரி ஆதலால் விளக்கேற்றிய பின் அந்த எண்ணெய்க் கறையை என்ன செய்வது? என்று திகைத்தபோதுதான் நம் விக்கிரமாதித்தன் அவள் இளவரசி என்பதை அறிந்திருக்க வேண்டும்'' என்று சொல்ல, நான் பலமாகக் கைதட்டி "அருமை...அருமை'' என்று பாராட்டினேன்''.  எல்லோரும் பாட்டிக்கு வாழ்த்துச் சொல்ல, பேத்தி எழுந்து பாட்டியைக் கட்டிக் கொண்டது. 

"அப்பக் கறை நல்லது... சரிதானே'' என்று கோமாளி சோப்பு விளம்பரப் பெண்மணிப் போலக் கேட்டான். 

"ஆஹா நம்ம வாழ்க்கை முறையை (Life style) வைத்துதான் நம் பழக்கவழக்கங்களும் அமைந்திருக்கின்றன. இதை உளவியல் ரீதியாக அறிந்து கொள்ள வேண்டும் என்று நம் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் கதை மூலம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்'' என்று தமிழ்மணி மகிழ்ச்சியோடு சொன்னார்.

"அதனால் தான் ஆசிரியரிடம் படிப்பதைப் போலவே ஆசிரியரின் பழக்கவழக்கங்களையும் நாம் அவரைப் பார்த்துத்  தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் கல்வியாளராய், நன்னடத்தை உள்ளவராய், கடவுளின் வடிவாய்த் திகழ வேண்டும். இதை அருணகிரிநாதர் தம்  "கந்தர் அனுபூதி'யில்  முருகா நீ எனக்கு ஆசிரியனாக வந்துதான் என்னைக்  கடைத்தேற்றம் செய்ய வேண்டும் என்கிறார்'' என்று சொல்லி நான் தமிழையாவைப் பார்க்க அவரும் கணீரென்ற குரலில்,
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய்  உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே'' 
எனக் கணீரெனப் பாடினார்.
அப்போது நாங்கள் இருந்த தீவுக்கு அருகில் பாம்பன் பாலத்தில் "கூட்ஸ் வண்டி' ஒன்று "கடகட' என்று சத்தமிட்டபடி  விரைந்து செல்ல... அப்போது அந்தச் சத்தத்தில் சில இரவுப் பறவைகள் சிறகை விரித்துப் படபடத்தன...
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com