கொம்பு முளைத்த பெண்ணல்ல... கொண்டாடப் பட வேண்டிய தேவதை!

ஹைதராபாத்தில் இயங்கி வந்த பழமையான சிவப்பு விளக்குப் பகுதி ஒன்று இதே ஆண்டு தடை செய்யப்பட்டது. அங்கிருந்த பாலியல் தொழிலாளிகளும் அவர்களது வாரிசுகளும் செல்லுமிடம் அறியாது திகைத்திருக்கும் வேலையில்...
கொம்பு முளைத்த பெண்ணல்ல... கொண்டாடப் பட வேண்டிய தேவதை!

நேற்று இணையத்தில் கண்ணில் பட்டது ஒரு கட்டுரை. அந்தக் கட்டுரை ‘ஷாருக்கானைவிட கமலஹாசனை’ விட நாம் கொண்டாட வேண்டிய, மரியாதை செய்ய வேண்டிய நபர்கள் கணிசமான அளவில் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று சிலரைப் பட்டியலிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் இருந்த சுமார் பத்துப் பேரில் சிலரை நான் அறிந்திருந்தேன். ஆனால் கடைசியாக அடையாளப் படுத்தப்பட்டிருந்த பெண்மணியை இதுவரை அறிந்திருக்கவில்லை. ஆனால் முன்பே அறிந்திருந்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது. பின்பு அவரைப் பற்றிய விவரங்களை இணையத்தில் தேடத் துவங்கினேன். ஏசியநெட் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியொன்றில் அவர் மீதான வியப்பு பல மடங்காகியது. இவரல்லவா நமது அச்சு ஊடகங்களும், இணைய ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் உயர்த்திப் பிடித்து பெருமைப்படுத்தத் தகுந்த செயல்களைச் செய்து கொண்டிருப்பவர். இவரைப் புறக்கணித்து விட்டால் நஷ்டம் அவருக்கல்ல! நமக்குத் தான் என்று தோன்றவே மேலும் அவர் தொடர்பான விசயங்களைத் தேடத் துவங்கினேன். நான் அறிந்தது கொஞ்சமாக இருக்கலாம். அறிந்து கொண்ட தகவல்களை விட அவரை பலருக்கும் அறிமுகப்படுத்தும் எண்ணமே வலுவாக இருந்ததால் இங்கு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

எந்தப் பெண்ணும் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் சந்திக்க விரும்பும் பெண்!

அந்தப் பெண்ணின் பெயர் சுனிதா கிருஷ்ணன்! இவரைப் பற்றியும் இவரது சமூகப் போராட்டங்களையும் பற்றி அறிந்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் இவரைச் சந்திக்க விரும்புவாள். பெங்களூரில் பாலக்காட்டு மலையாளி அப்பாவுக்கும், அம்மாவுக்கும் மகளாகப் பிறந்த சுனிதா, சிறுவயது முதல், இயல்பிலேயே சமூக சேவையில் அக்கறை கொண்ட பெண்ணாகவே வளர்ந்தார். இல்லையெனில் 8 வயதில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நடனம் கற்பிக்கும் எண்ணம் வருமா? அப்படியான குழந்தைகளுக்காக படு சுட்டிப் பெண்ணான சுனிதா நடனம் கற்றுத் தரத் தொடங்கினார். 12 வயதில் சேரிப் பகுதியில் வசிக்கும் நிராதரவான குழந்தைகளுக்கும், சிறுமிகளுக்கும் கல்வி கற்பிக்க ஒரு பள்ளியைத் தொடங்கினார். 15 வயதில் தலித் சமூகத்தினருக்காக நவ கல்விப் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது எட்டு மனித மிருகங்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார். சுனிதாவின் போராட்ட வாழ்வில் வலி மிகுந்த காலம் அது! கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவர் இந்த சமூகத்தால் தனிமைப் படுத்தப் பட்டார்.  காணும் தோறும் ’ரேப் விக்டிம்’என்று அடையாளப் படுத்தப் பட்டார். தனிமையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மிகுந்த மன அழுத்ததிற்கு ஆளாகும் போதெல்லாம் சுனிதா தன்னிடமே கேட்டுக் கொண்ட விடை தெரியாத கேள்வி ஒன்று... தனது எந்தச் செயல் அவர்களை இத்தகைய கொடூரத்தை தன்னில் நிகழ்த்தத் தூண்டியது?! என்பது தான். பதில் கிடைத்ததோ இல்லையோ அந்தக் காலகட்டம் தான் சுனிதாவை தன்னந்தனியே ரெளத்திரம் பழகச் செய்தது. தனக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது என்பதை விட அதற்குப் பின் இந்தச் சமூகம் தன்னை ஏன் இப்படி தனிமைப் படுத்துகிறது?! என்ற இயலாமை கலந்த கோபம் சுனிதாவையும், அவரது வாழ்வையும் இப்படியான கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் திசைக்குத் தள்ளியது. நிஜத்தில் சுனிதா 4 அடி 6 இஞ்ச் உயரம் கொண்ட சாதாரண இந்தியப் பெண் தான். ஆனால் தனக்கு நிகழ்ந்த வன்முறைக்குப் பின் அவர் எடுத்த விஸ்வரூபம் சாதாரணமாக எல்லா இந்தியப் பெண்களுக்கும் சாத்தியப் படாத காரியம்.

கொம்பு முளைத்த தேவதை!

பாலியல் வன்முறைக்கு ஆளாகி ஓரிரண்டு வருடங்களுக்குள் சுனிதா தனது வாழ்வு இனி எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார். ஆனால் அவரது முடிவுக்கு பெற்றோரின் ஆசியோ, ஆதரவோ கிடைக்கவில்லை. அவர்கள் இந்தச் சமூகத்துக்குப் பயந்தவர்களாயிருந்தனர். பெற்றோரின் ஆறுதலெனும் அகண்ட சிறகுக் கதகதப்பில் பறவைக் குஞ்சாய் அடைக்கலம் ஆகியிருந்தால் இன்றைக்கு நமக்கு ஒரு ‘கொம்பு முளைத்த தேவதை’ கிடைத்திருக்கவே மாட்டாரே! 18 வயதில் சுனிதா தன் பெற்றோரை விட்டுப் பிரிந்து தனியாகப் போராடத் துவங்கினார். யாருக்காக? பாலியல் வணிகத்துக்காக வலிந்து கடத்திச் செல்லப் பட்டு விற்கப்படும் பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் மறுவாழ்வுக்காக, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு குறிப்பிட்ட சில வருடங்களின் பின் பால்வினை நோய்களால் பீடிக்கப்பட்டு மிச்ச வாழ்வை நகர்த்த முடியாமல் பெரும் அவலத்தில் சிக்கிக் கொண்டு உழலும் பெண்களின் அடுத்த தலைமுறையினரும் அதே விதமான சுழலில் சிக்கி நாசமடையக் கூடாது என்பதற்காக, அவர்களை எல்லாம் ஒன்று திரட்டும் வேலையில் சுனிதா ஈடுபட ஆரம்பித்தார்.

எந்த வெற்றிக்கும் தொடக்கமென்பது தோல்வியாகவே இருந்தது!

இந்தச் சமயத்தில் தான் நாம் இந்தச் சமூகத்தை உச்சி முகர்ந்து பாராட்டியாக வேண்டும்! சமூகப் போரளியான சுனிதாவுக்கு ஒருவரும் குடியிருக்க வீடோ, அலுவலகம் அமைத்து செயல்பட இடமோ எதுவுமே தர முன்வரவில்லை. எப்படி முன்வருவார்கள்? இந்தச் சமூகம் தான் எப்போதும்  இப்படியானவர்களை கலகக் காரர்கள், ஃப்ராடுகள் என்று முத்திரை குத்தி சந்தேக லிஸ்டில் வைத்து விடுமே! பாதிக்கப்பட்டவர்களை பலிகடாவாக்குவதில் பி.ஹெச்.டி வாங்கிய சமூகமாயிற்றே இது!  சமூகத்தை விட்டுத் தள்ளுங்கள்... சுனிதா யாருக்காக களத்தில் இறங்கி போராட விரும்பினாரோ அவர்களே முதலில் இவரை நம்பவில்லை. ஹைதராபாத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருக்கும் பகுதி, பாலியல் தொழில் நடக்கும் இடங்களுக்குச் சென்று சுனிதா ‘உங்களுக்கு நான் உதவ வந்திருக்கிறேன்... இந்த அவல வாழ்வில் இருந்து நீங்கள் விடுபட, யாருடைய துன்புறுத்தலும், வற்புறுத்தலும் இன்றி கெளரவமாக உங்களது வாழ்வை உங்கள் இஷ்டப்படி நீங்கள் வாழ நான் ஏதாவது உதவ முடியுமா? சொல்லுங்கள்... நான் உதவுகிறேன். என்று கேட்கும் ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்களிடமிருந்து சுனிதாவுக்கு கிடைத்த பதில்கள்... அவமானங்களும், ஏச்சுப் பேச்சுகளும் தான், ஏன் சில பெண்கள் சுனிதாவின் முகத்தில் காறி உமிழக் கூட செய்திருக்கிறார்கள். அத்தனையையும் தாங்கிக் கொண்டு தான் சுனிதா தனது ‘குழந்தைக் கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான ‘சிலுவைப் போராட்டத்தை’ அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார். அந்தச் சம்பவங்களை சுனிதாவின் வார்த்தைகளாலேயே கேட்டால் தான் இன்னும் வலுவாக இருக்கும். அதற்கான யூ டியூப் விடியோ இணைப்பு கீழே...

பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவே சுனிதா தொடங்கிய ‘பிரஜ்வாலா’ அமைப்பு!

பாலியல் கொடுமைகளில் இருந்து தன்னால் மீட்கப்பட்ட குழந்தைகளையும், பெண்களையும் தங்க வைக்க, அவர்களது வாழ்வைப் புனரமைக்க சுனிதா 1996 ஆம் வருடம் தனது நண்பர் ‘ஜோஸப் வெட்டிக்காட்டில்’ என்பவருடன் இணைந்து ஹைதராபாத்தில் ‘பிரஜ்வாலா’ என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். ஹைதராபாத்தில் இயங்கி வந்த பழமையான சிவப்பு விளக்குப் பகுதி ஒன்று இதே ஆண்டு தடை செய்யப்பட்டது. அங்கிருந்த பாலியல் தொழிலாளிகளும் அவர்களது வாரிசுகளும் செல்லுமிடம் அறியாது திகைத்திருக்கும் வேலையில், சுனிதாவின் ‘பிரஜ்வாலா’ அமைப்பு அவர்களை அரவணைத்துக் கொண்டது. இந்த அமைப்பின் மூலம் இப்போது வரை பல்லாயிரக் கணக்கான பெண்களும், சிறுமிகளும், குழந்தைகளும் காப்பாற்றி மீட்டு வரப்பட்டிருக்கிறார்கள். மீட்புப் பணிகளில் ஈடுபடும் போது சுனிதாவுக்கு கணக்கற்ற கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தனவாம். ஒரு முறை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதை வீடியோ ஆதாரத்துடன் சுனிதா ஆவணப் படுத்தியதில் கடும் கோபம் கொண்ட குற்றவாளிகள் சுனிதாவின் கார் மீது லாரி ஏற்றி அவரைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். இது குறித்து ஆந்திரப் போலிஸார் வழக்குப் பதிவு செய்த செய்தி அப்போது அச்சு ஊடகங்களில் வெளியாகி இருந்தது. இந்த மிரட்டல்களுக்கெல்லாம் சுனிதா அஞ்சவில்லை. அவரது நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது.

பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களை இயல்பு வாழ்வுக்குத் திருப்புவது சவாலான காரியம்!

15 வயதில் 8 மனித மிருகங்களின் வன் செயலால், தான் தனிமைப் பட்டுத் தவித்த அந்த இரண்டு வருடங்களை சுனிதா இப்போதும் மறக்கவில்லை. இன்று சர்வதேச அளவில் பல மில்லியன் டாலர்கள் புழங்கும் ஒரு தொழிலாக பரிணமித்திருக்கும் ‘பாலியல் அடிமைத் தொழிலை’ இல்லாமலாக்க வேண்டும் எனும் தவிப்பின் வெளிப்பாடே சுனிதாவின் ‘பிரஜ்வாலா’ அமைப்பின் செயல்பாடுகள். பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக சர்வ தேச அளவில் நடக்கும் குழந்தைக்கடத்தல் பேரங்கள் சாமானிய மக்களுக்கு அச்சமூட்டக் கூடியவை. ஆனால் தெரிந்து கொள்ளத் தகாதவை அல்ல! எங்கோ... யாருக்கோ... நடக்கும் குற்றங்கள் தானே! நாமென்ன அன்னை தெரசாவா? இல்லை ஆண்டவர் யேசுவா? அதுவுமில்லையெனில் ஆழ் கடலில் பள்ளி கொண்ட மகா விஷ்ணுவா! யாரோ எப்படியோ போகட்டும் எனும் மனோபாவம் தான் பல குற்றச் செயல்களுக்கு ஆட்சேபணையற்ற ஊக்குவிப்பாக மாறிவிடுகிறது. தயவு செய்து இது போன்ற விசயங்களையாவது தட்டிக் கேட்கும் மனோபாவம் நமக்கு வர வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் சுனிதா கிருஷ்ணன் போன்றோர்.

அந்த முகங்களில் புன்னகை காண எத்தனை இன்னல்களையும் தாங்குவேன்!

சுனிதா தனது நேர்காணல் ஒன்றில் ’தான் கூட்டம் நிறைந்த இடங்களுக்கு, குறிப்பாக பெரும்பாலும் ஆண்கள் நிறைந்த இடங்களுக்குச் செல்லும் போதோ, அல்லது எங்காவது யாருடைய நிழலாவது தன் மீது கவியும் போதோ ஆழ்மனதில் விவரமறியாத 15 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையின் தாக்கத்தை இப்போதும் மனதளவில் உணருவதாகக் சொல்கிறார். அதாவது நன்கு கல்வியறிவு பெற்ற பெற்றோரின் மகளாகப் பிறந்து மிகவும் துணிச்சலாக தனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு வரத் தெரிந்த புத்திசாலியான சமூகப் போராளி சுனிதாவுக்கே மனதளவில் இன்னமும் அந்த அதிர்வு மறையாதெனில் இந்த தொழிலுக்காகவே பழக்கப் படுத்தப்படும் சிறு பிஞ்சுக் குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் நிலையை யோசித்துப் பாருங்கள். இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களெல்லாம் மனிதர்களாயிருக்க முடியாது. பல முறை பாலியல் வன்முறையால் சிதைக்கப்பட்ட சிறுமிகளையும், பெண்களையும் மீட்டு இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வருவது என்பது மிகவும் சவாலான காரியம். மீட்கும் போராட்டத்தில் தானடைந்த துயரங்களும் இன்னல்களும், பாதிக்கப்பட்ட பெண்களின் பெருந்துயரங்களின் முன் மிக அற்பமானவை. அந்தப் பெண்கள் எனது பெண்கள், அந்தக் குழந்தைகள், எனது குழந்தைகள் அவர்களது முகத்தில் இயல்பாய் மலரும் ஒரு புன்னகைக்காக நான் எந்த இன்னல்களையும் தாங்குவேன் என்கிறார் சுனிதா.

பிரஜ்வாலாவின் இலக்குகள்:

இருபது வருடங்களுக்கும் மேலான தனது மிக நீண்ட இப்போராட்டத்தில் சுனிதா முன்வைக்கும் இலக்குகள் ஐந்து; அவை

  • முதலாவதாக பாலியல் தொழிலுக்காக நடத்தப் படும் குழந்தைகள், சிறுமிகள் மற்றும் இளம் பெண்களின்  கடத்தல் தடுப்பு,
  • மீட்பு,
  • மறுவாழ்வு,
  • பாதிக்கப்பட்டவர்களின் ஒருங்கிணைப்பு,
  • பின்னர் அவர்களுக்கான சட்ட உரிமைகளைப் பெற்றுத் தருதல்.

இந்த ஐந்து இலக்குகளையும் அடைந்து கொண்டே இருப்பது தான் சுனிதாவின் வாழ்வை இன்று அர்த்தமுள்ளதாக மாற்றி இருக்கிறது. 

சுனிதாவின் அத்யந்த நண்பரும் கணவருமான ராஜேஷ் டச்ரிவர்!

மலையாள தொலைக்காட்சி நேர்காணலில் தனது கணவர் குறித்து சுனிதா பகிர்ந்து கொண்ட தகவல் அனைத்துப் பெண்களுக்குமானது. சுனிதா தன் கணவரை தனது ‘சோல்மேட்’ எனக் குறிப்பிடுகிறார். இன்றைக்கு சுனிதாவின் ‘பிரஜ்வாலா’அமைப்பில் அவரது கணவரின் பங்கு மிக முக்கியமானது. சமூகப் புரட்சி செய்பவர்களை எல்லாம் மக்கள் ஊருக்குள் இடம் கொடுத்து போற்றிப் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்களா என்ன? ஹைதராபாத் நகரத்துக்கு வெளியே புறநகர் பகுதியில் சுனிதா பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு இடம் வாங்கினார். அந்த இடத்தில் ‘பிரஜ்வாலா’அமைப்புக்கான கட்டடங்களும், பள்ளிகளும், விளையாட்டு மைதானங்களும், கைத்தொழில் மையங்களும் உருவாகத் தொடங்கின. ‘காரியம் யாவிலும் நற்றுணையாய்’ உடனிருந்தவர் ராஜேஷ் என்கிறார் சுனிதா. இன்று எனது பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனில் அதற்கு எனது கணவரும் ஒரு காரணம் என்கிறார் சுனிதா. சுனிதா தம்பதியர் தங்களது வருமானம் முழுமையையும் இந்தப் பெண்களில் மறுவாழ்வுக்காகத் தான் செல்விடுகின்றனர். அடிப்படையில் திரைக்கதையாளரும், படத் தயாரிப்பாளருமான ராஜேஷ் பாலியல் தொழிலுக்காக கடத்தப் படும் பெண்களையும் அவர்களது மீட்பு நடவடிக்கைகளையும் மையமாக வைத்து தெலுங்கில் இயக்கிய ‘அம்மா நா பங்காரு தல்லி’ திரைப்படம் சர்வ தேச அளவில் பல வெற்றிகளைக் குவித்துள்ளது. இந்தியாவிலும் சிறந்த திரைப்படம், சிறந்த இசை, சிறந்த நடிகை என மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. பல திரைவிழாக்களில் திரையிடப்பட்டு வகுப்பு பேதமின்றி பல தரப்பு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத் தக்க விசயம். 

சுனிதாவையும், பிரஜ்வாலாவையும் தொடர்பு கொள்ள:

பிரஜ்வாலா, 20-4-34, 3 வது தளம், சார்மினார் பேருந்து நிலையம் அருகில், சார்மினார், ஹைதராபாத்.

பிரஜ்வாலாவின் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் சமூக ஆர்வலர்கள் இந்த தளத்தை அணுகலாம். 

http://www.prajwalaindia.com/home.html

அல்லது இந்த மின்னஞ்சல் முகவரியில் சுனிதாவை தொடர்பு கொள்ளலாம்.  sunitha_2002@yahoo.com

முடிவாக ஒரு விசயம்!

தனது சமூகப் போராட்டத்தில் சுனிதா முன் வைக்கும் குற்றச் சாட்டு ஒன்றே ஒன்று தான். பாலியல் தொழிலுக்காக கடத்தப் பட்ட பெண்களை எப்பாடு பட்டாவது மீட்பது எல்லாம் தனக்குப் பெரிய துன்பமாகத் தெரியவில்லை, ஆனால் மீட்டுக் கொண்டு வந்த பின் அந்தப் பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகள் மீதான இந்த சமூகத்தின் பார்வை ‘ரேப் விக்டிம்’ என அழுத்தமாகப் பதிந்து போவதால் அவர்களுக்கான மறுவாழ்வைக் கட்டமைப்பத்தில் மிகுந்த சவால்கள் நிலவுகின்றன.  அந்த பேதத்திலிருந்து அவர்களை மீட்பது தான் தன் முன் நிற்கும் மிகப் பெரிய சவால் எனக் கூறுகிறார். கடந்த 20 வருடங்களில் சுனிதாவுக்கு ‘ஞாயிறு விடுமுறை’ என்ற விசயமே வாழ்வில் இல்லை. சுனிதாவின் தொடர்ந்த சமூகப்போராட்டத்தை பாராட்டி 2016 ஆம் ஆண்டுக்கான ‘பத்மஸ்ரீ’ விருது கொடுத்து கெளரவித்திருக்கிறது நமது இந்திய அரசு. அதற்கு முன்பு 2010 லிருந்து 15 வரை சுனிதா பெற்ற விருதுகளுக்குப் பஞ்சமே இல்லை.

அமீர்கான் என்.டி.டி.வி யில் நடத்திய ‘சத்யமேவ ஜயதே’ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். மலையாள சேனல்கள் சிலவற்றிலும் சுனிதாவின் நேர்காணல்களைக் காண முடிந்தது. ஆனால் இதுவரை தமிழ் ஊடகங்களில் சுனிதா பங்கேற்றுப் பேசியதாகத் தெரியவில்லை.

நிச்சயமாக சிறு சச்சரவுகளுக்கும் கூட மனதுடைந்து போகும்  இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய நபர்களில் சுனிதாவும் ஒருவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

அறியா வயதில் தன்னைச் சிதைத்து விட்டதாய் நினைத்த மானிடப் பதர்களுக்கு சுனிதா தந்த சிறந்த பதிலாக  பாரதியின் ‘வீழ்வேனென்று நினைத்தாயோ’ எனும் பாடல் வரிகளைச் சொல்லி கட்டுரையை முடித்தால் பொருத்தமாகவே இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com