தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைவதற்கான முக்கியமான காரணங்கள்...

கணவன், மனைவியிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை குறைந்து, இருவரில் ஒருவர் மீது மற்றவருக்கு எதைக்குறித்தாவது சந்தேகம் வலுத்தால் அதனாலும் கூட தாம்பத்யத்தில் நாட்டம் குறைய வாய்ப்பிருக்கிறதாம்.
தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைவதற்கான முக்கியமான காரணங்கள்...

திருமணமான ஆணோ, பெண்ணோ அல்லது திருமணமே செய்து கொள்ளாமல் ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கை முறையில் இணைந்து வாழ்பவர்களோ யாராக இருந்தாலும் சரி அவர்களது வாழ்வில் தாம்பத்யம் எவ்விதத் தடைகளுமின்றி சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வரையில் அவர்களுக்குள் எந்தவிதமான மனவேறுபாடுகளும் இல்லை என்று அர்த்தம். இருவரில் ஒருவருக்கு தாம்பத்யத்தில் நாட்டம் இல்லையென்றாலும் நிச்சயம் அங்கே மனவேறுபாடுகளுக்கோ அல்லது கருத்து வேறுபாடுகளுக்கோ அல்லது குறைந்தபட்சம் உடல் நலக் கோளாறுகளுக்கோ பங்கிருக்கிறது என்று அர்த்தம். பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவிக்கிடையே லேசாகத் துவங்கும் சண்டை, சச்சரவுகள் துவந்த யுத்தங்களாக மாறி எப்போதுமே கண்ணீரும், கம்பலையுமாக இருப்பதற்கோ அல்லது உள்ளுக்குள் தீராப்பொருமல் நீங்காது இடம்பெற்று விடுவதற்கோ தாம்பத்யத்தில் உண்டான திருப்தியின்மையும், விருப்பமின்மையுமே முதல் காரணமாகி விடுகிறது. எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒருவருக்கொருவர் அன்பான தம்பதிகள் எனில் அவர்கள் தாமாகவே முன் வந்து தங்களுக்கிடையில் ஏற்பட்டு விட்ட மனப்பிளவுக்கு காரணத்தைத் தேடத் துவங்குவார்கள். அந்தக் காரணங்கள் என்னென்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை மனப்பக்குவத்தோடு ஏற்றுக்கொண்டு களைய முற்பட்டால் தம்பதிகளின் வாழ்வில் இனிமை மீளும்.

திருமணமான நாள் தொட்டு கருத்து வேறுபாடுகளுடனேயே வாழ்வைத் தொடங்கிய கணவன், மனைவிகளுக்கு மட்டுமல்ல கண்டநாள் முதலாய் கருத்தொருமித்து காதலில் திளைக்கும் தம்பதிகளுக்கும் கூட இப்படியாகலாம். இங்கே ஆணையும், பெண்ணையும் வஜ்ரம் போட்டு ஒட்ட அந்த ஆண்டவனால் கூட ஏலாது. சரி இனி காரணங்களைப் பட்டியலிடலாம்...

தாம்பத்யத்தில் விருப்பமின்மை அல்லது நாட்டமின்மைக்கான காரணங்கள்...

  • ஆணோ, பெண்ணோ திருமண நாளில் அன்றலர்ந்த தாமரை முகங்களாய் காட்சி தருவதை உண்மையென நம்பி விடக் கூடாது. அது அந்த ஸ்பெஷல் டேக்கு மட்டுமான தரிசனம். கல்யாண மேடையில் கண்ட ஆணும், பெண்ணும் தங்களது கொலு பொம்மை உருவத்தைக் களையாமல் வாழ்ந்து முடித்து விட முடியுமா என்ன? ஆனால் சில தம்பதிகளிடையே இதன் காரணமாகக் கூட சச்சரவுகள் ஆரம்பமாகலாம். கல்யாணத்தில் மேக் அப் போட்டு ஏமாற்றி விட்டார்கள். ஆனால் தினசரி சேர்ந்து வாழும் போது தான் தெரிகிறது... இவள் எனக்கு ஏற்ற மனைவியில்லை, இவன் எனக்கு ஏற்ற கணவனில்லை என்ற புலம்பல்கள் மிகச் சன்னமாகத் தொடங்கி பின்னாளில் வலுப்பெறும் போது தாம்பத்யமும் ஆட்டம் காணத் தொடங்கும். தோற்றப் பொலிவில் ஏற்பட்டு விடும் மாறுதலுக்காக பிள்ளைச் சண்டையிட்டு விவாகரத்துப் பெற்றுப் பிரியும் வழக்கமெல்லாம் இந்தியா போன்ற ஒரு பழம்பெருமை மிக்க நாட்டில் சாத்தியமில்லை என்பதால் தங்களுக்கிடையிலான வெறுப்பை தம்பதிகள் தங்களது தாம்பத்யப் புறக்கணிப்பின் மூலமாகத் தீர்த்துக் கொள்வது வழக்கம்.
  • கணவன், மனைவியிடையே இருவரில் ஒருவருக்கு தீராத நோய்க்குறிகள் ஏதாவது இருப்பினும் அதனாலும் தாம்பத்யத்தில் நாட்டமின்மையோ அல்லது வெறுப்போ ஏற்படலாம்.
  • உடல் பருமன் காரணமாகவும் தாம்பத்தியத்தில் விருப்பமின்மை ஏற்படலாம்... ஏனெனில் இணைகளில் ஒருவருக்கு உற்சாகமாக இயங்கும் மனநிலை இல்லையென்றால் கூட தாம்பத்யம் சோபிக்காது. மன எழுச்சிக்கு ஈடுகொடுத்து உற்சாகமாக தாம்பத்யத்தில் ஈடுபட முடியாத காரணத்தால் படிப்படியாகத் தம்மால் சரியாக இயங்க முடியவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மையின் காரணமாகவும் கூட தாம்பத்ய நாட்டம் மந்தமாகி நாளடைவில் உறவே இல்லை எனும் நிலையும்  ஏற்படலாம்.
  • அலுவலகப்பிரச்னை காரணமான மனச்சுமைகளின் அழுத்தத்தாலும் கூட தாம்பத்யத்தில் நாட்டம் குறைய வாய்ப்புகள் உண்டு.
  • சேர்ந்து வாழும் போது ஆணை விடப் பெண் அதிகம் சம்பாதிப்பவராக இருந்தால் அதனால் ஏற்படும் தாழ்வுணர்ச்சி காரணமாகவும் தாம்பத்யத்தில் நாட்டம் குறையலாம்.
  • வேலைக்குப் போகும் பெண்களிடையே தாம்பத்ய உறவில் நாட்டம் குறையக் காரணம் அதிகபட்சமான வேலைச்சுமையும், குடும்ப உறவுச் சிக்கல்களால் ஏற்படக்குடிய மனச்சுமையும் கூட ஒரு காரணம் என்கிறது மேலை நாட்டு ஆய்வறிக்கை ஒன்று.
  • கணவன், மனைவியிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை குறைந்து, இருவரில் ஒருவர் மீது மற்றவருக்கு எதைக்குறித்தாவது சந்தேகம் வலுத்தால் அதனாலும் கூட தாம்பத்யத்தில் நாட்டம் குறைய வாய்ப்பிருக்கிறதாம்.
  • ஆண்களில் பலருக்கும் உறவின் போது தங்களால் முழுமையான நீடித்த உற்சாகத்துடன் ஈடுபட முடியுமா? எனும் வீணான சந்தேகம் கலந்த தாழ்வுணர்ச்சி காரணமாகக் கூட தாம்பத்யத்தில் நாட்டம் குறைய வாய்ப்புகள் உண்டு.

இப்படி தாம்பத்யத்தில் நாட்டம் குறைய அனேகம் வாய்ப்புகள் இருப்பதைப் போல, விருப்பத்தைய்ம், ஆர்வத்தையும் உண்டாக்கவும் கூட பல்வேறு காரணங்கள் உள்ளன. தம்பதிகள் செய்ய வேண்டியது, தாம்பத்யத்தில் தங்களது நிறை, குறைகளை ஆரம்ப நாட்களிலேயே அடையாளம் கண்டு களைய வேண்டிய குறைகளை முதலிலேயே களைய முற்பட்டு, நிறை இருந்தால் ஒருவருக்கொருவர் பார்டாட்டி உற்சாகப் படுத்திக் கொள்ளத் தயங்கவே கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com