மாதவிடாய் நாட்களை வலியின்றி கடக்கப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?!

அட மாத விடாய் என்றால் வெறுமே வலி மட்டும் தானா? அப்புறம் அந்தக் கறை குறித்த பயங்களை, கொடுங்கனவுகளை புறம் தள்ள ஒரு பெண்ணாக உங்களுக்கு எப்படி மனம் வந்தது?
மாதவிடாய் நாட்களை வலியின்றி கடக்கப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?!

அடுத்த வாரம் பரீட்சை வருதுடீ? ஐயோடா அந்தச் சனியன் அன்னைக்குப் பார்த்து வராம இருந்து தொலையனுமே... என்று குலதெய்வத்தை நினைத்து திருநீறு பூசிக்கொண்டு பள்ளி சென்ற அக்காக்களைப் பார்த்திருக்கிறேன். 

மோடிஜியின்  ‘ஸ்வச் பாரத்’ விளம்பரங்கள் எல்லாம் புழக்கத்தில் இல்லாத 80 களின் பிற்பகுதியில்... அதிகாலையில் எங்கள் ஊரின் திறந்த வெளிப் பொதுக்கழிப்பிடமான பாறை மேட்டில்... உட்கார்ந்து கொண்டு ‘பொட்டுக்கடலையில் மிளகு கலந்து மென்று சாப்பிட்டால் மென்சஸ் தள்ளிப்போகுமாமே? நெஜமாவா அத்தே’ என சித்ரா மதினி, வாசுகி சித்தியிடம் விசனத்துடன் கேட்டது ஒருநாள் காதில் விழுந்தது. 

அத்தை மகளுக்குக் கல்யாணம்... ‘நிச்சயதார்த்தம், கல்யாணம்’ எல்லாத்துக்கும் நாலஞ்சு முஹூர்த்தம் குறிச்சுக் கொடுத்திருக்கேன், வீட்டுல பொம்பளைங்க கிட்ட எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டு அவங்களுக்கு செளகரியப் பட்ட நாள் எதுவோ அந்தத் தேதியையே பத்திரிகை அடிக்க கொடுத்திடலாம். என்று மென்குரலில் சேதி சொல்லிக் கொண்டிருந்த சோதிடரின் குரல் கூட நேற்றுத்தான் கேட்டதைப் போல இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

இவையெல்லாம் தாண்டி; ஒரு முறை வீட்டைக் கூட்டிப் பெருக்கும் போது, மொத்தமாக முறத்தில் வாறிக் கொண்டு போய் குப்பையில் கொட்டாமல் வீட்டு மூலையில் ஒதுக்கி வைத்தேன். ஓரிலிருந்து வந்து எங்களுடனிருந்த பாட்டி இதைப் பார்த்தார்... ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல, நான் தினமும் அப்படிச் செய்வது தான் வழக்கம் என்று கண்டதும், அப்படிச் செய்யாதே... அப்படியே முறத்தில் அள்ளி குப்பை கூடையில் கொட்டு என்று சொல்லிப் பார்த்தார். சொன்னால் உடனே கேட்டு விடுகிற ரகமில்லையே! அப்போது பாட்டி சொன்னார். ‘ பொம்பளைப் பிள்ளைங்க குப்பையை அள்ளாம மூலையில் ஒதுக்கி வச்சா, நாள் கிழமைல சாமியும் நம்மை அப்படி ஒதுக்கி வச்சிடும்னு பெரியவங்க சொல்வாங்க... அதுக்குத் தான் சொல்றேன். இப்படி மூலையில ஒதுக்கி வைக்காதே இனிமே குப்பையை வாறி உடனே குப்பைக் கூடையிலயே கொட்டு’ என்றார். சாதாரணமாகச் சொல்லும் போது கேட்காத நான் இப்போது வேறு வழியின்றி கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு வந்திருந்தேன்... காரணம் கிராமத்துச் சாமிகள், நல்ல நாள், பொல்லாத நாட்களில்  ஊர்ப்பெண்களை விலக்கி வைக்க கையாளும் உபாயங்களில் ஒன்றாக கருதப்பட்டது சாட்ஷாத் அதே மாதவிடாய் கால நிர்பந்தங்களைத் தானே தவிர வேறில்லை. தீபாவளி, தைப்பொங்கல், முத்தாலம்மன் திருவிழா, காளியம்மன் திருவிழா, சித்திரையில் ஆற்றில் அழகர் இறங்கல், இப்படி ஓராண்டில் ஏதோ சில நட்களில் தான் ஊருக்கு நல்ல நாள் வரும்... அப்போது போய்... வீட்டுக்கு விலக்காகி உட்கார்ந்து கொண்டிருந்தால் அப்புறம் மொத்தப் பழியும் விலக்கி வைத்த சாமிக்கு இல்லை. விலகக் காரணமான நமது செயல்களின் மீது தான் விழும்.

இப்படிப் பெண்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பல பிரச்னைகளில் அந்த மூன்று நாட்களுக்கு மட்டும் எப்போதுமே மிக முக்கியமான பங்கு உண்டு.

இன்று, உலகமே மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை அவசியமா? இல்லையா? என்று விவாதித்துக் கொண்டிருக்கிறது. சில நிறுவனங்கள் பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு விடுமுறையும் அறிவித்துள்ளன. உலகம் முழுக்க பெண்கள் இதை வரவேற்கிறார்கள். நிறுவனங்கள் தங்களது பெண் ஊழியர்களின் மாதாந்திரப் பிரச்னை குறித்து கரிசனத்துடன் சிந்திக்க முன் வந்தது குறித்து பெண்களுக்கு மகிழ்ச்சியே! ஆனால் வலி குறித்துப் பேசும் நாம் அந்த வலி எதனால் வருகிறது என்பதைக் குறித்தும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் தானே?! மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வரக்கூடிய கடுமையான வயிற்று வலிக்கான மூலகாரணங்களில் முதன்மையானது பெண்களின் உணவுப் பழக்கம்!

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, உணவு விஷயத்தில் பெண்கள் கையாளும் கவனக்குறைவே அவர்களது வலிக்கான மூலகாரணம் என்பதை எத்தனை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. சத்தான ஆகாரம் எடுத்துக் கொண்டு உடல்நலனைப் பேணும் பழக்கமுள்ள பெண்களுக்கு மாதாந்திர வலித்தொல்லை இருப்பதில்லை என்பது அனுபவப்பூர்வமாக நான் கண்டறிந்த உண்மைகளில் ஒன்று. அப்படியான பெண்கள் அனேகம் பேர் நம்முடன் இருக்கிறார்கள் என்பதும் நிஜம். ஏன் சிலருக்கு மட்டும் வலி இருப்பதில்லை? பலருக்கு இருக்கிறது! என்றால் இந்தியா போன்ற சமச்சீரற்ற பொருளாதார நிலை கொண்ட ஒரு நாட்டில் இது பெண்களின் தலையெழுத்து என்று தான் எண்ண வேண்டியதாக இருக்கிறது. பல பெண்கள் வீட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு தமக்கான உணவின் தரத்திலும், அளவிலும் சமரசம் செய்து கொள்கிறார்கள். இந்த சமரசத்தின் எல்லை, ஒரு சில வேலைகளில் தமக்கு உண்பதற்கென ஒன்றுமே இல்லாவிட்டாலும் பரவாயில்லை குடும்பத்தில் மற்ற அனைவருக்கும் உண்ண உணவிருந்தால் போதும் என்பது வரை நீள்கிறது. இன்று வரை தமிழ் சினிமா ‘மதர் சென்டிமென்ட்’ காட்சிகளில் குழந்தைகளுக்கு வயிராற சோறூட்டி விட்டு குழாய் தண்ணீரில் வயிற்றை நிரப்பும் ஏழை அம்மாக்களை நாம் பலமுறை கண்டிருக்கிறோம்! ஆனால் அந்த அம்மாக்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை ஏழை அம்மாக்கள் மட்டுமல்ல பல நேரங்களில் பொருளாதார பேதங்களின்றி அனைத்து விதமான அம்மாக்களுக்கும் அப்படித்தான் நேர்ந்து விடுகிறது என்பது!

காரணம்... உடல் நலன் விஷயத்தில் பெண்களுக்கு இருக்கும் அலட்சியமான மனப்போக்கு! அதை விட முக்கியமான காரணம்... உடல் நலன் விஷயத்தில் பின்பற்றப்படும் அறியாமை. இளமையில் சத்தானதைத் தேடித் தேடி உண்ணவில்லை எனில் பின்னாட்களிலாவது அதைச் செய்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மருந்து, மாத்திரைகள் வந்த பின் என்ன கவலை? வலிக்கும் போதெல்லாம் அதைப் போட்டுக் கொண்டால் போகிறது என்றெண்ணும் விட்டேத்தியான மனநிலையால் பெண்கள் அனுபவிக்க நேரும் இம்சைகள் அதிகம். அதைப் பெண்களே உணரும் வரையில் அவர்களுக்கு இந்த மாதாந்திர வலியிலிருந்து விமோசனமே கிடைக்கப் போவதில்லை.

மாத விடாய் காலத்தில் வலிக்காமல் இருக்க பெண்களின் கருப்பை திடமானதாக இருக்க வேண்டும். கருப்பை திடமாக இருக்க அதற்குத் தேவையான சத்துக்கள் கிடைக்க வேண்டும். இப்போது மகப்பேறு மருத்துவர்கள் சொல்கிறார்கள் எல்லாக் காலங்களிலும் இயலா விட்டாலும் ... கருவுற்றிருக்கும் நேரங்களிலாவது பெண்கள் மாதுளம் பழம், மலை நெல்லி, பேரீச்சை, ஆப்பிள், போன்ற பழ வகைகளையும் முருங்கை, பீர்க்கை, புடலை போன்ற நீர்ச்சத்துள்ள நாட்டுக் காய்கறிகளையும், நிலக்கடலை, பச்சைப் பயிறு, முக்கடலை, போன்ற பயறு வகைகளையும் முருங்கை, அகத்தி தவிர மற்ற எல்லா வகைக் கீரைகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் என்று, ஆனால் எத்தனை பேர் அதை உருப்படியாக பின்பற்றுகிறார்கள்? 

சத்தான ஆகாரம், போஷாக்கான உணவு என்பதன் அர்த்தம் வயிறு நிறைய உண்பதுவோ, வயிற்றுக்கு ஏதாவது உண்பதுவோ அல்ல. எந்த உணவு நம்மை நாள் முழுதும் உற்சாகத்துடன் இயங்க வைக்கிறதோ அந்த உணவே சத்தான ஆகாரமாக இருக்க முடியும்.

பள்ளி நாட்களில் மாதவிடாய் காலங்களில் பல பெண்களைப் போலவே எனக்கும் தாங்க முடியாத வலி இருந்தது! சில முறை வயிற்று வலி தாங்க முடியாத அளவுக்குச் செல்கையில், அம்மா  ‘பரால்கான்’ என்ற வலிநிவாரணி மாத்திரை ஒன்றை சாப்பிடத் தந்திருக்கிறார். ஆனால் தரும் போதே, இதை அடிக்கடி விழுங்கக் கூடாது. தாங்க முடியாத வலி என்றால் மட்டும் தான் இதை விழுங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே தான் தருவார். அந்த மாத்திரை போட்டுக் கொண்டதும் அரைமணி நேரத்தில் வலி நின்று விடும். என்ன தான் அம்மா சொல்லி இருந்தாலும் பள்ளிப் பருவத்தின் அந்த நாட்களில்  சின்னதாக வலித்தால் கூட அதை மனம் ஏற்றுக் கொள்வதே இல்லை. அப்போது பெட்டிக் கடைகளில் கூட தாராளமாகக் கிடைத்து வந்த பரால்கான் மாத்திரைகளை வழக்கமாக வாங்கி வைத்துக் கொள்ளும் குடும்பங்கள் ஊரில் பல இருந்தன. ஆனால் இப்போது தான் தெரிய வருகிறது.. இந்த பரால்கான் மட்டுமல்ல அனால்ஜின், நோவால்ஜின் உள்ளிட்ட வலிநிவாரணி மாத்திரைகளெல்லாம் கூட உடலில் கட்டி ஏதாவது இருந்து தாங்க முடியாத வலியினால் கடுமையான காய்ச்சலும் வந்தால் மட்டுமே தவிர்க்க இயலாமல் பயன்படுத்தக் கூடிய மாத்திரைகள் என! ஆனால் அன்று இதை சர்வ சாதாரணமாக மாதாந்திர வயிற்று வலியைப் போக்கும் நிவாரணியாக பல கிராமத்துப் பெண்கள் கருதி வந்தனர். அவ்வப்போது விழுங்கியும் வந்தனர். இப்போதும் வயிற்று வலிக்காக பரால்கான் எடுத்துக் கொள்ளும் பெண்கள் எவரேனும் இருந்தால் இதை வாசித்த பின்பாவது உணருங்கள், வயிற்று வலிக்கு பரால்கான் தரும் நிவாரணத்தை  விட அருமையான விரைவான நிவாரணத்தை ஒரு டம்ளர் மாதுளம் பழச்சாறு தரும் என்பதை!

அதெப்படி மாதாந்திர வயிற்று வலியை மாதுளம் பழம் தீர்க்கும்? என்கிறீர்களா? தீர்த்தது... தினம் ஒரு மாதுளம் பழம் சாப்பிட முடியவில்லை என்றாலும் வாரத்திற்கு மூன்று நாட்களாவது மாதுளையை உண்பதை பழக்கமாக்கிக் கொண்டீர்கள் என்றால் பிறகு நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.

தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியின் பின் மாதுளம் பழங்கள் வாங்கி உண்பது இன்று எவருக்குமே இயலாத காரியமெல்லாம் இல்லை. சிவப்பு நிற முத்துக்களுடன் விளையும் காபூல் மாதுளைகளை விட வெள்ளை முத்துக்களுடன் கூடிய நாட்டு மாதுளை பெண்களின் கருப்பையை திடமாக்கும் வேலையை மிக அழகாகச் செய்து முடிக்கக் கூடியதாம். காபூல் மாதுளைகளைக் காட்டிலும் நாட்டு மாதுளைகள் விலை குறைவு தான். 

மாதுளை மட்டுமல்ல தினமும் இரவு உணவுக்குப் பின் 1 டம்ளர் பால் அருந்தி 4 பேரீச்சம் பழங்கள் சாப்பிடுவதையும் பெண்கள் கட்டாய வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

முன்பு கிராமங்களில் பூப்படைந்த சிறுமிகளுக்கு உளுத்தங்களி என்று ஒரு பலகாரம் செய்து சாப்பிடத் தருவார்கள். தாராளமாக நாட்டு வெல்லமும், முழு கருப்பு உளுந்தும், நல்லெண்ணெயும் கலந்து செய்யும் இந்தப் பலகாரம் பெண்களின் இடுப்பெலும்புகள் பலம் பெறுவதற்காக செய்து பரிமாறப்படும் பாரம்பரியப் பலகார வகைகளில் ஒன்று. இதைப் பெரும்பாலான சிறுமிகள் சாப்பிட மறுத்து விடக் கூடும். ஆனால் பெரியவர்கள் தான் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இந்தப் பலகாரம் வெறும் வாய் ருசிக்காக மட்டுமல்ல, வளரிளம் பெண்ணின் ஆரோக்யத்தைப் பலப்படுத்தவே தொன்று தொட்டு சமைத்துத் தரப்படுகிறது என்பதை புரிய வைக்க வேண்டும். சாப்பிட்டுப் பழகி விட்டார்கள் எனில் பிறகு அவர்களே வாரம் ஒருமுறை இந்தக் களியை செய்து தரச் சொல்லி கேட்டு வாங்கி உண்ணும் அதிசயமும் கூட நடக்கலாம்!

வேர்க்கடலையை வறுத்து, நாட்டு வெல்லத்துடன் சேர்த்து இடித்து ஏலத்தூளும், முந்திரியும் நெய்யில் வறுத்துப் போட்டு உருண்டை பிடித்துச் சாப்பிடலாம். இதுவும் கூட பெண்ணின் இடுப்பு எலும்புகள் பலம்  பெறத்தான். என் பாட்டி வீட்டில் வைகாசி மாதப் பொங்கல் சமயத்தில், வருடம் ஒருமுறை கல்லுரலில் இடித்துச் செய்யப்படும் இந்தக் கடலை மாவு உருண்டைகளுக்கு ஏக கிராக்கி. உண்மையில் இது ஆண்களை விட பெண்களுக்குத் தான் அத்யாவசியமானது. ஆனாலும் பெண்களை விட இதன் சுவைக்கு அடிமைகளாகிப் போன எங்கள் வீட்டு ஆண்கள், பெண்களுக்கு மிச்சம் வைக்காமல் கூட இதை உண்டு முடித்து விடுவதில் சமர்த்தர்கள்.

கல்லூரிக் காலத்தில் ஒரு முறை மாதாந்திர வயிற்று வலியால் தாங்க முடியாத அளவுக்கு அவஸ்தைப் பட்டு கடைசி பெஞ்சில் அமர்ந்து டெஸ்கில் தலை சாய்த்து படுத்துக் கண்ணயர்ந்த நேரத்தில் அங்கே வந்த எங்களது ஹெச்.ஓ.டி சொன்னதை இப்போதும் என்னால் மறக்க முடியாது. “என் அம்மா நான் பெரியவளான போது தினமும் காலையில் எழுந்து பல் துலக்கி வந்ததுமே சின்ன வெங்காயத்தைப் பொடிப்பொடியாக அரிந்து வெறுமே துளி நல்லெண்ணெய் விட்டு அரைகுறையாய் வதக்கி சாப்பிடத் தருவார். காரணம் அவருக்கு அவரது மூத்தவர்கள் யாரோ சொல்லி இருந்தார்கள் அப்படிச் செய்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று, அப்படிப்பட்ட பெரியவர்கள் இந்த மாதாந்திர வயிற்று வலியைப் போக்கவும் ஏதாவது உபாயம் சொல்லிச் சென்றிருப்பார்கள் தானே? உங்களுக்கு தெரிந்த உபாயங்களை ஒவ்வொருவராக எழுந்து சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார்.

ஒரு மாணவி எழுந்து,

“கொழுந்து வேப்பிலையை அரைத்து மாதம் தவறாமல் என் பாட்டி ஆளுக்கு ஒரு டம்ளர் குடிக்கத் தருவார். குடிக்க மறுத்தால் மூக்கைப் பிடித்துக் கொண்டு கட்டாயம் குடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவார். அது வயிற்று வலியை மட்டுமல்ல வயிற்றிலுள்ள புழுக்களையும் அழித்து விடும் என்பது என் பாட்டியின் நம்பிக்கை.”

- என்றாள்.

இன்னொருத்தியோ,

“என் அம்மா பீரியட்ஸ் அப்போ வெறும் வயிற்றோடு இருக்க அனுமதிக்கவே மாட்டாங்க, நல்லா சாப்பிடனும், அதே சமயம் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து வயிறு முட்ட தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வார். ஏனென்றால் அதிக ரத்த இழப்பு இருந்தால் உடலில் நீர்சத்து குறையும். அதை ஈடுகட்ட நிறைய தண்ணீர் குடிக்கனும்ங்றது என் அம்மாவோட அறிவுரை ”

- என்றாள்.

இன்னொரு மாணவி,

‘எங்கம்மா, எப்பவும் ஒரு செட் பரால்கான் மாத்திரை வைத்திருப்பார், வலிக்கிறது என்று சொன்னால் போட்டுக் கொள்ள ஒரு மாத்திரை தருவார். அரை மணியில் வலி பறந்து போகும், அவ்வளவு தான்’

- என்றாள்.

இன்னொருத்தி,

‘மேம் இப்போ எல்லாம் தீட்டு, வீட்டுக்கு விலக்கு என்றால் கூட பெண்கள், தலை முழுகத் தயங்குகிறார்கள், அது தவறு, வீட்டு விலக்கன்று உச்சந்தலையில் தண்ணீர் விட்டுக் கொண்டு குளித்தால் உடல் சூடு தணியும் என்பார் என் பாட்டி. உடல் சூடு அதிகமிருக்கும் பெண்களுக்கு அதனால் கூட மாதாந்திர வயிற்று வலி அதிகரிப்பது போலத் தோன்றுமாம். அதனால் தயங்காமல் முதல் நாளே தலைக்கு தண்ணீர் விட்டுக் கொண்டு குளித்து விட வேண்டும். முதல் நாள் மட்டுமல்ல மாத விடாய் காலமான 5 முதல் 7 நாட்களுக்குமே ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படிக் குளிக்கலாம். உடல் சூடும் தணியும், அதனால் வரும் வயிற்று வலியும் தீரும்’ அதோடு எங்கள் வீடுகளில் இப்படி வீட்டு விலக்காகி தலைக்கு குளித்தால், குளித்து முடித்த அடுத்த செகண்ட் பாட்டி சுடச்சுட சின்ன வெங்காயமும், மிளகும் தூக்கலாகப் போட்டு மஞ்சள் தூள் சேர்த்த டபுள் ஆம்லெட் ஒன்று சாப்பிடத் தருவார். ஏன் என்று காரணமெல்லாம் பாட்டி சொன்னதில்லை, எங்கள் வீட்டில் யாருக்கும் மாதவிடாய் வயிற்று வலியும் வந்ததில்லை’

- என்றாள்.

‘எங்கம்மா பொட்டுக்கடலை சாப்பிட்டு வயிறு முட்டத் தண்ணீர் குடித்தால், மாதாந்திர வயிற்று வலியெல்லாம் காணாமப் போயிடும்னு சொல்வாங்க மேம்’

- என்றாள் ஒருத்தி.

கடைசியாக எழுந்த மாணவியொருத்தி,

‘எங்க ஊர் கடைகளில் கருப்பு நிறத்தில் குளிர்பானம் ஒன்று கிடைக்கும், கருப்பு கலர் ஒன்னு கொடுங்க என்றால் மளிகைக் கடையில் எடுத்துத் தருவார்கள். அதைக் குடித்தால் வயிற்று வலி பறந்து போகும், கருப்பு கலர் கிடைக்காவிட்டால், பன்னீர் சோடா, அதுவுமில்லை என்றால் கோலி சோடா போதும்’

- என்றாள். 

முடிவாக HOD க்கு என்ன தோன்றிதோ... வகுப்பு முடிந்து விடைபெறும் முன்,

‘பரவாயில்லையே... ஆளுக்கு ஒரு உபாயம் வைத்திருக்கிறீர்கள்... எல்லாம் சரி தான், ஆனால் இன்றைக்கு காலையில் உங்களில் பிரேக் பாஸ்ட் ஸ்கிப் பண்ணியவர்கள் எத்தனை பேர்? கை தூக்குங்கள் பார்க்கலாம்’

- என்றார்.

ஒரு சிலரைத் தவிர எல்லோரும் கை தூக்கினோம்... HOD உட்பட...

அப்போது அவர் சொன்னார்...

“இது தான் பெண்களான நமது எல்லாப் பிரச்னைகளுக்குமே மூலகாரணம். ஏன் பிரேக் பாஸ்ட் சாப்பிடவில்லை? என்று கேட்டால், சொல்வதற்கு நமக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நாம் சாப்பிடவில்லை என்பதால் நேரக்கூடிய உடல்நலப் கோளாறுகளை அந்தக் காரணங்களால் நேர் செய்து விட முடியாது. எனவே பெண்களே எந்தச் சூழலிலும் பிரேக் பாஸ்ட் மட்டுமல்ல என்ன தலை போகிற அவசர வேலையாக இருந்தாலுமே சரி மூன்று வேளை போஜனத்தை எக்காரணம் கொண்டும் கைவிடுவதில்லை என்பது தான் பெண்களாகிய நாம் எடுத்தாக வேண்டிய முதல் உறுதிமொழியாக இருக்க வேண்டும். அதிலேயே பெண்களின் பெரும்பாலான பிரச்னைகளும் தீர்ந்து விடக் கூடும்.”

- என்று சொல்லி சிரித்துக் கொண்டு விடைபெற்றார்.

ஆகவே பெண்களே மாதவிடாய்க்காக விடுமுறை என்பதில் தவறில்லை. ஆனால் நமது சிந்தனை; வலிக்காக விடுமுறை என்பதைத் தாண்டி வலியே வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதாக இருந்திருந்தால் இன்னும் ஆரோக்யமானதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

அட மாத விடாய் என்றால் வெறுமே வலி மட்டும் தானா? அப்புறம் அந்தக் கறை குறித்த பயங்களை, கொடுங்கனவுகளை புறம் தள்ள ஒரு பெண்ணாக உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று யாராவது கேட்கலாம். அதைப் பற்றியும் விரிவாக நாளை பேசலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com