கூந்தலில் வீடு கட்டி அடித்தால் அதற்குப் பெயர் தான் ‘ஹேர் ஆர்ட்’!

மீசை மற்றும் தாடியில் தான் என்னென்ன வெரைட்டி காட்டுகிறார்கள்?! பார்ப்பவர்கள் எல்லாம் அசந்து போய் மூர்ச்சையாகாத குறை! வெளியாருக்கே இந்த நிலைமை என்றால் அவர்களது குடும்பத்தினரின் நிலையை யோசித்துப் 
கூந்தலில் வீடு கட்டி அடித்தால் அதற்குப் பெயர் தான் ‘ஹேர் ஆர்ட்’!

இன்றைய இளைஞர்கள் தங்களது ஸ்டைலிஷான (அப்படியென்று அவர்களாக நினைத்துக் கொள்கிறார்களோ!!!) பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள முதலில் தேர்ந்தெடுப்பது அவரவர் தலைமுடி மற்றும் மீசை, தாடிகளைத் தான். மீசை மற்றும் தாடியில் தான் என்னென்ன வெரைட்டி காட்டுகிறார்கள்?! பார்ப்பவர்கள் எல்லாம் அசந்து போய் மூர்ச்சையாகாத குறை! வெளியாருக்கே இந்த நிலைமை என்றால் அவர்களது குடும்பத்தினரின் நிலையை யோசித்துப் பாருங்கள்?! ஆனால் அதெல்லாம் அந்தந்தப் பருவத்தில் அனுபவித்துத் தீர வேண்டிய ஆசைகளே என்பதில் இங்கே யாருக்கும் எந்தவிதமான கருத்து மோதல்களும் இல்லை. பார்க்க படு காமெடியாக இருந்தாலும் சில இளைஞர்களது ஹேர்ஸ்டைல்கள் ‘வாவ்’ வொண்டர்ஃபுல் ரகத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. சிலரது ஹேர்ஸ்டைல்களோ ஜெய்ஹிந்த் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் வைத்துக் கொண்டிருப்பாரே ஒரு ஹேர்ஸ்டைல் அந்த ரீதியில் படு திராபையாகவும் இருக்கின்றன. எல்லாம் கலந்தது தானே இந்த மெய்நிகர் வாழ்க்கை. அதனால் சாமானிய மக்களின் கண்கள் ஒரு யோகியுனுடையதைப் போல அழகையும், அலங்கோலத்தையும் ஒரே விதமாக அனுசரித்துக் கொண்டு நீடிக்கப் பழகி விட்டன என்றால் பொருத்தமாக இருக்கும்.

ஆண்கள் ஹேர்ஸ்டைல் செய்து கொள்வது என்பது இன்று நேற்றல்ல பல்லாண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் விஷயமே! அதனடிப்படையில் தோன்றியது தான், ‘வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை’ என்ற பழமொழியாக இருக்கலாம். சிலர் அப்படித்தான். அவையெல்லாம் விசேஷமான குணநலன்கள்!

யோசித்துப் பாருங்கள், நாம் கடப்பவர்களிலும், நம்மைக் கடப்பவர்களிலும் எத்தனை, எத்தனை விதமான ஹேர்ஸ்டைல்களை நாம் நாள்தோறும் காண நேர்கிறது என.

ஹேர்ஸ்டைல் என்பது செய்து கொள்பவரின் விருப்பத்தைப் பொருத்தது அல்ல, அதைச் செய்து முடிக்கப் போகிறவரின் கைத்திறனைப் பொருத்தது.

நீங்கள் என்ன தான் உங்களை லியானர்டோ டி காப்ரியோவாகவோ அல்லது அமீர்கானாகவோ, சிங்கம் சூர்யாவாகவோ அல்லது சால்ட்& பெப்பர் ஸ்டார் அஜித்தாகவோ நினைத்துக் கொண்டு ஹேர்ஸ்டைல் செய்து கொண்டாலும், அந்த ஹேர்ஸ்டைல் உங்களது முகத்தோற்றம் மற்றும் உடல்வாகுக்குப் பொருந்தினால் மட்டுமே அது அனைவராலும் ரசிக்கப்படக் கூடும். இல்லாவிட்டால் உங்களைக் காட்டிலும் தினந்தோறும் உங்களைக் கண் கொண்டு காண்பவர்களுக்குத்தான் அது பெருஞ்சோதனையாக முடியக் கூடும்.

பொதுவாக ஆண்கள் பின்பற்றிய சில ஹேர்ஸ்டைல்களுக்கான கேட்டலாக் இது என்கிறது கூகுள்;

ஹேர்ஸ்டைல் என்பதைத் தாண்டி, இப்போது ஆண்களின் ஆர்வம்  ‘ஹேர் ஆர்ட்’ என்ற எல்லை வரைக்கும் சென்று விட்டது. 

ஹேர் ஆர்ட் என்றால் வேறொன்றுமில்லை, சுருங்கச் சொல்வதென்றால் கூந்தலில் ‘வீடு கட்டி அடிப்பது’ என்றால் வெகு பொருத்தமாக இருக்கும்.

அதாவது, உங்களுக்கு ஒரு ஓவியமோ, அல்லது கட்டிடமோ பிடித்திருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள், முடிந்தவரை ரசிப்பீர்கள், விலை கொடுத்து வாங்கும் சக்தி இருக்குமாயின் வாங்கி வீட்டில் மாட்டி வைத்துக் கொண்டு போவோர், வருவோரிடமெல்லாம் அதைக் காட்டிப் பெருமை அடித்துக் கொள்வீர்கள். இது தான் சாமானியர்கள் செய்வது. ஆனால் அதுவே தீவிரமான கலாரசிகர்கள் என்றால், அதிலும் தங்களது தலைமுடியை பரீட்சார்த்த கூடமாகப் பயன்படுத்தும் ஆர்வம் பொங்கிப் பிரவகிக்கும் ஒரு ஆத்மார்த்தமான கலாப்பூர்வி என்றால் உங்களது அடுத்த சாய்ஸ் ஹேர் ஆர்ட் ஆகத்தான் இருக்கும்.

ஆமாம், இந்த வீடியோவைப் பார்த்தால் அதை நிஜமென்று நீங்களே ஒப்புக் கொள்வீர்கள்.

இந்த வீடியோவில் இருக்கும் சிகையலங்கார நிபுணரின் அற்புதக் கைவண்ணத்தில் நாம் ஊர் தாஜ்மஹால் முதல் உலகின் பல்வேறு கட்டிடக் கலை வடிவங்களும் ஹேர் ஆர்ட் என்ற பெயரில் ஆண்களின் தலைகளில் ஏற்றி உட்கார வைக்கப்பட்டிருக்கும் விந்தையைக் கண்டு ரசியுங்கள். இவையெல்லாம் வித்யாசமான ரசனையென்பதைத் தவிர வேறென்ன சொல்ல?!

சென்னைப் பையன்கள் கண்ணில் இந்த வீடியோ இன்னும் படவில்லையோ என்னவோ? ஏதோ நம்மால் ஆன புன்ணியம். இதையும் பார்த்துக் கற்றுக் கொள்ளட்டுமே என்பதோடு, அந்த சிகையலங்கார நிபுணரின் திறமையையும் மதிக்கத்தான் வேண்டும். அருமையான கைத்திறன்!

பார்த்து ரசிப்பதோடு, உங்களில் யாராவது இம்மாதிரியான ஹேர் ஆர்ட் முறைகளை முயன்றீர்கள் என்றால் அதைப் புகைப்படமெடுத்து தினமணி.காமுக்கும் அனுப்பலாம். வெளியிடச் சித்தமாக உள்ளோம்.

புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி...

webdinamani@gmail.com

Video courtesy: Dinakar raj's facebook page.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com