தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த  ‘சிட்டுக்குருவி’ பாடல்கள்...

ம்ஹும்... என்ன செய்ய வருங்காலத்தில் நாம் இப்படித்தான் சிட்டுக்குருவியை நினைவுகூரப் போகிறோமோ என்னவோ? அதற்கொரு முன்னோட்டம் தான் இந்தக் கட்டுரை. 
தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த  ‘சிட்டுக்குருவி’ பாடல்கள்...

‘சிட்டுக்குருவியை’ சுறுசுறுப்பு, காதல், தனிமை, தன்னம்பிக்கை, நட்பு எனப் பல விஷயங்களுக்கு நாம் உதாரணப்படுத்தலாம். பறவைகளில் சிட்டுக்குருவியைப் போல சுறுசுறுப்பான பறவையைக் காண்பது அரிது. ஆயினும் இன்று சிட்டுக்குருவிகள் அரிதான பறவையினங்களில் ஒன்றாகி வருகின்றன. காரணம் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகள்.

இந்த செல்லிடப் பேசிகளில் இருந்து வெளிப்படும் அதிர்வுகளைத் தாங்கும் சக்தி சிட்டுக்குருவிகளின் இதயத்துக்கு இல்லாத காரணத்தாலேயே முன்பெல்லாம் வீடுகளின் முற்றங்களில் நமக்குக் காணக்கிடைத்த ஏராளமான சிட்டுக்குருவிகள் மடிந்து போய் இன்று எங்கேனும் ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகளை மட்டுமே ஏதோ புறநகர்ப் பகுதிகளில் மட்டுமேனும் காண முடிகிறது. சிட்டுக்குருவிகளின் அழிவு இயற்கைச் சமநிலையின்மையின் உதாரணமெனக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், மனிதர்களான நாம் அதை உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் கிராமங்களில் காகங்களுக்கு இணையாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். இப்போது அங்கும் கூட சிட்டுக்குருவிகளைத் தேடித்தான் அடையாளம் காண வேண்டியதாக இருக்கிறது.

இனி வரும் தலைமுறையினருக்கு சிட்டுக்குருவிகளை நாம் இணையத்திலோ அல்லது புகைப்படங்களிலோ தான் அடையாளம் காட்ட வேண்டியதாக இருக்குமோ என்னவோ?!

இப்படி நம் வாழ்வோடும், மனதோடும் ஒன்றி இருந்த சிட்டுக்குருவிகளை தமிழ் சினிமாப்பாடல்களின் துணையுடன் இன்று நினைவு கூரலாமா?

60 களில் அஞ்சலி தேவி, கண்ணப்பா நடிப்பில் வெளிவந்த ‘டவுன்பஸ்’ என்ற தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெற்ற சிட்டுக்குருவி பாடல் இன்றளவும் தமிழ் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பாடல்களில் ஒன்று;

‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? 
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல...’

புதிய பறவை திரைப்படத்தில் சிவாஜி, சரோஜாதேவி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த சிட்டுக்குருவி பாடல்...

‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலலை மேல் கலந்திடக் கண்டேனே’

1971 ஆம் ஆண்டில் வெளிவந்த சவாலே சமாளி திரைப்படத்தில் ஜெயலலிதாவுக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய சிட்டுக்குருவிப் பாடல்;

“சம் சம் சம் சம்சம் சம் சம் சம் சம்சம் 
சம் சம் சம் சம்சம் லல்லல்லா 

சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கேது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு 

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு…  
கட்டுப்பாடு….. ஓஹோ...”

சிவாஜி நடிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் முதல் மரியாதை திரைப்படத்தில் சிட்டுக்குருவி பாடல்...

‘ஏ குருவி சிட்டுக்குருவி... குருவி...குருவி 
உன் சோடியெங்கே அதக் கூட்டிக்கிட்டு 
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு...
பொண்டாட்டி இல்லை வந்து என்னோட பாடு’

கமல், சிவக்குமார், ஜெயசுதா நடிப்பில் ‘மேல்நாட்டு மருமகள்’ திரைப்படத்தில் இடம்பெறும் சிட்டுக்குருவி பாடல்...

‘சிட்டுக்குருவி பட்டுச் சிறகை விரிக்கும்
தென்றல் பட்டு முல்லை மொட்டு சிரிக்கும்’

கே. பாக்யராஜின் ‘சின்னவீடு’ திரைப்படத்தில் இசையரசி S.ஜானகியின் குரலில் சிட்டுக்குருவி பாடல்...

‘சிட்டுக்குருவி... வெட்கப்படுது... பெட்டைக்குருவி கற்றுத்தருது’

விஜயகாந்த், ராதிகா நடிப்பில் வெளிவந்த ‘வீரபாண்டியன்’ திரைப்படத்தில் ஒரு டூயட் பாடலில் சிட்டுக்குருவி...

‘சிட்டுக்குருவி தொட்டுத் தழுவி முத்தம் கொடுக்க 
 பித்தம் புடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ...’

பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன், சுகன்யா நடிப்பில் ‘புதுநெல்லு புதுநாத்து’ திரைப்படத்தில் இடம்பெறும் சிட்டுக்குருவி பாடல்...

‘சிட்டான் சிட்டாங் குருவி உனக்குத் தானே
ஆஹா... ஆமாம்...அப்படிப் போடு
ஒரு பட்டாம் பட்டாம்பூச்சி பழகத்தானே’

அர்ஜூன் நடிப்பில் பரசுராம் திரைப்படத்தில் இடம்பெறும் சிட்டுக்குருவி பாடல்...

‘சிட்டுக்குருவி அருவியைக் குடிக்கப் பார்க்குது
பட்டாம்பூச்சி வானத்தை விலைக்குக் கேட்குது’
 

இவை தவிர, தமிழில் ‘சிட்டுக்குருவி’ என்ற பெயரில் ஒரு திரைப்படமே கூட உண்டு. சிவகுமார், சுமித்ரா நடிப்பில் வெளிவந்த சிட்டுக்குருவி திரைப்படத்தின் பல பாடல்கள் இன்றும் கூட தமிழ் ரசிகர்களின் இதயம் கவர்ந்த பாடல்களில் சிலவாக இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ‘அடடா மாமரக் கிளியே’ பாடலைச் சொல்லலாம்.

ம்ஹும்... என்ன செய்ய வருங்காலத்தில் நாம் இப்படித்தான் சிட்டுக்குருவியை நினைவுகூரப் போகிறோமோ என்னவோ? அதற்கொரு முன்னோட்டம் தான் இந்தக் கட்டுரை.

Concept Courtesy: UmaParvathy

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com