‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாளைத் தெரியாதா உங்களுக்கு?!

ஜீ தமிழ் சேனலின் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் என்றொரு பாட்டி சும்மா கலக்கு, கலக்கு என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.
 ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாளைத் தெரியாதா உங்களுக்கு?!

ஜீ தமிழ் சேனலின் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் என்றொரு பாட்டி சும்மா கலக்கு, கலக்கு என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சன், ஸ்டார் விஜய் சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிற பாடல் போட்டிகளைப் போலத்தான் இதுவும் என்று நினைத்திருந்தேன். நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு நடுவர்களாக என்றும் இளமை பொங்கும் தேன் குரலுக்குச் சொந்தக்காரரான பி.சுசிலா, இசையரசி வாணி ஜெயராம் இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களைத் தவிர வழக்கமான நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய பிரகாஷ் என மூன்று பிரபலப் பாடகர்களும் அங்கிருந்தனர். மூவரையுமே தன் பாடலால் மயக்கி வாரிச் சுருட்டி தன் முந்தானையில் சொருகிக் கொள்ளாத குறையாக அருமையான பாடலொன்றைப் பாடினார் ரமணியம்மாள். 

இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை உலகம் முழுதுமே ரமணியம்மாளுக்கென தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இந்த ராக் ஸ்டார் ரமணியம்மாள் பிறந்தது 1954 ஆம் வருடம். தற்போது 64 வயதாகும் ரமணியம்மாள் படித்தது அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. சுமாராக ஆங்கிலம் பேச வரும். அவருக்குப் படிப்பில் ஆர்வம் இருந்தும், குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடரமுடியாமல் வீட்டு வேலை செய்து குடும்பம் நடத்த வேண்டியதாகி விட்டது. ரமணியம்மாளுக்குத் திருமணமான புதிதில் அவரது கணவர் பொறுப்புடன் இருந்திருக்கிறார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதில் வீட்டின் பொருளாதாரச் சுமை மொத்தமும் ரமணியம்மாளின் தோளில் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நாள் முழுதும் உழைத்து விட்டு வீடு திரும்பும் ரமணியம்மாளிடம் இருந்து அவர் சம்பாதித்து வரும் தொகையை வாங்கிச் சென்று குடிப்பதற்காக அவரது கணவர் காத்திருப்பாராம். அப்படி இருந்தும் ரமணியம்மாளால் ஏனோ தனது கணவரை குறைத்து மதிப்பிட முடியவில்லை. இன்று அவர் உயிருடன் இல்லாவிட்டாலும் மேலிருந்து நான் பாடுவதைக் கண்டு ரசித்துக் கொண்டே தான் இருப்பார் என்று கணவரைப் பற்றி நல்லவிதமாகவே குறிப்பிட விரும்புகிறார். ஏனென்றால், மனைவி சம்பாத்தித்துக் கொண்டு வரும் காசில் குடித்து விட்டு வரும் பொறுப்பில்லாத கணவராக இருந்த போதும் இவர்கள் இருவருக்குமிடையிலான அன்பில் அணுவளவும் குறையிருந்ததாகத் தெரியவில்லை. குடும்ப வறுமை காரணமாக பல வீடுகளில் வீட்டு வேலை செய்து விட்டு நடந்தே வீடு திரும்பக் கூடியவரான ரமணியம்மாளுக்காக இரவுகளில் வீட்டு வாசலிலேயே காத்திருப்பாராம் அவரது கணவர். அதற்கு... எவ்வளவு தாமதமானாலும் சரி, மனைவி வீடு திரும்பிய பிறகு அவரது கையால் உணவருந்த வேண்டும் என்ற விருப்பம் தான் காரணமாம். அந்த அன்பின் காரணமாகவே ரமணியம்மாளுக்குத் தன் கணவர் குடிப்பழக்கம் கொண்டவராக இருந்த போதும் அவரை வெறுக்கத் தோன்றியதில்லை என்கிறார்.

இளமையில் அவருக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்றால் அது எம்ஜிஆர்... இப்போதும் கூட இன்றையை ஹீரோக்களைக் காட்டிலும் எம்ஜிஆர் மட்டுமே தான் ரமணியம்மாளின் மனம் கவர்ந்த ஒரே ஹீரோ. அது போலவே ரமணியம்மாளுக்குப் பிடித்த பாடல்கள் என்றால் அது கவிஞர் கண்ணதாசன் எழுதியவையே. வேலைக்குச் செல்லும் போது இடையில் கண்ணதாசன் பாடல்களைக் கேட்டால், நின்று பாடல்வரிகளைக் கேட்டு ரசித்து நன்றாக உள்வாங்கி கொண்டு முழுமையாக அந்தப் பாடலைக் கேட்டு விட்டுத்தான் செல்வாராம். அந்த அளவுக்கு கண்ணதாசன் பாடல்களின் பரம ரசிகை இவர். ரமணியம்மாளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களது உதவியுடன் தான் தனது 63 வது வயதில் ஜீ தமிழின், சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் பல மைல் தூரம் நடந்து வந்து வீட்டு வேலைகள் செய்யும் ரமணியம்மாளுக்கு ஒரு நிமிடம் கூட சோம்பி உட்காரப் பிடிக்காதாம். எல்லா நேரங்களுலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கவே தனக்கு மிகவும் விருப்பம் என்கிறார் 

ரமணியம்மாள். 2013 ஆம் ஆண்டில் விஜய் ஆண்டனி இசையில் வெளிவந்த ‘ஹரிதாஸ்’ திரைப்படத்தில்  ‘வெள்ளக்குதிரை’ என்றொரு பாடலைப் பாடியிருக்கிறார். ஆனால், அதற்குப் பிறகு அவருக்கு பெரிதாகப் பாடல் வாய்ப்புகள் வராததால் மீண்டும் வீட்டு வேலைகளைச் செய்து வருமானம் ஈட்டி அதில் வாழ்க்கை நடத்தும் நிலையைத் தான் தொடர்ந்திருக்கிறார்.

ரமணியம்மாள் பாடிய வெள்ளக் குதிர பாடலுக்கான வீடியோ...

குடும்பச் சூழல் காரணமாக வீட்டு வேலை செய்தாலும் ரமணியம்மாளுக்கு இசையின் மீது தீவிர ஈடுபாடு இருந்த காரணத்தால் கல்யாணக் கச்சேரிகளுக்குச் சென்று பாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாகத் தனது இருப்பை உணர்த்துவார். இப்போது ரமணியம்மாளுக்கு ஜீ தமிழ் சேனலின் சரிகமப இசைப் போட்டி மூலம் உணர்த்தியிருக்கிறார் போலும். ரமணியம்மாளின் திறமையை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பெருமை அந்தச் சேனலைத்தான் சேரும். 

நேற்றைய நிகழ்வில் பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம், ரமணியம்மாளைப் பற்றிப் பேசுகையில், உங்களுக்கு 63 வயது தானே ஆகிறது. இன்னும் பல வருஷங்கள் ஜோராக நீங்கள் பாடலாம். குரலில் இருக்கும் சுறுசுறுப்பையும், திடத்தையும் கண்டால் இனி உங்களை யாரும் பாட்டி என்று அழைக்கக் கூடாது. ரமணி அக்கா என்று தான் அழைக்க வேண்டும் என்று புகழாரம் சூட்டினார்.

இவர்கள் மட்டுமல்ல இதற்கு முந்தைய வாரங்களில் இவரது பாடல் திறனைக் கண்ட வேறு சில பிரபலங்களும் கூட, இளம் வயதில் நீங்கள் பாட வந்திருந்து வெற்றி பெற்றிருந்தால் எஸ்.ஜானகி, பி.சுசிலா, மாதிரி மிகப்பெரிய பாடகியாகி இருப்பீர்கள் என பிரமித்து வாழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கதே!

ரமணியம்மாளிடம் இருக்கும் மற்றொரு ஈர்க்கத் தக்க அம்சம்... அவரிடம் சொந்தமாக இட்டுக் கட்டிப் பாடும் திறமையும் நிறையவே இருக்கிறது. நடுவர்களைக் குறித்தோ, அல்லது உலகம் முழுக்க இவருக்கென பிரத்யேகமாக உருவாகி விட்ட ரசிகர்களுக்காகவோ ஃபேஸ் புக் லைவ் அல்லது இசைப்போட்டியின் ஊடாக ஏதாவது பாடுங்களேன் அம்மா என்று கேட்டால் போதும் தனக்குப் பிடித்த பழம் பாடல்களின் வரிகளை சூழலுக்கு ஏற்றார் போல் மாற்றிப் போட்டு இட்டுக் கட்டி சிறப்பாகப் பாடி முடித்து விடுகிறார். அதாவது எள் எனும் முன் எண்ணெயாக நிற்பது என்றொரு பழமொழி உண்டே. அது ரமணியம்மாளுக்குத் தான் வெகு பொருத்தம். இவரது ரசிகர்களைப் பொருத்தவரை சரிகமப நிகழ்ச்சியின் 11 வது சீஸனான இந்தப் போட்டியில் மயக்கும் இசைக்குரலாக வெல்லப் போவது ரமணியம்மாள் தான் என்று நம்புகிறார்கள். ரமணியம்மாளுக்குப் போட்டியில் வெல்லும் தகுதி உண்டு. அதோடுகூட தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை கொஞ்சமும் மேடைக் கூச்சம் இன்று மிக அருமையாக எண்டர்டெயின் திறமையும் அதாவது நடுவர்கள், பார்வையாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒட்டுமொத்த நபர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் சிறப்பாகச் செயல்படவும் அவரால் முடிகிறது. 

அந்த வகையில் ராக் ஸ்டார் ரமணியம்மாள் இன்றைய பெண்கள் முன்மாதிரியாகக் கொண்டாட வேண்டிய ஒருவரே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com