விளம்பர உலகின் சத்ய சோதனை! முகம் காட்டும் முதலாளிகள்... சேனல் மாத்தினாலும் வந்துடறாங்களே!

உங்களிடம் பணமிருக்கலாம். அதற்காக உங்களை நாங்கள் நொடிக்கொரு தரம் தொலைக்காட்சியில் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயமென்ன?
விளம்பர உலகின் சத்ய சோதனை! முகம் காட்டும் முதலாளிகள்... சேனல் மாத்தினாலும் வந்துடறாங்களே!

முதலாளிகள், தங்களைத் தாங்களே விளம்பரம் செய்து கொள்ளும் யுக்திக்கு காரணம் பணமா? பாப்புலாரிட்டியா?

விளம்பரங்களில் முகம் காட்ட நடிகர், நடிகைகள் கோடிகளில் சம்பளம் கேட்பதால் சில முதலாளிகள் துணிந்து தாங்களே தங்களது தயாரிப்புகள் மற்றும் கடைகளுக்கு விளம்பரத் தூதர்கள் ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டில் சமீபத்தில் நொடிக்கொரு தரம் அப்படி தொலைக்காட்சி விளம்பரங்களில் வந்து பார்வையாளர்களை படு பயங்கர மூளைச்சலவை செய்தவர்கள் என இருவரைக் கூறலாம். ஒருவர் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள், மற்றொருவர் லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் குமார்.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து இன்னும் சிலரும் தற்போது அடிக்கடி தொலைக்காட்சி விளம்பரங்களில் முகம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமான்வர்கள் பதஞ்சலியின் பாபா ராம் தேவும், ஆச்சி மசாலா நிறுவனத்தின் உரிமையாளரான பத்ம சிங் ஐசக்கும், ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளரான கே.சாம்பசிவம் ஐயரும். 

விளம்பரங்களில் நடிப்பதில் இவர்களுக்கெல்லாம் முன்னோடிகளாக இருந்தவர்கள் என இருவரைக் குறிப்பிடலாம். அவர்களை மொத்த தமிழ்நாட்டுக்கும் நன்கு பரிச்சயமுண்டு. வசந்த் அன் கோ உரிமையாளரான வசந்த குமாரும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணா செல்வரத்தினமும் தான் அவர்கள். இவர்கள் இருவரும் ஆரம்பம் முதலே தங்களது முகத்தை தங்களது தயாரிப்புகளின் அடையாள முத்திரையாக விளம்பரப் படுத்தி வெற்றி கண்டவர்கள். 

இவர்களைத் தொடர்ந்து தான் பாலு ஜூவல்லர்ஸ்காரர் 1990 களில் புன்னகை பொங்கும் முகத்துடன் தொலைக்காட்சியில் வலம் வரத் தொடங்கி இருந்தார். ஆனால் அவரது கதையோ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணக் கோலாகலத்தின் பின் பெரும் சோகக் கதை ஆயிற்று. வளர்ப்பு மகன் திருமணத்தோடு சரி அதற்குப் பிறகு அவரது புன்னகை பொங்கும் முகத்துடனான பாலு ஜுவல்லர்ஸ் விளம்பரங்களைத் தொலைக்காட்சிகளில் காண்பது அரிதாகி விட்டது. வளர்ப்பு மகன் திருமணத்துக்காக சுமார் 40 கோடி ரூபாய்களுக்கு வாங்கப்பட்ட நகைகளுக்கான தொகை அளிக்கப்படாததால் கடைசியில் அவர் பெரும் கடனில் சிக்கி மீளாத்துயரத்துடன் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு உயிர் விட்டார் என்பார்கள்.

இவர்களின் கதை இப்படி என்றால், இன்னும் இருவர் இருக்கிறார்கள் அவர்கள் தற்போது இவ்வுலகில் இல்லை என்றாலும் நாம் தினம் பார்க்கும் நபர்களில் ஒருவராக நம்முடனே தங்களது விளம்பரங்களின் வாயிலாக தொடர்ந்து ஜீவித்து வருகிறார்கள். அது யாராடா அது? என்று புருவம் தூக்க வேண்டாம். அவர்கள் உலகளாவிய கிளைகள் கொண்ட கேஎஃப்சி உரிமையாளரும், நம்மூர் தலப்பாகட்டி உரிமையாளரும் தான். இவர்கள் மறைந்தும் கூட தங்களது விளம்பரங்களின் மூலமாக தினமும் நமது வீடுகளைத் தேடி வரவேற்பறைக்கே வந்து விடுகிறார்கள்.

லலிதா ஜுவல்லர்ஸ்
சரவணா ஸ்டோர்ஸ்
ரத்னா ஃபேன் ஹவுஸ்

பதஞ்சலி
வசந்த் அன் கோ
பாலு ஜூவல்லர்ஸ்
திண்டுக்கல் தலப்பா கட்டி


கேஎஃப்சி
ஆச்சி மசாலா

மேற்படி உரிமையாளர்கள் அனைவருமே ஒரு கால கட்டத்தில் பிரபல நடிகர், நடிகைகளைத் தங்களது தயாரிப்புகளின் விளம்பரத் தூதர்களாக நடிக்க வைப்பதன் மூலம் தொழிலை வளர்த்தவர்களே. ஆயினும் காலம் மாற, மாற தொழில்முறை நடிகர்கள் தங்களது பிரபலத் தன்மைக்கு ஏற்ப உயர்த்திக் கொண்டே போகும் பிரமாண்ட சம்பள உயர்வைக் கண்டு அதெல்லாம் தங்களுக்குக் கட்டுப்படியாகாது என்று நினைத்தோ, அல்லது தினம், தினம் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் தாங்களே நுழைந்து மந்திரம் ஓதுவது போல தங்களது பொருட்களைப் பற்றிய விளம்பரங்களை தாங்களே மக்களிடம் ஓதிக் கொண்டே இருந்தால் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் மக்கள் தங்களது பொருட்களை வாங்காமலா போய்விடுவார்கள் எனும் அசாத்திய நம்பிக்கையினாலோ, அல்லது குறைந்த பட்சம் விளம்பரப் படங்கள் மூலமாகவாவது தாங்களும் நடிகர்கள் ஆனால் என்ன? என்ற தீராத தாகத்தின் காரணமாகவோ எனப் பல காரணங்களை முன் வைத்து இவர்கள் இன்று நடிகர்களுக்கு இணையாக விளம்பரங்களில் தோன்றி வருகிறார்கள்.

முன்பெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் காரரும், வசந்த் அண்ட் கோ காரரும் விளம்பரங்களில் தோன்றும் போது வாடிக்கையாளர் முன் வாயெல்லாம் பல்லாக தங்களது முகத்தைக் காட்டினால் போதும் என்று முடிவு செய்து அதை மட்டுமே செய்து வந்தார்கள். ஆனால் இன்று அப்படியல்ல, தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸின் சரவண அருள் ஹன்சிகா, தமன்னாவுடன் டூயட் பாடாத குறையாக விளம்பர உலகின் உச்ச பட்ச சம்பளம் பெறும் பிரபல நடிகர்களுக்குச் சவால் விடும் அளவுக்குத் தனது விளம்பரங்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனப் பிளந்து கட்டுகிறார். 

கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரங்களில் என் தங்கம், என் உரிமை என்று பிரபு ஒரு தங்கப் போராளியாக தன்னைக் காட்டிக் கொண்டாரோ இல்லையோ அதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டோ என்னவோ லலிதா ஜூவல்லரியின் கிரண் குமார் நகையுலகில் ஒரு புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு நாலு கடை ஏறி இறங்குங்க, உங்களுக்குப் பிடித்த நகையை, விலைப்பட்டியலோடு மொபைல்ல ஃபோட்டோ எடுங்க, அந்த நகையின் விலையை நாலு கடை ஏறி இறங்கி எங்கே குறைந்த விலையில் தரமான தங்கம் கிடைக்குதுன்னு சோதிச்சுப் பாருங்க, அப்புறம் தெரியும் லலிதா ஜுவல்லரி தான் பெஸ்ட்னு எனும் ரேஞ்சுக்கு தங்களது விளம்பரங்களில் தனியொருவனாகக் களமிறங்கி மூளைச்சலவை செய்கிறார்.

இதை நம்பி எத்தனை பேர் தங்களது வாடிக்கையான நகைக்கடைகளை விட்டு, விட்டு லலிதாவுக்கு மாறினார்களே தெரியவில்லை.

இன்று நகைக்கடைகள், உணவகங்கள், துணிக்கடைகள், துரித உணவகங்கள் என எல்லாவற்றிலுமே நிலவும் பலத்த போட்டிகள் இப்படியான உத்தரவாதமளிக்கும் விளம்பரங்கள் வெளிவரத் துணையாக இருந்தாலும் அந்த உத்தரவாதத்தின் உண்மைத் தன்மையை யார் சோதிப்பது? எனத் தெரியவில்லை.

மக்கள் விளம்பரங்களைப் பார்க்கிறார்கள். ஒரு முறை அல்ல இருமுறை அல்ல நாளொன்றுக்குப் பலமுறை பல தொலைக்காட்சி சேனல்கள் வழியாக இடைவெளியின்றி நடிகர்களோ அல்லது அந்தந்த நிறுவனத்தின் உரிமையாளர்களோ எவரோ ஒருவர் திரையில் தோன்றி எங்கள் தயாரிப்பு தான் தரமானது, விலை மலிவானது, வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கக் கூடியது எனத் தொடர்ந்து உத்தரவாதமளித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை இல்லாவிட்டாலும் பிறிதொரு வேளையில் மக்கள் சலித்துப் போயாவது அந்த விளம்பரங்களை நம்பித்தானாக வேண்டியிருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் இன்று பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களுக்ககாகச் செலவிடும் தொகையை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

அதன் உச்ச கட்டம் தான் விளம்பரம் தங்களது நிறுவனங்களுக்கும், தயாரிப்புகளுக்கும் மட்டுமே போதாது, தங்களுக்கும் வேண்டும் என்ற உணர்வு மேலெழுந்த அதிசயம்.

ஒருவகையில் அவர்களது செயலில் குற்றம் காணவும் வகையில்லை. 

ஏனெனில் தமிழில் விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்கள் விளம்பரப் படங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் வரை சன்மானம் பெறுகிறார்கள். சமீபத்தில் நடிகை நயன் தாரா டாட்டா ஸ்கை விளம்பரமொன்றில் நடிக்க பெற்றுக் கொண்ட தொகை கூட 5 கோடி ரூபாய் என்றொரு செய்தி. நடிகர்களில் விஜயை விட சூர்யா அதிக விளம்பரங்களில் நடித்தவர். அவரைத் தொடர்ந்து கார்த்தி, விஷால், பிரபு, சத்யராஜ், சரத்குமார், ஜெயராம், ஜெயம் ரவி, ஆர்யா உட்பட சின்னத்திரை, வெள்ளித்திரையில் ஓரளவுக்கு மக்களால் அடையாளம் காணப்படக் கூடிய நிலையில் இருந்த நடிக, நடிகையர் அனைவருமே கூட ஏதோ ஒரு விளம்பரத்தில் தோன்றி ஏதோ ஒரு பொருளை வாங்கச் சொல்லி கியாரண்டி அளித்து நம்மை கரையாய்க் கரைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.  

நயன்தாரா தவிர தற்போது கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், தமன்னா, ஹன்சிகா, ஜோதிகா, சினேகா, ராதிகா, மீனா, சுகன்யா, தேவயானி, என நடிகையர் பட்டாளமும் விளம்பரங்கள் வாயிலாக தங்களது பாப்புலாரிட்டியை மூலதனமாக வைத்து கல்லா கட்டினர். இவர்களுக்கு கொடுக்கும் தொகை தங்களது பட்ஜெட்டில் பெரிய ஜமுக்காளமே விழும் அளவுக்கு பள்ளத்தை தோண்டி விடுகிறது என்று கண்டார்களோ என்னவோ சில உரிமையாளர்கள் இப்போது நடிகர்களை நம்பாமல் மேலே குறிப்பிட்டாற் போல தாங்களே நேரடியாகக் களமிறங்கி விடுகிறார்கள். அதில் அவர்களுக்குப் பாதகம் எதுவும் இல்லாத போதும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் பாதகம் இருக்கலாம் என்றெல்லாம் அவர்கள் அணுவளவும் யோசிப்பதே இல்லை.

விளம்பரங்களைப் பொறுத்தவரை அதில் யார் நடித்தாலென்ன என்று விட்டு விட முடியாதே... ஏனெனில் தினமும் தொலைகாட்சியிலோ, யூ டியூபிலோ அல்லது ஸ்மார்ட் ஃபோன் ஆப்களை தரவிறக்கும் போதோ ஏதோ ஒரு வகையில் ஏதாவதொரு விளம்பரத்தைக் கண்டு களித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் சாமான்யக் குடிமக்களாகிய நாம் யாரையெல்லாம் விளம்பரங்களில் பார்க்க விரும்புகிறோமோ அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி நாம் பார்க்க விரும்பாத அல்லது நம்மை எரிச்சலுக்கு உள்ளாக்கும் சிலரையும் கண்டு களித்தே ஆக வேண்டியதாகி விடுகிறது.

அதற்காக விளம்பரங்களில் தோன்றி நடிக்கும் உரிமையாளர்களை எல்லாம் மட்டம் தட்டுவதாக அர்த்தப் படுத்திக் கொள்ளத் தேவையில்லை. உங்களிடம் பணமிருக்கலாம். அதற்காக உங்களை நாங்கள் நொடிக்கொரு தரம் தொலைக்காட்சியில் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயமென்ன? பிடிக்காவிட்டால் சேனலை மாற்றி விட்டுப் போ, என்று கூறி விடாதீர்கள். எல்லாச் சேனல்களிலும் தான் உங்களது விளம்பரங்களும் முகங்களும் நொடிக்கொரு தரம் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றனவே... ஒருவேளை ஆசிர்வாதம், சப்தகிரி, அனிமல் பிளானட், டிஸ்கவரி, போன்றவற்றைப் பார்ப்பதானால் உங்களைத் தவிர்க்கலாமோ என்னவோ?! மாதா மாதம் டிடிஹெச் காரர்களுக்கு காசைத் தண்டம் அழுது விட்டு ஒரு தமிழ் சேனலைக் கூடப் பார்க்க முடியாமல் இவற்றையே பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது தானே!

ஐயா பணம் படைத்த கனவான்களே! நீங்கள் விளம்பரங்களில் நடிப்பது தவறில்லை. ஆனால், சதா சர்வ காலமும் உங்களை மட்டுமே பல்வேறு கோணங்களில் நொடிக்கொரு தரம் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு மண்புழுவால் கூட முடியாத காரியம்! பிரபல நடிகர்கள் உங்கள் விளம்பரத்தில் நடிக்க கொள்ளைப் பணம் கேட்டால் அவர்களைத் தாண்டி குறைந்த சம்பளம் வாங்கும் தொழில்முறை நடிகர்கள் யாரையாவது நடிக்க வையுங்கள். முடியாவிட்டால் புத்தம் புது முகங்களை சல்லிசான சம்பளத்தில் அறிமுகம் செய்து நடிக்க வையுங்கள். இதெல்லாமும் கூட ஒருவகையில் உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் நன்மைகள் தான். 

அதெல்லாமில்லை, இதையெல்லாம் சொல்ல ஒரு சாமானிய பார்வையாளனுக்கு என்ன உரிமையிருக்கிறது. எங்களிடம் பணமிருக்கிறது. பொருளும் எங்களுடையது. விளம்பரத்திலும் நாங்களே தான் நடிப்போம் என்பீர்களானால் இந்தச் சோதனையில் இருந்து தமிழன் எப்படித் தப்பிப்பது?

நிச்சயமாக இது விளம்பர உலகின் சத்ய சோதனை தருணமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com