ஆண்டுக்கு 3 லட்சம் பேரை காவு வாங்கும் காற்று மாசுபாடு?! அலட்சியப்படுத்தினால் எண்ணிக்கை இருமடங்காகும்!

உலகில் மலேரியா மற்றும், எயிட்ஸ் நோய்பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் காற்றுத் தூய்மைக் கேட்டினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என உலக சுற்றுச்சூழல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆண்டுக்கு 3 லட்சம் பேரை காவு வாங்கும் காற்று மாசுபாடு?! அலட்சியப்படுத்தினால் எண்ணிக்கை இருமடங்காகும்!

சமீபத்தில் காற்று மாசுபாட்டின் காரணமாக தலைநகர் டெல்லியில் சில தினங்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.  காற்று மாசுபாட்டைப் பற்றியும் அதனால் விளையக்கூடிய கேடுகளைப் பற்றியும் அறிந்தவர்களாயிருந்த போதிலும் நம்மில் பலர் அதன் மோசமான விளைவுகளையும் அதனால் மனித ஆரோக்யத்தில் ஏற்படக்கூடிய பின் விளைவுகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறோம். இதனால் என்ன ஆகும்? இன்று 3,00,000 என்றிருக்கும் பலி எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காகி விடக்கூடும். உலகில் 80 % மக்கள் வாழுமிடங்கள் பெரும்பாலும் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள காற்றுத் தர நிர்ணயித்தின் படி வாழத் தகுதியற்ற் விஷக் காற்று நிரம்பியுள்ள இடங்களென சமூக நல ஆர்வத்துடன் எடுக்கப்பட்டதொரு சர்வே கூறுகிறது.

உலகில் மலேரியா மற்றும், எயிட்ஸ் நோய்பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் காற்றுத் தூய்மைக் கேட்டினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என லேண்ட்மார்க் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசால் நேரக்கூடிய மரணங்கள் மனிதனின் சுவாச மண்டலத்துடன் தொடர்பு கொண்டவை. மாசடைந்த காற்றிலுள்ள கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய நச்சுத் துகள்களை நுரையீரல் சுவாசிப்பதன் மூலமாக ஆஸ்துமா, ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.  சிலருக்கு காற்று மாசுபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து நேரடியாக நுரையீரல் கேன்சரும் வரக்கூடும்.

காற்று மாசுபாட்டை பொதுவாக;

  • உட்புற காற்று மாசுபாடு
  • வெளிப்புற காற்று மாசுபாடு 

- என இருவகையாகப் பிரிக்கலாம்.

உட்புறக் காற்று மாசுபாடு...

  • உட்புற காசு மாசுபாடு என்பது வீடுகள் மற்றும்  பொது சமையல் கூடங்களில் விறகடுப்பைப் பயன்படுத்தி சமையல் செய்யும் போது உண்டாகும் புகை மற்றும் கரித்துகள்கள் காற்றில் கலப்பதால் ஏற்படக்கூடியவை. 
  • வீட்டுக்குள்ளே குழந்தைகள் மற்றும் வயதான பெரியவர்களின் முன்னிலையில் சிகரெட் புகைப்பது, சாம்பிராணி இடுவது, போகிக்கு வீட்டின் திறந்த வெளி முற்றத்தில் வைத்து டயர் கொளுத்துவது போன்றவற்றைக்  கூட இந்த வகைப்பாட்டில் சேர்க்கலாம். இவை மட்டுமல்ல,
  • வீடுகளில் நறுமணத்துக்காக நாம் பயன்படுத்தும் ரசாயனக் கலப்புள்ள வாசனைத் திரவியங்கள், முகத்துக்குப் பூசும் நறுமணப் பவுடர்களைக் கூட இந்த உட்புறக் காற்று மாசுபாட்டுக் காரணிகளாக வகைப்படுத்தலாம்.

வெளிப்புறக் காற்று மாசுபாடு...

  • வெளிப்புறக் காற்று மாசுபாடு என்பவை பெரும்பாலும் சாலைப் போக்குவரத்தில் எண்ணிக்கையில் பெருத்துப் போன இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள் மற்றும்
  • புதை வடிவ எரிபொருள் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள் காற்றில் கலப்பதால் ஏற்படக்கூடியவை.
  • தீபாவளி, புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போதும், தனியார் விழாக்களின் போதும் கொண்டாட்ட மனநிலையைப் பிரதிபலிப்பதற்காக வெடிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகள் போன்றவற்றால் வெளிப்புறக் காற்றுமாசுபாடு ஏற்படுகிறது.

இந்த இருவகை காற்று மாசுக்கும் காரணமான நச்சு வாயுக்கள் எவையென்றால்;

கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டையாக்ஸடு, சைஃபர் டையாக்ஸைடு, தொழிற்சாலைப் புகை போக்கிகள் வழியே வெளியேறும் காரீயம் மற்றூம் ஆர்செனிக் கழிவுகள், பாதரசக் கழிவுகள் உள்ளிட்ட நச்சு வாயுக்களால் தான் காற்று மாசுபாட்டு மரணங்கள் நிகழ்கின்றன. இந்த வாயுக்கள் காற்றில் கலந்து காற்றின் தூய்மையைக் கெடுத்து சுவாசிக்க தரமற்ற அசுத்தக் காற்றாக மாற்றுகின்றன.

இந்த நச்சு வாயுக்கள் காற்றில் கலப்பதால் அதைச் சுவாசிக்கையில் அதிகப்படியான நச்சு வாயுக்களை வடிகட்ட இயலாமல்  குழந்தைகள் மற்றும் வயதானவர்களின் நுரையீரல் செயல்பாடு ஒடுங்குகிறது.  கருவுற்ற பெண்களிடையே இந்தக் காற்று மாசுபாடானது கருவிலிருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது. 

பூமியில் அதிகரிக்கும் காற்றுமாசுபாடானது தற்போது உலகை அச்சுறுத்தக்கூடிய தலையாய பிரச்னைகளில் ஒன்றாகியுள்ளது. 60 வருடங்களுக்கு முன்பே காற்று மாசுபாடெனும் ஒரு காரணத்தைப் பிரதான ஆய்வுக்கு உள்ளாக்கி அதனால் மனித ஆரோக்யத்தில் நிகழக்கூடிய மோசமான பின்விளைவுகளைக் கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் ஐக்கிய நாடுகளில் கூட இன்னமும் இது ஒரு தீராத பிரச்னையாகவே நிலைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளைத் தவிர்த்து காற்றுமாசுபாடு குறித்து அக்கறையுடன் யோசித்து அதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து இந்தப் பிரச்னை குறித்துத் தொடர்ந்து போராடி வரும் உலக நாடுகள் பலவற்றிலேயே இன்னமும் அதற்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை என்கின்றன புள்ளி விவரங்கள். அப்படி இருக்கையில் காற்றூ மாசுபாடு குறித்துப் பெரிதாக அக்கறை காட்டாத மக்கள் நிறைந்த இந்தியாவில் இதனால் எதிர்காலத்தில் நேரக்கூடிய மரண எண்ணிக்கைகளைக் கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை.

காரணம், எவ்வளவு தான் போராடியும் கூட... 

  • எந்த நாடுகளாலும் தங்களது மக்களின் வாகன நுகர்வு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டுக்கு ஒரு கார்,ஒரு ஸ்கூட்டர் என்றிருந்த நிலை மாறி இன்று ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு வாகனம் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறான். வாகனங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனநிலை மாறி சூழல், தேவை எனும் காரணங்களைத் தாண்டி சகிப்புத் தன்மை இன்மையால் ஒவ்வொருவரும் தனித்தனியே பயணிக்க ஆசைப்பட்டு தங்களால் இயன்றவரை காற்று மாசுபாட்டுக்குக் காரணமாகின்றனர். அரசு பொதுப் பேருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் தற்போது தனித்தனி வாகனங்களில் விரையும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
  • தொழிற்சாலைப் பெருக்கத்தாலும், தொழிற்சாலை சூழ்ந்த இடங்களிலும் மக்கள் வீடு கட்டிக் கொண்டு குடியேற நேர்ந்த மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் கூட காற்றுமாசுபாடு அதிகரிக்கிறது. இதையும் அரசுகளால் கட்டுப்படுத்த இயலாத நிலையே இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

இச்சூழ்நிலையில்... இப்போதேனும் காற்று மாசுபாடு குறித்து அக்கறையுடன் யோசிக்கத் தலைப்படா விட்டால் வருங்கால சந்ததியினருக்கு வாழத் தகுதியற்ற பூமியை விட்டுச் சென்றவர்களாவோம்!

Image courtesy: Financial express.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com